நான் கொண்டாடும் நாயகி!

நான் கொண்டாடும் நாயகி!

மகளிர் தின சிறப்பு நேரலை!

எமனுடன் போராடி மீண்ட என் தோழி!

-வனஜா செல்வராஜ்

எல்லா பெண்களும் பிரசவ காலத்தில் மட்டும்தான் எமனுடன் போராடி மீண்டு வருவார்கள்.  ஆனால் என்னுடைய  தோழியும், உடன்பிறவா சகோதரியுமான சுகுணா தன்னுடைய 45 வது வயதில் மீண்டும் எமலோகம் சென்று எமனுடன் போராடி தன் உயிரை  மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

2005 லிருந்து 2012 வரை தொடர்ந்த பயங்கரமான உதிரப்போக்கு இவரை ரொம்பவே பலவீனமாக்கிவிட்டது. ஏகப்பட்ட வைத்தியங்கள், ஏகப்பட்ட மருந்துகள், மாத்திரைகள் என ஏழு வருடங்களும் வாழ்வை பணயம் வைத்தே கடக்க வேண்டியதாயிற்று. இடையில் அமெரிக்காவில் படித்து விட்டு வந்திருந்த மருத்துவர் இவருக்கு ICUD என்கிற Foreign bodyஐ கருப்பைக்குள் செலுத்தவும் நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் இந்த உதிரப் போக்கு சற்றே குறைந்து கொஞ்சம் நார்மல் வாழ்வுக்கு திரும்பினார்.

ஆனால் இந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் அற்பாயுசில் முடிந்து விட்டது.

2012 ல் மீண்டும் இவருக்கு ஆரம்பித்தது தொந்தரவு. பாடாய்படுத்திய மார்பக வலியை பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்கு மீண்டும் படையெடுத்த போது ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது மார்பகத்தில் கட்டி இருப்பது தெரிய வந்தது.  அந்த கட்டியை சோதனைக்காக பயாப்ஸி செய்ய லேபுக்கு அனுப்ப வந்த ரிசல்ட்டோ கூடவே பேரிடியை தாங்கிக் கொண்டு வந்தது.

ஆம். அது சாதாரண இடி அல்ல. பேரிடி தான். முதன் முதலாக கண்டுபிடிக்கும் போதே கேன்சர் 4th ஸ்டேஜ். கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிலை. 

இந்த செய்தி அவரை மட்டுமல்ல. அவருடைய குடும்பத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

இதற்கடுத்து அவருடைய அனுபவத்தை இதோ அவரது குரலிலேயே கேட்போம்.

"2012இல் முதன் முதலில் கோவை மருத்துவர்கள் பயாப்ஸி எடுத்து கேன்சர் கட்டி என்று உறுதி செய்தனர். நான் மருத்துவ உதவியோடு இருப்பதால் எப்போதும் நான் தனியாகத்தான் டிரைவரோடு மருத்துவமனைக்குக் செல்வேன். அன்றும் அப்படித்தான் போனேன். மருத்துவர் வலது மார்பகத்தில் புற்றுநோய் என்று கூறியவுடன் யாரோ ஆயிரம் கூடை‌ நெருப்பை அள்ளிக் கொட்டினமாதிரி இருந்தது.

என்ன செய்ய..

ஏது செய்ய...

எதற்காக இப்படி...

எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை.

அடுத்த நாள் வேலூர் சிஎம்சி சென்றோம். அங்கு இதுதான் என்று உறுதியானது. அறுவை சிகிச்சைக்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னதால் அன்று இரவே சிகிச்சை வேண்டி சென்னை சென்றோம். அப்பல்லோவில் மீண்டும் அனைத்து பரிசோதனைகளும் தொடர்ந்தன. உமா என்கிற மருத்துவர் கொடுத்த கவுன்ஸிலிங் எனக்கு கொஞ்சம் மன தைரியம் கொடுத்தது.

48 நாட்கள் கழித்து எல்லா  ரிசல்ட்களும் வந்தன. அந்த 48 நாட்களும் என் வாழ்வின் மிக கடினமான நாட்கள்.

ரிசல்ட் வந்த கையோடு சர்ஜரி உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கேயே சர்ஜரியும் வெற்றிகரமாக முடிந்தது. என்னுடைய வலது மார்பகம் நீக்கப்பட்டதில் பெண்ணாகிய நான் கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

ஆனால் அந்தக் கவலையை நீடிக்க விடாமல் அடுத்த இரண்டு நாட்களில் எனக்கு சரியான முதுகுவலி ஏற்பட்டது. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வருமாம் இந்த மாதிரி முதுகு வலி.

நாம்தான் எலியானோமோ.... 

ஒருவழியாக எல்லாம் முடிந்து அதன் பின்னர் கோவைக்குத் திரும்பினேன்.

ஒரு மாதம் கழித்து முதல் ஹீமோதெரபி. அப்பப்பா.... அன்றைய நாளை நினைத்துப் பார்த்தால் இப்போதும் கூட பயத்தில் எனக்கு உடல் நடுக்கம் ஏற்படுகிறது. 

அன்றிரவு அனுபவித்த வலியில் இறந்து போகலாமா என்று நினைத்தேன். கூடவே போதாக்குறைக்கு தலைவலியும், வாந்தியும்,  வயிற்றுப் போக்கும் முப்படை வீரர்களாய் சேர்ந்து என்னை படுத்தி எடுத்தன. 

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஹீமோதெரபி சிகிச்சை. பொதுவாக இருபத்தொரு நாட்களுக்கொருமுறை தான் அனைவருக்கும் கொடுப்பார்களாம்.

நாம்தான் எல்லாவற்றிலும் ஸ்பெஷல் ஆயிற்றே.

மொத்தம் எட்டு ஹீமோதெரபிகள். முடிவதற்குள் நான் ஒருவழியாகி விட்டேன்.

கர்மா என்கிற ஒற்றை  வார்த்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு அளவு சுலபமாக இந்த பயங்கர வலியில் இருந்தும், மனபாரத்தில் இருந்தும் நான் வெளியில் வந்தது மிகப் பெரிய சாதனைதான். 

சாப்பிட முடியாமல், வலி தாங்க முடியாமல், 

எந்த ஒன்றின் மீதும் விருப்பமில்லாமல் உருண்டன  நாட்கள்.

மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்கிற உத்வேகம், 

பேரனின் அன்பு மழையில் நனையும் ஆசை, இதை எல்லாம் கடந்து வரவேண்டும் என்கிற வெறி எல்லாம் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு வந்தேன்.

இதோ ஆயிற்று. இப்போது பத்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக சுயசார்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்" என்று முடித்தார் சுகுணா. 

இறைவனாக கொடுத்த இந்த இரண்டாவது பிறவியை முடிந்த அளவு பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்  என்பதுதான் இவருடைய மிகப் பெரிய அவா. முடிந்தவரை ஏழைகளுக்கு இல்லாதவர்களுக்கும் உதவி வருகிறார். முள் சீத்தாப்பழம், நோனி சர்பத் போன்றவை சொந்தமாக விவசாயம் செய்யும் தற்சார்பு முறை நிலத்தில் விளைவித்து தயாரித்து தனக்கு தெரிந்த கேன்சர் இன்ஸ்டிடியூட்களுக்கு அனுப்புவதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார். மகளிர்க்கு புற்று நோய் பற்றி முடிந்தவரை கவுன்சிலிங் கொடுப்பதும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தலையாய பணியாக செய்து வருகிறார்.

எப்போதும் தேனியைப் போல இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடுவதும், தன்னுடைய மிகப் பெரிய வீட்டை மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரித்தல், பெரிய அளவில் தற்சார்பு விவசாயம், அடுத்தவருக்கு உதவி செய்தல் இவை மட்டுமல்லாமல் ஏகப்பட்ட கைவேலைகள், தஞ்சாவூர் பெயிண்டிங், இன்னும் ஏகப்பட்ட கலைகள் கலைவாணியருளால் இவருக்கு வாய்க்கப் பெற்றுள்ளன. இவற்றுடன் நல்ல குருமார்கள், ஆன்மீகம், குடும்பம் உறவினர்கள், முகநூல் தோழமைகள் என இறைவனருளால் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்  என இந்த புனர்ஜென்ம பிறவியை மிக அழகாக கழித்துக் கொண்டிருக்கும் சுகுணா அம்மாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் ஏராளம்.

மாமியாா் கொடுத்த ஊக்கம்!

-ச.சிவசங்காிசரவணன், செம்பனாா்கோவில்

மகளிா் தினம் மட்டுமல்ல எல்லாநாட்களிலும் நான் கொண்டாடும் நாயகி என் மனம் கவா்ந்த நாயகி என்மாமியாா் புவனா என்பவா்தான். அவருக்கு பிறந்த ஊா் திருச்சி. நான் மயிலாடுதுறையில் பிறந்தாலும் திருச்சி வயலுாில் வசித்துவந்தோம்.  2009 ம் வருடம் பெண்பாா்த்து 4.9.2009 ல் திருமணம். ஒரே பையன்.  வந்து பெண்பாா்க்கும்போது என் மாமனாா் கேட்ட முதல் கேள்வியே என்ன படித்துள்ளாய் என்ற கேள்விதான். நான் பிளஸ் 2 வில் கடலூாில் மாவட்டத்தில் மூன்றாம் இடம் 972 மாா்க் என்றேன்.  மேற்கொண்டு படிக்கிறாயா என கேட்டாா்கள். சாி என்றேன். 

என் மாமியாா் என் அப்பாஅம்மாவிடம் பேசினாா். என்னை என் கணவா் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டாா். புகுந்தவீடு வந்ததும் பிசிஏ சோ்ந்தேன். தொடா்ந்து காா் ஓட்ட கற்றுக்கொண்டேன். டின் பிசியில் 4 முறை தோ்ச்சி. 185 மாா்க் வாங்கியும் பிராமின் என்பதால் வேலை இல்லை. பின்னா் வீட்டில் ஏற்கனவே செய்து வந்த நூல்கண்டு தயாாிக்கும் தொழில் கற்றுக்கொடுத்தாா்கள். மெழுகு வத்தி தயாாிக்கிறோம். அனைத்து வேலைகளையும் மாமியாரும் நானும் சோ்ந்தே செய்வோம். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து தாயாரை விட ஒரு படி மேலாக என்னைப் பாா்த்துக்கொள்கிறாா்கள். பணம் நிா்வாகம் முழுவதும் நான்தான். எந்த விஷயமாய் இருந்தாலும் நான் தான் என் புகுந்த வீட்டின் நாயகி. என் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருந்து வரும் என் மாமியாா், மாமியாரே அல்ல; எனக்கு இறைவன் கொடுத்த தாய் என்றுதான் சொல்லுவேன். நல்ல மாமனாா் மாமியாா் அன்பான கணவன் இப்படிப்பட்ட வசதி படைத்த எனக்கு என் மாமியாா் உற்ற தோழிதான். சமீபத்தில் மேலும் ஒரு வீடு கட்டிக்கொடுத்துள்ளாா்கள். ஒரு படிப்பாளியாக வியாபாாியாக ஆசிாியராக நல்ல மருமகளாக அனைவரும் பொறாமைப்படும் அளவில் வாழ்க்கை ஓடுகிறது.  மங்கையா் மலரிலும் என் படைப்புகள் வருகிறது அதுவும் என் மாமியாா் கொடுத்த ஊக்கம்தான்!

தாய்மை!

-முனைவர் ஜெ.கவிதா, கோவை

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்

உனக்கு பாரம் தான்

தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்

வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.

 நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,

வேறு அமிர்தம் நான் கண்டதில்லை

அம்மா.!

அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,

கிழிந்த சேலையிலும் கடவுளாக

தோன்றுகிறாள் அம்மா.

இன்பம் துன்பம்

எது வந்த போதிலும்

தன் அருகில்

வைத்து அனைத்து

கொள்கிறது தாய்மை

வயது

வித்தியாசம்

பார்ப்பதில்லை

அம்மாவின்

கொஞ்சலில்

மட்டும்

இன்னும் குழந்தையாக

எதுவும்

அறியா புரியா வயதில்

எந்த சுமைகளும்

கவலைகளுமின்றி

அன்னையின் கரங்களில்

தவழும் காலம் சொர்க்கமே

ஆயிரம் உறவுகள்

உன் மீது அன்பாக

இருந்தாலும்

அன்னையின் அன்புக்கும்

அவள் அரவணைப்பிற்கும்

எதுவும் ஈடாகாது

உன்னை அணைத்து

பிடிக்கும் போதெல்லாம்

உணர்கிறேன் உலகம்

என் கையில் என்று

தந்தையாகிய அத்தை!

-வி.ஸ்ரீ வித்யா பிரசாத், நங்கநல்லூர்

"அத்தைக்கு  மீசை முளைத்தால் சித்தப்பா" இப்பழமொழியை பொய்யாக்கி, தந்தையுமான என் அத்தை சம்பத் குமார் தான் நான் கொண்டாட வேண்டிய நாயகி.

தந்தை இழந்த பின்னர் திக்கற்ற நிலையில் இருந்த என் அம்மா மற்றும் எங்களை தேற்றி அன்றும் இன்றும் என்றும் பலமாக வாழ்க்கை பாலமாக விளங்குபவர். 

தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க தயங்கியது இல்லை. அதேபோல சரியான நேரத்தில் உதவிட தாமதம் ஆனதும் இல்லை. 

ஆறுதலாகவும் பெருமையாக எங்கள் அன்னையை பற்றி எங்களிடம் கூறி எப்படி உதவிட வேண்டும் எனவும் இறுக்கமான சூழலை கடக்கும் வழிமுறைகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் கூறிக்கொண்டே இருப்பார்கள். 

எங்கள் வீட்டு பொக்கிஷம் அவர். எல்லோருக்கும் பிடித்த அத்( தந்) தை.

கேரள கொள்ளுப்பாட்டி!

-ஸ்ரீவித்யா ஆனந்த்

தென் தமிழக கேரள எல்லையில் ஒரு கிராமம். ஒரு சிற்றாறு கிராமத்தைத் தொட்டுக்கொண்டு ஓடும். அதன் கரையிலிருந்து 50 - 100கல்படிகள் ஏறித்தான் அந்த ஊருக்குள் நுழையவே இயலும். கிராமத்தில் அநேகம் பேர் ஆற்றுத் தண்ணீரையே பயன்படுத்துவார்கள். தண்ணீர் எடுக்கவும் அதே 50 - 100 படிகள் இறங்க வேண்டும். அக்கிராமத்தில் ஒரு பெண்மணிக்கு படி இறங்காமல் (மேட்டு நிலத்திலேயே) கிணறு வெட்டலாமே என்று தோன்றியது. ஊர் மக்கள் அனைவரின் பங்கேற்பும் தேவை என்பதால் தாமே அங்கிருந்த வெவ்வேறு சமூகப் பெரிய மனிதர்களிடமும் பேசி அனைவரையும் ஒத்துக்கொள்ள வைத்து மனித உழைப்பு, பொருள் தொடர்பான திட்டமிடல் அனைத்திலும் பங்கேற்றுக் கிணற்றை வெட்டுவதில் முன்நின்றார். தண்ணீர் வந்ததும் படி இறங்கி ஏறும் சுமையிலிருந்து விடுபட்ட அனைவரும் வாழ்த்தினர்.

