'தினம் ஒரு சவால்' - போட்டி 5 முடிவுகள்!

Mangayar Malar 44th anniversary  contest result
Mangayar Malar 44th anniversary contest result

1. சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

மங்கையர் மலர் ஆரம்ப காலத்தில் புத்தகம் வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். பிறகு வீட்டு வீட்டுக்கு கொண்டு வந்து தரும் நடமாடும் நூல் நிலையம் மூலமாக புத்தகத்தை வாங்கி படிப்பேன்.

மங்கையர் மலர் வந்த முதல் நாள் அன்றே படித்து முடித்து விடுவேன். அந்த அளவுக்கு தீவிர வாசகராக இருந்தேன். இன்றும் வாசகராக தான் இருந்து கொண்டிருக்கிறேன்.

புகுந்த வீடான மேட்டுப்பாளையத்தில் புத்தகம் வாங்கி படிக்கும் அளவுக்கு வசதியும் கிடையாது. அதனால் என் கணவர் நூல் நிலையம் விடுமுறையன்று இதழ்கள் அனைத்தையும் படிப்பதற்கு கொண்டு வந்து கொடுத்து விடுவார். அதில் மங்கையர் மலரும் வந்து விட்டதில் மிக சந்தோசம் அடைந்தேன்.

ஈரோட்டிற்கு தனிக்குடித்தனம் சென்ற பிறகு என் கணவர் கஷ்டமான சூழ்நிலையிலும் மங்கையர் மலர் புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கி கொடுத்தார்.

இன்று வரை மங்கையர் மலரும் நானும் இணைந்திருப்பதில் மிகவும் சந்தோசம் அடைகின்றேன்.

2. S. ஜெயகாந்தி

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மங்கையர் மலருடன் எனக்குண்டான உறவு சிறிதும் மங்காமல் மேன்மேலும் பிரகாசம் பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. சிறு வயது முதல் போட்டிகளில் பங்கேற்பதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ விடாமல் முயன்று கொண்டிருப்பேன். காலப்போக்கில் வெற்றிப் படிகளில் ஏற ஆரம்பித்து ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்றால் அது மிகையாகாது. ஆரம்ப காலத்தில் சிறு சிறு துணுக்குகள் எழுதி மலருக்குள் என் தடம் பதித்தேன். உள் சென்று முழுதுமாகப் பார்த்தபோது மலர் மூலம் அவர்கள் நடத்திய போட்டிகளையும், வெற்றி பெற்றோர் மீது அள்ளித் தெளித்த தேனையும் (பரிசுகளையும்) கண்டு மற்ற வாசகிகளைப்போல் நானும் புளகாங்கிதமடைந்தேன். அன்று முதல் இன்றுவரை மலர் மூலம் பல பரிசுகளை வென்றுவருகிறேன். இது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

3. பானுரேகா பாஸ்கர்

எனக்கு 18வயதில் திருமணம் ஆன போது அத்தை வீட்டில் வாங்கிய புத்தகங்களில் மங்கையர் மலரும் ஒன்று.

வீட்டில் அனைவரும் வேலைக்கு போன பின் எனக்குத் துணையாக மங்கையர் மலர் இருக்கும்.

கனமான அதன் புத்தக வடிவம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரே மூச்சில் படிக்காமல் ஒவ்வொரு பகுதியும் பொறுத்து ,பொறுத்து கடைசி பக்கம் முடிக்க ஒரு வாரம் ஆகிவிடும்.

 அடுத்த மலர் வரும்வரை படித்துக் கொண்டே இருப்பேன்.

குழந்தை வளர்ப்பு தொடராக வந்த போது எடுத்து வைத்து குழந்தை பிறந்த பின் வைத்து படித்து படித்து பல சந்தேகங்கள் தீர்த்துக் கொள்வேன்.

அம்மா வீட்டிற்கு போனால் அங்கும் வாங்கி எங்கம்மா அப்பா நான் எல்லோருமே படிப்போம்.

அதில் வந்த சில சிறுகதைகள் குறுநாவல் இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.

30வருடங்களாக எனக்கும் மங்கையர் மலரூக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

மங்கையர் மலருடன் எனக்கான  ஆனந்த அனுபவங்கள் மிக அதிகம்.ஆன்லைனில் மாறிய போது புத்தகங்களை நேசிக்கும் எனக்கு பெரும் குறையாக இருந்தாலும் காலம் மாறும் போது நாமும் மாறுவது தான் இயல்பு என்று தேற்றிக் கொண்டேன்.விரைவில் 50ஆவது  ஆண்டுக் கொண்டாட்டம் போட்டிகளில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் வாழ்க வளர்க மங்கையர் மலரே!

