பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்புதான். எவ்வளவுதான் மருத்துவம் முன்னேறி இருந்தாலும் நம் வீட்டு அஞ்சற்பெட்டியில் இருக்கும் பாரம்பர்ய மூலிகைகளுக்கு நிகர் எந்த மருந்தும் இல்லை. பிரசவத்துக்குப் பின் இன்று மருத்துவர்கள் உணவு விசயங்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை; தாராளமாக நீங்கள் அனைத்தையும் தரலாம் என்று சொல்லித் தன் கடமையை முடித்தாலும் பிரசவித்த தன் மகளுக்கு என்ன தந்தால் அவள் உடல் நலம் விரைவில் சீராகும் என்ற கவலை அவளின் தாய்க்கு வரும்.
இங்கு தந்துள்ள பிரசவக் குழம்பு ரெசிபியை படிப்பதுடன் பாதுகாத்து வைத்துக்கொண்டால் எக்காலத்துக்கும் உதவும். இந்த பத்தியக் குழம்பு பிரசவத்துக்குப் பின் ஏற்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தி, பச்சை உடலின் வலியையும் வேதனையையும் குறைத்து, விரைவில் உடல் நலனைத் தரும். இதனால் தாய்க்கு மட்டுமல்ல தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் ஜீரண சக்தியையும் மேம்படுத்தும் .
இந்தக் குழம்பை பிரசவித்த பெண்கள் மட்டுமின்றி சாதாரணமாக வாரம் ஒருமுறை ஆண், பெண் பாகுபாடின்றி மற்றவர்களும் செய்து சாப்பிட்டு தங்கள் அசதியைப் போக்கலாம். அதிலும் இந்தக் குழம்பை நம் பாட்டிமார்கள் வைத்தது போல் மண்சட்டியில் வைத்து உபயோகித்தால் ருசியும் அசத்தலாக இருக்கும். நீங்களும் செய்துதான் பாருங்களேன்.
பிரசவப் பத்தியக் குழம்பு செய்முறை:
தேவையான பொருட்கள்: பூண்டு – சீரகம், மிளகு, ஓமம், பெருங்காயம், வெந்தயம், திப்பிலி, கடுகு, நறுக்கு மூலம் நல்லெண்ணெய், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு தாளிக்க, சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், தேவையான காய்கறிகள் பிஞ்சுக் கத்திரிக்காய், பிஞ்சு முருங்கைக்காய், தக்காளி (அசைவ உணவு என்றால் உலர்ந்த கருவாடுகளை உபயோகிக்கலாம்).
செய்முறை: பூண்டைத் தோல் உரித்து வைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளியை நன்கு கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடுகு, ஓமம், மிளகு, ஜீரகம், பெருங்காயம் நறுக்கு மூலம் திப்பிலி, வெந்தயம் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாக அம்மியிலோ அல்லது மின் அம்மியிலோ அரைத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் வாணலி அல்லது மண் சட்டியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்தவுடன், வெந்தயம் சிறிது போட்டு சிவந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலை யையும் போட்டுத் தாளிக்கவும். அதோடு உரித்து வைத்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மருந்து மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கி, தேவையான நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்துக் கெட்டியானதும் மீண்டும் ஒரு முறை நல்லெண்ணெய் ஊற்றித் தாளித்து, இறக்கி மூடிவைத்து, சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருப்பதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
பின்குறிப்பு : கருவாடு சேர்ப்பது என்றாலும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம். கருவாட்டில் உப்பு இருக்கு மென்பதால் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் போதும்.