'தினம் ஒரு சவால்' - போட்டி 2 முடிவுகள்!

Mangayar Malar 44th anniversary  contest result
Mangayar Malar 44th anniversary contest result

1. சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

புதுமைப்பெண்

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த புதுமைப்பெண் படம் என்னை மிகவும் கவர்ந்தது. கடினமான சூழ்நிலையில் இருக்கும் ரேவதி தன்னுடைய அப்பாவுக்கு பிடித்தமான பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு வரதட்சனை கொடுமையால் பல சூழ்நிலைகளை புகுந்த வீட்டில் சந்திக்கிறார். தன்னுடைய கணவருக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சந்தோசமாக இருக்கின்றார்.

வங்கியில் வேலை செய்யும் பாண்டியன் கொலை குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு போகிறார். கணவர் பாண்டியன் ஜெயிலில் இருக்கும் போது பலவித கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய கணவரை ஜெயிலில் இருந்து விடுதலை செய்து கொண்டு வருகிறார் ரேவதி.

தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டு மனைவி ரேவதியிடம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பன் என்று கேட்க வெகுண்டு எழுகிறார் ரேவதி. முதலில் கோபப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார். கணவன் தன் மீது சந்தேகப்பட்டதால் வீட்டை விட்டு புயலாக பொங்கி எழுந்து புதுமைப் பெண்ணாக இறுதியில் வெளியேறுவார்.

2. S. ஜெயகாந்தி

மகளிர் மேன்மை பேசிய, கதாநாயகியை

மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் என் மனம் கவர்ந்த திரைப்படம் 'விதி'. 1984 ல் மோகன், பூர்ணிமா, ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோர் நடிப்பில் வெளியானது. பணக்கார வாலிபனான மோகன் பூர்ணிமாவை துரத்தித்துரத்தி காதலித்து கர்ப்பவதியாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறான். அவன் அப்பாவிடம் நியாயம் கேட்க செல்கையில், அவமானப்பட்டு வெளியேற்றப்படுகிறாள். அப்போது அவர் மகனின் முகத்திரையை கிழித்து உண்மையை நிரூபிப்பேன் என்று சவால் விடுறாள். பெண் வக்கீல் சுஜாதாவை சந்தித்து வழக்கு தொடர்கிறாள். வழக்கினிடையே சுஜாதா பேசும் அனல் பறக்கும் வசனங்கள் அசர வைப்பவை. குறிப்பாக திருமணம் ஆகாத ஆண் - பெண் இருவரின் முறையற்ற செயலால் பெண் கருவுறும்போது, அந்த ஆணுக்கு மலர் தூவி மற்றொரு பெண்ணுடன் மண முடித்து வைக்கும் சமுதாயம், அப்பெண்ணை கல்லாலடித்து வேசி, விபச்சாரி என்றெல்லாம் பெயர் சூட்டி அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேட்பது. வழக்கின் முடிவு கதாநாயகிக்கு சாதகமாகி நிரூபிக்கவும் படுகிறது. அந்தக் காலத்திலேயே பெண்மைக்கு நியாயம் கிடைப்பதை வலியுறுத்திய நல்ல படம். இன்றும், என்றும் பார்த்து பிரமிக்கக் கூடிய படம்.

3. பானுரேகா பாஸ்கர்

மனம் கவர்ந்த பெண்ணுரிமைப் படம் மனதில் உறுதி வேண்டும்

நந்தினி என்னும் பெண் செவிலியர் பற்றிய கதை. அழகிய பெண் நர்ஸ். அவளுக்கு பெரிய குடும்பம். அவள் ஒரு வருமானம் மட்டுமே. அவளுக்கும் காதல் வருகிறது. முதலில் நல்லவனாக இருந்த அவள் கணவன் பின் அவளை வேலைக்கு போகத் தடை பிறந்த வீட்டுக்கு பணம் கொடுக்க தடை என அவளை கொடுமை செய்ய அவனை விட்டு பிரிகிறாள். அவள் மனம் கவர்ந்த மற்றொருவரை மணம் புரிய எண்ணும் போது அவனது சுயநலப் போக்கை தெரிந்து அவனையும் தூக்கி எறிகிறாள். முதல் கணவன் உயிருக்கு போராடும் போது அவனுக்கு கிட்னி தானம் செய்து உயிரை காப்பாற்ற உதவி செய்து உயருகிறாள்.

