தவறாகப் புரிந்து கொள்ளப்படும் பழமொழிகள்!

தவறாகப் புரிந்து கொள்ளப்படும் பழமொழிகள்!

ழமொழி என்பதை பழமையான மொழி, தொன்மையான மொழி, முது மொழி என்றும் கூறலாம். ஒரு செயலைக் குறிப்பதற்கோ அல்லது அந்தச் செயலுக்கு விளக்கம் அளிப்பதற்கோ, அறிவுரை கூறுவதற்கோ பழமொழிகள் பயன்படுகின்றன. பொதுவாக கிராமங்களில் பேசும் தினசரிப் பேச்சுக்களில் கூட பழமொழிகள் கலந்திருப்பதைப் பார்க்கலாம். பல பழமொழிகள் அறிவார்ந்தவை. ஆனால், காலப்போக்கில், பழமொழிகள் சிலவற்றில் இடைச்செருகல்களினாலும், தவறான விளக்கத்தினாலும் அதன் மையக் கருத்து  அடியோடு மாறி விட்டது.

(1)  ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.

ந்த அறிவார்ந்த பழமொழி “ஐந்து பெண் பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவன்” என்று மாற்றம் அடைந்து, பெண் பிள்ளைகள் பிறந்தால் செலவு அதிகம், ஆகவே, தவிர்க்கப்பட வேண்டியது என்ற நிலைக்கு மக்கள் மனதை கெடுத்துள்ளது. இந்த பழமொழியில் குறிப்பிட்டுள்ள “ஐந்து” என்ன என்று பார்ப்போம்.

1. ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகின்ற தாய்.

2. குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாமல் வாழுகின்ற தந்தை.

3. நல்லொழுக்கம் இல்லாத வாழ்க்கைத் துணைவி.

4. “கூட இருந்தே கொல்லும் வியாதி” என்பது போல ஏமாற்றுவதும், துரோகம் செய்வதும் போன்ற செயலைச் செய்யும் உடன் பிறந்தோர்.

5. சொல் பேச்சைக் கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்,

இப்படிப்பட்ட சுற்றத்தை உடையவன் அரசனாகவே இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை அழிவை நோக்கிப் போகும். அதாவது எல்லா விதமான வசதிகளையும் வாழ்க்கையில் பெற்றுள்ள ஒருவன், தனக்கென ஒன்றுமில்லாத ஆண்டியின் நிலைக்குத் தள்ளப்படுவான்.

(2) “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”

ணமுடித்து பெரியவர்களின் ஆசி நாடி வருபவர்களை இந்தப் பழமொழி சொல்லி வாழ்த்துவது வழக்கம். இந்தப் பெரியவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு பற்றித் தெரியாதா? அளவான குடும்பமே வளமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் என்பது புரியாதா? இந்தப் பழமொழியில் குறிப்பிடும் “பதினாறு” குழந்தைகள் அல்ல. பதினாறு செல்வங்கள். இந்த பதினாறு செல்வங்கள் என்னவென்று பார்ப்போம்.

1.வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கல்வி. 2. நீண்ட ஆயுள் 3. நல்ல நண்பர்கள். 4. குறைவற்ற செல்வம் 5. தளராத உடல் வலிமை 6. நோய் நொடியற்ற உடல் நலம். 7. எது வரினும் கலங்காத மனத் திண்மை 8. அன்பான மனைவி 9. நல்ல குழந்தைகள் 10. குறையாத புகழ் 11. சொன்ன சொல் தவறாத குணம் 12. இல்லையென்று சொல்லாமல் மற்றவர்களுக்கு கொடுக்கும் நல்ல பண்பு. 13. நிதியைக் கையாளும் மேலாண்மை 14. நேர்மை, திறமை கொண்ட நிர்வாகப் பண்பு 15. துன்ப நிழல் படாத நற்பேறு 16. இறை நம்பிக்கை

அபிராமி அந்தாதி பதிகப் பாடல் ஒன்றில் இந்த பதினாறு செல்வங்களையும் பட்டியலிட்டுள்ளார் அபிராமி பட்டர்.

கிராமப் புறங்களில் புது மணத் தம்பதிகளை விளையாட்டாக வாழ்த்தும் பழமொழி உண்டு. “பதினாறும் பெற்றுப், பதினெட்டும் செத்து, சௌக்கியமாக இரு.” இதனுடைய அர்த்தம் : பதினாறு விதமான செல்வங்களையும் பெற்று, பதினெட்டு வகையான கெட்ட பழக்கங்கள் உங்களை அணுகாமல் நலமாக வாழுங்கள்.

(3)  கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

வீட்டில் எவரேனும் கன்னத்தில் கை வைத்த படி அமர்ந்திருந்தால், “கப்பலா, கவிழ்ந்திடுத்து, ஏன் கன்னத்தில் கை வைத்திருக்கிறாய், எடு” என்று அதட்டுவார்கள். கப்பல் கவிழ்வதற்கும், கன்னத்திற்கும் என்ன தொடர்பு. இங்கே முன்னோர்கள் சொன்ன “கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோல் வைக்காதே” என்பது மாற்றப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் புகுந்து திருடுவதற்கு திருடர்கள் பயன்படுத்தும் கருவியின் பெயர் கன்னக்கோல். இதன் மூலம் வீட்டின் சுவற்றில் துளையிட்டுத் திருடுவார்கள். பழமொழியின் உண்மையான கருத்து இதுதான். “கப்பல் கவிழ்ந்து உன் உடைமைகள் அனைத்தையும் இழந்தாலும், திருடாதே” என்ற அறிவுரை.

நாளா வட்டத்தில் “கன்னக்கோல்” சுருங்கி “கன்னத்தில்” நின்றது.

(4) ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

யிர் காக்கும் மருத்துவத் தொழிலை இழிவு படுத்துவது போல மாறுபட்டிற்கும் இந்தப் பழமொழியின் உண்மை வடிவம் “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”.

இயற்கை மருத்துவத்தில் ஒரு நோயைக் குணப்படுத்த அதற்குத் தேவையான மூலிகைச் செடிகளைப் பறித்து, அவற்றிலிருந்து மருந்து தயாரிப்பார்கள். எந்த நோயைக் குணப்படுத்த எந்தெந்த மூலிகைச் செடிகள் தேவைப் படும் என்று நன்கு அறிந்தவன் தான் சிறந்த மருத்துவனாக முடியும். “வே” என்ற ஒற்றை எழுத்தை “பே” என்று மாற்றியதால், மருத்துவர்களை எள்ளி நகையாடும் பழமொழி போல் மாறிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com