இது நடந்தது கிட்டத்தட்ட100 ஆண்டுகளுக்கு முன்னால். 1982ல் என் அம்மா அந்த கிராமத்துக்குப் போயிருந்தபோது அந்தக் கிணறு இன்னும் பயன்பாட்டில் இருந்ததைப் பார்த்து நெகிழ்ந்தார்.

ஆம், என் அம்மாவின் தாய்வழிப்பாட்டிதான் அப்பெண்மணி. என் பாட்டியைச் சேர்த்து அவருக்கு மூன்று பெண்கள்.மூன்றாவது பெண் பிறந்ததும் என் குழந்தைகளுக்குத் திருமணத்தைவிடக் கல்விதான் முக்கியம். முதலில் படித்து, வேலைக்குப்போய் அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். பின்பே திருமணம். பாட்டியையும் அவரது மூத்த சகோதரியையும் குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கான்வென்டில் சேர்த்தார். (1930 வாக்கில்)ஆனால் அவரது அந்தக் கனவு நிறைவேறவில்லை. அடுத்து ஒரு ஆண் குழந்தை, பின்னும் சிறிதே இடைவெளியில் மற்றொரு ஆண் குழந்தை. தொடர் பிரசவங்களால் கடைசிக் குழந்தைப்பேற்றில் ஏற்பட்ட சிக்கலால் காலமானார். என் பாட்டியின் படிப்பு தடைப்பட்டது. அடுத்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே!

ஆனாலும் உயிருடன். . இருந்த வரை தம் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர். அறிவுக்கூர்மைக்காக அவரது பெற்றோர் உட்பட அனைவரும் அவரது சொற்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். இப்போது மருத்துவ வசதிகளால் மிக சாதாரணமகத் தவிர்த்திருக்கக்கூடிய ஒரு மரணம் அவரது கனவுகளைக் கலைத்தது. ஆனாலும் சில சமயம் நான் பொதுப்பணிகளில் ஈடுபடும்போது என் அம்மா அவரது பாட்டியின் குணம் என்னிடம் இருப்பதாகக் கூறும்போது எனக்கு அது பெரும் சக்தியைத் தந்ததுண்டு. சமயங்களில் மனம் சோர்வடையும்போது அவரை நினைத்து வியப்பதும் உண்டு.

இப்போது பெண்ணியம் பற்றிய பல கருத்துகள் எதிர்கொள்ளப்படும் விதத்தைப் பார்க்கும்போது 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த சமூகத்தில் இவற்றை தைரியமாகப் பேசிய, செயல்படுத்த முனைந்த கொள்ளுப்பாட்டியை (பெயர் சிவகாமி) எண்ணி வியக்காமல் இருக்க முடிந்ததில்லை. matriarch என்ற சொல்லுக்கு முழுத் தகுதியுள்ள கம்பீரமான ஆளுமை. அவரது புகைப்படம் தற்சமயம் இல்லை. கோவிலில் இருக்கும் துவாரபாலகி போன்ற ஓங்கி உயர்ந்த உருவம்தான். மனக்கண்ணில் விரியும்.  

என் அம்மா தான் என் உலகம்!

-ஸ்ரீவித்யா

'எனக்கு தெரிந்த உலகம், என் அம்மா தான்.' தெரியாதது போல இருப்பாள், ஆனால் எங்களுக்கு மினி என்சைக்ளோபீடியா அவள் தான். பொறுமை, இரக்கம், அன்பு, உதவும் பாங்கு, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உழைக்கும் தெய்வம் அவள். யாரையும் இகழ்ந்து பேசி கேட்டதில்லை. அப்பா காலமானபோதும் ஒருவரிடம் சென்று சொந்த பிள்ளைகளிடம்களிடம் கூட எந்த உதவியும் கேட்டதில்லை.

உணவில் பாசம், மனதில் நேசம்!

-சுபஸ்ரீ முரளி

இவர் பிறந்தது சிறிய கிராமத்தில். தன் சிறு வயதில் தந்தையை இழந்தவர். தாய்க்கு உடல் சுகமில்லாத காரணத்தால் தன்னுடைய பத்தாவது வயதில் கையில் கரண்டியை எடுத்தவர்.

இவர் கைமணத்தில் உருவாகும் உணவில் பாசம் அன்பு அக்கறை சேர்ந்து உணவை மேலும் சுவையாக்கிவிடும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. இப்படிப் பல இன்னல்களை தன் வாழ்க்கையில் கண்டவர் என்றுமே மனச்சோர்வு அடையமாட்டார்.

“கவலைப்படுவதால் எதுவும் சரியாகிவிடாது” இதுவே இவர் தாரகமந்திரம்.

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.

திருமணம் முடிந்து முதன் முதலில் சென்னையில் அடியெடுத்து வைத்தவர். சூழலுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டார்.

இவர்

செல்லமான மகள்

அன்பான மனைவி

பாசமிகு தாய்

என எல்லா பரிமாணங்களிலும் சிக்ஸர் விளாசியவர்.

இவர்தான் என்னுடைய மறைந்த பாசமிகு தாய் ஈ.ஆர்.பிரேமா.

அன்றும் இன்றும் என்றும் நான் கொண்டாடும் நாயகி.

வாழும் நெறி உணர்த்திய ஔவை பாட்டி!

-சந்தியா வெங்கடேஸ்வரன்

சங்க இலக்கியக் காலத்திலேயே தமிழுக்குத் தன் அரிய பங்களிப்பைச் செய்திருக்கின்ற ஒளவையாரே நான் கொண்டாடும் நாயகியாய் எழுத விழைகிறேன். அவர் எழுதியுள்ள ‘ஆத்திச்சூடி’யும், ‘கொன்றைவேந்தனு’மே தமிழருக்கு வாழக் கற்றுத்தரும் அறம் கூறும் வார்த்தைகளைக் கொண்டுள்ளன.

திருக்குறளை இரண்டடியில் வாழ்வியலைச் சொல்லுகின்ற செய்யுளாய் உலகமே கொண்டாடுகிறது. ஒளவையின் ஆத்திச்சூடியோ இரண்டிரண்டு வார்த்தைகளிலேயே உயரிய கருத்துகளைச் சொல்லுகிறது.

‘அறம் செய விரும்பு.

ஆறுவது சினம்.

இயல்வது கரவேல்.

ஈவது விலக்கேல்.

உடையது விளம்பேல்.

ஊக்கமது கைவிடேல்.

மற்றும் ஏற்பது இகழ்ச்சி. ஒதுவது ஒழியேல், ஒளவியம் பேசேல் என்று இரண்டே வார்த்தைகளில் மானிடப் பிறவிக்கு வாழும் நெறியை வகைப்படுத்திக் கூறியுள்ளார்.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்று ஆரம்பித்த கொன்றைவேந்தனில் ‘கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று கல்வி கற்றலின் மேன்மையைப் பிச்சை எடுத்தாகினும் கற்க வலியுறுத்துகிறார்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது

ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது

தானமும், தவமும் தான்செய்தல் அரிது

இவை எல்லாம் செய்தால் ‘வானவர் நாடு’ (சொர்க்கம்) வழி திறந்திடும் என்று மேலான கருத்துகளை, எளிமையான தமிழ்ச் சொற்களால் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுள்ளார் நமது ஔவை பாட்டி என நினைக்கும்போதே சிலிர்க்கின்றது.

குறளைக் கொண்டாடும் அளவுக்கு ‘ஆத்திச்சூடி’, ‘கொன்றைவேந்தன்’ கொண்டாடப்படாததற்கு ‘ஔவையார்’ ஒரு பெண் என்பதுதான் காரணமோ?

யாமறியோம் பராபரமே!

அம்மா!

-P.NANDHINI SRI

யோசித்து பேசுவதிலும், முடிவு எடுப்பதிலும் கெட்டிக்காரி!

- லஷ்மிசேகர்

நான் கொண்டாடும் நாயகி என் அருமை மகள் அட்சயா அஷ்வின்... 

யாரும் இவள் இடத்தை நிரப்ப முடியாது. ஒரு விஷயத்தை தெளிவாக கேட்பதிலும் சரி... அதை நாற்புறமும் யோசித்து பேசுவதிலும் சரி... ஆளுக்கும் இடத்திற்கும் நேரத்துக்கும் தகுந்தாற்போல் ஒரு முடிவு எடுப்பதிலும்... எடுத்த முடிவிற்கு விளக்கம் சொல்லவும், விளங்காதவற்கு விளக்கவும் அவளால் மட்டுமே முடியும்.

முடிந்ததை செய்யவும், முடியாததை முடியாது என்று சொல்ல தைரியமும் அவளுக்கு உண்டு.

தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதே நேரத்தில் யாருடைய மனமும் புன்படாமல் பேசுவதில் அவளுக்கு நிகர் அவளே.

யாருக்கும் எந்த நேரத்திலும் உதவும் மனப்பான்மை உண்டு. இங்கு யாருக்கும் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். முக்கியமாக பைரவ பகவான்.

அவளை என் மகளாக அடைந்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

என்னை கவர்ந்த, மேன்மைபடுத்திய அழகான, பெண்மணி என் அம்மா!

- லதா அருண்

நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்த போதிலும் அனைவரையும் ஒன்று போல் பாவித்து பாகுபாடு கருதாமல் வளர்த்து விருந்தோம்பல் கற்று கொடுத்து வளர்த்து விட்டவர்.

அம்மாவுடன் லதா அருண்
அம்மாவுடன் லதா அருண்

ஒரே பெண்ணாக நான் அண்ணன் தம்பியுடன் வளர்ந்த போதிலும் நிறைய செல்லம் கொடுக்காமல் நல்ல விஷயங்களை கற்று கொடுத்தவர். புகுந்த வீட்டில் அனைவரையும் அனுசரித்து மனம் நோகாமல் நடந்து  கொள்ள புத்திமதி சொல்லி என்னை வளர்த்தவர் என் அன்பு தெய்வம் என் அம்மா..

என்னை ஊக்குவித்த தருணம் :

மங்கையர் மலர் ஆண்டு விழாவில் என்னை ஒளவையார் வேடம் போட வேண்டும் என்று சொல்லி முதல் பரிசு உனக்கு தான் என்று சொல்லி என்னை ஊக்குவித்தவர். நான் முதல் பரிசு வாங்கியதை கண்டு ஆனந்த கண்ணீர்  விட்டவர் என் அன்பு அம்மா.

பன்முகத் திறமை கொண்ட மருத்துவர்!

- அருணா சத்யமூர்த்தி

நாங்கள் குவைத்தில் இருந்தபோது இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிரசித்தி பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் உஷா ராஜாராம். அவர், கணவர் திரு. ராஜாராம், மாமியார் என்று மூன்று பேருமே மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள்.

அவர் மருத்துவராக இருந்த போதும், பால விகாஸில் இணைந்து, குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள், பகவத் கீதை, கதைகள், ஓவியம் வரைதல், இவற்றில் ஈடுபாட்டை அதிகரிக்க உதவியவர்.

பெண்களை குழுவாக இணைத்து லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ர நாமம், ஹனுமான் சாலிஸா, என்று பக்தி பஜனைகளில் எங்களை ஈடுபடுத்தி, கலாச்சாரத்தையும் பின்பற்ற வைத்தவர்.

அவரின் பன்முகத் திறமையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம், இரண்டிலும் புலமை மிக்கவர்.

அதனால், பல்வேறு இடங்களிலிருந்து வந்த பெண்களும் இணைந்து பஜன் செய்து பழக முடிந்தது. மற்றவர்களின் திறமையை மனம் திறந்து பாராட்டும் நல்ல குணமும் மிக்கவர்.

இவர் தான்… 'நான் கொண்டாடும் நாயகி'.

'நீ படிம்மா உனக்கு நான் இருக்கேன்' என்று உற்சாகப்படுத்தும் பாட்டி!

- ராமலெஷ்மி, மூணாறு

சிறு வயது நினைவலைகளில் நீங்காமல் நிற்பது என் பாட்டியுடனான சண்டைகள். தற்போது நினைத்தால் சிரிக்கத் தோன்றுகிறது. அம்மாவின் பிரிவு சிறிதும் வாட்டாமல் என்னை வளர்த்து ஆளாக்கியவர். சின்ன வயதில் தான் எவ்வளவு திட்டுக்கள். தற்போது யோசித்தால் அவையனைத்தும் என்னை பேணி பாதுகாப்பதற்கான வழிகள் என புரிகிறது. ஒரு நிமிடம் என்னை காணவில்லை என்றாலும் பதறிடுவார். மேற்படிப்புக்காக வேறு நகரத்திற்கு இடம் பெயர்ந்த நான் பாட்டியின் வெறுமையை உணராத நாள் இல்லை. தற்போதும் வேலைக்கு செல்லும் அவர் தனக்காக ஒன்றையும் சேமித்து வைக்காமல் "நீ படிம்மா உனக்கு நான் இருக்கேன்" என்று உற்சாகப்படுத்தும், எத்தனை வயதானாலும் தற்போதும் என்னை சிறுமியாக பாவிக்கும் எனது பாட்டி நான் கொண்டாடும் அதிசய பெண்.

என்னைப் பாராட்டி பரிசுகள் பல தந்து ஊக்குவித்தவள் என் நாயகி!

- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்

நான் எப்போதும் பெருமையுடன் கொண்டாடும் (தோழிகளுடன், உறவுகளுடன் பேசிப்புகழும்) நாயகி எனக்கு நெருக்கமான சிலருள் ஒருத்தி. பிறந்தவுடன் என் கைகளில் தவழ்ந்தவள் என்னுடன் நெருக்கமானாள். மகள், தாய், தோழி என்று பலவாறாக அவளைப் பார்த்தேன். நான் அவளிடம் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்ததையும், என் அனுபவங்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

என்னைப் பாராட்டி பரிசுகள் பல தந்து ஊக்குவித்தவள் என் நாயகி. அவளால் எனக்கு சில தோழிகளும் கிடைத்தனர். அது மட்டுமல்ல தனது இருப்பிடத்துக்கு, வரவழைத்து மற்றவர்களுடன் பழகவும் வைத்தாள். ஆனால் இப்போது பார்க்கவே முடியாத நிலை. சில நாட்களாக இ-மெயில் மூலம் பேசிக்கொண்டோம். தற்போது ஏனோ அதுவும் இயலவில்லை.

அந்த நாயகி மங்கையர் மலர் தானுங்க. இது ஐஸ் என்று நினைக்காதீங்க. உண்மை, உண்மை.

தாயுடன் ஜெயந்தி நாராயணன்
தாயுடன் ஜெயந்தி நாராயணன்

எல்லாமே அம்மாதான்!

