முகத் தசைகளைப் பாதிக்கும் பெல்ஸ் பால்சி

முகத் தசைகளைப் பாதிக்கும் பெல்ஸ் பால்சி
Published on

ரம்பியல் நிபுணரான (Consultant Neurology, Neurophysiology) டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் அவர்கள், மங்கையர் மலர் வாசகிகளுக்காக,உடல் உறுப்புக்களில் ஏற்படும் நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்னைகள் குறித்து நமக்கு விளக்கம் தருகிறார்.

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்
டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

பெல்ஸ் பால்சி (Bell’s palsy) யா?

துவரை கேள்விப்படாத புது நோயாக இருக்கிறதே டாக்டர்?  என்று வியப்புடன் நாம் கேட்டபோது,  புன்னகையுடன் "பெயரைப் பார்த்து பயப்படவேண்டாம். இது முகத்தின் ஒரு பக்க தசைகளைப் பாதிக்கிற, விரைவில் குணமாகக் கூடிய நரம்பு பிரச்னைதான்... முகத்தின் ஒரு புறம் திடீரென பலவீனமான உணர்வு வந்து, தளர்ந்தாற்போல் ஏற்படும் நிலையை ‘பெல்ஸ்பால்சி’  அல்லது ‘peripheral facial palsy’ என்று சொல்கிறோம்" என்று விளக்கினார் டாக்டர் புவனா.

என்ன காரணத்தால் இந்த நோய் வருகிறது? எந்த வயதில் இது வரும்?

ந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். முகத்தின் ஒரு பகுதியைக் கண்ட்ரோல் செய்யும் முக நரம்பில் வரும் வீக்கம் காரணமாக வரலாம். அல்லது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பிறகு வரலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.

இதன் அறிகுறிகள் என்ன?

திடீரென்று முகத்தின் ஒரு பக்கம் முழுவதுமாக லேசான பலவீனம் போல் ஆரம்பித்து, தளர்ச்சி உண்டாக்கும். ஆனால், இது நிச்சயமாக கை கால்களில் வருவதல்ல. முகத்தில் மட்டுமே வருவது.

கண்களை மூடித் திறத்தல், புன்னகைப்பது போன்ற எளிய முக பாவனைகளைக் கூடச் செய்ய முடியாதபடி முகத் தசைகள் தொங்கிப் போதல்,  வாய் கோணலாகிப் போதல் பாதிப்புக்குள்ளான பகுதியில் இருக்கும் காதுக்குக் கீழ் அல்லது முகவாய் சுற்றி வலி. சத்தம் பொறுக்க முடியாமல் இருத்தல்,  நாவில் ருசியில்லாமல் போதல்  போன்றவை யெல்லாம் பொதுவாக பெல்ஸ் பால்சியின் அறிகுறிகள்.

இதற்கான சோதனைகள் ஏதும் இருக்கிறதா?

தற்கென்று குறிப்பான பெரிய சோதனைகள் எதுவும் இல்லை. முதலில் கண்களை மூடித் திறப்பது, புருவங்களைத் தூக்குவது, பற்களைக் கடித்தல் போன்ற சில அசைவுகளைச் செய்யச் சொல்லி  மருத்துவர் சோதனைகளைச் செய்வார். அதிலேயே அனேகமாக கண்டுபிடித்து விட முடியும்.

மற்றபடி ஸ்ட்ரோக், நோய்த் தொற்று, கட்டிகள், வீக்கம் போன்றவை ஏற்பட்டு அதனால்,  முக நரம்பு பாதித்து,  அதிகப்படியான அறிகுறிகள் இருந்தால்,  அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, முக நரம்பு களுக்கான சோதனைகள் செய்வோம். பொதுவாக, பெல்ஸ்பால்சியை கண்டறிய  எளிய சாதாரண மருத்துவ சோதனைகள் போதும்.

இதற்கான சிகிச்சைகள் என்ன?  எத்தனை நாட்களில் குணமடையும்?

சில நேரம் சிலருக்கு சிகிச்சை எதுவும் தராமலேயே தானாகவே முற்றிலும் சரியாகி விடும். இருந்தாலும் மருத்துவரை அணுகும்போது அதற்குத் தேவையான மருந்துகளையோ அல்லது முகத் தசைகளுக்குத் தேவையான பயிற்சி ஆலோசனைகளையோ அவர் வழங்குவார். அறுவைச் சிகிச்சை என்பது பெல்ஸ் பால்சிக்கு அனேகமாகத் தேவைப்படாது.

பெல்ஸ்பால்சியினால் கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாதுகாப்பது டாக்டர்?

ண்கள் மூடித் திறக்காமல் போனால் அதற்கு சிகிச்சை தருவது அவசியம். கண்களை ஈரப்பசையுடன் வைக்கத் தேவையான சொட்டு மருந்துகள், ஆயின்ட்மென்ட் போட்டு பராமரிக்க வேண்டும்.

பகலில் கண்ணாடிகள் (அல்லது காகிள்ஸ்) அணிய வேண்டும். இரவில் கண்களைச் சுற்றி ஒரு பேட்ச் அணிய வேண்டும். இவற்றின் மூலம் கண்களைக் குத்திக் கொள்வது, சொறிந்து கொள்வது போன்றவை தடுக்கப்படும்.  கண் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க நேரிடலாம்.

இதற்கென தனியாக மருந்துகள் உள்ளனவா?

முகத்தில் இருக்கும் முக நரம்பு வீக்கத்தால்  (inflammation of the facial nerve) இந்த பாதிப்பு ஏற்படும்  போது ஸ்டெராயிட்ஸ் (Steroids) கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரும் விதத்தில் (tapering dose) தரப்படும்.

நுண்கிருமித் தொற்றால் பாதிப்பு ஏற்படும் போது அதற்கான ஆன்டிவைரல் மருந்துகள் (Antiviral drugs) தரப்படும். வலி வந்தால் குறைக்க வலி நிவாரணிகள் உதவும்.

முகத் தசைகளுக்கு பயிற்சி அவசியமா?

ண்டிப்பாக அவசியம். பாதிப்பு நிரந்தரமாக முகத்தைக் கோணலாக்கி விடக் கூடாதல்லவா?  பெல்ஸ் பால்சி என்பது,  முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே வரும் பாதிப்பு என்பதால் முகத்தை எப்படி மசாஜ் செய்வது, முகத் தசைகளுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது என்று மருத்துவர் சொல்வதைத் தவறாமல் செய்ய வேண்டும். பெரும்பாலும் பெல்ஸ்பால்சி பாதிப்பு வந்தோரில் 95 முதல் 98 சதவீதம் வரை குணமாக்கி விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com