இன்றைய ‘டென்ஷன்’ நிறைந்த வாழ்க்கையில் சண்டை வராத கணவன் மனைவியே இல்லை எனலாம். அவர்களுக்குச் சில யோசனைகள்.
திருமணம் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடிய ஆனந்தமன அனுபவம். ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடன் ஒருவருக்கொருவர் மாலையிடுகிறார்கள். திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறப்பதற்குள் கற்பனையெல்லாம் சிதற வாழ்க்கை வாடி வதங்குவது என்?
இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? யார் மாற வேண்டும் என்ற பட்டிமன்றமெல்லாம் இல்லாமல் சில சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் பல பெரிய தகராறுகளைத் தவிர்க்கலாம்.
தொணதொணத்துத் தொந்திரவு செய்யாதீர்கள்
“அதையேன் செய்யவில்லை”, "இதையேன் வாங்கவில்லை”, “நீங்கள் இப்படித்தான் எப்போதும் சோம்பேறி" - இந்த மாதிரித் தொண தொணப்புக்களைப் பெண்கள் மட்டும்தான் செய்கிறார்கள் என்றில்லை
பல ஆண்கள், "இந்த டேபிளை இங்கே போடாதே", "கொத்தவரங்காயை இன்னும் சின்னதாக நறுக்கு'", "வீட்டைச் சுத்தமாகவே வைத்துக் கொள்வதில்லை. ஒரு பெண்ணுக்கு இது தெரிய வேண்டாமா!" என்றும் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறேம்,
இவை சின்னச்சின்ன விஷயங்கள்தான். பெரும்பாலும் உப்புப் பெறாதவைதான். இருந்தாலும், நாளாக ஆக, வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடக் கூடிய அளவிற்கு மனத்திற்குள் வெறுப்பு ஊன்றிவிட இதுவே காரணமாகி விடலாம். இந்த மாதிரி பேச்சுக்களைப் பிடிக்காத கணவனோ மனைவியோ, மனது நொந்து மற்றவருடன் பேசுவதையே குறைத்துக்கொண்டு இயந்திரமாகி விடுவார். அதனால் ஒருபோதும் உங்கள் துனையைத் தொணதொணக்காதீர்கள்.
'உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும்' என்ற ஆளுமையைத் தவிருங்கள்
ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, மற்றவரின் தனித்தன்மையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு நாலு பேர் வந்திருக்கும்போதோ, மற்ற பொது இடங்களிலோ மனைவியைப் பட்டென்று மட்டம் தட்டும் கணவன்மார்கள் தான் அதிகம் என்று எண்ண வேண்டாம்!
அக்கம்பக்கத்து வீட்டாரிடமோ, அல்லது உறவினரிடமோ கணவனைப் பற்றி. அவருக்கு ஒன்றும் தெரியாது. நேரா ஆபீசுக்குப் போவார், வருவார்: அவ்வளவுதான் என்று துளியும் சமர்த்தே போதாது. இந்த வீட்டு மானேஜ்மெண்ட் பூரா நான்தான்' பெருமையடித்துக் கொள்ளும் மனைவிமார்களும் இருக்கிறார்கள். மனைவி முட்டாளாக ஆக்குவதாலேயே நாளடைவில் எதிலும் பட்டுக் கொள்ளாமல் போய் விடும் கணவன்மார்கள் நிறைய உண்டு. எதற்கு வீண் சச்சரவு, வேலையானால் சரி என ஒதுங்கி விடுவார்.
மனது புண்படக் கேலி செய்யாதீர்கள்:
பலருக்கு இருக்கும் விரும்பத் தகாத விஷயம் இது. விளையாட்டாகப் பேசுகிறோம் என்று நினைத்துச் சிலர் மனத்தை நோக அடித்து விடுவார்கள். நாலு பேருக்கு நடுவில் கணவன், "பெரிய ஆறடிக் கூந்தல். இந்த எலிவால் பின்னலுக்கு என்ன?'' என்று மனைவியைக் கிண்டல் செய்தால் அவளுக்கு எவ்வளவு வலிக்குமோ, அதேபோல்தான், "இருக்கிறது ஐந்தடி பெரிய அமிதாப்பச்சன்னு நினைப்பா!'' என்று மனைவி கணவனைக் கிண்டல் செய்தாலும் அவளுக்கு இருக்கும்.
கணவன் மனைவியாகவே இருந்தாலும், இந்த மாதிரி சொந்த விஷயங்களில், மற்றவர்கள் எதிரில் பேசாமல் கேலி பேசாமல் இருப்பது நல்லது. சில சமயங்களில் இந்த மாதிரி கேலிப் பேச்சுக்கள் மனத்தினடியில் ஆழமாகப் பதிந்து பிரிவு ஏற்பட ஏதுவாகி விடும்.
முடிந்த வரையில் மற்றவரைப் பாராட்டுங்கள்:
"வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்" - என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு அவசியம் ஒரு பெண் ஆக்கபூர்வமாகப் பிரகாசிக்க ஓர் ஆணின் தூண்டுகோல்.
