
- கே.தேவி குமார், திருச்சி.
ஒரு மடத்தில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். பொய் பேசாதவர் வீட்டில் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையைக் கொண்டிருந்தவர் அவர்.
ஒருநாள், அந்த மடத்துக்கு வந்த பண்ணையார் ஒருவர், துறவியைத் தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். உடனே துறவி, "உனக்கு எத்தனைக் குழந்தைகள்? உன்னிடம் உள்ள உள்ள சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு?" எனக் கேட்டார். ''எனக்கு ஒரே ஒரு மகன்தான் உள்ளான். என்னுடைய சொத்துக்களின் மதிப்பு இரண்டு லட்சம் பெறும்" என்றார். இதைக் கேட்ட துறவி, "நாளை உன் மகனை அனுப்பு. நான் வருகிறேன்" எனக் கூறினார்.
மறுநாள் பண்ணையாரின் மகனைக் கண்டதும், துறவி, அதே கேள்வியைக் கேட்டார். அம் மகனோ, தன்னுடைய தந்தைக்கு ஐந்து மகன்கள் என்றும், சொத்தின் மதிப்பு சில கோடிகள் தேறும் எனவும் கூறினார். இதைக் கேட்ட துறவி அதிர்ந்தார். "நான் உங்களுடைய வீட்டுக்கு விருந்துக்கு வரவில்லை உன் தந்தையிடம் சொல்” எனக் கூறிவிட்டார். மகன், தன் தந்தையிடம் சென்று நடந்ததைச் சொல்ல, தானே நேரில் சென்று காரணத்தைத் கேட்டார். "நீ பொய் கூறிவிட்டாய். ஆதலால் நான் விருந்துக்கு வரவில்லை" என்றார் துறவி.
அதற்கு பண்ணையார், "நான் சொன்ன அனைத்தும் உண்மை. தாங்கள் என் வீட்டுக்கு வந்தால் உங்களுக்குப் புரியும் என்றதும், துறவி அவருடன் புறப்பட்டார்.
வீடு வந்ததும், உள்ளே நுழைய முற்பட்ட அந்த நபருக்கு, வாசற்படியின் மேற்புறம், தலையில் நன்றாக இடித்து விட்டது. "அம்மா" என்று அலறியபடி கீழே விழுந்தார். உடனே, அங்கு உட்கார்ந்திருந்த ஐந்து மகன்களுள் ஒருவன் மட்டும் ஒடிவந்து, அவரை மெல்லத் தூக்கி படுக்க வைத்து, காயத்துக்கு மருந்து வைத்தான். "எனக்கு ஐந்து மகன்கள் இருந்தும், இவன் ஒருவனே என்னுடைய கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்பவன்.
எனவேதான் எனக்கு ஒரே மகன்" என்றவர், ஒரு பெரிய தாளை எடுத்து அத்துறவியிடம் காண்பித்தார். இதுவரை அவர் செய்த தான தர்மங்களின் மதிப்பு மொத்தம் இரண்டு லட்சம் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. "இதைத்தான் நான் என்னுடைய சொத்து எனக் கூறினேன்'' என பண்ணையார் கூறியதும், வியந்துபோன அந்தத் துறவி, அவருடைய வீட்டில் மகிழ்வுடன் விருந்துண்டார்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜனவரி 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்