- ஜெயந்தி நாராயணன்

எட்டு வயதில் தன் தாய் இறந்ததில் இருந்து எண்பத்தெட்டு  வயதில் கீழே விழுந்து படுத்த படுக்கையாகும் வரை  உழைத்தவள். 

நாங்கள் எல்லாரும் பள்ளி, கல்லூரி, வேலைன்னு எங்க பொழப்ப பார்த்தப்பா ஆல் இன் ஆல் அழகுராணி அம்மாதான். மளிகை சாமான் வாங்க, ரேஷன் கடை போக, மெஷினில் போய் மாவரைக்க, கரெண்ட் பில் கட்ட... எல்லாமே அம்மாதான். இவையெல்லாம் வீட்டில் பெட் ரிட்டனாக இருந்த பெரியவர்களை கவனித்துக் கொண்டே செய்தாள். இவையெல்லாவற்றிற்கும் நடுவுல அம்மாவுக்கு கோவில், ஸ்லோக கிளாஸ், சினிமா, பத்திரிகை வாசிப்பு எல்லாவற்றிற்கும் நேரம் இருந்தது.  அம்மா அரசியல் செய்தியும் விரும்பி படிப்பா. கர்நாடக சங்கீதம் முறையாக கற்றுக் கொள்ளாவிடினும், ரேடியோவில் கேட்டதை வைத்து அருமையாக பாடுவாள். 

வாழ்நாள் முழுதும் உழைத்த அம்மா, ஒரு காய்ந்த சருகு உதிர்வது போல சிரமமில்லாமல் போய் விடுவாள் என நாங்கள் நினத்தது நடக்கவில்லை. கீழே விழுந்து ஆறு மாதம் வலியில் அவதிப்பட்டு கடைசி நான்கு நாட்களுக்கு முன் என்னய தூங்க சொல்லிருக்கா, தூங்கறேண்டின்னு அப்டியே மயக்கத்ல போய்ட்டா. 

அம்மாவ எப்டி நூறு வார்த்தைல அடக்க?  நடுவுல எக்கச்சக்க பக்கங்கள் விட வேண்டியிருக்கே...

சகிப்பு தன்மையின் பொருள் நீ

- Mahalakshmi Rajesh

நான் கொண்டாடும் நாயகி என்னுடைய அம்மா, பிறந்த இடத்தில் பெரிய சந்தோஷம் இல்லை, புகுந்த இடம் பெரிய இடம், வலியை கணவன் புரிந்துகொள்ள வில்லை. சந்தோஷம் முதலில் வசந்தம் போல் வீசியது; ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வலியை இன்ப மயமாக உணர்தல், அது பிறந்த இரு ரெட்டை பெண் குழந்தைகள், அவளுடைய வசந்தம் தூக்கி சென்றது. மூன்று குழந்தைகளை பரிவோடு வளர்த்தல், தன்னுடைய சுகம் துக்கம் எல்லாமே அவளுடைய வலியை, கணவன் அன்பிற்கு ஏங்கி தவித்தாள்; இன்று வரை கிடைக்கவில்லை. அனால் அவள் சோர்வு என்னும் சொல்லையே மறந்தாள். உடம்பு வலி, மன வலியை மீறி அவள் தன்னுடைய பிள்ளைகளுக்காகவே அர்பணித்தாள். அம்மா நீ எங்களை சுமந்தாய், நான் உன்னை சுமக்க இன்னொரு ஜென்மம் வேண்டும், தலை வணங்குகிறேன் இன்னொரு சக பெண்ணாக... சகிப்பு தன்மையின் பொருள் நீ...

உறுப்பினர்களை ஊக்குவிக்கும் உமா!

-சீதா கணேசன், சென்னை

Shakthi Women Power என்ற குழுவை நடத்தி வரும் உமா வெங்கட் அவர்களே நான் கொண்டாடும் நாயகி.

அவர் பன்முகத் திறமை கொண்டவர். ஆடல், பாடல், கவிதை, கதை, பேச்சில் சிறந்தவர். பெண்களுக்கென்ற ஒரு குழு அமைத்து திறம்பட நடத்தி வருகிறார். அதில் இருக்கும் உறுப்பினர்கள் 50 வயதிற்கு மேல்பட்ட பெண்கள்.

வெறும் பொழுது போக்கும் குழுவாக இல்லாமல் வாரந்தோறும் பலத்தரப்பட்ட தலைப்புகளை கொடுத்து எழுதச்சொல்வார். அவ்வப்போது இசை/ கவிதை/ கதைச்சங்கிலி இது போன்ற போட்டிகளை அறிவித்து அவர்களிடம் ஒளிந்துள்ள, இது நாள் வரை வெளி வராத அத்தனை திறமைகளையும் வெளிக்கொணர வைக்கிறார். 

வேலை குடும்பம் என்று தன்னைப் பற்றி நினைக்காமல் இப்போதுஓய்வு பெற்ற நிலையில் இந்த குழு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பெண்களுக்கு  மட்டும்  என்பதால்  எந்தவொரு  பயமும் இல்லாமல்  இருக்கு  முடிகிறது.

மேலிருக்கும் படம் மருமகளும் நானும்.
கீழிருக்கும் படம் மகளும் நானும்.
மேலிருக்கும் படம் மருமகளும் நானும். கீழிருக்கும் படம் மகளும் நானும்.

மகளும் மருமகளும்!

-வசந்தா கோவிந்தன், பெங்களூர்

ஒரு பெண் தாயாகவும் மாமியாராகவும் 'பதவியில்' இருக்கும்போது, மகளையும், மருமகளையும் தன் இரு கண்களைப் போல பாவிக்க வேண்டும்! அதற்கு அவ்விருவரும் கூட, தாய் , மாமியார் என்ற இரட்டைப் பதவியில் இருப்பவருக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்! குடும்பத்தில் உரசல்கள் இல்லாமல் நிம்மதி உண்டாவதற்கு இந்த மூவருமே முக்கியக் காரணகர்த்தாக்கள்!

அந்த வகையில் என் மருமகளும் சரி, என் மகளும் சரி  எனக்கு மிகவும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள்! அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த சண்டை சச்சரவுகள்இல்லாமல் சகோதரிகளாகப் பழகுவதும், வீட்டின் சம்பிரதாயங்கள், சமயோசிதங்கள் ,என்று இருவருமே கைகோர்த்துக் கொண்டு எனக்கு உதவியாக இருப்பவர்கள்! வாழ்க்கையில் மும்முனைப் போராட்டங்கள் என்பதை நான் இதுவரைக் காணாமல் நிம்மதியாக இருக்கக் காரணமான இவர்கள் இருவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

அக்கா தங்கைகளாக வாழும் நாயகிகள்!

-மகாலட்சுமி.சி, சென்னை

பெண் என்ற தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா. " என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!! உண்மைதான்.

இக்கட்டுரையில் "நான் கொண்டாடும் நாயகி" யாக என்னை உருவாக்கிய 'ஐந்து அம்மா'க்களை பற்றி எழுத உள்ளேன்.

வேறு வேறு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஒரே குடும்பத்துக்குள் வந்து அக்கா தங்கைகளாக வாழும் இவர்கள் தான் நான் போற்றும் நாயகிகள்.

1. குடும்பத்தின் மூத்தவராக அமைதியாக இருந்து சமையற்கட்டை தாண்டி எதுவும் தெரியாது என்ற மற்றவர்கள் கூற்றையும் தன்னுடைய நினைப்பையும் தவிடு பொடியாக்கி தன் மகனை ஒரு மிக சிறந்த மருத்துவராக உருவாக்கி இருக்கும் வைதேகி பெரியம்மாவிடம் இருந்து மனவலிமையும் தைரியத்தையும் கற்று கொள்கிறோன்.

2. எங்கள் குடும்பத்தின் அன்பு,பாசம் உபசாரத்துக்கு சொந்தகாரர். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு Leader. தனக்குள்ளே இருக்கும் பல திறமைகளை குடும்பத்துக்குள்ளே apply பண்ணும் திறமைசாலியான ரேவதி பெரியம்மாவிடம் இருந்து பல கலைகளையும் அன்பு காட்டுவதையும் கற்று கொண்டேன்.

3. எங்கள் குடும்பத்தின் தூண். தைரியம், துணிச்சல், மனதில் பட்டதை பேசுதல்,ஞாபக சக்கி,Instant problem solver இப்படி பல பரிமாணங்கள் உள்ள ஒரு பெண்மணி எங்கள் குடும்பத்தின் சிங்கபெண்தான் சாந்தி பெரியம்மா. True Inspiration.

4. அம்மா - தனி கட்டுரைதான் வேண்டும். பொறுமை, நிதானம், துணிச்சல், விஷயங்களை கிரகித்து கொள்வது இவருக்கு நிகர் இவர் தான். சிறந்த ஆளுமை மிக்கவர்.

5. இவர் பேச்சு திறமையால் எதிராளியை யோசிக்க வைப்பவர். மனவலிமை, விடாமுயற்சி கொண்டு தன் மகனை IIT யில் சிறந்த ஒரு விஞ்ஞானியாக உருவாக்கியத்தில் பிரபா சித்தியின் பங்கு அரியது. 

இப்படி இந்த ஐவரில் நான் இன்றும் கற்று கொண்டு, வியந்து மெச்சிய பல விஷயங்கள் உள்ளன. இவர்கள் ஐவரை பார்த்தே வளந்தவள் நான். ஒவ்வொருவரிடமும் நெருக்கம் அதிகம். இவர்கள் ஐவரே என்றும் நான் கொண்டாடும் நாயகிகள் என்பதை இந்த மங்கையர் தினத்தில் மங்கையர் மலர் வாயிலாக எழுதுவதில் பெருமைபடுகிறேன்.

என் முதல் தங்கை!

-ராதா முரளி

நான் எப்படி எல்லாம் இருக்கணும்னும் இப்படியெல்லாம் இருக்க முடியலையேன்னும் ஆச்சிரியப்பட வைக்கின்ற பெண்.

எவ்வளவோ பேர் அந்தந்த கால சூழலில் ஆச்சிரியப்படுத்தியதுண்டு. ஆனால் இயல்பிலேயே எல்லாருக்கும் உதவியாய் இருப்பதும், அன்பாய் இருப்பதும், எந்த கஷ்டமாயிருந்தாலும் முகத்தில் காட்டாமல் இருப்பதும், புக்ககம் பிறந்தகம் இரண்டிலும் உள்ள வயதான பெரியவர்கள் மனம் நோகாமல்  நடப்பதும் இன்னும் இப்படி நிறைய.

நிதானம், பொறுமை, எந்த சூழலையும் எந்த வித விருப்பு வெறுப்பின்றி ஏற்பது இப்படி.

இதெல்லாம் வெறும் எழுத்துக்காக எழுதலை. அவளிடம் பழகிய எல்லோரும் உணர்ந்த உணர்வு.  எங்களுக்குப் பரிச்சியமானவர்கள் யாராக இருந்தாலும் ஏகோபித்து மேற்கண்டதை ஏற்பார்கள். 

இதுல என்ன இருக்குன்னு யோசித்தால் எதுவும் இல்லை.  இதில் தான்  எல்லாமும் இருக்கு என்பதை யோசித்தால் புரிஞ்சுக்க முடியும்.

மனசுலேருந்து ஆத்மார்த்தமா வந்த வார்த்தைகள். 

என் மகள் கோமதியின் பூப்புனித நீராட்டு விழாவின் போது
என் மகள் கோமதியின் பூப்புனித நீராட்டு விழாவின் போது

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!

-ஜானகி பரந்தாமன்

என் மனதில் என்றென்றும்  கோலோச்சிக்கொண்ணிடிருப்பவர் என்அம்மா அலமேலு தான். நேரமேலான்மையை அன்றே கற்றுக்கொடுத்தவர். "பரீட்சைக்கு  ஒரு மாதம்இருக்கும்மா" என்றால் "அப்படி சொல்லாதே. அதில் இரவு கொஞ்சம். அன்றாட வேலைகளுக்கு கொஞ்சம் என்று பாதி நாட்கள் போய் விடும்.  பதினைந்து நாள் தான் இருக்கு" என்று கணக்கிட்டு படிப்பதில் உற்சாகப்படுத்துவார். பரீட்சை என்றால் (ஆறு குழந்தைகள்) அம்மாவும் முழித்திருந்து நாங்கள் உற்சாகமாய் படிக்க, சூடாக குடிக்க, காபி, டீ என்று ஏதாவது கொடுத்துக்கொண்டே இருப்பாள். (இந்த நேரமேலான்மை நான் மகளுக்குச்சொல்லி வளர்க்க, இன்று அவள், அவள் பிள்ளைகளுக்குச் சொல்லிவருகிறாள்) குழந்தைகள் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.

என் அம்மாவிடத்தில் சோர்வு என்பது கிலோ என்ன விலை.

அந்த அளவுக்கு சுறு சுறுப்பாக இருப்பார் . 

பிள்ளைகளை வேலை செய்ய சொல்லவே மாட்டார். என் அண்ணி கேட்பார், "சும்மா தானே இருக்கா. அவளை (என்னை) வேலை செய்ய சொல்ல வேண்டியது தானே." அம்மா தரும் பதில் ஆச்சரியத்தையும் ஆனந்தகண்ணீரையும் வரவழைக்கும்.

"பரவாயில்லை. உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைச்சிட்டு போறேன். இந்த சக்தியை வெச்சிட்டு நான் என்ன செய்யப்போறேன்" என்பார். அன்றே பெண்ணை போற்றியவள் என் அம்மா. அதே சமயத்தில் திருமணம் செய்து போகும்போதும் அதற்குண்டான பொறுப்புணர்ச்சியையும் சொல்லி உணர்த்துவார்.

அம்மா இன்று இல்லை. இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என் அம்மா. அவளது போதனைகள் இன்றைய வளர்ப்பு முறைக்கும் உதவுகிறதே எங்களுக்கு.

எனக்கு இரண்டு அம்மா!

-சித்ரா கேகே, கோவை

நான் போற்றும் / பூஜிக்கும் ஒருவரை பற்றி….. இல்லையில்லை… இருவர் குறித்து….. எனக்கு இரண்டு அம்மா. என்னை பெற்றவள் புஷ்பா மற்றும் அவள் அக்கா அலமேலு. ‘திருக்கோவிலூர் சகோதரிகள்’ என்று அறியப்பட்டவர்கள். தங்கள் தந்தை சுப்ரமணிய தீக்ஷதரிடமே சங்கீதம் பயின்றவர்கள். பெண்களை வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள் பூட்டி வைத்த அந்த கால கட்டத்தில் தடைகளைஉடைத்தெறிந்து, ‘சகோதரிகள்’ என முதன் முதலில் இசை கச்சேரி செய்ய ஆரம்பித்தவர்கள். 1942 ம் ஆண்டிலிருந்து அகில இந்திய வானொலியில் (திருச்சி) பாட ஆரம்பித்தவர் திருமதி. அலமேலு. பிறகு என் அம்மா தன் அக்காவுடன் சேர, வானொலி மேடைக்கச்சேரி என ஏறுமுகம்தான்.