கணவனின் ஆபீஸ் விவகாரங்களைப் பற்றியோ அவனுடைய நண்பர்களைப் பற்றியோ மனைவிக்கு அதிகம் தெரியாமல் போகலாம். அவனளவு அதிகம் படிக்காமலும் இருக்கலாம். இருந்தாலும் சில நேரங்களில் அவனுடைய செய்கைக்கு இரண்டொரு வார்த்தைகளில் பாராட்டுதலைக் காண்பித்தால் இதமாக இருக்கும்.
“இன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணலைன்னா இத்தனை கெஸ்ட்டைச் சமாளிச்சிருக்கவே முடியாது'' - என்றோ. ''ஊர்லேயிருந்து நீங்க வாங்கிட்டு வந்த 'ஹேண்ட் பேக்' எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா? என்னுடையது கிழிஞ்சு போயிடுச்சேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இருந்தாலும் எனக்குத் தேவையறிஞ்சு நீங்க செய்யறா மாதிரி யார் செய்வாங்க?"
மனைவி பார்த்துப் பார்த்து எத்தனை செய்தாலும் மிஷின் போலச் சென்றுவிடும் கணவன்மார்களும் உண்டு. அதுவும் தவறு. மனைவி போட்டது சின்னக் கோலமாய் இருந்தாலும், சாதாரண மிளகு ரசமாக இருந்தாலும் வாய் திறந்து பாராட்டினால் அதன் சுகம் தனிதான்.
வெளியில் பெரிய அதிகாரியாகவோ, அல்லது தினமும் வேறு வேறு மாதிரியான ஆர்வமான விஷயங்களில் ஈடுபடுபவராகவோ, அல்லது கொஞ்சம்
பிரபலமானவராகவோ மனைவி இருந்துவிட்டால், கணவன் வீட்டில் அவளுக்கு இந்தப் பாராட்டு வார்த்தைகளைக் கண்டிப்பாக அளிக்க வேண்டும். அவன் மனத்தில் எள்ளளவும் பொறாமை இல்லை என்பதை இதன் மூலம்தான் அவள் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, முடிந்தவரை மற்றவரைப் பாராட்டுங்கள். 'வாயில் இருக்குது வார்த்தை' அதை எத்தனை நல்லவிதமாகச் செலவழிக்கிறோமே அத்தனை நன்மை கிடைக்கும்.
கவனிப்பையும் கரிசனத்தையும் காண்பித்துக் கொள்ளுங்கள்:
எவ்வளவு வசதியாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு டாக்டரும் வேலையாட்களும் வந்தாலும், அன்பாக ஒருவர் கவனித்துக் கொள்ளவும், கரிசனத்துடன் விசாரிக்கவும் வேண்டும் எனத் தேடுவது மனித இயல்பு.
சில மனைவிகள், மாதவிடாய்ச் சமயங்களில் ஒருவிதக் கோபத்துடனும் எரிச்சலுடனும் இருப்பார்கள். காரணமில்லாததற்குக் சிடுசிடு என்பார்கள். ஒரு நல்ல கணவன். மனைவியின் இந்த ‘மூட்அவுட்’ அவளுடைய உடல் உபாதையிலிருந்துதான் என்று புரிந்துகொள்வதே அவனுக்கு இருக்கும் கரிசனத்தைக் காட்டச் சிறந்த வழி, அந்த மூன்று நாட்களும் அவளுக்கு வீட்டில் உதவிக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தால் அந்தக் கவனிப்பே அவளுக்கு ஆனந்தமாக இருக்கும்.
ஆபீஸிலிருந்து வரும் கணவன் சற்று முகம் வாடியிருந்தாலே “என்ன இன்னைக்கு ஆபீஸில் ஏதாவது பிரச்னையா?” என்று இதமாக விசாரிப்பது சிலருக்குப் பிடிக்கும் “என்னைத் தனியாகக் கொஞ்ச நேரம் விட்டு விடு” என்று சிலர் சொல்வதும் உண்டு. புரிந்துகொண்டு அதன்படி மனைவி நடப்பது ஒரு கரிசனம்தான்.
இந்தக் கவனிப்பும் கரிசனமும் கணவன் மனைவியரிடையே இருந்தால், எத்தனையோ சுகம் பரிமளிக்கும்.
தேவையான இடத்தில் விட்டுக் கொடுங்கள்:
எதை யார் எந்த அளவு விட்டுக் கொடுப்பது என்பதில்தான் பல திருமணங்களின் முறிவுகள் தொடங்குகின்றன.
“என்ன இருந்தாலும் நான் ஓர் ஆண். நான் எப்படி விட்டுக் கொடுப்பது” என்று கணவனோ "பெண் என்றால் அத்தனை மட்டமா, நானும் படித்து வேலைக்குப் போகிறேன் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?" என்று மனைவியோ இருபுறமும், இழுக்க ஆரம்பித்தால் வாழ்க்கைக் கயிறு ஓர் இடத்தில் அறுந்துவிடும்.
சுற்றி இருக்கும் மற்றவர்கள் என்ன சொன்னாலும், தங்களுக்குள் இருக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். இருவரும் உட்கார்ந்து பேசி, கெளரவம் பாராட்டாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால், சின்ன விஷயங்கள் விசுவரூபம் எடுத்து நிம்மதியைக் குலைப்பதைத் தடுக்கலாம்.