மங்கையர் மலர் சிறுகதை போட்டி முடிவுகள்!

Mangayar Malar 44th Anniversary Celebration Short Story Competition Result
Mangayar Malar 44th Anniversary Celebration Short Story Competition Result

அன்பு வாசகர்களே!

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் முதற்கண் எங்களது நன்றிகள் பல.

மங்கையர் மலர் அச்சு வடிவில் வெளிவந்த சமயம் எந்த ஒரு போட்டிக்கும் நூற்றுக்கணக்கில் (சில புதிர் போட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில்) பங்கேற்பு இருக்கும். இப்போது kalkionline.com digital தளம் வழியாக நமது மங்கையர் மலர் வாசகர்களுக்கான போட்டியை நடத்துகையில், இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று நாங்கள் சற்று தயங்கினது உண்மைதான். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும் என்பதால், குறைந்த எண்ணிக்கையிலேதான் பங்கேற்பு இருக்கும் என்று எண்ணிய எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் – ஏறத்தாழ 150 வாசகர்களின் பங்கேற்பு, கோலாகலமாக இருந்தது. 20’s கிட்ஸுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! பாராட்டுகள் – கைதட்டல்கள்!

முடிவுகளை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி.

நடுவர்கள்:

முதல் சுற்று:

கதாசிரியர்: பாரதிமணியன்

சேலம் சுபா

வினோதினி

ஜி.எஸ்.சுப்பிரமணியம் (GSS)

இறுதிச்சுற்று:

அனுராதா சேகர்

சிறுகதை 'மாய கூண்டு' முதல் பகுதி:

Mayakoondu Short story
Mayakoondu Short story

"கமலா... நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு மாப்பிள வீட்லேர்ந்து போன் பண்ணி உறுதி சொல்லிட்டாங்க...இனி அடுத்த முகூர்த்தத்தில் தேதி குறித்து கல்யாணத்த நடத்திக்கலாமுன்னு சொல்லிட்டாங்க. இனிமே இவளை மேல படிக்கிற பிளானை எல்லாம் நிறுத்திக்க சொல்லு”  என்று சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு, ரம்யா இருந்த அறையை பார்த்தபடியே சத்தமாக சொன்னார் அப்பா.

‘அது அவளுக்கான செய்தி’ என்பது ரம்யாவுக்கு புரிந்தது.

கடந்த மூன்று மாதங்களாக, இப்படித்தான் அம்மாவை நடுவில் வைத்து ... அப்பாவும் அவளும் பேசிக்கொள்கிறார்கள்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பா அவள் முகம் பார்த்து பேசுவதைத் தவிர்த்து விட்டார் 

சிறு குழந்தை முதல் இருந்தே அவளுக்கு அப்பாவை நிரம்ப பிடிக்கும். அவருக்கும் அவள்மேல் அவ்வளவு பிரியம்.

அவள் எதைக் கேட்டாலும், அம்மா குறுக்கே வந்து ‘வேண்டாம்’ என்று சொன்னாலும்…

 "புள்ள ஆசைபட்டு கேட்டுட்டா .. வாங்கி குடுத்துடலாம் " ன்னு சொல்பவர் ... அவளுக்கு ஒண்ணுன்னா துடிதுடித்துப் போகிறவர்... இன்று பாராமுகமாக இருக்கிறார்.

இதற்கு காரணம் அந்த சுரேஷ்தான். சுரேஷ் அவளுடைய கல்லூரியில் கூட படித்தவன். முதலில் நட்பாக பழகி பின்பு அவளைக் காதலிப்பதாக சொன்னான்.

"இந்த காதல், கல்யாணம் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு... நான் நிறைய கனவுகளோடு இருக்கேன். எங்க வீட்டிலயும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க...” என்று  அவள் எத்தனை எடுத்துச்சொல்லியும் ...அவன் மனம் மாறுவதாக தெரியவில்லை."  

பின்பு கல்லூரி இறுதி நாளில் வந்து, இவளை காதலிப்பதாக பேச்சு கொடுத்தான். 

அவள் அவனோடு பேச மறுத்ததும்... வாய்க்கு வந்தபடி பேசினான்.

"பணக்கார பசங்கள தாண்டி உங்களுக்குப் பிடிக்கும். ஒருத்தன் சிவப்பா உயரமாக இருந்தா.. உடனே மயங்கிப்போய் அவன் பின்னாடியே போவீங்க... என்னை மாதிரி நேர்மையாக.. நியாயமா காதலிக்கறவன கண்டா... உங்களுக்கு இளக்காரம்."

