நான் மங்கையர் மலரின் நீண்ட நாள் வாசகியாய் மட்டும் இருந்து, பின் எழுதுவதில் ஆர்வம்கொண்டு, எனது சிறு சிறு துணுக்குகளை 'ஜெயா மகாதேவன்' என்ற பெயரில் அனுப்ப ஆரம்பித்தது 2002 ஆம் ஆண்டுக்குப் பின்புதான். அதன் பின்னர் தொடர்ந்து எனது பங்களிப்பை அளிக்க, இன்றுவரை மங்கையர் மலரில் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது.
அந்தக் காலங்களில் வெளிவந்தவற்றுள், எனது 'அம்மாவென அகமகிழ்ந்தேன்' கட்டுரை (செப்டம்பர் 2002), 'ஆஹா தகவல்' எழுதி புடவை பரிசு பெற்றது (அக்டோபர் 1-15, 2015), பத்திரிகைகளுக்கு டிப்ஸ் எழுத நான் வழங்கிய டிப்ஸ் (2004 மே) ஆகியவை மறக்க முடியாதவை.
கடந்த மூன்றாண்டுகளில் மங்கையர் மலரின் ஊக்குவிப்பினால், எனது பங்களிப்பு மேன்மேலும் சிறப்படைந்துள்ளது. ஆம். எனது கவிதைகள், ஜோக்ஸ், பயணக்கட்டுரைகள் (சியாட்டிலில் சில மாதங்கள் - 17.09.2022 உட்பட), துணுக்குகள், சமையல் ரெசிபி, கோலம், 'செம்பா' என்ற தலைப்பில் முதல் சிறுகதை (20 Sep.2022) என பலவும் பிரசுரிக்கப்பட்டு என்னைப் பெருமைப்பட வைத்துள்ன.
சென்ற ஆண்டு மங்கையர் மலர் நடத்திய 'ரீல்ஸ் ராணி' போட்டியில் பங்கேற்று மோட்டிவேஷன் பிரிவில் வெற்றி பெற்று ரூபாய் ஐந்தாயிரத்திற்கான 'பாலம் சில்க்ஸ்' வழங்கிய பரிசுக்கூப்பனைப் பெற்றது அனைத்திற்கும் சிகரம் வைத்தது. எதிர்காலத்தில் மங்கையர் மலருக்கும் எனக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுவடைந்து, மெருகுற்று, இறுதிவரை ஜொலிக்குமென உறுதியாய் நம்புகிறேன்.