

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற, மிகவும் பழமையான சிவாலயம் ஸ்ரீ கச்சபரமேஸ்வரர் எனும் கோவில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தன்று தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் நடராஜரை பல்லக்கில் வைத்து சுமக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு வினோதமான மற்றும் சிறப்பு வழிபாட்டு முறையாகும். மற்ற கோவில்களில் ஆண்கள் செய்யும் இந்தப் பணியை கடலங்குடி சிவாலயத்தில் பெண்கள் மட்டுமே செய்கின்றனர்.
மூலவர் பெயர் கச்சபரமேஸ்வரர். காமேஸ்வரி என்பது அம்பாளின் பெயர். இக்கோவில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணியர், தாட்சாயினி உபசன்னதிகளும் உள்ளன. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தினமும் பூஜை நடைபெறுகின்றது.
பெண்கள் பல்லக்கு தூக்கும் பாரம்பரியம் இங்குள்ள முக்கிய அம்சமாகும். இங்கு மகா சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் போன்ற சமயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜர் பெருமானுக்கு பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். மேலும் பெண்கள் உதவியால் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்த கோவிலில் பெண்களுக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டவுடன் வழிபாட்டிற்கு வந்த பெண்கள் பல்லக்கில் நடராஜப் பெருமானை தூக்கிக் கொண்டு கோவிலில் உள்ள பிரகாரங்களில் வலம் வருகிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று பெண்கள் மட்டுமே நடராஜரை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டும் நடைபெறும் மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். கடன் தொல்லைகள் நீங்க, தீராத நோய்கள் தீர இங்குள்ள கச்ச பரமேஸ்வரரை வழிபடுவது சிறப்பு.
எப்படி செல்வது?
குத்தாலம் பகுதிக்குச் சென்று அங்கிருந்து கடலங்குடிக்குச் செல்லலாம். மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. கடலங்குடியில் அமைந்துள்ள கச்ச பரமேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் மல்லியம் (Malliyam) ரயில் நிலையம் ஆகும். வெளியூரிலிருந்து வருபவர்கள் மயிலாடுதுறை குத்தாலம் வரை சென்று அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ பிடித்து செல்லலாம்.