அவன் காதலை மறுத்துவிட்ட ஆத்திரத்தில் கத்தினான்.

அதற்கு இவள் அவனிடம் ‘இப்படியெல்லாம் பேசாதே’ என்று எச்சரித்து... திட்டி அனுப்பி விட்டாள். 

அவனைப்போலவே இன்னும் சிலர்... அவ்வப்போது வந்து நேரிடையாகவோ.. மறைமுகமாகவோ, அவளிடம்  விரும்புவதாக சொல்லி அணுகியபோதும் அவள் மசியவில்லை .

காதல் என்பது இருபாலருக்குள்ளும் தானாக வரவேண்டிய… ஆத்மார்த்தமான உணர்வு என்று அவள் நம்பினாள். மேலும் IAS படிப்பதுதான் அவளின் நீண்ட கால கனவு.

கல்லூரி படிப்பு முடிந்த பிறகு… IAS கோச்சிங்க்கு சேர அப்பாவோடு அவள் போகும் போது, சுரேசை பஸ் ஸ்டாப்பில் எதேச்சையாக பார்த்தாள்.                           

அவனாக வந்து அவளிடம் பேச்சு கொடுத்தான்.

 ரம்யா அவனை பார்த்துவிட்டு திரும்பி நின்றுகொண்டாள். அவனோ சட்டென்று நெருங்கி வந்து அவள் கையைப் பிடித்துவிட்டான்.

 "சீ விடு " என்று அவள் கையை உதற...

"ரம்யா... ப்ளீஸ் உனக்கு என்னை ஏன் பிடிக்கலை!?.. ஐ லவ் யூ.." என்று அவன் கெஞ்ச …

இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த, ரம்யாவின் அப்பாவுக்குப் கோபம் வந்துவிட்டது.                         

அவன் சட்டையை பிடித்து இழுத்து, ஓங்கி அறைந்துவிட்டார்.

இதை பார்த்ததும் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடி விட்டது.

சுற்றிலும் இருப்பவர்களில் சிலர் சுரேசை திட்ட… சிலர் ரம்யாவையம் அவனையும் பற்றி ஏதேதோ அவர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பேசிக்கொண்டார்கள்.

அப்போது அங்கே இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர்... இடையில் நுழைந்து… 

"நீங்க கேஸ் கொடுத்தால் இவனை தண்டிக்க முடியும். போலீசுக்கு போன் செய்யலாமா?! என்று கேட்டார்.

‘இதுக்கு போலீஸ்... கேஸ் எல்லாம்  வேண்டாம்’ என்று அப்பா சொல்ல..

அங்கிருந்தவர்கள் சுரேஷை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

அன்று முழுதும் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கொண்டு, அவளிடம் வந்து சுரேஷ் அப்படி நடந்து கொண்டதற்கு... இவள் மீதுதான் குறை சொன்னார்கள் .

"இவள் அவனிடம் நெருக்கமாக பழகி இருப்பாள். அதை அவன் சாதகமாக எடுத்துக் கொண்டான்." 

"அவன் அவ்வளவு உரிமையாக கையை பிடிக்கிறான் என்றால்... எப்படி?! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா ?!" 

ரம்யா எவ்வளவு எடுத்து சொல்லியும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை.                 

 "என்னை நம்புங்கப்பா" என்று அவள் அழுது புலம்பினாள் .

அம்மா கூட ரம்யாவை பிறகு புரிந்துகொண்டாள். ஆனால், அப்பாவுக்கு பயம் வந்து விட்டது.

அவளிடம் இனி கடுமையாக இருந்தால்தான் நல்லது என்று அவரே முடிவு பண்ணிக்கொண்டார். 

அதுவரை அவள் மீது பிரியமாக இருந்த அப்பா ... அவள் கனவு நனவாக எப்போதும் துணையாக இருந்த அப்பா, அதன் பிறகு , ஆளே மாறிப் போனார்.

'பெண்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால்.. வளர்ப்பு சரியில்லை என்று களங்கம் வந்து விடுமோ?! கணவன் குழந்தைகள் சுற்றியே.. பெண்கள் வாழ வேண்டும் என்று சமூகம் வரையறுத்த மாய கூண்டுக்கு வெளியே.. அவள் வாழ்க்கை போய் விடுமோ! '

என பயந்து அவளுடைய திருமணத்திற்கு உடனடியாக ஏற்பாடு பண்ணி விட்டார்.

