
“தீபாவளிக்கு துணி வாங்க எந்த கடைக்கு போறீங்க?”
“கடைக்கு எதுக்குப் போகணும்? அதுதான் தொங்கும் பூங்காவுல கைத்தறிக் கண்காட்சி நடக்குதே! அங்க போய் கைத்தறி நெசவுல வர தரமான துணிகளை வாங்கிட்டு வந்தா காலத்துக்கும் நல்லா இருக்கும்ல.”
இப்படி ஒரு உரையாடல் இப்போது சேலம் பெண்களிடம் கேட்க முடியும் .
கைத்தறிக்கு இவ்வளவு மவுசா? நெசவின் பெருமை அறிய நாமும் சேலம் தொங்கும் பூங்காவுக்கு சென்றோம். இந்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும் இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி தமிழகத்தில் சேலத்தில் மட்டும் 3 ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது .
மாநில அளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சேலம் பட்டு வேஷ்டி சட்டைகள், பருத்தி சேலைகள் , காஞ்சீபுரம், திருபுவனம் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், பரமக்குடி, அருப்புக் கோட்டை காட்டன் சேலைகள், கரூர், சென்னிமலை பெட்சீட் துண்டுகள், பவானி, ஈரோடு ஜமுக்காளம், மதுரை சுங்குடி சேலை, திருநெல்வேலி செடி புட்டாச்சேலை, கடலூர் குறிஞ்சிப்பாடி லுங்கிகள் என ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமித்து உள்ளன.
தற்போதைய நாகரீகத்தில் கைத்தறியை மக்கள் விரும்பி வாங்குகிறார்களா? என்று அறியவும் நெசவாளர்களின் தற்போதைய எண்ணம் என்ன என்பதைப் பற்றி அவர்களிடமே கேட்கவும் முனைந்தோம்.
பல பெண்கள் புடவை வகைகளை ஆர்வத்துடன் ஒவ்வொரு ஸ்டாலிலும் ரசித்துக்கொண்டிருக்க அவர்களில் ஒருவரிடம் பேசினோம் .
“என் பெயர் ஜெயா. சேலம் மின்வாரியத்தில் பணியில் உள்ளேன் . பணிக்கு செல்வதால் கைத்தறிப் புடவைகளையே அதிகம் விரும்புவேன். சற்றே அதிகம் விலை என்று தோன்றினாலும் கைகளால் நெய்யப்படும் இந்த சேலைகள் நீண்ட காலம் உழைக்கும். உடல் நலத்துக்கும் உகந்தது. உடுத்தும்போது கம்பீரமும் எளிமையும் கிடைக்கிறது” என்றார்.
பெண்களின் வரவேற்பு இருந்தாலும் அவற்றை நெய்யும் நெசவாளர்கள் என்ன சொல்கிறார்கள்? சேலம் பொன்னமாப்பேட்டையை சேர்ந்த நெசவாளர் ஜெயகோபால் என்பவர் நம்மிடம் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் .
“நான் நெசவுத் தொழிலுக்கு வந்து அறுபது வருஷமாச்சு. நெசவாளர் சங்கங்களில் பொறுப்பு வகித்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமா கைத்தறி நலிவடைந்து வருவதை பார்த்து வருகிறேன். மனம் வருந்துகிறது. நாங்கள் பவர்லூம் வேண்டாம் என்று சொல்லவில்லை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். ஆனால், எங்களைப் போல கைகளால் நெய்பவர்களின் நிலையையும் பார்க்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரமே இதுதான். பவர்லூம்களுக்கு இந்த ரகங்கள் மட்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை விதித்தால் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். வருமானம் அதிகம் வராத காரணத்தினால் எங்கள் பிள்ளைகள் இந்தத் தொழிலுக்கு வர மறுக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் அப்போது இருந்த ஜவுளித் துறை அமைச்சர் முயற்சியால் கைத்தறிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டது. அப்போது எங்களுக்கு கொஞ்சம் வியாபாரம் ஆனது. தொடர்ந்து அரசு மனம் வைத்து ஏற்றுமதிக்கு வழி செய்தால் இந்தத் தொழில் சீராகும். இது போன்ற அரசு கண்காட்சிகள்தான் எங்களுக்கு பெரும் உதவியாக உள்ளது” என்றார்.
அருகிலிருந்த மற்றொரு நெசவாளர் "பெரியவர் அவர் கண்ணோட்டத்தில் அவர் சொல்வது ஓரளவு உண்மைதான். எனினும் சேலம் சுற்றியுள்ள நெசவாளர்கள் அவர்களின் உழைப்புக்குத் தகுந்த வருமானம் பெறுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் இளம்பிள்ளை, வனவாசி, மஞ்சுகாளிப்பட்டி, நங்கவள்ளி போன்ற ஊர்களுக்கு வந்து கைத்தறி ரகங்களை வாங்கிச் செல்வோர் அதிகம். அவர் சொல்வதுபோல அரசு சில மாற்றங்களை செய்தால் நமது பாரம்பரியமான கைத்தறிக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும்."
இந்தக் கண்காட்சி குறித்து சேலம் கைத்தறி கண்காட்சி பணி தொடர்பான அலுவலர் ரவியிடம் பேசினோம். “சேலம் மற்றும் பிற மாவட்டங்கள் சார்ந்த கைத்தறி சங்கங்கள் பங்கு பெறும் இந்த 60 ஸ்டால்களில் அவரவரின் படைப்புகளை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்துள்ளனர். கைத்தறியின் சிறப்புகளை தெரிந்துகொண்டவர்கள் விலையைப் பார்க்காமல் வாங்கிச் செல்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டும் மூன்றாவது வருடமாக இந்தக் கண்காட்சியை இதே இடத்தில் நடத்துவதால் பொதுமக்கள் தேடி வருகின்றனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் விற்பனையானால் அவர்களின் பொருளாதாரம் மேம்படும். வேலை வாய்ப்பும் உண்டாகும். இதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். மேலும், மெஷினில் நெய்யப்படும் துணிகளைவிட பன்மடங்கு நீடித்து உழைக்கும் கைத்தறியின் பெருமைகளை சொல்லித் தெரிந்துகொள்வதைவிட வாங்கி அணிந்து பார்த்தால், நிச்சயம் மீண்டும் இதையே தேடி வருவார்கள்.”
எனது கைத்தறி எனது பெருமை என்ற சொற்றொடருடன் சேலம் மக்களுக்கு கைத்தறியின் பல வகைகளை அறிமுகப்படுத்துவதுடன் வாங்கி மகிழவும் உதவியாக உள்ளது இந்த அரசுக் கண்காட்சி. இதுபோன்ற கண்காட்சிகளை தொடர்ந்து எல்லா ஊர்களிலும் அரசு நடத்தினால் கைத்தறி நெசவாளர்களின் கவலைகளும் ஓரளவு தீரும்.
இந்த தீபாவளிக்கு நாமும் கைத்தறி துணிகளை வாங்குவோம். பாரம்பரியத்தை மீட்டு நெசவாளர்களுக்கு ஆதரவு தருவோம்.