வீட்டிற்குள் வளரும் கலப்பட செடிகள்!
மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சௌமியாவிற்கு வீட்டிற்குள் நிறைய செடிகளை வளர்ப்பது என்றால் கொள்ளைப் பிரியம். இவ்வளவு செடிகளை வளர்ப்பதன் காரணம் என்னவென்று கேட்டபொழுது அவர் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் இது. அதைப்பற்றி கீழே காண்போம்.
என்னென்ன செடிகள் வைத்திருக்கிறீர்கள்?
Hibiscus, ரோஸ், துளசி, அலோ வேரா, இன்சுலின், கோங்குரா, ixora (இட்லி பூ), மல்லிகை, கோல்டன் சரிம்ப்/லாலிபாப், பீன்ஸ், ரோஸ்மேரி, நிலவேம்பு, மிளகாய், அஜ்வெயின், lemongrass, gerbera, முடக்கத்தான், மஞ்சள், கறிவேப்பிலை, areca palm, croton, jade. (மேலே குறிப்பிட்டுள்ள இந்த செடிகள் அனைத்தும் படத்தில் காணலாம்.)
இதை எப்படி பராமரிக்கிறீர்கள்?
இந்தச் செடிகள் வறண்டு போகும்போது இவற்றுக்கு தண்ணீர் விட்டால் போதும். வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். சில செடிகளை அதிக சூர்ய வெளிச்சம் தேவைப்படும் இடத்தில் எடுத்து வைத்துவிட்டு, பிறகு மற்ற செடிகளுடன் வைத்துவிட்டால் போதுமானது. மற்றபடி இப்பொழுது வைத்திருப்பதுபோல் வைத்தாலே நன்றாக வளர்கிறது. இந்தச் செடிகளுக்கு குறைந்த பராமரிப்பே தேவைப்படுகிறது. இதில் Nucifera என்ற லோட்டஸ் இருக்கிறது. அதற்கு தண்ணீர் தினமும் ஊற்றவேண்டும். அது வெளிரி போய் இருந்தால் ஸிங்கோவிட் என்ற மாத்திரையில் ஒன்று போட்டு அதனுடன் இரண்டு, மூன்று பாதாம் இலைகளை பறித்து போட்டுவிட வேண்டும். அப்பொழுது அதற்கான உரம் கிடைத்து செழுமையாக வளர ஆரம்பிக்கும்.
எல்லா செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?
இதுபோன்ற செடிகளை நான் ஏன் வளர்க்கிறேன் என்றால், திருமணத்திற்கு முன்பு வரை எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறைய மரம், செடி, கொடி என்று ஏராளமாக இருந்தது. அவைகளுடன் பேசி, உறவாடி,செடிகளுக்கு இடையில் உட்கார்ந்து படிப்பது ஒரு தனி சுவாரசியம். பரிட்சை நேரங்களில்கூட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல், அவைகளுடன் பேசாமல் நான் சென்றது இல்லை. திருமணம் ஆகி வந்தவுடன் செடியில்லாத வீட்டை வெறுமையாக உணர்ந்தேன். ஆதலால், இதுபோன்ற செடிகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தேன்.
இந்தச் செடிகளால் என்ன பயன் அடைகிறீர்கள்?
இந்தச் செடிகளை பார்க்கும்போது மனதிற்கு ஒரு உற்சாகம் வருகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்தச் செடிகள்தான். காலை 5 மணிக்கு எழுந்து தேவையான செடிகளுக்கு தண்ணீர் விட்டு, பழுத்த இலைகளை எல்லாம் பறித்துவிட்டு, அவைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து டீ சாப்பிட்டுவிட்டு, ஆறு மணிக்கு உட்கார்ந்து என் அலுவல் வேலையை பார்க்கும்போது அப்படி ஒரு புத்துணர்ச்சி என் மனதை தொற்றிக்கொள்கிறது. அதற்காகத்தான் இந்தச் செடிகளை வளர்க்கிறேன் .மேலும் இதில் உள்ள மூலிகை செடிகள் அவ்வப்பொழுது சளி, இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. கற்றாழை போன்ற செடிகள் அழகாகவும், அழகுக்கு பயன்படுத்தப் படுவதாகவும் இருக்கும் என்பதால், இதுபோன்ற செடிகளை வீட்டில் வளர்க்க விரும்புகிறேன்.
வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உண்டா?
இந்தச் செடிகள் காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக காற்றில் கலந்திருக்கும் நச்சுக்களை அகற்றி, வீட்டின் உள்புறம் உலவும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும். இதுபோன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பதால் மன நலமும் உடல் நலமும் மேம்படும். அதற்காகவாவது வளர்க்க வேண்டும். மேலும் வாஸ்துபடியும் இதிலுள்ள சில செடிகள் நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. அவை செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதை நானும் நம்புகிறேன். ஆதலால் நானும் இந்த செடிகளை மனப்பூர்வமாக வளர்க்க ஆசைப்படுகிறேன்.
வீட்டு வேலை, ஆபீஸ் வேலை என்று அனைத்தையும் பார்த்துக்கொண்டு செடிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வரும் செளமியாவின் பசுமைப் பணி மென்மேலும் வளர வாழ்த்தி விடைபெற்றோம்.