ரம்யா , அப்பாவின் முடிவை எதிர்த்து செயல் படமுடியாமல், அவள் IAS கனவை தியாகம் பண்ண வேண்டிய மனவருத்தத்தில் இருந்தாள்.

அப்பா வெளியே போனபிறகு ... அம்மாவிடம் வந்து 

"அம்மா ..அப்பா ஏன் இப்படி இருக்கிறார். எனக்கு IAS படிக்கணும்ங்கிற ஆசைய தெரிஞ்சிக்கிட்டும், பிடிவாதமா கல்யாணம் பண்ணி வைக்க நிற்கிறார். இன்னும் அவர் என்னை நம்பவில்லை பாருங்க ." என்றாள்.

அம்மா கமலா.. ஒரு பெரு மூச்சோடு அவளை பார்த்தாள்.

கமலாவும் ப்ளஸ் டூவோடு படிப்பை நிறுத்திவிட்டு ...நல்ல வரன் அமைந்தது என்று ரம்யாவின் அப்பாவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவள்.

அவளுக்கு மகள் ரம்யாவின் மனநிலையும் புரிந்தது. தன் கணவனின் பயமும் புரிந்தது. 

கமலா மகள் ரம்யாவை தன் தோளில் சாய்த்துக்கொண்டு…

"உன்னோட மனசு எனக்கு புரியதுமா ... அந்த பையன் செய்த குழப்பத்தில்தான் உனக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சு. அப்பாவுக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும். உன்மேல தப்பு இல்லையினும் தெரியும். ஆனா இந்த மாதிரி நடந்தது,  உறவுக்காரங்களுக்கு தெரிந்தா .. தப்பா பேசுவாங்க , அது உன்னையும் எங்களையும்தான் பாதிக்கும்” என்றாள்


"அப்போ நான் மேல படிக்க ஆசைபட்டது நடக்காதா ...?! வெறும் கனவாகவே போயிடுமா? என் மன கஷ்டத்தைப் பத்தி நீங்க யாரும் நினச்சு பாக்க மாட்டிங்களா?!"

சிறுபிள்ளை போல அவள் அழுதுகொண்டே பேச... அம்மாவின் கண்களும் கலங்கின.


"ரம்யா .. சமூகத்தில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும்... நவீன யுகமாக காலம் மாறிக்கொண்டு இருந்தாலும்... பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை.

அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள்.. ஆசை, கனவுகள் எல்லாம், அவர்கள் யாரை சார்ந்து வாழுகிறார்களோ அவர்கள் முடிவில்தான் நடக்கிறது. அதுவும் இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக அடிபட்டும் விடுகிறது. 

உனக்கு உன் விருப்பப்படி IAS படிக்கனுமின்னா, அது உனக்கு வர போறக் கணவனை பொறுத்து… அவரின் விருப்பத்தைப் பொறுத்து.. கல்யாணத்திற்குப் பிறகும் கூட படிக்கலாம்.

நிறைய பெண்கள் அப்படி சாதித்து இருக்காங்க .. உன்னோட சாமர்த்தியத்தால் அதுவும் நடத்தமுடியும்..." என்று அம்மா, அவளுக்குத் தெரிந்த சமூக நடைமுறை பற்றி எடுத்து சொல்ல...

அம்மாவின் சமாதானத்தை ரம்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்... அவளுடைய இயலாமை அவளை மௌனமாக்கி விட்டது.


இப்பொது ரம்யா அவள் வருங்கால கணவனுக்காக... பல கனவுகளோடு காத்திருக்கிறாள். 

3 கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு பாரதிமணியன் எழுதிய 'மாயக்கூண்டு' கதையின் இரண்டாம் பகுதியை எழுதி அனுப்பியவர்களிலிருந்து பரிசு பெற்ற 3 கதை முடிவுகள் இதோ:

Shashikala Raghuraman:

Shashikala Raghuraman
Shashikala Raghuraman

வெளியே சென்ற ரம்யாவின் அப்பா, பேருந்து நிறுத்தத்தில் தன்னுடைய பால்ய நண்பனைச் சந்தித்தார். " என்னடா பாலு, ரொம்ப நாளாக நீ யார் கண்ணிலேயும் படவேயில்லை. தொலைபேசியில் கூட உன்னைப் பிடிக்க முடியவில்லை. நம்பர் மாறிடுச்சா என்ன? " என வினவினார்.

மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த பாலு,  "எல்லாம் என் பையன்  வாழ்க்கையைப் பற்றிய கவலை தான். வா உட்கார்ந்து பேசலாம் " என்றார். "என்னுடைய பையனுக்கு 28 வயதாகி விட்டதே என்று, அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்தோம். என் மனைவி உடல் நிலை பற்றித்  தான் உனக்குத்  தெரியுமே...அவள் நோய் முற்றுவதற்குள், காலா காலத்தில் ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்த்துவிட நினைத்தோம். எங்கள் துரதிருஷ்டம், அல்லது அந்த பெண்ணின் அதிர்ஷ்டம், திருமணம் நடந்து ஒரு மாதத்திற்குள், அந்தப் பெண்ணிற்கு, வெளிநாட்டில் உள்ள மிகப் பெரிய கல்லூரியில் படிக்க வாய்ப்பு வர, இரண்டு வருடங்கள் படித்து விட்டு வருகிறேன் எனக் கிளம்பி விட்டாள்.என் மகனும், அப்பா இது அறிய வாய்ப்பு. அவள் என்னோடு வாழ்வது மட்டும் முக்கியமில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனக் கூறி விட்டான்"

" இது என்ன அநியாயமாக இருக்கிறது. உங்கள் பேரன் பேத்தியைப் பற்றிய கனவு என்னவாயிற்று? உன் பையன் ஏன் அதற்குச் சம்மதித்தான்".

" அந்தப் பெண்ணின் மீது குற்றம் இல்லை. அவள் மனம் முழுவதும் அந்தப் படிப்பைச் சுற்றியே இருக்கிறது. அந்தக் காலம் போல், இப்போதெல்லாம் பெண்களைத்  திருமணம் என்ற மாயக் கூண்டிற்குள் அடைக்க இயலாது....ஏனெனில், அவர்களிடத்தில் விவாகரத்து என்ற சாவி, எப்போதும் கையில் இருக்கிறது. மேலும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி நாம் அதீதமாக கனவு காணக் கூடாது." என்றார். " நாங்கள் அவளையும், என் மகனின் நிலைமையையும் புரிந்து கொண்டு, ஒப்புக் கொண்டாலும், ஊர் நாலு விதமாகப் பேசும் என்பதால், எல்லோருடனும் தொடர்பைத் துண்டித்து விட்டோம். "

" யாரோ கணவனாகப் போகிறவரும், அவருடையக் குடும்பமும் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் பெண் வீட்டினர், இந்தக் கனவைப்  பற்றி முன்னாலேயே சொல்லி இருக்கலாம். அல்லது, அந்தக் கனவை நிறைவேற்ற முயன்று இருக்கலாம். ரொம்ப நேர்மையான நல்ல பெண். அது தானே முக்கியம். இரண்டு வருடத்தில் என்ன இருக்கிறது?  நாங்கள் அந்தப் பெண்ணை நம்பி எங்கேயோ அனுப்ப சம்மதித்தோம். ஆனால், தன்னுடைய பெற்றோர் ஒத்துழைக்க வில்லையே என்ற கோவத்தில், அவள் தன்னுடைய  பெற்றோருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள் ". " சரி, விடு , நீ உன் குசலத்தைச் சொல் " என்றான் பாலு.

" ரம்யா, IAS படிக்கப் போகிறாள். நானும் சில நாட்களாக ஏதோ குழப்பத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும், தெளிவு பிறந்தது....திருமண பந்தம் என்பது மாயக் கூண்டாக இல்லாமல், மகிழ்ச்சியால் கட்டிப் போடும் அன்பென்னும் மாய வலையாக இருக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டேன்” என்றார்.

கையில்  IAS புத்தகங்களுடன் நுழைந்த அப்பாவைப் பார்த்து, ரம்யா குதூகலித்தாள்.

N Venkatraman

N Venkatraman
N Venkatraman

கமலா , ரம்யாவுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றினாளே தவிர அவளுக்கு தன் மகளாவது IAS படித்து சமூகத்திற்கு பணியாற்ற தன்னால் எதையும் செய்ய இயலாமல் உள்ளதை நினைத்து உள்ளுக்குள் வருந்தினாள்.

ரம்யா, ஏற்கெனவே IAS நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாள். ஒரு தனியார் ட்ரஸ்ட் 0, முக்கிய தேர்வுக்கு இலவசமாக  பயிற்சி தருவதாக கூறியிருந்தது. இந்நிலையில்,அப்பாவை மீறி,எவ்வாறு பயிற்சி வகுப்பு செல்வது??.