அவள் பாரதியாரை தன் லட்சியத்திற்கு துணையாக கொண்டு வாழ்வில் முன்னேறுகிறாள்.

கே.பாலசந்தர் பல படங்கள் பெண்களை முன்னிறுத்தி எடுத்து இருப்பார்.அவற்றில் மனதில் உறுதி வேண்டும் தலைப்பிலேயே பெண்கள் தைரியமாக வாழ வேண்டும் என அறிவுறுத்திய இப்படம் அதில் நடித்த சுகாசினி இசை எல்லாமே பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் படமாக இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

4. உமா ஸ்ரீதரன்

மகளிர் மேன்மை பற்றிய திரைப்படம் என்ற தலைப்பைப் பார்த்ததும் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது மனதில் உறுதி வேண்டும் திரைப்படம்தான். மிகவும் இனிமையான புன்னகையுடன் சுஹாசினி நந்தினி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.கண்ணீரை விழுங்கி விட்டு புன்னக்கையை முகத்தில் தவழ விடும் அந்த பாவம்..பெண் விடுதலை பெண்ணுரிமை என்றெல்லாம் தொண்டை வலிக்க வலிக்க, பக்கம் பக்கமாய் வசனங்களை கர்ஜித்து, சிவப்பதை க்ளோசப்பில் காட்டி, படம் பார்ப்பவர்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்கடிக்காமல் மிக அழகாக பெண்மையை போற்றிய படம். பெண்ணிற்குள் இயல்பாகவே உறைந்திருக்கும் தாய்மை, தியாகம், மன்னிக்கும் தன்மை ஆனால் தான் போகும் பாதை சரியானது என்றால் அதன்படியே நடக்க துவங்குவது என பெண்மையின் மேன்மைகளை உன்னதமான முறையில் வெளிக்கொணர்ந்த படம் இது.

5. ரஞ்சிதா சந்திரசேகர்

மொழி: 2007 ல் வெளியிடப்பட்ட படம் ஜோதிகா கதாநாயகியை மையப்படுத்திய படம். மாற்றுத்திறனாளியான அவள் மிகவும் தைரியமான பெண். அடுத்த வீட்டிலுள்ளவர்களுக்கே தன்னால் வாய் பேசவோ காது கேட்கவோ முடியாதென காட்டிக் கொள்ளாதவர். யாருடைய தயவும் இல்லாமல் சொந்த காலில் நிற்கும் தைரியமான பெண். தாழ்வு மனப்பான்மை இல்லாத பெண். வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் ஆண்களை வெறுத்து வாழ்ந்தவர், கதாநாயகனின் அன்பால் எப்படி மாறினாள் என்பதை அழகாக காட்டிய கதை. தன் குரலைக் கூட மற்றவர்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்யாமல் தன்னை அப்படியே ஏற்க வேண்டுமென நினைக்கின்ற பெண்.

அவளுடைய தோழியின் கதாபாத்திரமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விதவையான அந்த பெண் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டு தோழிக்கு துணையாக இருப்பது சிறப்பு. அவளுக்கும் சிறந்த துணை அமைவது போன்று அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

6. ஶ்ரீவித்யா பசுபதி

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் நான் ரசித்த திரைப்படம்

ஏன் பெண்களின் மேன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்? எப்போது அதற்கான சூழலும் தேவையும் ஏற்படுகிறது? பெண்கள் ஒடுக்கப்படுவதால், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதால் அவர்களின் மேன்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதை '36 வயதினிலே' திரைப்படம் சரியாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், சராசரி பெண்களின் வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு, தன் கனவுகளையும் திறமைகளையும் குடும்பம், கணவன், குழந்தை என் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள்.

