தொலைந்த கண்ணாடியும் ஆஞ்சநேயர் அருளும்!

தொலைந்த கண்ணாடியும் ஆஞ்சநேயர் அருளும்!

Published on

வாசகர் ஆன்மிக அனுபவம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு என் கணவருக்கு சாலேஸ்வரம் எனப்படும் வெள்ளெழுத்துப் பிரச்னை ஏற்பட்டபோது கண் மருத்துவரை சந்தித்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயில் நல்ல தரமான கண் கண்ணாடி ஒன்றை வாங்கிக் கொண்டார். படிக்கும்போது மட்டும் உபயோகித்து விட்டு மற்ற நேரங்களில் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். ஒருமுறை மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றார். அவருடைய பைக்கின் பெட்ரோல் டேங்கின் மேல் இருக்கும் கவரில் கண்ணாடிப் பெட்டியையும் தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொண்டு கிளம்பினார்.

எங்கள் தெருவைக் கடந்து பிரதான சாலையுடன் இணையும் கிளைச் சாலையில் செல்லும்போது வேகத்தடை ஒன்றின் மீது பைக் சற்றே வேகமாக ஏறி இறங்கி இருக்கிறது. அப்போது  பெட்ரோல் டேங்க் மீது இருந்த கவர் திறந்து கண்ணாடிப் பெட்டி கீழே சாலையில் விழுந்ததை என் கணவர் கவனிக்கவில்லை.

அலுவலகத்தை அடைந்த பின்புதான் கண்ணாடி இல்லாததைக் கவனித்து எனக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினார். ‘’ஸ்பீடு பிரேக்கரில் வண்டி ஏறி இறங்கும் போது ஏதோ கீழே விழுவது போல லேசாக ‘ணங்’ என்ற சத்தம் கேட்டது. அதுக்குப் பக்கத்துலதான் எங்கேயாவது விழுந்திருக்கும். நீ வேணா அங்க போய் பாக்குறியா?’’ என்றதும் பதறிப் போனேன். விலை உயர்ந்த அந்த கண்ணாடியை வாங்கி சில மாதங்களே ஆகியிருந்தன. அதற்குள் இப்படியாகிவிட்டதே என்ற பதைபதைப்புடன் என் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். 

பரபரப்பாக இயங்கும் அந்தச் சாலையில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனங்களும், ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கார்களும் கடந்து செல்லும். மாவட்ட மைய நீதிமன்றமும், ஒரு மருத்துவ மனையும் அமைந்திருக்கும் அந்த சாலையில், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இருபது  நிமிடங்கள் ஆன நிலையில் இந்நேரம் கண்ணாடி யார் கையிலாவது கிடைத் திருக்கலாம்; அல்லது வாகனம் ஏதாவது அதன் மீது ஏறி சுக்கல் சுக்கலாக உடைந்து போயிருக்கலாம்  என்ற அவநம்பிக்கை எனக்குள் எழுந்தது. ஆனால் என் பதினோரு வயது மகளோ, ‘’அம்மா, கவலைப்படாதீங்க. நிச்சயமா கண்ணாடி நமக்கு திரும்பக் கிடைக்கும்’’ என்று தைரியமூட்டினாள்.

ன் கணவர் ஒரு தீவிர ஆஞ்சநேய பக்தர். ‘’ஆஞ்சநேய சுவாமிகளே! அவருடைய கண்ணாடி பழுதில்லாமல் திரும்பக் கிடைச்சிடணும். அதற்கு வழி செய்யுங்க’’ என மனதுக்குள் தீவிரமாக வேண்டிக் கொண்டேன். நானும் என் மகளும் அந்த சாலையை அடைந்தோம். வேகத்தடை அருகில் கண்ணாடி இல்லை. ‘’இன்னும் கொஞ்சம் முன்னாடி போய்ப் பார்க்கலாம்’’ என்று மகள் சொல்ல, கீழே பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் கண்ணாடி விரிந்த நிலையில் கீழே கிடந்தது. அதைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. அதை கையில் எடுத்துப் பார்த்தபோது கண்ணாடிக்கு எந்த சேதமும் ஆகாமல், பிரேமின் ஒரு ஒரத்தில் மிக மிகச் சிறிய கீறல் மட்டுமே இருந்தது. கண்ணாடி பெட்டியை மட்டும் காணவில்லை.

எனக்குள் ஒரே வியப்பு. சைக்கிள் போன்ற வாகனம் ஏறி இறங்கினாலே அது சுக்கு நூறாய் உடைவது நிச்சயம். ஆனால் பழுதின்றி பத்திரமாக திரும்பக் கிடைத்தது ஆச்சரியம் தானே? உடனே என் கணவருக்குப் போன் செய்து விஷயத்தை கூறினேன். அந்த ஆஞ்சநேய சுவாமியின் அருளால் தான் கண்ணாடி திரும்பக் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின் ஆஞ்சநேயர் மீது என் கணவருக்கு இருந்த பக்தி அதிகமாக ஆனது. நானும் அவருடைய பக்தையானேன் என சொல்லவும் வேண்டுமா?

logo
Kalki Online
kalkionline.com