4. உமா ஸ்ரீதரன்

மங்கையர்மலருடனான என் தொடர்பு ஆழமானது, அகலமானது, நீளமானது. என் பெயரை அச்சில் கொண்டுவந்து மகிழ்வித்தது. என் முதல் சிறுகதை மங்கையர் மலரில்தான் வெளி வந்தது. இம்மாத இல்லத்தரசியில் பலமுறை பரிசளித்து புகைப்படத்துடன் வெளியிட்டு என்னைக் கௌரவித்த இதழ். போன தீபாவளிக்கு 'ஸ்வீட் காரம் பட்சணம்' போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்ற எனக்கு பட்சணங்களை தாய் வீட்டு சீராக அனுப்பி தீபாவளி கொண்டாட்ட மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியதும் மங்கையர்மலரே. என்ன ஒரு வருத்தம் என்றால் என் பிரியத்துக்குகந்த இதழை அச்சில் புத்தகமாக பார்க்க முடியாதது தான்.

5. ரஞ்சிதா சந்திரசேகர்

இதை மங்கையர் மலரும் நாங்களும் என்றே கூறலாம்.

நாங்களும் - நானும் அம்மாவும்.

அம்மா இவ்வுலகில் இல்லை. அவர் என் நினைவு தெரிந்த நாள் முதல் பல ஆண்டுகளாக மங்கையர் மலர் வாசகியாக இருந்தவர். அவரின் கடைசி தனிமையான நாட்கள் வரை துணையாய் நம் இதழ் இருந்தது. அம்மாவுக்காகவும் எழுதுவது என் கடமை.

பள்ளிக்காலத்தில் மங்கையர் மலரை எனக்கு அறிமுகப் படுத்தினார் அம்மா. படிப்பிற்கிடையில் மங்கையர் மலரும் நானும் தோழியானோம். இதழ் வெளியான உடனே அப்பா அதை வாங்கி வரவில்லை என்றால்  வீட்டில் சண்டைதான். அம்மா, நம் இதழுக்கு துணுக்குகள், சமையல் குறிப்புகளை அனுப்பி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கதைப் போட்டியில் வென்றிருக்கிறார்.

திருவனந்தபுரம் மாற்றலாகிய பின்னும் மங்கையர் மலரை நாங்கள் விடவில்லை. அமெரிக்கா வந்தவுடன் இங்குள்ள நூலகத்தில் நம் இதழைக் கண்டது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் பின் கிடைக்கவில்லை. இணையதள வாசகியானேன். திடீரென என் கண் முன் 44 ஆண்டுக்கான போட்டியை கண்டதும் ஏனோ ஆசையாக இருந்தது. அம்மா என் மூலமாக பங்கேற்க சொல்கிறாளோ?

6. ஶ்ரீவித்யா பசுபதி

என் பதின்பருவத்தில் மங்கையர் மலர் எனக்கு அறிமுகமானது.

நான்காம் வகுப்பு வரை நான் கேரளாவில் படித்ததால் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது.

ஐந்தாம் வகுப்பிற்கு தமிழகம் வந்து திருநெல்வேலியில் பள்ளியில் சேர்ந்தபோது தமிழ் கட்டாய பாடம். விடுமுறை நாட்களில் தமிழ் படிக்க ஆரம்பித்தபோது, என் அம்மா எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகங்களில் மங்கையர் மலரும் ஒன்று.

மங்கையர் மலருடன் அன்று  தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது.

மங்கையர் மலரில் வரும் சமையல் குறிப்புகள், வீட்டு வைத்தியக் குறிப்புகள் போன்றவற்றை தனியாக ஒரு டைரியில் எழுதி பத்திரப்படுத்திய அனுபவம் உண்டு.

இப்போதுபோல் கைப்பேசி, கூகுள் வசதியில்லாத என் பருவ வயதில் மங்கையர் மலர் சமையல் குறிப்புகள்தான் சமையல் கற்றுக் கொள்ள உதவியது.

இப்போது எழுத்தாளராகி அதே மங்கையர் மலரில் எழுதுவேன் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

7. கலைமதி சிவகுரு

மங்கையர் மலர் என்றாலே மனம்

குதூகலித்து ஆனந்தம் அடையும் ஒரு சிறந்த மலராகும். புத்தகமாக வெளிவந்த காலத்தில் 1ம் தேதியும், 15ம் தேதியும் புத்தகம்

கையில் கிடைப்பது வரை காத்திருப்பேன்.

இப்போது Kalki Online யும் பார்க்காத நாளில்லை.ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்வேன். நான் எழுதியதில்

காலிஃபிளவர் புலாவ் ரெசிபி தான் முதலில் வெளியானது. அந்த நாள் தந்த சந்தோஷத்தை மறக்க முடியாது.  அன்பு வட்டம், சிறுகதைகள், வீட்டு குறிப்புகள் சமையல் குறிப்புகள், கோலங்கள், புடவை போட்டிகள், சொல்ல விரும்புகிறேன் என்று கணக்கில் அடங்காத வற்றை ரசித்து  படித்து மகிழ்ந்தேன். என் படைப்புகளையும் வெளியிட்டு என்னை என் பிள்ளைகள் மதிக்கும் நிலைக்கு கொண்டு வந்தது மங்கையர் மலர் என்றால் அது மிகையல்ல!

