குரங்கு புத்தி

சிறுகதை
குரங்கு புத்தி

ஓவியம்; பிரபுராம்

ரு வாரமாக ஜானுவைக் காணவில்லை. கோமதி அங்கும் இங்கும் குட்டி போட்டப் பூனையைப் போன்று அலைந்துகொண்டு இருந்தாள். அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒன்றுமே நடக்காதது போல், அருகில் அமர்ந்து, செஸ் ஒலிம்பியாட் பற்றிய செய்திகளில் மூழ்கி இருந்தான், சங்கர்.

"ஏங்க! ஒரு வேளை ஜானுவுக்கு பிரசவம் ஆகியிருக்குமோ? அதான் வரலயோ?" எனக் கேட்டாள். "எதிலும் ஓவர் அட்டாச்மெண்ட் கூடாது. உனக்கு இதெல்லாம் எங்க புரிய போறது?” என பதில் கேள்வி கேட்டுவிட்டு, செய்தித் தாளுடன் அட்டாச் ஆனான் சங்கர்.

காற்று நெல் கதிர்களை கோதும் பத்தமடையில், வெயில் விளையாடும் முற்றம் உடைய வீட்டில், கோமதியைப் பெண் பார்க்க வந்தான் சங்கர். பம்ப் செட்டும், பசுமாடும், தாமிரபரணியும், திறந்த வெளிகளும், குதிரும் குரங்குகளும் நிறைந்த அழகான கிராமத்து வீடு அது. இவை எல்லாவற்றையும் துறந்து, தன்னுடன் இந்தப் பெண் வர சம்மதிப்பாளா என மனதில் தோன்றிய கவலையை சங்கர் கோமதியிடம் கேட்க, "எனக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பும் நிறைய மனிதர்களும் பிடிக்கும்" எனச் சொல்லி புன்னகைத்தாள் கோமதி. சங்கருக்கு சந்தோஷம்தான். ஆனாலும் களத்து மேட்டில் ஓடி விளையாடியவளுக்கு இண்டோர் டென்னிஸ் கோர்ட் சரிப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால், நடந்தது வேறு. பத்து மாதமாக அந்த கேட்டட் கம்யூனிட்டியில் இருந்து, உருப்படியாக இரண்டு நண்பர்கள் கூட சம்பாதிக்க முடியாத சங்கருக்கு, ஆறே மாதங்களில் இத்தனை தோழிகள் சம்பாதித்த கோமதியைக் கண்டு வியப்புதான் ஏற்பட்டது. சற்று பொறாமையும் கூட. சங்கர் வேலைக்குக் கிளம்பியவுடன், ஆன்ட்டிக்களுடன் ஜிம்முக்குப் போவதும், மாலையில் பாட்டிக்களுடன் சுலோகம் சொல்லிவிட்டு நடைப்பயிற்சி செய்வதும் என சங்கரை விட கோமதி படு பிஸி ஆனாள்.

புதிதாக திருமணமாகி வந்த உமாவும் ரமாவும் கோமதியுடன் சேர, இவர்கள் நட்பு இன்னும் களை கட்டியது. நண்பர்கள் மும்பையிலும் டெல்லியிலும் வளர்ந்தவர்கள். ஏற்கெனவே அவள் ஹிந்தியும் ஆங்கிலமும் பயின்று இருந்ததால், முதலில் இரண்டு மாதங்களுக்கு அவள் பேசியதைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்ததே தவிர, கோமதி விரைவில் நன்கு சமாளித்து சரளமாகப் பேச ஆரம்பித்தாள். கை முழுவதும் தெரியும் ஸ்லீவ் லெஸ், குட்டை பாவாடை என்று நாள்தோறும் தோழிகள் அலைந்தார்கள். கோமதியின் பிறந்த நாளுக்கு தோழிகள் அனைவரும் சேர்ந்து ஜீன்ஸ், டீ ஷர்ட் வாங்கித் தர, பத்தமடை கோமதி, ‘கோம்ஸ்’ ஆக மாறினாள். ஆனால், நண்பர்களின் நவீனம் ஒரு வெறும் முகக்கவசம்தான் என்பதும் நடை உடை பாவனைகள், மொழிதான் மாறியதே தவிர, சில எண்ணங்கள் நவீனமாகவில்லை என்பதும் விரைவில் புலனாகியது.

