காலமாற்றங்கள். நாகரீக வளர்ச்சி. மேந்நாட்டு நாகரீக மோகம். இவற்றால் எல்லாம் இன்று காதல்படும் பாடு...... ஐயகோ. கொடுமை. காதல் என்பது வீரத்தைக் கண்டு வந்தது. காதல் என்பது விவேகத்தினால் வந்தது. காதல் என்பது இன்னும் திறமைகளால், புலமையினால் இப்படி பல சிறப்பான காரணங்களால், ஈர்க்கப்பட்டு, ஒருவரை ஒருவர் மனத்தால் நெருங்கி உறவாடி ஒரு உன்னத பிணைப்பை ஏற்படுத்துவது. எதிர்ப்பில்லையேல் முறையான திருமணம். எதிர்ப்பிருந்தால் கடிமணம் புரிந்து கொள்வார்கள் இது நமது காவியங்கள் உரைக்கும் காதல்.
ஆனால் இன்றோ, காமம் போர்த்திய காதல்தான் மிகுதியாக இருக்கிறது. அந்தக் காதல் உறவுகளைப் பார்ப்பதில்லை. எதிர்காலத்தைப் பார்ப்பதில்லை. புற அழகில் மயங்கி, காதலிக்கத் தொடங்கி, மணமுடித்துக் கசந்தவுடன், விவாகரத்து அல்லது துர்மரணம் என்று முடிந்து போகிறது. ஒரு குறைந்த சதவீத காதல் திருமணங்கள் தான் வெற்றிப் பெறுகின்றன.
இன்று பணத்திற்காக வரும் காதல், படுக்கைக்காக வரும் காதல்தான் மிகையாக இருக்கும். இதில் தவறான தொடர்புகளுக்குக் 'கள்ளக் காதல்' என்று பெயர் சூட்டிக் காதலையே கொச்சைப் படுத்தி விட்டார்கள். தினந்தோறும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் வரும் இளைஞரோ, இளைஞியோ செய்து கொள்ளும் தற்கொலைகள் மனதை வலிக்கச் செய்யும்.
பெற்றவர்களின் ஆசையை நிராசையாக்கி யாருக்கும் பயனின்றி உயிரை மாய்த்துக் கொண்டு, உலகை விட்டுப் பயணித்து விடுகிறார்கள். இன்றையத் திரைப்படங்கள் காதலை மிக மிகைப்படுத்திக் காட்டுகின்றன. இணையதளங்களில் காணக்கண்கூசும், காட்சிகளைப் பதிவிட்டு, பிஞ்சு உள்ளங்களில் கூட நஞ்சை வார்த்து விடுகிறார்கள். இதனால் பள்ளிகளில் காதலென்றால் என்னவென்றே தெரியாமல் காதல். பணிபுரியுமிடங்களில் காதல். இப்படிக் காதல் எங்கும் பரவி கலவரப் படுத்துகிறது.
இப்போது காதல் இன்னும் கொஞ்சம் விகாரப்பட்டுப் போய்விட்டது. பிடித்திருக்கிறதா, வா சேர்ந்து வாழ்வோம். பிடிக்கவில்லை எனில் பிரிந்து விடலாம் என ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு 'லிவிங் டு கெதர்' என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள். இப்படி டில்லியில் வாழ்ந்துக் கொண்டிருந்த, பெண் காதலனை, முறைப்படி மணமுடித்துக்கொள் என்று வற்புறுத்தியிருக்கிறாள். விளைவு, அவளின் உடலைக் கூறு போட்டுவிட்டான் அந்தக் கொடுமையான மனம் படைத்தவன்.
இதில் ஒரு தலைக்காதல் என்ற ஒரு அரக்கத்தனமான காதலும் உண்டு. காதலிக்கவில்லை என்பதால், ஓடும் ரயிலின் முன்னே, பிடித்துத்தள்ளிக் கொல்லுமளவிற்குக் கொடூரமானது. பரங்கிமலை ரயில் நிலையத்தில், காதலிக்க மறுத்த பெண்ணை, பட்டப் பகலில், நடைமேடையில் பயணிகள் இருக்கும் போது, தோழிகள் கண்ணெதிரேலேயே கத்தியால் பலமுறை குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது.
காதலிக்கும் போது காதல் இனிக்கும். கனவுப்பூக்கள் மலரும். நிஜவாழ்க்கையின் நிஜங்கள் சுடும். போதாத பொருளாதாரம், சின்ன சின்ன பிணக்குகள், உறவுகள் ஒதுக்கி வைத்ததால் ஏற்பட்டத் தனிமை போன்றவற்றால் காதல் கசந்துவிடும்.
