'தினம் ஒரு சவால்' - போட்டி 1 முடிவுகள்!

Mangayar Malar 44th anniversary  contest result
Mangayar Malar 44th anniversary contest result

1. சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

குடும்ப வருமானமறிந்து அனைவரின் வயிற்றையும் சந்தோசமாக வைத்திருப்பது மாமியாரின் சிக்கனமும், அனுபவமும் தான். சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் என்பது அனைவரின் உடலுக்கும் மிகவும் முக்கியமானது. வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து போகாமல் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து குணப்படுத்துவது மாமியாரால் மட்டுமே முடியும். அதனால் என்றுமே சமையலறையின் அரசி என்பது மாமியார்க்கு மட்டுமே பொருந்தும் என்பதே என்னுடைய வாதம்.

2. S. ஜெயகாந்தி

 'சமையலறையின் அரசி மருமகளே' என்பதுதான் எனது வாதம். எப்போ ஒரு பெண் தாலி கட்டி, வலது காலை எடுத்துவைத்து மாமியார் வீட்டுக்குள் நுழைகிறாளோ அந்த நிமிடம் முதலே, சமையலறை என்ன, அந்த வீட்டின் மொத்த சாம்ராஜ்யமே அவள் பிடிக்குள் வந்துவிடுகிறது. கணவரோடு குடும்பம் நடத்தி குழந்தை பெற்று, வளர்த்து இறுதிவரை பயணிக்கப்போவது அவள் மட்டுமே. மாமியார் தானாகவே பதவி இறங்கிவிட வேண்டியதுதான். அவ்வப்போது ஆலோசனை கூறி உதவலாம்.

3. பானுரேகா பாஸ்கர்

சமையலறை என்பது ஒரு வீட்டின் இதயம் போன்றது. அங்கு சமைக்கப்படுலது உணவு மட்டுமல்ல அதன் அரசியான மங்கையின் அன்பும் ஆதரவும் கலந்த பிரசாதமாகும்.

மருமகள் நவீன பாணியில் சமைத்தாலும் , பலவித மசாலாக்களை அள்ளி தெளித்து செய்யப்படும் உணவுகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் வயிற்றுக்கு இதமாக இருக்காது.

மருமகளின் மசக்கை நேரத்தில் அவள் மனமறிந்து எலுமிச்சை ஊறுகாயும் புதினா துவையல் செய்து தரும் மாமியாரே சமையல் அறையின் அரசி ஆவாள்.

வேலையிலிருந்து வரும் மருமகள் சூடா பில்டர் காபி தரும்படி  உரிமையோடு கேட்கும் போது மாமியார் சமையலறையின் அரசியாகவும் மருமகள் இளவரசியாகவும் அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

 4. உமா ஸ்ரீதரன்

மருமகள்தான் சமையலறையின் அரசி. குடும்ப பாரம்பரியத்தை கட்டி பாதுகாத்து முன்னே கொண்டு செல்பவள் மருமகள். குடும்பத்தின் ஆரோக்கியம் மருமகளுக்குதான் தெரியும். யாருக்கு எது தேவை, யாருக்கு எது ஒத்துக்கொள்ளும், யாருக்கு பத்தியம் தேவை என அறிந்து அதன்படி சமைத்து பரிமாறும் தென்பும் பொறுமையும் மருமகளுக்கே இருக்கும். மொத்தத்தில் ஒரு குடும்பத்தின் முழு Prescription மருமகள் கையில் தான்.எனவே மருமகளே சமையலறையின் அரசி.

5. ரஞ்சிதா சந்திரசேகர்

தன் தாய் மற்றும் மாமியாரின் வழிகாட்டுதலில் சமையலறையில் அசத்துவது மருமகளே!

வீட்டில் பெரியவர்களுக்காக பாரம்பரிய சமையலும், கணவனுக்கு பிடித்த உணவும், மற்றும் தனது குழந்தைகளுக்காக சமையலில் புதுமையும் செய்து அசத்துவதும் மருமகளே!

யூடியூப் வலைதளத்தில் பார்த்து சமையலில் புதுமையை புகுத்தி, தனது மாமியாருக்கே யூடியூப் கற்றுக்கொடுத்து  சிறப்பித்து கொண்டிருப்பதும்  மருமகளே!

அலுவலக மற்றும் வீட்டு வேலையின் நடுவில் தன் விருப்பமான உணவையே மறந்து மற்றவர்களுக்காக சமையலில் அசத்துவதும்  மருமகளே!

6. ஶ்ரீவித்யா பசுபதி

சமையலறையின் அரசி மாமியார்தான். அரசி என்பவர் அனுபவம் மிக்கவராகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். மாமியார் என்ற பொறுப்பை அடையும் முன், இளவரசியாக, மருமகளாகத் தன் அம்மா மற்றும் மாமியாரிடம் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறார். 

