சென்ற வருடம் ஏமாற்றம். இந்த வருடம் மாற்றம். நீட் தேர்வில் சாதித்த சேலம் மாணவி!

சென்ற வருடம் ஏமாற்றம். இந்த வருடம் மாற்றம். நீட் தேர்வில் சாதித்த சேலம் மாணவி!

விடாமுயற்சி இருந்தால் எப்போதும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் சேலம் மாணவி கிருத்திகா. ஆம். தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் சேலம் கோட்டை அரசுப் பள்ளி மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்து  சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளான  எம் பி பி எஸ், பி டி எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று வெளியிட்டார்.

இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாதனை படைத்து சேலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5   சதவீத இட ஒதுக்கீட்டுப்  பிரிவில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று  மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் வீரகவுண்டனூரை சேர்ந்தவர். மாணவி கிருத்திகா. கடந்த முறை இவர்  எழுதிய  நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கவுன்சிலிங்கில் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால் மனம் தளராமல்  ஓராண்டுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதியதில் 569 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தாயார் கலை செல்வி ஆத்தூர் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த கிருத்திகாவிற்கு அவரது தாயார் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து, கிருத்திகாவுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சாதனை குறித்து மாணவி கிருத்திகா “ நான் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் 211 மதிப்பெண் பெற்றதால் கவுன்சிலிங் சீட் கிடைக்கவில்லை. அதனால் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமுயற்சியாக தொடர்ந்து படித்தேன். இப்போது நீட் தேர்வில் அதிக மதிப் பெண்ணுடன் 7.5   இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் மாணவியாக வந்துள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆசிரியர்கள் என்னை வழி நடத்திச்  சென்றார்கள். அவர்களுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி.

நான் படித்தது எல்லாமே அரசுப்  பள்ளிகளில்தான். வசதியானவர்கள்தான் நீட் தேர்வு படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி எங்களைப் போல் வசதியற்றவர் களும் வெற்றி பெற உதவுகிறது 7.5   சதவீத இட ஒதுக்கீடு. என்னைப்போல் நன்றாக படித்து பெரிய நிலைக்கு அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களும் வரவேண்டும் என்பதே என் ஆசை.

முதல் முறை தோல்வி அடைந்த போதிலும் நான் பின்வாங்காமல் முயற்சித்ததுதான்  இந்த  வெற்றியை தந்துள்ளது. என்னைப் போலவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார்.

இவரைப் போலவே  சேலம் கோட்டை அரசின்  மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா 537 மதிப்பெண்களுடன் மாநில அளவில் ஆறாவது இடத்தை பிடித்து சாதித்துள்ளார். இது தவிர அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில் சேலம்  தனியார் பள்ளி மாணவர் வருண் 715 மதிப்பெண்களுடன் மாநில அளவில் மூன்றாவது இடத்திலும், அதே பள்ளி மாணவர் கவியரசு 705 மதிப்பெண்கள் உடன் மாநில அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனை மாணவமணிகளினால் சேலம் மாவட்டம் பெருமை கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com