தொலைந்த வளையல் கிடைத்தது!

வாசகர் அனுபவம்!
தொலைந்த வளையல் கிடைத்தது!

கேரள மாநிலத்தில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருத்தலமான குருவாயூரில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல அனுபவங்களைத் தந்து அருள் புரிந்து வருகிறார்.  பக்தர்களின் அற்புத அனுபவங்களை கேட்கும் நமக்கு மெய் சிலிர்க்கும்.‍  சமீபத்தில் குருவாயூரப்பனை தரிசனம் செய்ய குருவாயூர் சென்ற பக்தை (குடும்ப நண்பர்) ஒருவருக்கு ஏற்பட்டது அத்தகைய அனுபவம்.

ஹைதாராபாதை சேர்ந்த சந்திரா கடந்த மாதம் தன் மகனின் திருமணம் முடிந்தவுடன் மணமக்களோடு பாலக்காடு அருகில் உள்ள தங்கள் குல தெய்வமான பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன்களையெல்லாம் நிறைவேற்றிய பின் குருவாயூரப்பனை தரிசிக்க சென்றுள்ளார். குருவாயூரப்பன் பக்தையான அவருக்கு அங்கு நேர்ந்த அனுபவத்தை அவரே பகிர்கிறார்.

”நாங்கள் சென்ற அன்று துவாதிசி. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெகு நேரம் காத்திருந்த பின் எங்களுக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைத்தது. வணங்கி விட்டு வெளியே வந்தோம். கூட்ட நெரிசலில் கிடைத்த கிருஷ்ணனின் தரிசனம் எனக்கு திருப்தியாக இல்லை. அவன் என்ன நினைத்தானோ! என்னை திரும்பவும் அவன் சந்நிதிக்கு வரவழைத்து விட்டான். எப்படி?.

தரிசனம் முடிந்து நாங்கள் வெளியே வந்தவுடன் என் புது மருமகள் தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல் கூட்டத்தில் நழுவி விழுந்து விட்டதை அப்போதுதான் கவனித்தாள். அது அவள் பாட்டியின் திருமணப் பரிசு. அவளுக்கும் சென்டிமெண்டான வளையல். பதற்றத்தில் அழ ஆரம்பித்து விட்டாள். இந்த கூட்டத்தில் எங்கு கண்டு தேடுவது? தேடினாலும் கிடைக்க வேண்டுமே. குருவாயூரப்பா! உன்னை தரிசிக்க ஓடோடி வந்ததற்கு இது தான் பலனா என என் மனம் பலவாறு புலம்பிற்று. என் மகன் செக்யூரிடி அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வந்தான். அவர்களும் கூட்டத்தில் கிடைப்பது கஷ்டம் பார்க்கலாம் என நம்பிக்கை இல்லாமல்தான் கூறினார்கள்.

ங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினோம். மருமகளுக்கு கோவிலில் வளையல் தொலைந்ததால் ஏதாவது கஷ்டங்கள் வருமோ என்ற பயம் வேறு.  ‘எல்லாம் நல்லதுக்குத்தான். உன் வளையலை குருவாயுரப்பன் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டிருப்பான் என்று நினைத்துக்கொள் ’ எனறு அவளைச் சமாதானப் படுத்தினேன்.

அடுத்த நாள் ஊருக்கு கிளம்பும் முன் ஒரு முறை குருவாயூரப்பனை தரிசித்து வரலாம் என மகனிடம் கூறினேன். அவனும் சரியென அனைவரும் கோவிலுக்கு சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. புன்சிரிப்புடன் அருள்பாலித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனை திருப்தியாக தரிசித்து மகிழ்ந்தோம். பிறகு, செக்யூரிடி கவுண்டரில் வளையலைப் பற்றி விசாரித்துப் பார்ப்போம் என நாங்கள் போன போது அங்கிருந்த செக்யூரிடி ஒருவரின் கையில் மருமகளின் காணாமல் போன வளையலைப் பார்த்தோம். என்னே கிருஷ்ண பகவானின் லீலை!. எல்லா விவரங்களையும் சரி பார்த்த பின் வளையலைக் கொடுத்த செக்யூரிடி அலுவலர். ‘ நேற்று இருந்த கூட்டத்தில் நீங்கள் தவற விட்ட நகை கிடைத்தது குருவாயூரப்பனின் அருள் என்றார். உண்மைதான். வளையலை கிருஷ்ண பகவான் ஆசிர்வதித்து என் மருமகளுக்கு திருப்பிக் கொடுத்ததாக உணர்ந்தேன்.

ஹரே கிருஷ்ணா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com