கணவனும் மகளுமே புரிந்து கொள்ளாத சூழலில், துணிவுடன் தன்னை மீட்டெடுக்கும் கதைநாயகியாக ஜோதிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

“பெண்களின் கனவுகளுக்கு காலாவதி தேதியைக் குறிப்பது யார்?” என கதைநாயகி தன் கணவனிடம் கேட்பது ஆகச்சிறந்த வசனம்.

7. கலைமதி சிவகுரு

2020 ஆம் ஆண்டு ஜோதிகாவை மையப்படுத்தி சூரியா தயாரிப்பில் வெளிவந்த "பொன் மகள் வந்தாள்" என்ற திரைப்படம் என் மனம் கவர்ந்த படம் ஆகும்.  நாடு முழுவதுமே பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் கூட நடக்கும்  பாலியல் தொல்லைகளுக்கொல்லாம் விடிவு காலம் பிறக்காதா என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் பாலியல் தொல்லைகளுக்கு பின்னால் எவ்வளவு துயரம் இருக்கிறது என்பதை இந்த

'பொன் மகள்' (ஜோதிகா) உணர்வு பூர்வமாக உருக்கமாய் சொல்வது மிகவும் என்னை கவர்ந்தது.

தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த மக்கள் ஒரு கொலை குற்றவாளிக்குஆதரவளிப்பதா என ஜோதிகா விற்கு எதிராக குரல் கொடுத்த போது (வெண்பா) என்ற ஜோதிகா வழக்கறிஞராக

நடிப்பில் வெளுத்து வாங்குவது மிகவும் கவர்ந்தது. கடைசியில் வெண்பா யாருக்காக நீதிமன்றத்தில் போராடினாள் என்பதை தெரிந்து கொள்ளும் போது மிகுந்த  மதிப்பு ஜோதிகாவின் மீது வந்து விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக இப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்து என்னவென்றால் பெண் குழந்தைகள் தங்களுக்கு பாலியல் ரீதியாக

யாராவது தொல்லை கொடுத்தால் அதனை உடனடியாக அவர்கள் தன் தாயிடம் தெரிவிக்க வேண்டும் என்பது தான்.

8. M.S.அருள்மொழி

·         "அவள் ஒரு தொடர் கதை" படம் கதை.k.பாலசந்தர்

·         குடும்பத்துக்காக எந்திரமாக உழைக்கும் பெண்ணின் கதை.

(கவிதா)

·         ஒரு வீட்டில் ஓடிப்போன தகப்பன்,பொறுப்பில்லாத அண்ணன்,அதனானல் குடும்பத்தாரை தன் தோளில் சுமக்கும் இந்த தவிதாவாகிய சுஜாதா வின் நடிப்பு மிகவும் சிறப்பானது.

·         தங்கையின் திருமணத்திற்காக தன் காதலையே துறக்கும் கவிதா

·         அண்ணன் வருவான் காப்பாற்றுவான் என்று நினைத்து ஏமாந்தவள், அப்பன் வந்து விட்டார் குடும்ப சுமையை சுமப்பார் என்று நினைத்து ஏமாந்து போனவளுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபமானது.

·         நடுத்தர வர்கத்தில் பிறக்கும் பெண்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகிறது.

·         தம்பி,தங்கைகளின் படிப்பு,திருமணம் என்று இவளின் வாழ்க்கை தொடர்கதையாகவே போய்கொண்டிருக்கிறது

·         என்ன தான் அம்மாவிடமும், அண்ணியிடமும் கவிதா சலித்துக்கொண்டாலும் இவர்களுக்கு நம்மை விட்டால் யாரும் இல்லையே என்று நினைத்து நினைத்து குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிறாள்.