மாதத்தில் இருபது நாள் கச்சேரி. எங்கள் பாட்டி தாத்தா துணையுடன் நாட்டின் இண்டு இடுக்கெல்லாம் செல்வார்கள். தாத்தா தான் தம்புரா. பக்கவாத்யம் பெண்கள்தானாம். யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களோ என்ற பயம். அவர்கள் முன்னேற்றத்தோடு, அவர்களின் பெண்கள் ஆறு பேரையும் நன்றாக வளர்த்து, படிக்கவைத்து, வேலைக்கு அனுப்பி, அவர்களின் திருமணம் குழந்தைகள் என அனைத்திற்கும் ஈடுகொடுத்து சமுதாய அக்கறையோடு தங்களின் கடமையை நிறைவேற்றிய எங்கள் அன்பு அம்மாக்கள், உண்மையாகவே போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

நானே நாயகி !

-சேலம் சுபா

ராணிகள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய மனம் கவர்ந்த நாயகி என்றால் அது பெற்ற அன்னைதான் .அனைவருக்குமே அவரவர் அம்மா கண்டிப்பாக மனம் கவர்ந்த நாயகிதான் . நாம் பிறந்ததிலிருந்து நாம் வளர்ந்து எந்த வயதாக இருந்தாலும் தகுந்த ஆலோசனைகள் நமது  அனைத்து வெற்றிகளுக்கும் பின்னால் இருந்து நமக்கு அறிவூட்டி அனைத்தையும் நமக்கு கற்றுத் தரும் நமது தாய் தான் முதல் மனம் கவர்ந்தவராக இருக்க வேண்டும். அனைவருக்குமே அது பொதுவானது . 

ஆனால் என்னை பொருத்தவரை என் மனம் கவர்ந்த நாயகி என்றால் அது சாட்சாத் நானே தான். காரணங்கள் நிறைய இருக்கு. ஏனெனில் அழகில்லை படிப்பில்லை சுதந்திரம் இல்லை என்ற அத்தனை கட்டுகளையும் உடைத்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியால் தினம் தினம் எதையாவது புதிது புதிதாக கற்றுக்கொண்டு எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை ஏற்று அதிலிருந்து வெளிவந்து மற்றவர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக திகழும் நானே எனக்கு என் மனம் கவர்ந்த நாயகி.

40 வயதில் சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்றேன் பல பணிகளில் அனுபவம். அதன் பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தேன் சேனல் மார்க்கெட்டிங்கில். இப்படி பல துறைகளில் பலவற்றைக் கற்றுக் கொண்டாலும் என்னுடைய மனம் விரும்பிய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் எனும் இந்த பெருமையை அடைய நான் தந்த விலை இல்லையில்லை  நான் காட்டிய ஆர்வம் என்னை இந்த நிலையில் இப்போது கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

நாம் பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆனால் நாம் வாழ்வது நம்முடைய கையில் மட்டுமே இருக்கிறது. அடுத்தவர் நமக்காக எதையும் செய்ய மாட்டார்கள். எதையும் கற்றுத் தரவும் மாட்டார்கள். சுயமாக நாம் கற்று தெளிந்து நமக்கான அடையாளத்தை உருவாக்கினால் மட்டுமே  பெண்களுக்கான சுயமரியாதை இந்த சமூகத்தில் கிடைக்கும். இதை நன்கு உணர்ந்ததாலே இன்றும் நான் நானாகவே இருக்கிறேன். ஆகவே தான் என் மனம் கவர்ந்த நாயகி பிம்பத்தை காட்டும் கண்ணாடியில் சேலம் சுபாவாகிய நானே.

பி.கு  இந்த புகைப்படத்தில் இருக்கும் சுபாவாகிய நான் அதிகம்  சுடிதார் அணிந்ததில்லை. உடைக்கட்டுபாடும் உண்டு. ஆகவேதான் இந்தப்புகைபடம்.

அழகான சகோதரி!

-ஸ்ரீலட்சுமி கீர்த்திவாசன்

அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் !
நான் கொண்டாடும் நாயகி என்னுடைய நாத்தனார் ஷோபா. ஒரு நாளும் என்னை, வேற வீடு பெண்ணை போன்று பார்க்காமல் என்னை கூட பிறந்த தங்கையை போல பார்ப்பார். மிகவும் பொறுப்புள்ளவள்.

அவர் ஒரு அழகான மனைவி, அன்பான மகள், அக்கறையுள்ள மருமகள், கனிவான தாய் , மற்றும்  மேல சொல்லிக்கொண்டே போகலாம். நாங்கள் இருவரும் எந்த தடையும் இல்லாமல் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். அத்தகைய அழகான சகோதரியைப் பெற்றதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன், இந்த தருணத்தில் நன்றியும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

இரும்பு மனுஷி!

-ஆதி வெங்கட், ஸ்ரீரங்கம்.

நான் வியந்து பார்த்த பெண்மணி என் அம்மா சுந்தரி தான்! கண்டிப்புடன் எங்களை வளர்த்ததால் அம்மாவிடம் எப்போதும் பயம்! அவளை முழுதாக புரிந்து கொண்ட போது காற்றோடு கரைந்து விட்டாள்! வாழ்ந்த குறுகிய காலத்தில் தன்னால் இயன்ற அர்பணிப்பையும், தியாகத்தையும் எங்களுக்காக செய்திருக்கிறாள்!

'அவளுக்கு எப்படித்தான் அவ்வளவு தைரியம் இருக்குமோ'! என்று ஆச்சரியப்படுமளவு கடின உழைப்பாளி அவள்! எதற்கும் கலங்க மாட்டாள்! குடும்பத்தை முன்னேற்ற எத்தனையோ வேலைகளை செய்திருக்கிறாள்! முக்கியமாக அதில் எங்களையும் ஈடுபடுத்தி இருக்கிறாள்! அது பின்னாளில் எங்களுக்கு வாழ்வின் நெளிவு, சுளிவுகளை ஏற்றுக் கொள்ள பக்குவப்படுத்தியது!

உழைப்பு, சேமிப்பு, சமையல், ஆன்மீகம் என்று அம்மாவிடம் கற்றுக் கொண்டதையெல்லாம் இப்போது என் மகளுக்கும் கற்று கொடுக்கிறேன்.

இந்த மகளிர் தினத்தில் அம்மாவை நினைவு கூர்ந்து பெருமைபட்டுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. என் முகத்தில் தென்படும் மகிழ்வில் அம்மாவும் மகிழ்வாள்!

சிங்க பெண்மணி!

-முனைவர் மு.மணிமேகலை, இந்திரா காந்தி கல்லூரி, திருச்சி

நானிலம் போற்றும் எங்கள் தாய்.

பெற்றோரை பெருமைபட செய்தவர்.

“மாமியார் மெச்சிய மருமகள்.

மணாளனின் மனம் போல் நடப்பவர்.

உறவினர் புகழும் உயர்நங்கை.

ஊர் போற்றும் உன்னதப் பெண்மணி.

ஒற்றை மகவாய் அவர் உதித்திருந்தாலும்

மகவுகள் ஐவருக்கும் மகத்தானவர்.

ஒவ்வொருவரின் விருப்பம் போல்

உகந்தவாறு உணவளித்து

உள்ளம் உவகை கொள்பவர்.

இல்லற வாழ்கையில் இடர்பல இருந்தாலும்

இன்முகம் மாறாமல் இயல்பாய் இருப்பவர்.

இறுமாப்பு கொள்ளாதவர்.

கணவரின் காரியம் யாவினும் கைகுடுத்து

குழந்தைகள் கல்விகற்க அதிகாலை எழுந்து

உற்ற உதவிகள் புரிந்துஉலகை எதிர்நோக்க

உறுதுணை கொடுத்த நல்நங்கை .

உயர் பதவியில் மகன்களோடு மகள்களும்

ஓங்கி வளர்ந்திட ஓராயிரம் பணிகளை

இன்றுவரை புரிந்து வரும்

மண்ணின் மங்கை.

பேரன் பேத்திகளை பாதுகாப்பாய்

பேழையில் பொக்கிஷமாய் பேணிவரும்

சிங்கபெண்மணியும் அவரே.

தங்கமனையாளும் அவரே.

நரைகூடி முதுமை எய்தாலும்

நாள்தோறும் குடும்பத்தின் நலம் நாடும்

அவரே “நான் கொண்டாடும் நாயகி”.

சீதாலட்சுமி எனும் சக்தி!

-தேனா லட்சுமி, திருவாரூர்

நாயகி என்றாலே அவள் மிகப் பெரிய அழகியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.  வாழ்க்கைப் பாதையில்  ஏராளமான முட்கள் மேல் நடந்தும் சலிக்காமல் போராடி ஜெயித்து இயற்கையிலே அழகாக தெரிபவள்.
அப்படி ஒருவர்தான் நான் பார்த்த திருமதி.சீதாலட்சுமி அவர்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை 6 வது வகுப்புக்குள்ளே முடித்து விட்டு பாரம் சுமக்க ஆரம்பித்தார்.மெஸ் ஒன்றில் வேலை பார்க்க ஆரம்பித்து சிறிது சிறிதாக  வீட்டு வேலைகளுக்கும் போய் வந்தார்.

ஒரு பெண்ணுக்கு  15 வயதில் ஆயிரம் கனவுகள் வந்து போகும்.  எதிர்காலம்  என்னவென்றே தெரியாத சூழலில் இவருக்குள்ளே ஒரு  லட்சியம் உருவாகி வந்தது. 19 வயதில் திருமணம் நடந்தது.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு இவருக்கு மிகப்பெரிய   அதிர்ச்சி காத்திருந்தது.  கணவன் இவரை கைவிட்டு சென்று   விட்டான்.    கல்லை சுமந்து மண்ணை சுமந்து குழந்தைகளை வளர்க்க   ஆரம்பித்தார். அந்த காலத்தில் அவரது உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.  

1990 களில் அப்போது இருந்த அரசு  வங்கியின்  தஞ்சாவூர் கிளையில் பாத்ரூம்  மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை பார்த்தார்.  முகம் சுளிக்காமல் அதை செய்து வந்தார்.  அந்த பணியில் இருந்தவர்களை  பணி நிரந்தரம் செய்ய ஊழியர் சங்கம் முயற்சிகளை மேற்கொள்ள நிரந்தரம் செய்ய காத்திருப்போர் பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றது.

2008 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தஞ்சாவூர் முன்னோடி அரசு வங்கியில் நிரந்தர பகுதி நேர வேலை கிடைத்தது.  உறுதியான அவர் நம்பிக்கைக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு அது. 2016 ,2017 களில் அவருடைய இரண்டு மகன்களுக்கும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் செய்தார்.

வங்கியில் சிரித்த முகத்துடன் பணியாற்றி வாடிக்கையாளர்கள் சீதாம்மா...சீதாம்மா...என்று பாசத்தோடு அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார்.  கிளை மேலாளர்கள், அதிகாரிகள்,அனைவரின் நன்மதிப்பை பெற்றார்.  சாதாரண படிப்பு படித்திருந்தாலும் வங்கி நடைமுறை விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக் கொண்டுவிட்டார். கேஷியர் வேலை கொடுத்தாலும் அதையும், சிறப்பாக செய்து முடிப்பார்.  காலை 8-30 மணிக்கு பணிக்கு வந்து மாலை 6-00 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார்.வீட்டுக்கு அருகில் இருக்கும் சில பசு மாடுகளுக்கு கஞ்சி வாழைப்பழம் கொடுத்து அவைகளோடு நட்பாக இருப்பார்.

சக்தியை எங்கெங்கோ தேட வேண்டாம்.  நம் கண் முன்னே சில ஆதி பராசக்திகள் இருப்பார்கள். அவர்கள் அடுத்தவர்களுக்காகவே வாழ்வார்கள். அதில் பிரதானமானவர் இந்த சீதாலட்சுமி. 

இன்றும் என்றும் சிரித்தபடி பணியாற்றும் இவரை போற்றி எழுதுவது எனது எழுத்துக்கு கிடைத்த பெருமை.

அஷ்டாவதானி!

-ஆதிரை வேணுகோபால்

திருமதி பத்மா கண்ணன். பிரம்மா எழுதிய அழகிய கவிதை! அவர் வரைந்த அழகிய ஓவியம் நான்! அம்மா ஒரு அழகிய அகராதி எல்லா கேள்விகளுக்கும் அம்மாவிடம் பதில் கிடைக்கும். தன்னம்பிக்கை மிகுந்தவர். ஆம். அப்படியில்லையென்றால்  ஐந்து பெண்களை அப்பா ஒருவரின் சம்பாத்தியத்தில் எப்படி திருமணம் செய்து கொடுத்திருப்பார்?

அப்பாவுக்கு சுங்க வரிஇலாக்காபணி மாதத்தில் 20 நாட்கள் கேம்ப்.. அப்பொழுதெல்லாம் எங்களை பாதுகாக்கும் 'பாதுகாப்பு துறை' அமைச்சர்.. உறவுகளுக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை தன் பொறுமையால் 'சட்டத்துறை' அமைச்சராக இருந்து சரி செய்தவர். உடல்நிலை சரியில்லை என்றால் கை வைத்தியம் செய்தே 'மருத்துவத்துறை' அமைச்சராக இருந்து உடல்நலனைப் பேணியவர். கையைப் பிடித்து' அ', 'ஆ' சொல்லிக் கொடுத்த 'கல்வித்துறை' அமைச்சரும் அவரே! சுத்தமாக வீட்டை பராமரிப்பது எப்படி என்று வாழ்வியல் பாடம் எடுத்த 'சுகாதாரத்துறை' அமைச்சரும் அவரே! எந்த வேலையிலும் நேர்த்தியை கடைப்பிடிக்க கற்றுக் கொடுத்தவர்.  . கதை கவிதை கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். இறைவனோடு பேச கற்றுக் கொடுத்தவரும் அவரே! நட்சத்திரங்கள் போலில்லாமல் "நிலா" போல் ஒளிரக் கற்றுக் கொடுத்தவர் . மொத்தத்தில் அன்பை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபியான என் அம்மாஒரு"அஷ்டாவதானி".

புதுமுக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் ஆசிரியர்!

- வசந்தா கோவிந்தன், பெங்களூர்

என் நாப்பத்தைந்து வருட எழுத்துலகப் பயணத்தில், என்னை மிகவும் கவர்ந்தவர், தற்காலம் இணையத்தில் பெண்களுக்காகவே மட்டும் நடத்தப்படும் 'மாம்ஸ்ப்ரெஸ்ஸோ', என்ற தளத்தின் தமிழ் பகுதிக்கான ஆசிரியராக இருக்கும் திருமதி விநோதினி வன்னிராஜன் அவர்கள்!