எமக்குத் தெரிந்த ஒரு வசதியான, படித்த குடும்பத்துப் பெண் பொழுது போக்கிற்காகவும்(பொருளீட்டவும்தான்) ஒரு கம்பெனியில் பணிபுரிந்த போது, கூடப் பணிபுரியும் இளைஞரைக் காதலித்தார். காதல் முற்றி, எதிர்ப்புகளிடையே, ரகசிய திருமணத்தில் முடிந்தது.
பெற்றோரும், உற்றாரும் கைவிட்ட நிலையில், இருவரும் பணிபுரிந்து கொண்டே, தனிக்குடித்தனம் நடத்நினார்கள். பெண்ணைப்பெற்றக் கடனுக்காக, சுமார் இருபது சவரன் நகைகளை அவர்கள் வீட்டில் வீசியெறிந்துவிட்டு வந்தாள் தாய். நாட்கள் நகர நகர, பெண்ணுக்கு கணவனின் சுயரூபம் மெது மெதுவாக தெரிய வந்தது. போதை வஸ்துகள் அத்தனையும் பழக்கம். சூதாடி வேறு.நகைகள் அடகுக் கடையில் அடக்கமாயின. வறுமை அவர்களைத் தொட்டுவிட்டது.
தைப்பொங்கலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, இருவருக்குமிடையே, பணப்பிரச்னையால் தகராறு மூண்டது. முடிவில் மண்ணெண்ணெயைத் தன் மேலேயும், போதையிலிருந்தக் கணவன் மீதும் ஊற்றினாள். தீவைத்துக் கொண்ட பெண், நன்றாக எரிந்து கொண்டிருக்கும்போதே, அலறிக் கொண்டே, கணவனையும் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் வருவதற்குள், அவள் வெந்து அங்கேயே உயிரிழந்தாள். கணவன் பொங்கல் கழித்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருதுதுவ மனையில் உயிரிழந்தான். நாளிதழ்களில் செய்தியாகிப் போனார்கள். இது கதையல்ல. சுடும் நிஜம்.
நிறைய காதல் மணவாழ்க்கை முறிவுகள் இப்படித்தான் ஏற்படுகிறது. இது போன்றதொரு சூழ்நிலையில், மகளிர் நிலைமை பரிதாபம். பிறந்த வீட்டிற்கும் போக முடியாமல், வேறு உறவுகளை நாட முடியாமல் 'திரிசங்கு' சொர்க்கத்தைப் போல் அந்தரத்திலிருப்பார்கள். காதலித்ததற்காக வருந்துவார்கள். காதலை சபிப்பார்கள்.
கண்ணதாசனின் வரிகள் சில ஞாபகத்திற்கு வருகின்றன.
'பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே!'
வாய்ப்புக் கிடைக்கும்போது இந்தப் பாடலை இளைய வயதினர் கேட்க வேண்டும். தெளிந்து விடுவார்கள். ஆஹா.....என்னவொரு நிதர்சனம்!.
முறையாகத் திருமணம் செயதவர்களில், யாருக்காவது தீராத நோயிருப்பது தெரியவந்தால், சிரத்தையுடன் கவனிப்பது வெகு சிலர்தான். காதலித்து மணம் புரிந்தவர்களில் இது போன்ற நோய் ஏற்படுமாயின், அப்போது 'டூயட்' பாடத் தோன்றுமா?. சலிப்புத்தான் மேலிடும். சலிப்பின் முடிவில் கைவிட்டு விடுவார்கள்.
பருவ வயதில் வரும் எல்லோருக்கும் வரும் ஒரு மயக்கம் காதலாகும். அது இங்குமங்கும் அலைபாயும். கட்டுப்படுத்தாவிட்டால் வாழ்வு நரகமாகிவிடும். எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். அது நல்ல பண்பு. முறையான திருமணத்திற்குப் பிறகு இணையைக் காதலிப்பது இன்னும் சிறந்தப் பண்பாகும். எனவே காதல் கனவிலிருந்து, விடுபட்டு நிஜவாழ்க்கையைப் பாருங்கள். அதில் வரப்போகும் விளைவுகள் உங்களை எச்சரிக்கும். நாம் கண்ணியமான காதலுக்கு எதிரியல்ல.
உள்ளங்களிணைந்து, நல்ல புரிதலுடன், உயிருடன் கலந்தக் காதலைப் போற்றுவோம். வரவேற்போம்! வாழவைப்போம்!