பிள்ளை வீட்டார் , மறுபடியும் நிச்சயதார்த்தம் வைக்க நாள் பார்த்து முடிவு செய்ய பேச

வருவதாகக் கூறியிருந்தார்கள். நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பேச வருவார்கள். ரம்யா, சரியாக சாப்பிடாமல் அறைக்குள் முடங்கிக் கிடந்தது பற்றி அப்பாவுக்கும் தெரிந்திருந்தது. கமலா,அவரிடம்..

"ஏங்க, அவசரப்படாதீங்க..நமக்கு இருப்பது ஒரு மகள்..அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா??ஊர் என்ன சொல்லும் என்று இப்படி அவள் வாழ்க்கையை ஒரு சிறைச்சாலை போல ஆக்கி விடலாமா?".

"கமலா, ரம்யாவைப் பத்தி உனக்கும்,எனக்கும் தெரிந்து என்ன? ஊரில் தப்பாகப் பேசுவது அவள் வாழ்க்கையை பாழடித்து விடும்"...அப்பா..

இல்லீங்க,இந்த கல்யாணத்தால ரம்யா சந்தோஷமாக இருப்பாள் என நம்பறீங்களா?"  ..அம்மா.

"ஊம்..பிள்ளை குட்டின்னு ஆகிவிட்டால் எல்லாம் சரியாகி விடும்".. .

"இல்லீங்க, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. இதுவரை உங்களோஞ வாழ்ந்த 30 வருஷத்துல எதையும் கேட்டதில்லே.. இப்போ எனக்காக ஒரு விருப்பம். மகளை ,கணவன், பிள்ளைகள்,குடும்பம் ன்னு ஒரு கூண்டுக்குள் சிக்க வைக்காதீங்க. அவளை அவள் விருப்பப்படி படிக்க அனுமதி தரணுங்க. "...

"கமலா, நீயா இப்படி பேசற!"...

"ஆமாம்,இதுக்கு நீங்க அனுமதி தரலேன்னா..இந்த திருமணம் நடக்கறதுக்கு முன்பே நான் உங்களை விட்டு, மகளுடன் போய் நாலு இடத்தில் வேலை செய்தாவது படிக்க வைப்பேன். இது சத்தியம்"...

அப்பா அதிர்ந்து போனார். இத்தனை காலம் கமலாவும் இந்த வாழ்க்கையை ஒரு மாயக் கூண்டாகத்தான் நினைத்து வாழ்கிறாளா?

அவள் சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்ததெல்லாம் ,தவறா? அவளுக்கும் உயர்படிப்பு ஆசை இருந்ததாகச் சொல்லி இருந்தாள். அடிமனதில் அது புதைந்து கிடந்ததோ??.

அவர் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினார். நேரில் விஷயத்தைக் கூறியிருக்கிறார்..

பிள்ளை வீட்டார், இதைக் கேட்டு...

"அப்படியா, ரொம்ப மகிழ்ச்சி. நீங்க தாராளமா பொண்ணை IAS படிக்க வைங்க..

அவ,படிக்கட்டும். எங்கள் மகனும்,இப்படி சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்ணைத் தான் விரும்பினான். எவ்வளவு காலம் ஆனாலும் ரம்யா தான் எங்கள் வீட்டு மருமகள்" என்றார் சம்பந்தி...

மாயக் கூண்டுகள்,சிறையில் வைக்க இந்தக் காலப் பெண்கள் ஒன்றும் சிறகொடிந்த  கூண்டுக் கிளிகள்  அல்ல. கூண்டை தகர்த்தெறியும் ஆகாயப் பறவைகள்..

அப்பா, வெகுநாட்களுக்குப் பின் மகள் எதிரில் வந்து நின்று....

"நீ  உன் இஷ்டம் போல் படிம்மா' .

"அப்பா..." என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகையால் கைகளை நனைத்தாள்.

அங்கே மாயக் கூண்டுகள் உடைந்தன.

V. Shoba Vijayabaskar

V. Shoba Vijayabaskar
V. Shoba Vijayabaskar

ஒரு சுபமுகூர்த்த நாளில் ரம்யாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீடு.

முதலிரவு அறை….