விநோதினி வன்னிராஜனுடன் வசந்தா கோவிந்தன்
விநோதினி வன்னிராஜனுடன் வசந்தா கோவிந்தன்

அத்தளத்தில் அரசியல் பற்றி எழுதக்கூடாது, சாதி மதம் பற்றி எழுதக் கூடாது போன்ற பல விஷயங்கள் நடைமுறையில் உண்டு! பெண்களின் சமுதாய நன்மைகள், பெண்களின் நோய்கள் அதிலிருந்து மீண்டு வந்தவைகள் பற்றிய விவரங்கள், பெண்களின் சுய முன்னேற்றங்கள், பெண்களின் சிறுவயது நன்மைகள் தீமைகள், கல்வி, சிறு தொழில்கள் போன்ற பெண்களின் முன்னேற்றக் கட்டுரைகள், கதைகள், சிந்தனைகள், கவிதைகள் என்று பன்முகப் பதிவுகளை பெண் எழுத்தாளர்களால் எழுத வைப்பதும், புதுமுக எழுத்தாளர்களை உற்சாகத்துடன் வரவேற்பதிலும் ஆர்வம் காட்டும் திருமதி வினோதினி வன்னிராஜன் அவர்களே நான் கொண்டாடும் நாயகி!

தானும் முன்னேறி தன்னை சேர்ந்த பெண்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பன்முக வித்தகி!

- R.சசிசேகர், தருமபுரி

பார்த்தேன்! ரசித்தேன்! பக்கம் செல்ல துடித்தேன்! பேசினேன், போட்டோ எடுத்தேன். செல் எண் பரிமாறிப் பிரிந்தேன்!இப்படித்தான். சந்திப்பு நடந்தது. 3 வருடங்களுக்கு முன் என் மனம் கவர்ந்த நாயகியுடன் ஒரு விருது வழங்கும் விழாவில். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் அவரின் ஒவ்வொரு அவதாரம் கண்டு வியந்தேன்! மலைத்தேன்! 

அவர் பெயர் திருமதி பிரவீணாஅருண். இவர் எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், கின்னஸ் விருதுப்பெற்ற பாடகி, கவிதாயினி, கருத்தரங்க நடுவர். இசையரங்க ஒருங்கிணைப்பாளர். உலக ஆரிய வைஸ்ய மகிளா விபாக்கின் தமிழ்நாடு மாநிலத்தலைவி சத்தமில்லாமல் நித்தம் ஒரு சாதனை செய்து சான்றிதழ்களையும் விருதுகளையும் ஸ்டேட்டஸில் வைப்பதை கண்டேன்! வியந்தேன்! 

பிரவீணாஅருண்
பிரவீணாஅருண்

சாதனைப் பெண்மணியாக மிளிரும் இவருடனான தொலைப்பேசித் தொடர்பால் நானும் பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றேன்.

அவர் தந்த ஊக்கத்தால் கவியரங்கில் கவி பாடினேன். கட்டுரைப்போட்டியில் மாவட்டஅளவில் பரிசுப்பெற்றேன். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற அவரது Global Green 2G ப்ராஜெக்ட்-ல் இணைந்து நோபல் வேர்ல்டு ரெகார்ட் சான்றிதழும் பெற்றேன்.என் வழிகாட்டி அவரே என உணர்ந்தேன்.

சற்றே மனம் சோர்வடையும் நேரத்தில் அவரது பேச்சை யூ- டியூப் வாயிலாக கேட்பேன். பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுவேன். இத்தனை துறைகளில் முத்திரை படைக்கும் சமகால பன்முகவித்தகியின் நோக்கம் ஒன்றே தானும் முன்னேறி தன்னை சேர்ந்த பெண்களையும் முன்னேற்ற பாதையில் முத்திரை பதிக்க செய்வதே, இவர் நடத்தும் போட்டிகள் துவண்ட மனதிற்கு உற்சாகம் தருபவை. இவரது இசையரங்க நிகழ்ச்சிகள் மயிலிறகாய் மனதைத்தொடுபவை!

பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழும் நான் போற்றும் நாயகி பிரவீணா அருண் அவர்களுடன் சாதனைப்பயணத்தில் இணைந்தே பயணிப்பேன். மனம் உவந்தே பயணிப்பேன்.

சமூக சேவை செய்வதற்காகவே பிறந்தவர்

- வி.ரத்தினா, ஹைதராபாத்

அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த இந்திரா தான் நான் இன்றும் வியந்து பார்த்துக் கொண்டாடும் நாயகி. மிகவும் எளிமையானவர். சுறுசுறுப்பாக எப்போதும் ஏதோ ஒரு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டு பிறருக்கு உதவும் வகையில் செயல்பட்டு வரும் சமூக சேவகி.

இந்திரா
இந்திரா

அலுவலகத்தில் பணி புரிந்த போதே சம்பளத்தில் சிறு தொகையை தன் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதியை ஆதறவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு கொடுத்து விடுவார். பணி ௐய்வின் போது கிடைத்த பணத்தை வைத்து முதியோர்களுக்காக ஒரு முதியோர் இல்லம் கட்டி தனியே பராமரித்து வருகிறார். இவர் ஒரு சகலகலாவல்லி.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இந்த வயதிலும் இரவு நேரத்தில் கூட ௐட்டி வருவார். மிகவும் தைரியமான பெண்மணி. ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்தவத்தில் பயிற்சி பெற்றவர்.

பிறருக்கு ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் அளிக்கும் வழிகாட்டி. இப்போதும் பல்வேறு பணிகளுக்கிடையே அலுவலக உயர் பதவி தேர்வு எழுதுபவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

இந்த மகளிர் தினத்தில் நான் வியந்து பார்த்துக் கொண்டாடும் நாயகி இந்திரா தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

மாமியாரை மெச்சும் மருமகள்

- சௌமியா சதீஷ்

கோவிட் பெருந்தொற்று சமயம்... என்னுடைய அப்பா பிழைப்பாரா மாட்டாரா என்று தெரியாத நிலையில் கடவுளின் க்ருபையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேற மருத்துவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் எனக் கூற உடனே எங்கள் வீட்டில் (மாமியார் மாமனாருடன் கூட்டு குடும்பமாக இருக்கிறோம்) அப்பாவை பார்த்துக் கொள்ள சொல்லி தேவையான அனைத்து உதவிகளையும் செய்த என்னுடைய மாமியார் தான் நான் கொண்டாடும் நாயகி.

மாமியாருடன் சௌமியா சதீஷ்
மாமியாருடன் சௌமியா சதீஷ்

மாமியார் என்பது பேச்சுக்காகத்தானே தவிர உண்மையில் அவர் என்னுடைய இரண்டாம் தாய்...

என்னுடைய இரண்டாம் பிரசவத்தின் போது என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாது போகவே கூடவே இருந்து பத்தியம் போட்டது முதல் அனைத்தையும் அன்போடு பார்த்துப் பார்த்து செய்தவர்...

இதோ இப்போது என் தங்கைக்கு இரண்டாம் பிரசவம்... அதற்காக நான் உதவிக்கு அவளுடன் இருக்க அங்கே எனது இரு குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்...

ஒருவரின் இக்கட்டான சமயத்தில் அவர்கள் கேளாமலேயே சென்று தேவையான உதவிகளை செய்வது, எல்லோரிடமும் அன்பாக பழகுவது, முன்கூட்டியே திட்டமிடுவது என இவரின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா...

இரும்பு மனுஷி!

- சாந்தி மாரியப்பன்

பொன்னம்மா ஆச்சியுடன் நான்...
பொன்னம்மா ஆச்சியுடன் நான்...

ஆச்சி கடுமையான உழைப்பாளி, எனக்கு நினைவு தெரிந்தே முப்பது நாற்பது பசுக்கள், பத்து எருமைகள், அவைகளின் கன்றுக்குட்டிகள், இவை தவிர உழவு மாடுகள், வில்வண்டிக்கான காளைகள் என தொழுவும் முற்றமும் நிறைந்திருந்த காலம் அது. ஆயிரம்தான் உதவிக்கு ஆட்கள் இருந்தாலும், தானும் கூடவே வீட்டிலும் காட்டிலும் உழைத்தார். ஒரே ஒருத்தருக்கு பணிவிடை செய்வதற்கே மூக்கால் அழும் இந்தக்காலத்தில், மூன்று பெண்கள், அவர்களின் பிரசவங்கள், பேரக்குழந்தைகளின் நோக்காடுகள், பேத்திகளின் பிரசவங்கள் என அத்தனையையும் மன வலுவோடு சமாளித்தவர்.

உட்கார வைத்து சொல்லிக்கொடுத்ததில்லையே தவிர, அவரைப்பார்த்துக் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். சில சமயங்களில், இந்த விஷயத்தை ஆச்சி எப்படி சமாளித்திருப்பார் என யோசிக்கும்போதே அதற்கான தீர்வும் கிடைத்து விடும்.

எல்லா வித சூழலுக்கும் தன்னைப் பொருத்திக்கொண்டவர். தாயம், பல்லாங்குழி விளையாடுவதில் சமர்த்தர். அந்தக்காலத்து மனுஷி, வயதில் பெரியவர் அதனால் ரொம்பவும் பயந்துகொண்டு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஆச்சியிடம் கிடையாது. என் அம்மாவின் அம்மாவான பொன்னம்மாச்சி எல்லாவித சோதனைகளையும் எதிர்கொண்டு சமாளித்த ஒரு இரும்பு மனுஷி.

எளிமையாய், தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டியவர்!

- செ.கலைவாணி, மேட்டூர்அணை

நான் கொண்டாடும் நாயகி, என்  அம்மா தான். நகமும் சதையுமாய் ஆரோக்கியத்துடன் பெற்றெடுத்து ஒழுக்கத்துடன் வளர்த்து பூமிதனில் நடமாட வைத்தவர். ஐந்து பெண்களைப் பெற்றெடுத்து வளர்த்த மகராசி. ஊராரின் ஏச்சு,பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், எங்களைப் படிக்க வைத்து, எங்கள் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்து அத்திறமைகளை வெளிக் கொணர வைத்து, திட்டிய உறவுகள் முன் ஏற்றத்தோடு நிற்கவைத்துப் பெருமைப்பட்டவர்.

காலத்தை வீணாக்காது, அன்றன்று மகிழ்வாய் வாழ்ந்திட எங்களைப் பழக்கியவர். சிக்கனத்தோடு எளிமையாய், தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டியவர். பார்ப்போரையெல்லாம்  உறவு முறை வைத்து அழைத்திடப் பழக்கியவர்.

அம்மா, ஒரு எழுத்தாளர். கதை, கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியவர். ஆடை வடிவமைப்பாளர். குரோஷாவில் லேசு பின்னுவார். நன்றாக கோலம் போடுவார். அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றவர். எப்பொருளையும் வீணாக்க மாட்டார். சிறந்த சிந்தனையாளர். பேச்சாளர். அம்மா,ஒரு சகலகலா வல்லி.

அம்மாவின் அடியொற்றியே நான் வாழ்கிறேன். அம்மாவைப் பார்த்து வியந்த நான் எனக்குள் என் அம்மாவையேக் காண்கிறேன்.

நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தந்த பேராசிரியர்!

- பானு பெரியதம்பி, சேலம்

1975 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் வேதியியல் பாடம் படித்துக்கொண்டு இருந்தேன். இரண்டாம் வருடம் சசிரேகா என்ற பேராசிரியர் புதிதாக வந்து சேர்ந்தார். எங்களுடன் மிகவும் அன்போடும், நட்போடும் பழகுவார்.

ஒருநாள், செய்முறை வகுப்பில் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட சால்ட் என்னவென்று கண்டுபிடித்து , அவரிடம் கூறினேன். ஒரு நிமிடம் என்னைப் பார்த்துவிட்டு "தவறு" என்று கூறினார். அதன்பிறகு, " உன் மீது நிறைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வைத்துள்ளேன். கட்டாயம் நல்ல ரேங்க் வாங்கி டிஸ்டிங்சனுடன் பாஸ் செய்வாயென்று. ஆகவே கவனம் சிதறாமல் மீண்டும் என்ன சால்ட் என்று கண்டுபிடி" என்றார்கள்.

அந்த நிமிடம், எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை விளக்க முடியவில்லை. பேராசியர் என்பவர் நம்மை எப்படி கண்காணித்து, நம் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் என்று உணர்ந்த தருணம் அது. அதற்குப் பின், முழு கவனமும் படிப்பிலேயே செலுத்தி டிஸ்டிங்சனுடன் பட்டம் வாங்கினேன்.

எனக்கு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தந்த பேராசிரியர் சசிரேகா தான் நான் கொண்டாடும் நாயகி. அதன் பிறகு நான் ஆசிரியராக பணியாற்றிய போதும், அவர்களைப் போலவே மாணவர்களுக்கு ஆர்வத்தையும், தன்னம்பிக்கையை தருவதையும் கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது.

நான் கொண்டாடும் நாயகி 'அம்மா'

- ஆர்.ஸ்ரீப்ரியா

நான் கொண்டாடும் நாயகி என் அம்மா.

அம்மா மூன்றெழுத்து கவிதை நீ,

உயிரெழுத்தில் அ எடுத்து

மெய் எழுத்தில் ம் எடுத்து

உயிர்மெய் எழுத்தில் மா எடுத்து

வடித்த பொன்னெழுத்துக்கள் “அம்மா”

அன்னையின் அன்பிற்கு

இப்புவியில் இணையில்லை

தாய் என்ற ஒற்றை சொல்லே கவிதை

இப்புவியில் வேறெந்த கவிதையும்

இந்த சொல்லுக்கு இணை ஆகுமோ!!! 

அம்மா, அப்பா ஆசியை வாங்கும் முன், நான் ஆசி வாங்கும் ஜெயாம்மா!

- ஜி.கவிதா

நான் கொண்டாடும் நாயகி என்றால் அது என் பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஜெயகாந்தி மகாதேவன் என்றுதான் கூறுவேன். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அருகருகே இருந்தும் சாதாரணமாகவே பழகி வந்தோம். கொரோனா காலத்தில், வயதான தம்பதிகளாக தனித்திருந்ததால், அவர்களுக்கு அவ்வப்போது, கூட்டு, ரசம், குழம்பு என்று கொடுப்பதோடு, பால், மளிகை சாமான்களையும் வாங்கிக் கொடுப்பேன். அப்போது ஏற்பட்ட நெருக்கம், ஆன்ட்டியை 'அம்மா' என்று அழைக்கும் அளவு இறுகியது.

ஜெயகாந்தி மகாதேவனுடன் கவிதா
ஜெயகாந்தி மகாதேவனுடன் கவிதா

அவர்களை நான் சிங்கப்பெண் என்றும், ஜெயா என்றும் செல்லமா அழைப்பேன். ஜெயாவின் துணிவும், தன்னம்பிக்கையும், உழைப்பும் அசாத்தியமானது. மங்கையர் மலருக்கு எழுதுவதும் மாடித் தோட்டத்தைப் பராமரிப்பதும் இரண்டு கண் போன்றது அவங்களுக்கு. எப்பவும் இந்த இரண்டில் ஒன்றை செய்துகொண்டே இருப்பாங்க.