·         ஆண் வர்கத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ள, தன்னை மிகவும் திமிர் பிடித்தவள்,வாயாடிப் போல் காட்டிக் கொள்கிறாள்.

·         அவள் இருக்கும் இடத்திற்கு 5 அடி தள்ளி தான் ஆண்கள் இருக்கவேண்டுமென எல்லாரையும் தன் பார்வையாலேயே சுட்டெரிப்பாள்.

·         இவையெல்லாம் அவள் அவளை இந்த சமூத்தின் தப்பான பார்வையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் கட்டாயமாகும்.

·         நிஜ வாழ்க்கையிலும் எத்தனையோ பெண்கள் (கவிதாக்கள்) இன்னமும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தது தானோ இந்தப்படம்.

9. R.காயத்ரி

மகளிர் மேன்மை பேசுவதை மையமாக   கதாநாயகியாக ஜோதிகாவை வைத்து எடுக்கப்பட்ட படம்  '36வயதினிலே'. ஒரு பெண் தனக்கென்று தனித்துவமான அங்கீகாரத்தை கொண்டிருக்க வேண்டும் ,பெண்கள் ஒன்று திரண்டால் அவர்களால் இயலும் என்ற இலக்கை மாடித்தோட்டம் அமைத்து திருமண நிகழ்ச்சிக்கு இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை அனுப்புவதன் மூலமும் அந்த கதை மனதை தொட்டது.மேலும் பிரதமர் தன் மகளின் பள்ளிக்கு வந்தபொழுது ஒரு கேள்வி கேட்பாள் ஜோதிகாவின் மகள், அதற்காக பிரதமர் தன் மாளிகைக்கு அழைப்பு விடுக்க அங்கே  பரப்பரப்பான சூழலில் மயங்கி விழுகின்றாள்,அவளை சுற்றியுள்ள சுற்றத்தார்கள் எள்ளி நகையாடுகையில் மீண்டும் புதுமைப்பெண்ணாக உருவெடுக்க அவள் தோழி ஒருவர் மற்றும் அலுவலக தோழர் ஒருவரும் நம்பிக்கை கொடுக்க"ஒரு பெண்ணின் கனவிற்கு காலாவதி தேதியை யார் குறித்தது?" என்ற தன் மகளின் கேள்விக்கு பதிலளித்து பிரதமரின் பாராட்டை பெறுவாள் ஜோதிகா.இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் ஒரு உத்வேகம் பிறக்கும் .

10. சரோஜினி தங்கராஜன்

ஜோதிகா அவர்களை முன்னிருத்தி அவரின் இளவயது கனவை நிறைவேற்றிய, சமுக அக்கரை கொண்ட, தற்சார்பு வாழ்க்கையை மேற்கோள் காட்டும் படமான 36 வயதினிலே படம் என்னை மிகவும் கவர்ந்த படம்.

இந்தப்படம் திறைக்கு வருவதற்கு முன் விஷங்களைதான் சாப்பிட்டுக்கொண்டுள்ளோம் என்பதே தெரியாமல் விஷ மருந்துகளான பூச்சி கொல்லி, களைக்கொல்லி அடித்த காய்கறிகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தோம். இந்த படம் வெளிவந்தபின் நிறைய சமூக மாற்றம் பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது நிறைய பெண்கள் மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம் வைத்து பராமரித்து வருகின்றனர். நஞ்சில்லாத உணவை தன் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவது மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் தந்து மகிழ்கின்றனர். இப்போது நிறைய மக்கள் வீட்டுதோட்டத்திற்கு தேவையான உரத்தை தானே தயாரித்து அரசாங்கத்திற்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

 ஒருபெண் தனியாக இருந்தாலும் சாதிக்கமுடியும், தன்நம்பிக்கை தைரியம் வரும் என்பதை இப்படத்தில் இயக்குநர் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com