உமாவும், ரமாவும் கருத்தரித்தனர். அவர்கள் இருவரும் உண்டானதால் மகிழ்ந்த கோமதி, திருநெல்வேலி அல்வாவும் ஆப்பமும் செய்து தினம் தினம் அவர்களை அசத்தினாள். அவர்கள் மீது அன்பு மழை பொழிந்தாள். அவர்களுக்காக வீட்டில் நடந்த விதவிதமாக நடந்த சமையலினாள், அவர்களுக்கு மட்டும் தொப்பை வரவில்லை. கூடவே சங்கருக்கும் தொப்பை கூடியது. இவ்வாறு வாழ்க்கை படு ருசியாக போய்க்கொண்டிருக்க, "பாவம் கோமதி... கோமதியின் வயிற்றில் ஏன் ஒரு புழு பூச்சி கூட உண்டாகவில்லை”  என பலர் ஆங்கிலத்தில் வம்பு பேசிக்கொண்டனர். ரமாவுக்கு திடீரென கரு கலைந்து விட, கோமதியின் கண்தான் அதற்கு காரணமானது.  தோழிகள் குழுவிலிருந்து சாக்கு போக்கு சொல்லி கோமதியை கழட்டி விட்டனர். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, யாரோ ஒரு குழந்தைக்கு கீழே விழுந்து அடிபட, கோமதியின் கண் திருஷ்டியே இதற்கும் காரணமானது...

இவை எல்லாம் கோமதியின் காதுக்கு அரசல் புரசலாக வந்து சேர்ந்தது. இவ்வளவு பேர் அந்த பல்முனை வளாகத்தில் இருந்தும் முதன்முறையாக கோமதி தனிமையால் துவண்டாள்.  பசி, தூக்கம் எல்லாவற்றையும் இழந்தாள்… மூன்று மொழிகள் தெரிந்து இருந்தும் பேசுவதற்கு பிடிக்காமல் போனது. கோமதிக்கு மனிதர்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைந்தது. வாழ்வின் மேல் சட்டென ஒரு விரக்தி உண்டானது. அவளுடைய மனம் வலியில் துடித்தது, அவனுக்கு மட்டும் கேட்டது.  இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட எண்ணி , "அலுவலகத்திற்கு பக்கத்தில் வேறு வீடு கொடுத்திருக்காங்க...இந்த வீட்ட காலி பண்ணனும் " என்றான்.

புதியதாக குடி பெயர்ந்த அந்த பழைய வீட்டை கோமதி முதலில் பார்த்ததும், “ஏங்க! எங்க ஊர் பக்கம் இருக்கற மாதிரியே இருக்குங்க. எங்கிருந்து இப்படி ஒரு வீட்டை புடிச்சீங்க? " என்றாள். சென்னையின் பிரபல தொழில்நுட்பக் கல்லூரியின் அருகில் உள்ளதால், அந்த வீட்டை சுற்றி அடர்த்தியான பெரிய பழைய மரங்களும், செடிகளும், கொடிகளும் அவற்றில் பூத்த பூக்களும், அவற்றைத் தேடி வந்த வண்டுகளும், சுற்றிலும் வட்டமடித்த பறவைகளும் என ஒரு தனித் தீவாக அந்த வீடு காட்சி அளித்தது . இவை எல்லாவற்றையும் ரசித்த சங்கருக்கு ஏனோ அங்கே திரிந்த குரங்குகளைக் கண்டால் மட்டும் அறவே பிடிக்கவில்லை.  அவற்றைக்  கண்டவுடன் சங்கர் கம்பை எடுத்துவிடுவான். ஆனால், கோமதி அவனுக்கு நேர் எதிர். பழங்களும், தின்பண்டங் களும் கொடுத்து, அவற்றை அவளுடைய அன்புப் பிடியில் வைத்திருந்தாள். அந்த குரங்குகள், அவளுடைய சொற்களே இல்லாத பேச்சை புரிந்து நடந்தன.