புத்தாண்டு, பிறந்தநாள், தீபாவளி போன்ற முக்கிய நாட்களிலெல்லாம், பத்து கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் என் அம்மா, அப்பா ஆசிர்வாதத்தைப் பெறும் முன், ஜெயாம்மாவை நமஸ்கரித்து ஆசி பெற்றுக்கொள்வேன்.

சூரசம்ஹாரம், சொர்க்கவாசல் திறப்பு போன்ற விஷேச நாட்களில் சேர்ந்து கோவிலுக்கு செல்வோம். அவரின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்ட நடுத்தர வயதுப் பெண்களே அவரின் நட்பு வட்டம்.

எங்கள் உறவு என்றென்றும் தொடரும்.

நான் கொண்டாடும் நாயகி!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

எனது தாய் எனக்கு ஒரு சகோதரி, நண்பி, வழிகாட்டி, என்னை எழுத்து துறையில் ஊக்குவித்தார், என எல்லாமே அவள் தான். நான் பள்ளியில் படிக்கும் போதே என் தாய் மங்கையர் மலர் வாசகி மட்டுமல்ல எழுதவும் செய்வாள். என்னை மங்கையர் மலர் படி முதலில் வாசகி ஆகு என என் கையில் புத்தகத்தை கொடுத்து விடுவார். எனக்கு எப்படி எழுத வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தார்.

என் தாய் மீனாட்சி பெயரில் மங்கையர் மலரில் நிறைய படைப்புகள் வரும். அதை பார்த்தவுடன் நாமும் எழுதி மங்கையர் மலரில் நிறைய வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

எனது தாய் அந்த கால பெண்ணாக இருந்தாலும் காலத்திற்கு தக்கவாறு மாற்றி இந்த கால பெண்களுக்கு தகுந்தவாறு செயல்படுவார்.

என்னை பொறுத்தவரை நான் கொண்டாடும் நாயகி என் தாயும் என் தாய் போல அரவணைக்கும் மங்கையர் மலரும் தான்.

தன்னால் கற்க முடியாததை, என்னை கற்கவைத்து அழகு பார்த்தவள்!

- ச. சத்தியபானு சென்னை

நான் எப்போதும் கொண்டாடும் ஒரு பெண் என்னுடைய தாய் புவனா. பதினாறு வயதில் கல்யாணம் செய்து தற்போது ஐம்பது வயதைத் தாண்டியும் கடுமையாக உழைக்கும் கரங்களோடு, நான் பலமுறை துவண்டு போன சமயங்களில்கூட என்னை துவளாமல் தாங்கி பிடித்தவள் எனது தாய். என்னை சுற்றிய அழகிய சூல் எனது தாய்.

தாயுடன் சத்தியபானு
தாயுடன் சத்தியபானு

வாழ்க்கையில் பல போராட்டங்களைத் தாண்டி தன்னம்பிக்கையோடு ஒளி விடும் தியாக சுடர். தன்னால் கற்க முடியாத படிப்பையெல்லாம் எனக்கு கொடுத்து என்னை ஒரு ஆசிரியராக்கி அழகு பார்த்தவள்.

எனக்கு தாயாக, தோழியாக, உடன் பிறந்தவளாக என்றைக்கும் என்னுடன் உறுதுணையாக இருப்பவள் எனது தாய்.

குடும்ப பாரத்தை சுமந்து இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறாள். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழ்பவர் தாயே. நாம் அனைவரும் தடுமாறி செல்லாமல் தாங்கி தாங்கிப் பிடிப்பதால் என்னவோ அவளுக்கு தாய் என பெயரிட்டரோ…

அனைவருக்கும் ஒவ்வொரு சாதனைப் பெண்மணிகளை பற்றி நன்றாக தெரியும். ஆனால் நம் வீட்டிலே இருக்கும் நம்முடைய சாயலான நம் தாய் நமக்கு முதல் நாயகி (சாதனைப்பெண்) என்பதை நினைத்து அனைத்து தோழிகளும் பெருமிதம் கொள்வோம் தோழிகளே…

எங்களுக்கெல்லாம் சேவை மனப்பான்மையை ஊட்டியவர்

- உமா மோகன் தாஸ், திண்டுக்கல்

நான் மிகவும் போற்றும் பெண்மணி திண்டுக்கல் சின்னாளப்பட்டி காந்தி கிராம மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் கௌசல்யா தேவி அவர்கள்தான்.

மகாத்மா காந்தி அவர்களை பின்பற்றி அவரைப் போலவே வாழ்ந்தவர். அவரின் எண்ணற்ற சேவைகளையும் மருத்துவத்தில் அவர் செய்த சாதனைகளையும் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய போது கூட நான் செய்தது ஒரு குழு சேவை தனியாக என்னால் பெற்றுக் கொள்ள முடியாது என்று மிகப் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்... இரவு ஒரு மணிக்கு அபலை பெண் யாரேனும் அவரைப் பார்க்க வந்தாலும்... அவர்களை உடனே கஸ்தூரிபா ஹாஸ்டலில் சேர்த்து இரண்டு நாட்கள் பூரண ஓய்வு தந்து பிறகு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உண்டாக்கி தந்தவர். திண்டுக்கல் சுற்றி எத்தனையோ பெண்களின் உயிரை காத்தவர் . எங்களுக்கெல்லாம் சேவை மனப்பான்மையை ஊட்டிய டாக்டர் கௌசல்யா தேவி அவர்களை தவிர வேறு யாரை... நான் விரும்பும் நாயகியாக என்னால் சொல்லிவிட முடியும்.

80 வயதிலும், பாடம் சொல்லிக் கொடுக்க பள்ளிக்கூடம் செல்லும் பெண்!

- உஷாமுத்துராமன், திருநகர்

சங்கர ராமகிருஷ்ணன் - இவர் எங்களின் உறவினர். 80 வயதாகும் இவர் இன்றும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

இந்த வயதிலும் சமஸ்கிரதம் படித்து அதில் பட்டப்படிப்பு முடித்து பலவித பரிசுகளை வாங்கி இருக்கிறார். பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

சங்கர ராமகிருஷ்ணனுடன் உஷாமுத்துராமன்
சங்கர ராமகிருஷ்ணனுடன் உஷாமுத்துராமன்

மதுரைக்கு வந்து அவர் டாக்டர் பட்டம் பெறுவதற்கு எங்கள் வீட்டில் தங்கும் போது அவளுடைய உற்சாகத்தை பார்த்து நான் மகிழ்வேன். வயது என்பது வெறும் எண்களே அன்று அவரைப் பார்க்கும் போது எனக்கு புரியும். இன்றும் பணிபுரிந்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டுவேன். ஆசிரியை பணிக்கு ஓய்வே கிடையாது என்று நினைக்கத் தோன்றும்.

அவர் பள்ளியில் நீங்கள் "இந்த வேலையை விட்டு போக வேண்டாம்" என்று கேட்டுக் கொள்வதாக அவர் சொல்லும்போது பெருமையாக இருக்கும்.

இந்த வயதிலும் அவர், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க பள்ளிக்கூடம் செல்வது உண்மையிலேயே பாராட்டத் தோன்றும்.

முதல் கண்மணியாகப் போற்றுகிறேன்!

- மல்லிகா ஜோதிநாத்

முதல் கண்மணியாகப் போற்றும் பெண்மணி என் தாய் தான். தாய் மட்டும் தான். அவள் ஐந்து வகுப்பு படித்து விட்டு கையில் ஹிந்து பத்திரிக்கையை வைத்துக் கொண்டு bat, cat என்று எழுத்துக்கூட்டி படிப்பது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தாயுடன் மல்லிகா ஜோதிநாத்
தாயுடன் மல்லிகா ஜோதிநாத்

தன் பெண்கள் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று எங்கள் மூவரையும் படிக்க வைத்து எல்லாவற்றிலும் ஆய கலைகள் அறுபத்து நான்கும் இல்லையென்றாலும் ஏதோ முக்கிய கலைகளை கற்றுக் கொடுத்து எங்களுக்கு தன்னம்பிக்கை என்ற மூன்றாவது கையைக் கொடுத்த என் தாயை நினைவு கொள்வதில் பெருமையாக எண்ணுகின்றேன்.

ஆறு வயதிலேயே என்னை நானே பார்த்துக் கொள்ள பழக்கி விட்டவள் அவள்தான்!

- மீனா ஆனந்த், மயிலாப்பூர்

நான் என்றென்றும் கொண்டாடும் நாயகி, என் அம்மா தான். அம்மா என்றாலே அன்பு, அக்கறை, கண்டிப்பு etc... இப்படி சொல்லிட்டே போகலாம். என் அம்மா சற்று வித்யாசமானவள். வேலைக்கு செல்வதால், என் ஆறு வயது முதலே, நான் பள்ளி முடிந்து வீடு வந்து, பிறர் உதவியின்றி என்னை நானே பார்த்துக் கொள்ள பழக்கி விட்டாள்.

அம்மா இருக்கற இடத்துல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்க கற்றுக் கொடுத்தாள். கோயில் சென்றால், தான், தன் குடும்பம் என்று மட்டுமில்லாமல், எல்லார்க்காகவும் வேண்டி கொள்வாள்.

கேன்சர் சிகிச்சையின் போது கூட, என் அம்மா புலம்பி நான் பார்த்ததே இல்லை. நான் வருத்தப்பட்டு அழுதால் கூட எனக்கு தைரியம் சொல்வாள்.

மனதில் ஏதோ சஞ்சலம், கஷ்டம் என்றால், அம்மாவைத் தான் நினைத்து கொள்வேன். நம்பிக்கையும், உற்சாகமும் தானாக வந்து விடும்.

இனிய தோழி தரணி!

- ஸ்ரீவித்யா

மாநிறம். நெல்மணி போல கோர்க்கப்பட்ட பற்கள். நீள்வட்ட முகம். யார் இவள் என்று உற்று நோக்க வைத்த ஆங்கில உச்சரிப்பு. ஆழமான இயற்பியல் அறிவு. வீட்டுக்கு நல்லவள். இரு பெண் தேவதைகளைப் பெற்றவள். பல இன்னல்களை சந்தித்தவள். எனினும் மனம் தளராதவள். நெஞ்சழுத்தக்காரி!

என் வாழ்வின் பல சவாலான சந்தர்ப்பங்களில், தோளுக்கு தோள் கொடுத்து, ஊக்கம் சொல்லி; என்னை என் தடத்தில் ஓட வைப்பவள். என் மீதும், என் திறமை மீதும், அபாரமான நம்பிக்கை கொண்டவள். ஆறுதல் கூறுவதில் தாயை மிஞ்சிய அவளை, மிகப்பெரிய வரமாக கருதுகிறேன்.

பணியகத்தில் எனக்குப் போட்டி என நினைத்தேன்; ஆனால் என் உயிர்த் தோழியாக வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிப்பாள் என்று கனவிலும் நினைத்ததில்லை.

நான் கொண்டாடும் நாயகி – என்றென்றும் நான் மெச்சும் என் இனிய தோழி தரணி!

கலைகள் மூலம் என்னுடன் இருக்கும் அம்மா!

- எஸ். நித்யாலக்ஷ்மி, கும்பகோணம்

நான் 8ம் வகுப்பு படிக்கும் போது என் அப்பா இறந்து விட்டார். அதன் பிறகு எங்கள் மூவரையும் தனிப் பெண்ணாக நின்று வளர்த்தவர் என் அம்மா வசந்தி.

எந்த விஷயமாக இருந்தாலும் இது தெரியாது, அது தெரியாதென்று சொல்லக்கூடாது என அடிக்கடி சொல்பவர். எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். உன்னுடைய திறமையை யாருக்காகவும் விட்டு விடக்கூடாது. அது உன்னை உயர வைக்கும். உன்னால் முடியும் என்று முதலில் நீ நம்ப வேண்டும் என எப்போதும் உயர்வை பற்றியே பேசக்கூடியவர்.

அம்மாவுடன் நித்யாலக்ஷ்மி
அம்மாவுடன் நித்யாலக்ஷ்மி

என்னுள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர் என் அம்மா. இன்று நான் ஓவியத்தில் மதுபானி மற்றும் மண்டலா வரைகிறேன். அதுமட்டுமின்றி கைவினை மற்றும் சமையலிலும் பல பரிசுகளையும் பெற்று வருகிறேன்.

இன்று அம்மா என்னுடன் இல்லாவிட்டாலும், என் கலைகள் மூலம் என்னுடன் இருக்கிறார். அம்மா வசந்திதான் எனக்கு முன்மாதிரி. என்னைக் கவர்ந்த பெண்ணும் அம்மா வசந்தி தான்.

என் வாழ்க்கையின் ரோல் மாடல் அவர்!

- நளினி சுந்தர், பள்ளிக்கரணை

என் மரியாதைக்குரிய, அம்மா சௌந்திரவல்லி, என் வாழ்க்கையில், முன்மாதிரியான, சிறப்பான, சூப்பரான பெண். நான் ஏன் இதை இங்கே சொல்கிறேன் என்றால், அவள் ஒரு புத்திசாலியான, வலுவான விருப்ப சக்தி, நேர்மறை விஷயங்கள் என எல்லா ஆற்றலைக் கொண்ட அன்பான பெண்.

அம்மா சௌந்திரவல்லியுடன் நளினி சுந்தர்
அம்மா சௌந்திரவல்லியுடன் நளினி சுந்தர்

என் அம்மாவின் வயது 82. இன்றும் சுறுசுறுப்பாக இருப்பார். என் அம்மா அரசாங்க வேலையில் இருந்துக்கொண்டு வீட்டையும் எங்களையும் பார்த்துக்கொண்ட தைரியமான பெண். என் வாழ்க்கையின் ரோல் மாடல் என் அம்மா. சமையலில் ஒரு நளபாக சக்கரவர்த்தினி. என் தாய் எனக்கு ஒரு பொக்கிஷம்.

என் அம்மாவிடம் நான் எவ்வளவோ கற்றுக்கொண்டாலும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஏராளமான உள்ளது.

இந்த மகளிர் தினத்தில் நான் கொண்டாடும் நாயகி என் அம்மா.

பொறுமை எனும் அணிகலனால் என்னை மேம்படுத்தியவர்!

- நளினி ஜி ரவி, திருச்சி

மகளிர் தினம் என்றவுடன் என் நினைவுக்கு வருபவள்...

நான் கொண்டாடும் நாயகி தன் மூச்சை அடக்கி என்னை ஈன்றெடுத்த என் அன்பு தாய் தான்.

அவளின் பொறுமை எனும் அணிகலனால் என்னை மேம்படுத்திய தெய்வம் அவள். அவ்வப்போது நல்வழிப்படுத்த என் பாதைகளை செப்பணிட்டு தந்த போது, நான் தொய்வு அடையும் தருணத்தில், என்னை ஊக்குவிக்கும் வகையாக அவள் செய்யும் செயல்களை கண்டு நான் வியந்த தருணங்களில், தோள் கொடுத்த அன்பு தோழியாக என்றென்றும் மெச்சி போற்றப்படும் என் இதய தெய்வம் இவ்வுலகில் என் தாய் மட்டுமே.

