ASHA BHOSLE | இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசி: மெலடி குயின் ஆஷா போஸ்லே!

பல்வேறு இசையமைப்பாளர்களுக்காக பல்வேறு மொழிகளில் பாடி, பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்த குரல் ஆஷா போஸ்லேவினுடையது.
asha-bhosle-musical-journey
asha-bhosle
Published on
MM strip
MM strip

ஷா போஸ்லேவின் தந்தை தீனா நாத் மங்கேஷ்கர் ஒரு சிறந்த பாடகரும் நடிகரும் ஆவார். தன் தந்தையுடன் ஆஷாவும் நாடகங்களில் நடித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவர், இவர் நடிப்பதை விரும்பாததால், பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் தனக்கு இருந்த நடிப்பு மீதான ஆசையை 2013 இல், தனது 79வது வயதில் 'மை'(Mai) என்ற திரைப்படத்தின் மூலம் பூர்த்தி செய்து கொண்டார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தைகளால் கைவிடப்பட்ட தாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.

திருமண வாழ்க்கை:

ஷா தன் 16 வது வயதில் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி 31 வயது கண்பத்ராவ் போஸ்லே என்பவரை காதலித்து மணந்தார். இருவருக்கும் இடையே உறவு சரியான முறையில் அமையாததால் 1960ல் திருமணத்தை முறித்துக் கொண்டனர். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகன் ஹேமந்த் போஸ்லே ஆரம்பத்தில் விமானியாக இருந்து, பின்னர் இசை இயக்குனராக பணியாற்றியவர். 2015ல் புற்றுநோயால் காலமானார். மகள் வர்ஷா போஸ்லே பிரபலமான பத்தி எழுத்தாளர் (Columnist). 2012ல் 56 வயதில் தற்கொலை செய்து கொண்டார். இளைய மகன் ஆனந்த் போஸ்லே ஆஷாவின் இசைப் பயணத்தையும், பணிகளையும் நிர்வகித்து வந்தார்.

asha-bhosle-musical-journey
ஆர்.டி. பர்மன் -ஆஷா போஸ்லே

ஆஷா தன்னைவிட 6 வயது இளையவரான, இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனை 1980ல் மறுமணம் செய்து கொண்டார். 1994ல் இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் இறக்கும் வரை 14 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்தனர்.

கின்னஸ் சாதனை:

தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம், பெங்காலி, நேபாளி, மலாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, 2011ல் இசையுலக வரலாற்றில் அதிகப் பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1960-70களில் பாலிவுட்டில் பாப் மற்றும் ஃப்யூஷன் இசையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் இவரும் ஒருவர். இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது (2000 ), பத்ம விபூஷன் (2008) மற்றும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றவர். 1997ல் 'Legacy' ஆல்பத்திற்காகவும், 2005ல் 'You've Stolen My Heart' ஆல்பத்திற்காகவும் என இரண்டு முறை கிராமிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.

தமிழ் சினிமாவில் அவர் பங்கு:

இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ள இவர், தமிழ் திரையுலகிலும் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்துள்ளார். இளையராஜாவின் இசையமைக்கும் திறனை ஆஷா வியந்து பாராட்டியுள்ளார். ஆர்.டி. பர்மனைப் போன்ற திறமைசாலி இளையராஜா என்றும், அவர் இரவில் இசையமைத்து, காலையில் இசைக் கலைஞர்களிடம் நோட்டேஷன்களைக் கொடுக்கும் விதம் தன்னை ஈர்த்ததாகவும் கூறியுள்ளார்.

asha-bhosle-musical-journey
இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஆஷா போஸ்லே...

பாடல் வரிகளில் சந்தேகம் இருந்தால் உடனே மாற்றி அமைக்கும் இளையராஜாவின் வேகம் மற்றும் திறமை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் "செண்பகமே செண்பகமே", 'அலைபாயுதே' படத்தில் "செப்டம்பர் மாதம்", 'சந்திரமுகி' படத்தில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்", கமலஹாசனின் அரசியல் படமான 'ஹே ராம்' படத்தில் "நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி" போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் பாடி, பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்த குரல் ஆஷா போஸ்லேவினுடையது.

அக்கா தங்கை இருவருக்கும் இடையிலான உறவு:

குடும்ப உறவுகளால் ஆஷா போஸ்லேவும், லதா மங்கேஷ்கரும் பிணைக்கப்பட்டிருந்தாலும் பின்னணி பாடல் உலகில் போட்டியாளர்களாக இருந்தனர். ஊடக யூகங்களின்படி அவர்களுக்குள் பகை இருந்த போதிலும், இரு சகோதரிகளும் தாங்கள் நெருக்கமாக இருப்பதாகவும், ஒருவருக்கொருவரின் பணியை மதிப்பதாகவும் கூறி வந்தனர். மேலும் மோதல் குறித்த வதந்திகளை அடிக்கடி சிரித்து புறந்தள்ளினர்.

ஆடை அணியும் முறை (Dress sense):

இவர்கள் இருவரும் பெரும்பாலும் வெள்ளை நிறப் புடவைகளையே அணிய விரும்பினார்கள். தங்கள் நிறத்திற்கு வெள்ளை நிற புடவை அழகாக இருக்கும் என்றும், வேறு நிறம் அணிந்தால் இன்னும் கருப்பாகத் தெரியும் என்றும், ஒரு சமயம் இளஞ்சிவப்பு நிறப் புடவையை அணிந்ததும் அக்கா(லதா மங்கேஷ்கர்) தன்னை ஒரு மாதிரி முறைத்து பார்த்ததாகவும் கூறியுள்ளார். இளமைக்காலத்தில் பெரும்பாலும் வெள்ளைப் புடவைகளில் காணப்பட்ட அவர் பிறகு பிற வண்ணங்களிலும், கண்ணை உறுத்தாத வகையில் புடவைகள் அணிய தொடங்கினார்.

புடவைக்கு ஏற்றவாறு தலையில் பூக்கள் வைப்பது இவரது தனித்துவமான அடையாளமாகும். பெரும்பாலமான நேரங்களில் முத்துமாலைகள் மற்றும் பாரம்பரிய மகாராஷ்டிர பாணி மூக்குத்தி அணிவதும் வழக்கம். இவரது ஆடைத்தேர்வுகள், இவரது இனிமையான குரலைப் போலவே பார்ப்பவர்களைக் கவரும் வகையில் எளிமையாகவும், அதே சமயம் கம்பீரமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கலர் கலரா சோப்பு... அதன் நுரை மட்டும் எப்போதும் வெளுப்பு... அது எப்படி?
asha-bhosle-musical-journey

ஆஷா போஸ்லே ஒரு சிறந்த பாடகி மட்டுமல்ல மிகச்சிறந்த சமையல்காரரும் கூட. ஒருமுறை அவர் இதைப்பற்றி கூறும் பொழுது, சமையல் என்பது பாடுவதைப் போல இதயத்தில் இருந்து வருவது; அதுவும் மற்றவர்கள் ரசிப்பதற்காக அன்புடன் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 'Asha's' என்ற பெயரில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவகங்களை நடத்தி, சமையல் கலையிலும் சிறந்து விளங்கியவர். இவருடைய சமையலுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கபூர் குடும்பத்தினர் அடிமை என்றே கூறலாம். இவரது 'பாயா கறி' மற்றும் 'பிரியாணி' அனைவரது விருப்பமாகவும் இருந்துள்ளது.

மூப்பு மற்றும் உடல்நலப் குறைவு காரணமாக ஏப்ரல் 12, 2026 அன்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமானார் ஆஷா. இவரது மறைவு இந்திய இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com