இவற்றை மூலதனமாகக் கொண்டு, தன் அனுபவத்தில் கற்றுத் தேர்ந்தவைகளையும், கால மாற்றத்திற்கு ஏற்ப சில புதுமைகளையும் புகுத்தி ஒரு குடும்பத்தைத் தன் கைப்பக்குவத்தில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மாமியாரே சமையலறையின் அரசி.

7. கலைமதி சிவகுரு

சமையல் அறையின் அரசி மாமியார்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் அறையின் அனுபவங்களைஅணு அணுவாக அனுபவித்து அனைத்து விஷயங்களையும் உணர்ந்தவள் மாமியார். கணவருக்கு, மகனுக்கு,மரு மகளுக்கு பேரனுக்கு,பேத்திக்கு என யார் எதை விரும்புவார்கள்என்பதை அறிந்து வகை வகையாக உணவுப் படைப்புகள் மாமியார். மேலும் என்ன பொருள் இருக்கிறது, எது இல்லை, எது அதிகமாக தேவை என்பதை அலசி, ஆராய்ந்து பொருட்களை வாங்கி அதை வீணடிக்காமல் பாதுகாப்பவள் மாமியார்.

ஒவ்வொரு பொருட்களும் எங்கு இருக்கிறது , பாத்திரங்களை எவ்வாறு சீர்படுத்தி அடுக்குவது என்பதையும், வாய்க்கு ருசியாக எதை சமைக்கலாம் என்பதையும், நன்கு உணர்ந்தவள் மாமியாரே என்று மனதார கூறுகிறேன்.

8. M.S.அருள்மொழி

"சமையல் அறையின் அரசி மாமியார்" தான் என்பது என்னுடைய கருத்து.

1.குடும்பத்தில் உள்ளவர்களின் மனசுக்கும், சுவைக்கும் ஏற்றவாறு சமைப்பது.

2.ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை சமைப்பது

3.பட்ஜெட் முறையில் செய்வது

4.தெய்வீக நம்பிக்கையோடு சமைப்பது

5.எவ்வளவு பேர் வந்தாலும் அலுக்காமல், சலிக்காமல், கவனித்து சமைப்பது

6.அன்பாக ஒவ்வொன்றுமா பார்த்து, பார்த்து பட்சணம் செய்வது

7.விருந்தினருக்காக கடைகளில் வாங்காமல் தானே மாங்கு மாங்குனு சமைப்பது

8.வீட்டு வேலைகளை ஒரு சுமையாக நினைப்பது இல்லை

9.வேலைக்கும் சென்று, வீட்டில வேலையும் செய்யக்கூடிய தைரியம் மாமியாருக்கு உண்டு.

10.உணவே மருந்து என்னும் நோக்கத்தில் சமைப்பது மற்றும்,

11. கடுகு டப்பாவை,காட்ரேஜ் பீரோ லாக்கர் போல உபயோகிக்கும் திறமையும் மாமியாருக்கே உரியது.

9. R.காயத்ரி

சமையலறையின் அரசி என்றும் மருமகள்தான்.திருமணத்திற்கு பின்னர் தாய் வீட்டின் மணம் கமழ்ந்திட வந்தாலும் கணவர் வீட்டு உணவுகளையும் கற்று தேர்ச்சி பெற்று தன் குடும்பத்திற்காக சமைத்து இன்னமுது படைக்கின்றாள்.யார் யாருக்கு எந்த உணவு பிடிக்கும் , குழந்தைகள் உண்ண மறுக்கும் உணவை புதுமையாக சமைத்து எப்படி உண்ண வைப்பது என, அனைத்திலும் தேர்ந்தவர்கள், சமையலறையில் சரியான நேரத்தை பயன்படுத்துவதில் தேர்ச்சியானவர்கள் மருமகள்களே!

10. சரோஜினி தங்கராஜன்

சமையல் அறையின் அரசி மாமியார்தாங்க! அனுபவமே ஆசான். அவர்கள் அனுபவசாலிகள், அனைத்தும் பட்டு சரி பண்ணி வந்திருப்பாங்க. அவர்களின் வழியில் நாம் செல்வது அறிவுசார்ந்த ஒன்று. சமையல் முதல் வீட்டினை நிர்வாகிப்பது வரை அவர்களின் அனுபவம் பேசும். அவர்கள் காலம் வரை அவர்கள் அரசியாக இருக்கட்டும். நமக்கும் காலம் வரும். அதுவரை நாம் அவர்கள் வழி நடப்போம். நமக்கு மருமகள் அல்லது மருமகன் வரும்போது நாமும் அரசியாகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com