      தன்னிடம் கொடுக்கப்பட்ட பால் சொம்புடன் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் ரம்யா…

      உள்ளே அழகாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சம்.  அருகிலிருந்த டீப்பாயில் பால்சொம்பை வைத்துவிட்டு அறையைச் சுற்றி நோட்டமிட்ட ரம்யாவின் கண்கள் அகல விரிந்தன.

       சுவரோரம் இருந்த செல்ப்பில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  ‘ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி.?, நீங்களும் ஐ.ஏ.எஸ்தான்…’ என்பன போன்ற பல தலைப்புகளில் ஐஏஎஸ் படிப்புக்கான ஏ டூ இசட் புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து பிரமித்துப்போனாள்.

      நம்மைப் போல் நம் கணவனும் ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டானா..? அல்லது படிக்கிறானா..?  என்ற சிந்தித்தவாறே சில புத்தகங்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் அவள் கணவன் முதலிரவு அறைக்குள் நுழைந்தான்.

       ‘என்ன.. ரம்யா ரூம் பிடிச்சிருக்கா..?’

      ‘உம்’ என்றவள்… இதென்ன ஐஏஎஸ் புத்தகங்களா இங்க அடுக்கி வைச்சிருக்கீங்க… நீங்க ஐஏஎஸ் படிக்கிறீங்களா…?’ என்று கேட்டாள்.

      பதிலுக்கு சிரித்தவன்…. ‘நான் படிக்கல…. என் ஒய்ஃப் படிக்கப்போறா….. அதுக்குத்தான் இந்த புக்ஸ் எல்லாம்…’

       புரியாமல் ஆச்சரியமாய்ப் பார்த்த ரம்யாவிடம், “ரம்யா… நம்ம நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் கல்யாண பத்திரிக்கை கொடுக்க உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்தார். அப்போ என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பதான் உன்னோட கனவு ஐஏஎஸ் படிப்பு என்பதையும், அது எதனால் முடியாமப் போனதுங்கறதையும் சொல்லி வருத்தப்பட்டு கண்கலங்கினார்… திடீர்னு என் கையப் பிடிச்சுக்கிட்டு…‘மாப்ளே… என் ஒரே பொண்ணு ஆசையை இது வரைக்கும் நான் நிராகரிச்சது இல்லே… ஆனா அவ ஆசைப்பட்ட படிப்பை கொடுக்க முடியாம போயிடுமோன்னு என் மனசு கிடந்து துடிக்குது மாப்ளே… உங்க கையப்பிடிச்சு கேட்டுக்கிறேன். ஒருவேளை கல்யாணத்துக்குப் பிறகு அவ ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டா நீங்க அவளுக்கு பர்மிஷன் கொடுக்கனும்… அவள நல்லா படிக்க வைக்கனும்… அவளோட ஆசையை நீங்க நிறைவேத்தனும் மாப்ளே…’ன்னு கண்ணீர்மல்க கேட்டார்.

     'அப்பதான் அப்பா  பொண்ணு மேல வச்சிருக்கிற பாசம் புரிஞ்சுது… நிச்சயம் ரம்யாவை கலெக்டராக்கி அழகு பார்ப்பேன் மாமா’ன்னு வாக்கு கொடுத்திட்டேன். அன்னேலேருந்து ஐஏஎஸ் சம்பந்தப்பட்ட புக்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்….  அதனால இனி நீ உன் இஷ்டம் போல ஐஏஎஸ் படிக்கலாம்… அதற்கு இங்கே எந்தத் தடையுமில்லே…  நம்ம பள்ளியறைதான் இனி உனக்கு பள்ளி அறை… அதாவது,  ஐஏஎஸ் பாடம் படிக்கிற பள்ளி அறை… நீ ஐஏஎஸ் படிச்சு பாஸாகற வரைக்கும் நமக்குள் குழந்தை வேணாம்… படிப்பு பாதிக்கும்கிறதனால…  கொஞ்சம் தள்ளி வைப்போம்…. ”

        கணவன் சொல்லச் சொல்ல… உறவுகள் என்ற ‘மாய கூண்டிலிருந்து’ விடுபடும் சுதந்திரப் பறவையாய் உணர்ந்த  ரம்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டது… அப்படியே ஓடிச் சென்று கணவனின் காலடியில் விழுந்து வணங்கினாள்… கண்களிலிருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர் கணவனின் கால்களில் பாதபூஜை செய்தபடி உருண்டோடியது. இருவர் உள்ளமும் ஒன்றாகி மலர் மஞ்சத்திலும் ஈருடல் ஓருயிராய் இணைய ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடியது…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com