இதில் 'ஜானு'தான் அவளுடைய செல்லம்... திடீரென்று ஒரு நாள் கோமதி ஆரவாரித்தாள். " ஏங்க! ஜானு உண்டாகியிருக்குங்க." அவ்வளவுதான். தனக்கு கிடைக்காத அன்பு, தான் செலுத்த இயலாத அன்பு என எல்லாவற்றையும் ஜானுவிடம் கொட்டித்  தீர்த்தாள். அந்த ஜானுவை தான் ஒரு வாரமாக காணவில்லை. கோமதி நினைவுகள் களைந்து, அன்றைய தினத்திற்கு வந்தாள். மீண்டும் அவளை ஜானுவைப் பற்றிய கவலை சூழ்ந்தது.

 "மனிதனுக்கு என்றுமே குரங்கு புத்திதான். குரங்குகளிடம் இருந்து வந்தவன் தானே மனிதன். மனிதனின் எல்லா அற்ப குணங்களும் குரங்குகளிடம் இருந்துதான் வந்தன. அதனால், நீ எதற்கும் உன் மனதை தயார் செய்து வைத்துக்கொள்.  ஜானுவிடம் இருந்து கொஞ்சம் விலகியே இரு" என்றான் சங்கர்.

மறுநாள் காலை, தினசரியை எடுக்க வெளியில் வந்த சங்கர், ஜானு அதனுடைய குட்டியுடன் அமர்ந்து இருப்பதைப் பார்த்தான். அவனை நிமிர்ந்துப் பார்த்த ஜானு, கோபமாக அவனிடம் சீறியது.  உள்ளே சென்ற சங்கர் கோமதியிடம், "ஜானு குட்டியுடன் வந்துள்ளது. என்னைப் பார்த்தவுடன் சீறியது. தன் குட்டியைக் காக்கும் வெறியுடன் இருக்கிறது. அருகில் செல்பவர்களை காயப்படுத்திவிடும். நீ அதனருகில் எப்போதும் போல், போய் விடாதே" என்றான். ஜானுவையும் அதன் குட்டியையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கஷ்டப்பட்டு  கட்டுப்படுத்திக் கொண்டாள் கோமதி. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தும் ஒன்றும் தெரியவில்லை.

வெகு நேரம் வெளியில் நின்றும் தன்னைக் காண கோமதி வராததை உணர்ந்த ஜானு, தானே வீட்டினுள் நுழைந்தது. இதைக் கண்ட சங்கர் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் தானும் பின் தொடர்ந்தான். குட்டி தாய் ஜானுவை இறுக்கிக்  கட்டிக் கொண்டு இருக்க, ஜானு கோமதியை அங்கும் இங்கும் தேடி, சமையலறையில் கண்டது.

சமைத்துக்கொண்டிருந்தவள் காலடியில் சென்று நின்றது. சமையல் மேடைப் பக்கமாக திரும்பி சமைத்துக் கொண்டிருந்த கோமதி, யாரோ அருகில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படவே, சட்டென திரும்பினாள். குட்டியை தன்னிடம் இருந்து விடுவித்து, கோமதியின் காலடியில் போட்டது. சங்கரும் கோமதியும் அதிர்ச்சியில் விக்கித்து நின்றனர். மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. அத்தருணத்தில், மனிதர்கள் தனக்கு இட்ட காயங்களுக்கு எல்லாம் ஜானு மருந்து போட்டதாகவே கோமதி உணர்ந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com