8. M.S.அருள்மொழி

சமையல்:

" மங்கையர் மலர் புத்தகத்தை நான் 1980-81 லிருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்,அப்போது எனக்கு வயது 17 இருக்கும். நான் முதல் முதலில் இனிப்பு & காரம் போன்ற பலகாரங்களை மங்கையர் மலரை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல நிறைய பேருடைய சமையல் U-Tube channel லே மங்கையர் மலர் புத்தகம் தான்.அந்தந்த seasons கு ஏற்றார் போல விதவிதமான சமையல் குறிப்புகள் வரும். இவற்றை பார்த்து தான் நான்,என் அண்ணிகள்,சித்தி எல்லாம் விதவிதமாக சமைப்போம்.

●கோலம்:

பொங்கல் வந்தால் போதும் இந்தப்புத்தகத்தில் விதவிதமான கோலங்கள் வரும்.இதில் பிரசுரமான கோலம் வரைந்து நான் பல முறை முதற்பரிசு பெற்றுள்ளேன்.  இதற்காக நான் மங்கையர் மலர் புத்தகத்திற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

●வீட்டு குறிப்புகள்:

நிறைய வீட்டு குறிப்புகள் வரும். அங்கங்கு சிறிய கட்டம் போட்டு நிறைய டிப்ஸ் எழுதுவாங்க, படிக்கவே சலிப்படையாது.

இப்பொழுது "யூ டியூப் "பில் வரும் அனைத்து செய்முறைகள், டிப்ஸ் கள் எல்லாம் நான் எப்போவே மங்கையர் மலரில் படித்து விட்டேன்.

●தொழில்:

90களில் தான் இந்த " செயற்கை காளான்கள்"அறிமுகம் ஆனது.அதைக்கூட வீட்டுல இருந்துக்கிட்டு எப்படி செய்யலாம் என்ற சிறுதொழில் விளக்கமும் இந்த புத்தகத்தில் தான் வந்தது. இதை படித்து நான் எங்கள் வீட்டிற்கு தேவையான காளானை வீட்டிலேயே வளர்த்தேன்.என் உறவினர்கள் காளான் வியாபாரமே செய்தார்கள்.

● அழகு குறிப்புகள்:

இயற்கையான முறையில் முகத்தை அழகு செய்யும் குறிப்பு,கூந்தல் வளர்ச்சி குறிப்பு, முகப்பரு, பொடுகு இவற்றை பற்றி எல்லாம் அருமையான குறிப்புகள் வரும்.

●ஆன்மீக செய்திகள்:

ஆன்மீக செய்திகளும் சுவையானவைகளாகவே இருக்கும்.

மங்கையர் மலரின் மணம் என்னென்றும் என் மனதில் நறுமணமாக வீசிக்கொண்டே இருக்கும். இதை பற்றி எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆயிரம் புத்தகங்கள் இன்று வந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை சமையல் அறை கைடு இந்த "மங்கையர் மலர்"புத்தகமே. யாருக்கு எப்படியோ எனக்கு பல வருடங்களாக உடன் இருக்கும் இன்னொரு அம்மா மங்கையர் மலர்.

9. R.காயத்ரி

 எங்களின் பந்தம் பிரிக்க இயலாதது. ஒரு தாயும் சேயும் எப்படியோ அப்படித்தான், "மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்,மங்கையர் மலரை வாசிக்க பெரும்பயன் பெற்றிருக்க வேண்டும்" என்பது என் கருத்து.அன்றாடம் வேலைகளை முடித்துவிட்டு காத்திருந்து நாம் படிக்க விரும்பும் கல்கி தந்த சொத்து மங்கையர் மலர் என்று சொல்லலாம்.பெண்களுக்காகவே தரப்பட்ட வரப்பிரசாதம் .அறிவு பசியை போக்கிட வந்த அறுசுவை உணவாய் நம் கண்களால் புசித்து ரசித்து படிக்கும் இதழ்.அம்மா அன்று படித்த மங்கையர் மலர் இன்று நம் கைகளில் 44 ஆண்டுகள் தாண்டி ஆசையாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது.காலங்கள் கடந்தாலும் வாசித்தல் மீதிருக்கும் தேடலை நிறைவாக தந்திடும் வசந்தமலர் எதுவென்று கேட்டால் என்றும் அது மங்கையர் மலர்தான்.

10. சரோஜினி தங்கராஜன்

புத்தகம் படிப்பது என்பது சிறு வயது முதலே எனக்கு உள்ள நல்லபழக்கம். எனக்கு, குறிப்பாக பெண்கள் தொடர்பான பத்திரிகை, மாத இதழ்கள் படிப்பதில் எப்பவும் பேரானந்தம் தான்.அதில் மங்கையர் மலருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மலரில் வரும் சமையல் குறிப்புகளுக்கு நான் அடிமையென்றே சொல்லலாம். மருத்துவ குறிப்புகளும் மிகவும் பிடிக்கும். புத்தகத்தை வேகமாக படித்தால் நாளைக்கு படிக்க வேறு புத்தகம் இல்லை என மொதுவாக படித்த காலம் முதல் மங்கையர் மலருடன் தொடர்புண்டு. புத்தகம் படிக்கும்போது ஆசிரியர் குறிப்பும்தவறால் படிப்பேன். பெண்களுக்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களை உள்ளடக்கிய மங்கையர் மலர் எனக்கு பிடித்த புத்தகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com