உங்கள் இல்லம் அழகு பெற...

House Cleaning
House Cleaning
Published on

தவிர்க்க வேண்டியவைகள் பத்து

ட்டடை, தூசி படிந்த அறைகள்

சுவரெங்கும் காலண்டர்கள், போட்டோக்கள், போஸ்டர்கள்; பீரோ, அலமாரி, ப்ரிஜ் கதவுகளில் ஸ்டிக்கர்கள்.

அறையின் நடுவே கயிற்றுக் கொடி, லாலி லாலியாக தொங்கும் துணிகள்.

சுருட்டி வைக்கப்படாத பாய், படுக்கை, போர்வை, சுருக்கம் நீக்கி தட்டி போடப்படாத மெத்தை கட்டில்

அறைகளை அடைத்து தட்டு முட்டு சாமான்கள், பழைய உடைந்த சாமான்கள், விளையாட்டு பொம்மைகள், பாத்ரூம் சுவரில், கண்ணாடியில் ஒட்டப்பட்ட பழைய ஸ்டிக்கர் பொட்டுக்கள்.

தூசி படிந்து பரிதாபமாகக் காட்சியளிக்கும் பிளாஸ்டிக் பூ ஜாடிகள், வர்ணம் போன தோரணங்கள், பொம்மைகள்.

அழுக் கடைந்த திரைச் சீலைகள், சோபா செட், எண்ணெய்ப் பிசுக்குடன் நிறமேறிய தலையணை உறைகள்,  தலையணைகள்.

உரிய இடத்தில் வைக்கப்படாமல் அறையின் நடுவே எறியப்பட்ட கைப்பை, வாட்டர் பேக், புத்தகப் பை, காலணிகள், காலுறைகள்.

Dirty curtains, sofa set,
Dirty curtains, sofa set,

கூளமாக இறைந்து கிடக்கும் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள்.

வீடே அதிரும்படிய அலறிக் கொண்டிருக்கும் டீ.வி, ஸ்டீரியோ.

கைப்பிடிக்க வேண்டியவைகள் பத்து

தேவைக்கு மேலே சாமான்கள் சேர்க்காமல் இருப்பது. முக்கியமாக பர்னீச்சர்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், பாட்டில்கள், விளையாட்டு சாமான்கள் புதியன புகுந்தால் பழையனவற்றை உடனே கழித்துக் கட்டுவது என்ற கொள்கை.

வரவேற்பு அறையில் அலங்காரம் பொருட்களை கொச கொசவென்று வைத்து கொடெளன் ஆக்காமல் அளவுடன் அலங்கரிப்பது. இலவச இணைப்புப் பொருள்களைக் காட்சிப் பொருளாக வைக்காமல் தவிர்ப்பது. மிகுதியிருந்தால் ரகவாரியாக 'தீம்' வைத்து பீங்கான், கண்ணாடி/ கிரிஸ்டல், உலோக அலங்காரப் பொருட்களை அவ்வப்போது மாற்றி வைத்து அலங்கரிப்பது

குடும்பத்தில் அனைவரும் கணவரிலிருந்து குழந்தைகள் உட்பட, எந்தப் பொருளையும் அதற்கு உரித்தான இடத்திலேயே வைத்து, எடுத்துப் புழங்குவது என்ற கட்டுப்பாட்டை அனுசரித்தல்.

மாதம் ஒருமுறையாவது மின்விசிறி, விளக்குகள், பர்னீச்சர், மிக்ஸி, கிரைண்டர், அலமாரி முதலியவற்றை ஈரத்துணியால் தூசி போகத் துடைத்து சுத்தம் செய்வது, தலையணை உறைகளை மாற்றி பழையவற்றை தோய்ப்பது.

Cleaning fan in home

மருந்துகள், ஆயின்ட்மெண்ட், நாப்தலீன் உருண்டை போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைப்பது, பினாயில், ஆசிட் முதலியவற்றை பாதுகாப்பாக கை, கால் இடறாத இடத்தில் வைப்பது.

சமையலறையில் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவு பாத்திரங்களை  வைத்துக்கொண்டு, பெரும்படி பாத்திரங்களைப் பெட்டியில் போட்டுவிட்டு தேவைப்படும்போது மட்டும் எடுத்துக் கையாள்வது.

மாதத்தில் ஒருமுறை மளிகை சாமான்கள் வைத்துள்ள பாத்திரங்களை ஒழித்து சுத்தம் செய்து பளபளவென்ற நிலையில் திருப்பி வைப்பது.

காஸ் தீர்ந்து போனால், மிக்ஸி அல்லது கிரைண்டர் பழுதாகிவிட்டால், வேலைக்காரி வரவில்லை என்றால் ஏதோ குடிமுழுகிப் போனதுபோல விசனப்பட்டு அரற்றாமல் இருப்பது.

இதையும் படியுங்கள்:
WhatsApp-ல் வீடியோவுக்கான புதிய அம்சம்!
House Cleaning

குளியலறை, டாய்லெட் எப்போதும் சுத்தமாக பளிச்சென்று வைத்துக்கொள்ள முயற்சிப்பது. ஈரம், பாசி படியாமல் ஒவ்வாத நாற்றம் வராமல் பார்த்துக்கொள்வது.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், நண்பர்கள் சகஜமாக உரையாடுவதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க தோதாக வரவேற்பு அறையில் டீ.வி, ஸ்டீரியோவை வைக்காமல் இருப்பது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கட்டுப்பாடு, எளிமை, தூய்மை, அமைதி இந்த நான்குதான் இல்லத்திற்கு எழில் சேர்ப்பவை. இந்தப் பணியில் குடும்பத்தில் எல்லோருக்கும் சம்பங்கு உண்டு.

- ரோஹிணி கிருஷ்ணன்.

(மம, ஜூலை 2002 47)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com