“மழைத் தருணங்களில்...”

“மழைத் தருணங்களில்...”

போஸ்ட் கார்டு கதைகள் / துளித்துளியாய் மழைத்துளியாய்!
Mangayar Malar
Mangayar Malar

ஓவியம்: லலிதா

றையில் உறங்கிக்கொண்டிருந்த ராகவன் மழை சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தார். ‘ஜோ’வென அடித்துப் பெய்துகொண்டிருந்தது மழை.

‘மொட்டை மாடியில அரிசி வடாம் காஞ்சிட்டிருந்ததே... நனைஞ்சிடப்போறது. ஜானு...’ என அழைக்க நினைத்தவர், “அதெல்லாம் கரெக்டா எடுத்து வெச்சிருப்பா. பாவம்! உள்ள தூங்குறவளை ஏன் தொந்தரவு செய்யணும்?” திறந்தவெளி முற்றத்தில் பெய்துகொண்டிருந்த மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

‘இந்த மழைதான் என் வாழ்க்கையோடு எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது? ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மழையும் ஒரு அங்கமாக அல்லவா இருந்திருக்கிறது? ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஜானுவின் கரம் பற்றிய நன்னாளில் மழை ஜோவனக் கொட்டியது. மூத்த பிள்ளை ரகு பிறந்ததும் ஒரு மழை நாளில்தான். புது வீட்டுக் கிரகப்பிரவேசத்தின் போதும் மழைதான். ஏன், எங்களோட அறுபதாம் கல்யாண வைபோகத்தை, மழை கொட்டித் தீர்த்துக்கொண்டாடியதே...?’

“அப்பா...  உள்ள வாங்க. இங்க சாரல் அடிக்கிறது” மகன் ரகு அழைக்க, “பரவாயில்லடா, இங்கேயே இருக்கேன். ஆமா உங்க அம்மா இன்னும் அடுக்களையில என்ன பண்றா...? வரச்சொல்லுடா. அவளுக்கும் மழையை வேடிக்கை பார்க்க ரொம்பப் பிடிக்குமே..!” சிறு குழந்தையின் குதூகலத்துடன் கூறிய தந்தையிடம் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான் ரகு.  “போன வருஷம் ஒரு மழை நாளில் அம்மா கண்மூடிய நாளில் இருந்து, அப்பா தன் சுயநினைவை இழந்து பித்துப்பிடித்தது போல் ஆகிவிட்டாரே...”  என வேதனையுடன் நினைத்தது அவன் மனம்.

-------------------------------------------------------------------

வைரஸ்

- வி. ரத்தினா, ஹைதராபாத்

த்மாவின் மகனும், மருமகளும் அலுவலகம் சென்றுவிட்டார்கள். நான்கு வயது பேத்தி பாக்யா இன்று பள்ளிக்குப் போகவில்லை. இரவு முழுவதும் மழை. காலையில்தான் சிறிது குறைந்திருந்தது. மழைக் காலம். மழை வரத்தானே செய்யும்.  பாக்யா சிறிது தும்மினால் கூட மருமகள் சுதா டென்ஷன் ஆகி விடுவாள். மழைக் காலத்தில் சளி, இருமல் குழந்தைகளுக்கு வருவது சகஜம்தானே.  அதைப் பெரிதுபடுத்தி ஏதேதோ வாயில் நுழையாத  வைரஸ் பெயர்களைச் சுதா சொல்வாள். இன்று அலுவலகம் செல்லும் முன் கூட “பாக்யாவுக்கு இந்த சிரப், டிராப்ஸ் மருந்த மறக்காம கொடுத்துடுங்க” என பத்மாவிடம்  சொல்லிவிட்டுப் போனாள்.  தலை முதல் கால் வரை குழந்தையை ஸ்வெட்டரால் மூடி இருந்தாள். வீட்டின் பாத்ரூம், வாஷ் பேஸின் என எல்லா இடங்களிலும் வகை வகையான சானிடைசர், ஹேண்ட்வாஷ் பாட்டில்கள்தான்.

பாக்யாவுக்கு ஒரு தட்டில் சப்பாத்தியுடன் நெய் சர்க்கரை சேர்த்துக் கொடுத்து “சமத்தா சாப்பிடணும் பாட்டிக்கு வேலை நிறைய இருக்குனு” சொல்லிவிட்டு சமையலை கவனிக்கப் போனாள் பத்மா. சிறிது நேரம் கழித்து முன் அறைக்கு வந்தவள் அங்கு குழந்தை இல்லாததைப் பார்த்து பதறி, எல்லா அறைகளிலும் தேடினாள். எங்கே போனாள்? வீட்டின் பின்புறக் கதவு திறந்திருப்பதைக் கவனித்து வெளியே வந்த பத்மா அப்படியே நின்றுவிட்டாள்...  தாழ்வாரத்தில் மழையில் நனைந்து, நடுங்கிக்கொண்டிருந்த தெரு நாய்க்குட்டிக்கு பாக்யா தன் ஸ்வெட்டரைப் போர்த்தி, சப்பாத்தியைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். நாய்க்கு அருகில் இருந்தது சானிடைசர் பாட்டில்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com