தாய் ஒருத்தியே தன் பன்முகங்களால் என்னை கவர்ந்த அன்பு தெய்வம்.

அன்றும் இன்றும் என்றும் அவர்தான்!

- லக்ஷ்மி வாசன், மேற்கு மாம்பலம்

ஒரு சிறிய நூல்கண்டு கூட இல்லாமல் தான் எழுதிய நூல்களால் வாசிப்பவர்களைக் கட்டிப்போட்டவர்! தன் சிறிய புதினத்தையும் தகவல் களஞ்சியமாக்கியவர்! பெண்ணியம் பேசாமலேயே பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி காட்டியவர்! சுய அலசல் என்னும் மாபெரும் உளவியல் பயிற்சிக்கு வித்திட்டவர்! சமூக நலத்தில் அக்கறை கொண்டு, தன் ஒவ்வொரு படைப்பிலும் சீர்திருத்தத்திற்கு அடிகோலியவர்! கல்லூரி நாட்களிலேயே என் ஆதர்சப் பெண்மணி அவர்தாம்!

அவருடைய ஊடகப் பேட்டிகளும் படைப்புகளும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து தம்மை செதுக்கிக் கொள்ள உதவியதை கண்கூடாகக் கண்டவள் நான்.

அவர்தான் எழுத்தாளர் சிவசங்கரி.

எழுத்தாளர் சிவசங்கரியுடன் லக்ஷ்மி வாசன்
எழுத்தாளர் சிவசங்கரியுடன் லக்ஷ்மி வாசன்

அவர் மேற்கொண்ட பொதுநல சேவைகளும் ஏராளம்.

உதாரணமாக, சென்னை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் துவக்கி ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவம் கிடைக்கச் செய்ததில் அவருடைய பங்கு அபாரம். மொத்தத்தில் அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

அன்றும் இன்றும் என்றும் நான் கொண்டாடும் நாயகி எழுத்தாளர் சிவசங்கரிதான்!

சீதாலட்சுமி அம்மா
சீதாலட்சுமி அம்மா

எல்லாவற்றிற்கும் குருவானவர்!

- வி. கலைமதிசிவகுரு, நாகர்கோவில்

என்னைக் கவர்ந்த, மேன்மை படுத்திய, ஊக்குவித்த, நான் மெச்சிப் போற்றும் பெண்மணி திருமதி. சீதாலட்சுமி அம்மா. இவர்களுக்கு இப்போது 82 வயது இருக்கும். 25 வருடத்திற்கு முன்பு எனக்கு அறிமுகமானார்.

சைமன் நகர் ஊரில் அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம். அந்த வீட்டிற்கு சென்ற அன்றே அவர்கள் என்னோடு அன்பாகப் பேசுவது, அவர்கள் முகத்தைப் பார்த்தாலே லெட்சுமி தேவியை பார்த்தது போன்ற ஒரு கவர்ச்சி, அவர்களிடம் பேசினாலே என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும்.

எனக்கு ஒரு ஆசிரியையாக (குருவாக) இருந்து உல்லன் நூலில் பலவகையான கைத்தொழில்கள் கற்றுத்தந்தவர். என்னை தியானத்திற்கு அழைத்து சென்று படிப்படியாக உயர்த்தியதோடு, பல கோயில்களுக்கு அழைத்து சென்று என்னுள் ஆன்மீக சிந்தனையை வரவழைத்தவர். விரதமுறைகளை முறைப்படி கடைப்பிடிப்பவர்.

நான் துணி வியாபாரம் செய்யும் போது ஊக்க வார்த்தைகளை பேசி, என்னைத் தொழிலிலும் ஊக்குவித்த 'இன்னொரு தாயாகவே' இருப்பவர்.

தற்போதும் என்னை, துணிகளை கொண்டு pouch, பலவகையான Travel bag, purse, Mat என எல்லாம் தைக்க வைத்து தையல் கலையிலும் உற்சாகம் ஊட்டியவர். நாங்கள் சொந்த வீடு கட்டி வேறு இடத்திற்கு சென்ற பின்னும் பல உதவிகளை செய்பவர். Phone பண்ணி அடிக்கடி பேசி கொள்வோம். என்னால் என்றும் மறக்க முடியாத ஒரு தெய்வப்பிறவி திருமதி. சீதாலட்சுமி அம்மா. இவரே 'நான் கொண்டாடும் நாயகி'.

தொண்ணூற்று மூன்று வயதிலும் கண்தெரியாது குடும்பத்தை ஆண்ட பாட்டிம்மா!

- மாலா மாதவன்

சென்னை எக்மோர் சில்ரன்ஸ் ஹாஸ்பிடல்...

இரட்டையில் ஒன்று காய்ச்சலோடு தாயிடம் இருக்கப் பிழைக்குமா என்ற நிலையில் இன்னொரு குழந்தை ஆஸ்பத்திரியில்!

ரொம்ப அவசரமா இந்த மருந்து வேணும்மா என டாக்டர் சொன்னதும் நோயில் கிடந்த பேத்தியையும் கையோடு தூக்கிக் கொண்டதும் குழந்தையை விட்டுட்டுப் போங்க என நர்ஸம்மா சொன்னாராம்.

"ம்ஹும்.. எம் பேத்திய யாரும் தூக்கிண்டு போய்ட்டா?" மறுத்திருக்கிறார்.

ஒற்றைக் கண் பூவிழுந்ததால் இருந்த ஒரு கண் பார்வையுடன் பேத்தியை இடுப்பிலிருத்தி பஸ் ஏறி ஒற்றை ஆளாய் மருந்துக்கு அலைந்து திரிந்து காப்பாற்றியவர்.

பாட்டிம்மாவுடன்...
பாட்டிம்மாவுடன்...

பஞ்ச காலத்தில் அரிசிச் சோறூட்டி அம்மையாய் வயிறு நிறைத்தவர்.

போகப் போக புறக்கண் விட்டு அகக்கண்ணால் மட்டுமே பேத்தியைக் கண்டவர்.

குடும்பம் என்ற தேரை தொண்ணூற்று மூன்று வயது வரை கண்தெரியாது கணக்குடன் குடும்பத்தை ஆண்டவர்.

என் அம்மாவின் அம்மாவான பாட்டிம்மா திருமாமகள் நான் கொண்டாடும் நாயகி.

ஜான்சி ராணிகளுக்கு சமம்!

- கிருஷ்ணவேணி

நான் மனதளவில் இன்றும் கொண்டாடும், போற்றி வணங்கும் பெண்மணி மதுரைக்கு பெயர் போன மீனாட்சி என்ற பெயரைக் கொண்ட என் அம்மா தான். அன்பின் ஊற்றாய், எதற்கும் கலங்காத மன உறுதி மிக்கவளாய், கடவுள் நம்பிக்கை மிகுந்த, மேன்மையான குணங்கள் பல இயல்பாக கொண்ட பெண்மணி இவள்.

இவளை 'இரும்பு மனுஷி' என்றே சொல்லலாம். என் அப்பா கஸ்டம்ஸில் ஆடிட்டில் இருந்ததால் பாதி நாட்கள் ஊரில் இருக்க மாட்டார்.

அம்மாவுடன் கிருஷ்ணவேணி
அம்மாவுடன் கிருஷ்ணவேணி

எங்கள் குடும்பம் பெரிது. நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என எட்டு பிள்ளைகள். தனி ஆளாக வீட்டு பொறுப்புகளை சுமந்து திறம்பட நிர்வகித்தது, வங்கிக்கு செல்வது, கணக்கு வழக்குகளை பார்ப்பதுடன் நில்லாமல் எங்கள் அனைவரையும் நல்ல பிரஜைகளாக உருவாக்கி படிப்பு, அந்தஸ்தை கொடுத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து முடித்து திறம்பட இயங்கியவள் என் அம்மா. இவளைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இவள் எத்தனையோ ஜான்சி ராணிகளுக்கு சமம். நான் போற்றி வணங்கும் என் அம்மாவை இத் தருணத்தில் நினைவு கூற வைத்த உங்களுக்கு நன்றிகள் பல.

சேமிப்பின் அவசியத்தை தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு உணர்த்தியவர்!

- தி.வள்ளி, திருநெல்வேலி.

என் இதயக் கோவிலில் இன்றும் குடி கொண்டிருக்கும் தெய்வம் என் அம்மா திருமதி. வேலம்மாள். அவர்தான் நான் கொண்டாடும் நாயகி. அம்மா என்ற ஸ்தானத்திற்காக சொல்லவில்லை. அவள் ஓர் அற்புத பெண்மணி.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் என பல நல்ல பண்புகளை என்னுள் விதைத்தவள்...

எனக்கு அவளிடம் பிடித்தது... நான் இன்றும் நினைத்து வியக்கும் ஒரு விஷயம் எதுவென்றால், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் கலங்கி நிற்க மாட்டாள்.

பிரச்சனைக்குரிய நேர்மறை தீர்வை யோசிப்பாள். 'இதுவும் கடந்து போகும்' என்ற பாணியில் இருக்கும் அவளுடைய தீர்வுகள்.

வேலம்மாள்
வேலம்மாள்

சிறுவயதிலிருந்தே இந்தப் பண்பை பார்த்து வளர்ந்ததால்தான் இன்றும் பிரச்சனைகளை கண்டு அஞ்சாமல் அதை கையாள எனக்கு தெரிகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

அதேபோல சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியவள் அவள்தான். தன்னிடம் யார் வேலை பார்த்தாலும் முதலில் ஒரு தபால் நிலையத்தில் சேவிங்ஸ் கணக்கை ஆரம்பித்துக் கொடுப்பாள். அவர்கள் வரவின் ஒரு பகுதியை கண்டிப்பாக மாதா மாதம் போடச் சொல்லுவாள். இதனால் அவர்கள் அடைந்த நன்மைகள் பல. அதை அவர்களே என்னிடம் கூறியதுண்டு.

சிக்கனத்தை வலியுறுத்துவாள். வீண் விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எப்போதும் சொல்வாள். அன்று சொல்லியதை நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

அரிய நற்பண்புகளின் பிறப்பிடமாய் திகழ்ந்த அவள் இன்று இல்லை என்றாலும்... அவள் நினைவு என் மனதில் என்றும் நீங்காமல் இருக்கிறது.

28 வருட போராட்டத்திலும், துவண்டு போகாமல் அனைத்திலும் சிறந்து விளங்கியவர்!

- ஆர். பிருந்தா இரமணி, மதுரை

என் அம்மா (திருமதி. ஞானாம்பாள்) தான் என்னை ஊக்குவித்த பெண்மணி. அவரிடம் இருந்துதான் நான் தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், துன்பம் வந்தால் துவண்டு போகாமல் இருத்தல், பிறருக்கு உதவி செய்தல், பிறரைப் பழி கூறாமல் இருத்தல் போன்ற பல நல்ல பண்புகளைக் கற்றுக் கொண்டேன்.

இப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர் தொண்டையில் புற்றுநோய் வந்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் அவதிப்பட்டார். அப்படி அவதிப்பட்ட போதும் ஒருநாள்கூட அவர் வாயில் இருந்து, எனக்குச் சீக்கிரம் சாவு வந்தால் நல்லா இருக்குமே என்ற வார்த்தை வந்தது கிடையாது.

1980-களில் டாக்டரை அணுகியபோது, இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். அப்படி இருந்தும் பூஜை, புனஸ்காரம் எதையும் விடமாட்டார். இதோடு வானொலி கேட்டு, அதில் சொல்லும் நல்ல கருத்துக்களை நான் அங்கு போகும் போது சொல்லுவார். பத்திரிகைகள் படிப்பார்.

அம்மாவுடன் பிருந்தா இரமணி
அம்மாவுடன் பிருந்தா இரமணி

இன்னொன்று அவர் அருமையாகச் சமையல் செய்வார். அளவுப் பாத்திரம் எல்லாம் ஒன்றும் பயன்படுத்த மாட்டார். எல்லாம் கையளவு, கண் அளவு தான்.

நான் உள்ளூரில் இருந்ததால், ஏதேனும் புதிதாகச் சமையல் செய்தால் அதைக் கொண்டு போய்க் கொடுத்து டேஸ்ட் பார்க்கச் சொல்லுவேன். சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, எடுத்தவுடன் குறை சொல்ல மாட்டார். பிறகு இதில் கொஞ்சம் உப்பு குறைத்துப் போட்டால் நன்றாக இருக்கும்; இது இன்னும் கொஞ்சம் வெந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியே என்னை mould செய்தார்.

அடுத்துப் பத்திரிகைகளில் சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். இப்போது, சமையல் சார்ந்த YouTube channelம் ஆரம்பித்து போட்டுக் கொண்டு வருகிறேன். இதற்கு மூல காரணமாக விளங்கும் என் அம்மாவிற்கு இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

'மனசுக்குப் பிடித்த மல்லிகா'

- என்.கோமதி, நெல்லை

நாம் கொண்டாடும் நாயகி செலிபிரிட்டியாக இருக்க வேண்டியதில்லையே... என்னைக் கவர்ந்து, ஊக்குவிக்கும் நாயகி மாதர் சங்க சகோதரி மல்லிகா தான்.

முப்பது வயதில் கணவர் விபத்தில் இறந்து விட, விரைவில் யதார்த்தம் புரிந்து, இழப்பிலிருந்து வெளியேறி M.A, M.Phil, Phd முடித்து, ஆங்கிலப் பேராசிரியையாக பணியில் சேர்ந்து, பின் கல்லூரி முதல்வர் பணியிலும் திறமையை காட்டினார். அவரின் உழைப்பு, முயற்சி முக்கியம் என்றது.

வாரம் ஒருநாள், இல்லத்தரசிகளுக்கு ஒரு மணி நேரம் பொறுமையாக ஆங்கில வகுப்பு எடுத்தார். பயின்றவர்களில் பலருக்கு தனியாக அயல்நாடு செல்லும் போது, ஏர் போர்ட்டில் கை கொடுத்தது.

படத்தில் இடமிருந்து வலம் இரண்டாவது ஆரஞ்சு  கலர் புடவையில் மல்லிகா.
படத்தில் இடமிருந்து வலம் இரண்டாவது ஆரஞ்சு கலர் புடவையில் மல்லிகா.

வாழ்க்கையில் தோல்விகளும், பிரச்னைகளும் சகஜமே என்று சொல்லி, தடைகளை எதிர்பார்த்தே முயற்சி செய்யுங்கள். சமாளிக்கும் சக்தி தானாக வரும் என்று ஊக்குவிப்பார். சங்கத்தில், நாங்கள் தயங்கும் விஷயங்களை, முடித்து, எங்கள் விழிகளை விரியச் செய்யும், மல்லிகா தான் என் மனம் கவர்ந்த நாயகி.

ஆங்கிலத்தில் பேச பயந்த எங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, பேச வைத்து ஆண்டு விழாவில் ஆங்கில நாடகத்தில் நடிக்க வைத்த மல்லிகாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

அம்மாவிடம் கற்றதைவிட இவளிடம் கற்றுக்கொண்டது ஏராளம்!

- ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

நான் கொண்டாடிக் குதூகலிக்கும் நாயகி என்றால் அது என் தோழி விசாலாட்சி நடராஜன் என்பேன். 1974ல், என் உடன் பணிபுரிந்த அவளின் தங்கை மூலம் அவளை நான் சந்தித்தேன். அறிமுகமான நாளிலிருந்தே, அவளின் அழகு, சுறுசுறுப்பு, அன்பு, அனைவருக்கும் உதவும் பண்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு நட்புடன் பழகலானேன்.

அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களை அவள் வளர்த்த முறையைப் பின்பற்றியே நான் என் மகன் கார்த்திக்கை வளர்த்தேன். பள்ளிப்பருவத்தில் அவளின் இரண்டாவது மகள், பத்மா சுப்ரமணியத்திடம் பரதநாட்டியம் கற்று வந்தாள்.

கார்த்திக், தனஞ்சயன் சாரிடம் ஏழு ஆண்டுகள் பரதம் பயின்றான். எங்களிருவரின் பிள்ளைகளும் இப்போது NRI.

குழந்தை வளர்ப்பில் என் அம்மாவிடம் கற்றதைவிட இவளிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.

ஜெயகாந்தி மகாதேவன் மற்றும் விசாலாட்சி நடராஜன்
ஜெயகாந்தி மகாதேவன் மற்றும் விசாலாட்சி நடராஜன்

உறவுகள் அனைவரையும் அன்பால் அரவணைத்து ஆளுமை செய்வதிலும், நலிந்தவர்க்கு உதவிசெய்து உயர்த்தி விடுவதிலும் அவளுக்கு நிகர் அவளேதான். நோன்புக் காலங்களில் என்னைத் தவறாமல் அழைத்து, கையில் நோன்புக் கயிறு கட்டிவிட்டு, விருந்தும் பரிசும் தருவாள்.

05.03.2023, ஞாயிறன்று எழுத்தாளர் ராஜேஷ்குமார் சாருடன் கலந்துரையாடலை முடித்த மறுநாள்... கோயம்பத்தூரில் சீனியர் சிட்டிசன் இல்லத்தில் கணவருடன் வசித்து வரும் விசாலாட்சியை காணச்சென்றோம். அதே அன்புடன் ஆரத்தழுவினாள். ரெண்டு மணிநேரம் கதைத்தோம். மெஸ்ஸில் லஞ்ச் சாப்பிட்டோம். புடவை உள்பட தாய் வீட்டு சீதனம் போல் தட்டு நிறைய பரிசுகள் வழங்கினாள்.

பிரிய மனமின்றி பிரிந்து வந்தோம்.

ஜெயா சம்பத் மற்றும் சுகந்தா
ஜெயா சம்பத் மற்றும் சுகந்தா

'தாயுமானவர்...'

- ஜெயா சம்பத், கொரட்டூர்

மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள் நானும் என்னோட மூத்த அண்ணாவின் மனைவி, அதாவது எனது மன்னியும். இவரோட பெயர் சுகந்தா. (பிரவுன் கலர் புடவை அணிந்து கொண்டிருப்பவர்.)

எனக்குக் குழந்தை பிறந்த சமயம், பத்தியச் சாப்பாடு, பிரசவ லேகியம் என்று வேளை தவறாமல் கொடுத்து, என்னையும் குழந்தையையும் நன்கு அன்புடன் கவனித்துக் கொண்டார். நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டி, என்னை ஊக்குவிப்பவர் இவர் தான். என் அம்மா இறந்து போய் 23 வருடங்கள் முடிந்து விட்டன. அம்மாவிற்குப் பிறகு, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து... கவனித்துக் கொள்பவர் இவர் தான்.

எனக்கு என்ன கஷ்டம் அல்லது மனக்கவலை என்றாலும், இவரிடம் தான் பகிர்ந்து கொள்வேன். உடனே ஆறுதல் சொல்லி அதற்கான தீர்வையும் கூறி விடுவார். இன்று வரை நவராத்திரி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் என்னை வீட்டுக்கு வரச் சொல்லி, வெற்றிலை, பாக்கு, பழம், புடவை, ரவிக்கைத் துணி என்று வைத்து மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் தருவதற்குத் தவறியதே இல்லை.

மிகவும் நன்றாகச் சமைக்கவும் செய்வார். சிறுதானியங்களை வைத்து புதுசு புதுசாக ஏதாவது ரெசிபிகள் செய்வதில் வல்லுநர். மகளிர் தினத்தன்று என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய 'நான் கொண்டாடும் நாயகி' இவர் தான். இவரை உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கணவருக்கு அடி பணிந்து வெற்றி காணும் அபூர்வமான பெண்மணி!

- ஆதிரைவேணுகோபால்

என் மதிப்பிற்குரிய அத்தை. கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட். தனக்கென்று தனிப்பட்ட ஆசைகள் எதுவும் இல்லாதவர்.

மாமா ஏதாவது கோபமாக பேசும்போது கூட அவர் பேசும் வரை அமைதியாக இருந்து, பிறகே தனது கருத்தைச் சொல்லுவார். மாமாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை தலையே போனாலும் செய்ய மாட்டார்.

கணவருக்கு அடி பணிந்து தன் காரியத்தில் வெற்றி காணும் அபூர்வமான பெண்மணி. வீண் பந்தா, வறட்டு கௌரவம் அவர் அகராதியிலேயே இல்லை.

ஆதிரையின் அத்தை - கே.எஸ். பொன்னம்மாள்
ஆதிரையின் அத்தை - கே.எஸ். பொன்னம்மாள்

விட்டுக் கொடுத்துப் போவது, ஈகோ இல்லாமல் பழகுவது, கணவரிடம் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது, பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது, விருந்தோம்பல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருப்பது, 'மாமியார்' என்ற அதிகார தோரணை இல்லாமல் தோழமை உணர்வுடன் இருப்பது... என்று அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள் ஏராளம்.

என் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அத்தை தான் மிகப்பெரிய தூணாக இருந்திருக்கிறார்.

லவ் யூ அத்தை. அன்பு முத்தங்கள்.

நடமாடும் பல்கலைக்கழகம் என் அம்மா!

- லதா ரமேஷ், ஸ்ரீரங்கம்.

எல்லோருக்குமே அம்மா தான் முதல் ஹீரோயின்… மிக சின்ன வயதில் தாயை இழந்து கையாலாகா தந்தையிடம் இருந்தும் பிரிந்து வயதான தாத்தா பாட்டியின் செல்வச் சீமாளாக சின்ன கிராமத்தில் குறைந்த படிப்போடு வளர்ந்து வசதி குறைந்த பெரிய குடும்பத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கை பட்டு, 'மன்னி என்பவள் தாய்' என்று எல்லா பொறுப்புகளையம் நேர்த்தியாக நிறைவேற்றி, உறவுகளின் மேம்பாட்டிலும், அப்பாவின் ஆசிரியர் பணியில் கிடைத்த மிக சொற்ப வருவாயில் தன்னுடைய நான்கு பெண்களுக்கும் நல்ல உயர்கல்வி கொடுத்து, வைரத்தோடு போட்டு திருமணம் செய்து தன்னுடைய நிதி மேலாண்மை திட்டமிடலும், செயலாக்கத்திலும் நிர்வாகத்திலும், எந்தவொரு பண்டிகை, விழாவையும் நல்ல திட்டமிடலுடன் செய்வதிலும், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.

லதா ரமேஷ் அவர்களின் அம்மா
லதா ரமேஷ் அவர்களின் அம்மா

ஐம்பதுகளின் இறுதியில் மனைவியை முன்னிறுத்தி பெருமை செய்தவர் எங்கள் தந்தை.

இத்தனை பெருமைக்குரிய எங்க அம்மாவே என்றும் "நான் கொண்டாடும் நாயகி".

எங்கள் குடும்பத்தின் ராஜமாதா!

- Radha Sriram

எனக்கு திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே மாமியாரும் மாமனாரும் இறந்து விட்டனர்.

இரண்டு ஆண்டுகளில் நான் பெரிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லை. கூடவே உறவுகளின் அருகாமையும் இல்லாது போயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன், பெரிய மாமனார் இறப்பில்,சிறிய மாமியார், மாமனார் அன்பும் பாசமும் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை, குடும்பத்து பெரியவராக சின்ன மாமியார் தான் எல்லோருக்கும் தேவைப்படும் வழிகாட்டும் தலைவியாக உள்ளார். அவருக்கு மகள் மட்டுமே... ஆனால், அவரது மைத்துனர்களின் மருமகள்கள் எல்லோருமே அவருக்கு மகள்கள்தான்... அவரை எங்கள் குடும்பத்தின் ராஜமாதா என்றால் மிகையில்லை...

குடும்பத்தின் அனைத்து குழந்தைகளின் பிறந்தநாள் அறிந்தவராக, மகன்கள்-மருமகள்கள் திருமண நாள் மறக்காதவராக, குறிப்பிட்ட தினத்தில், குடும்ப வாட்சப்பில் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பவரும் அவரே. யாரிடமாவது தானே சொல்லி வாழ்த்து பெற வேண்டும் எனில், எனக்கு முதலில் நினைவிற்கு வருபவர் அவரே.

வயது முதிர்ந்த அவர், இன்னும் பல ஆண்டுகள் இருந்து, நான் என் கடமைகளை முடிக்க, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று சற்றே சுயநலத்துடன் யோசிக்கிறேன்.

மாமியார் உறவு என்றும் பூசலுக்குரியது என்பதை பொய்யாக்கியவர் அவர். உனக்கு தெரியாவிட்டால் என்ன, சொல்லித்தர நானிருக்கிறேன் என்று தைரியமூட்டியவர்/ஊட்டுபவர்.

அவரை போல மாமியார் கிடைத்தால் எந்த பெண்ணிற்கும் பிறந்தகம் மறந்து போகும். அவர் பெயர் உமா வைத்தியநாதன்.

உரிமைக்கு குரல் கொடுத்த பெண்மணி!

-ஆர்.ஜெயலெட்சுமி 

கர்நாடக மாநிலத்தில் பி.வி.பூமராட்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் படித்து தங்க பதக்கம் வென்றார் அந்தப் அந்தப் பெண்.எம்.டெக் படிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றார்.டாடா குழுமத்தின் டெல்கோ- டாட்டா இன்ஜினியரிங் அண்ட் லோகோமோட்டிங் கம்பெனியில் ஒரு பணிக்கான விளம்பரத்தை பத்திரிகையில் பார்த்தார்.காலி பணியிடங்கள் நிரப்ப ஆள் தேவை ஆனால் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று போடப் பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்தப் பெண் வெகுண்டெழுந்து எனக்கு இந்த வேலைக்கான தகுதிகள் அனைத்தும் இருந்தும் பெண் என்பதால் நிராகரிப்பதா என்று தனது உரிமையை நிலைநாட்ட ஒரு போஸ்ட் கார்டில் டாட்டா போன்ற பெரிய நிறுவனம் இப்படி ஆண் பெண் வேறுபாடு பார்க்கலாமா என ஜே.ஆர்.டி.

டாட்டா விற்க்கே எழுதி விட்டாள். கடிதம் படித்ததும் தவறை உணர்ந்த டாட்டா அந்த பெண்ணை உடனே அழைத்து நாம் வேலைக்கு கேட்ட தகுதி அனைத்தும் இருந்ததால் அந்த பெண்ணை பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.

அந்தப் பெண் பணியில் அமர்த்தப்பட்டார்.

அந்தப் பெண் யார் தெரியுமா?

நான் மெச்சிப் போற்றும் இன்ஃபோசிஸ் நிறுவன சுதா நாராயணமூர்த்தி!

வெற்றிக்குத் தேவை புதிய சிந்தனை!

- சேலம் சுபா

“ஒரு தொழிலின் வெற்றிக்கு ஆண் பெண் பேதமோ மொழியோ படிப்போ அந்தஸ்தோ பணபலமோ தடையில்லை. தேவை தொடர் உழைப்புடன் கூடிய முயற்சி, காலத்திற்கு ஏற்ற புதிய சிந்தனை, செய்யும் தொழில் மீதான நேசம்.  இவ்வளவுதான்” சொல்கிறார் உலகிலேயே முதன்முதலில் குழந்தைகளுக்கான ரெடிமேட் பட்டுப்பாவாடை சட்டை தாவணியை அறிமுகப்படுத்திய சேலம் ரதி சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனர் சாந்தி ரகுநாதன்.  சேலத்து வாசகியான என் அன்புத் தோழி. என் மனம் கவர்ந்த அற்புதப் பெண்மணி! 

      “ஆச்சு கல்யாண தேதி நெருங்கிடுச்சு. இன்னும் உனக்கு முகூர்த்தப் பட்டு சேலை எடுக்கணும். அதுக்கு பிளவுஸ் வேற தைக்கணும். உன்னை திருப்திப் படுத்தறதுக்குள் எனக்கு கண்ணக் கட்டப் போகுது.”

        “அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா, நான் மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டேன். சேலம் ரதி சில்க்ஸ்லதான் புடவை எடுக்கணும்னு, அது மட்டுமில்லாம அங்கேயே அந்த புடவைக்கேற்ற ஜாக்கெட்டை நம்ம விருப்பப்படி தைத்தும் தராங்க அதனால நீங்க நிம்மதியா இருங்க”

       இப்படித்தான் முப்பத்தைந்து வருடத்திற்கும் மேல் கல்யாணப் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது  சேலத்தின் பட்டு விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள பாரம்பர்யமிக்க “ரதி சில்க் அண்ட் சாரீஸ்” நிறுவனம். இதன் நிறுவனரான சாந்தி ரகுநாதன் ஹோல் சேல் விற்பனையின் முடிசூடா ராணியாகத் திகழ்கிறார். ஆம், ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் துறையில் ஒரு பெண் ஜெயிப்பது என்றால் அவர் எவ்வளவு உழைப்பைத் தந்து இருப்பார் என்ற ஆச்சர்யத்துடன் சாந்தியை சந்தித்தோம்.

     தன் எதிரிலிருந்த பட்டுப்பாவாடையின் டிசைன்களை ஆராய்ந்து அதன் நிறை குறைகளை தன் பணியாளர் களிடம் கலந்து ஆலோசித்து மேலும் அவற்றுக்கு புதுமையைப் புகுத்தி திருப்தியடைந்தவராக அவர்களை அனுப்பிவிட்டு புன்னகை மாறா முகத்துடன் நம்மிடம் திரும்பி கேளுங்கள் என்ற பார்வையை வீசினார் சாந்தி. அவரது சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ள நமது கேள்விக்கணைகளை தயக்கமின்றி வீசினோம். இனி அவரின் பதில்கள்.

சாந்தி ரகுநாதன்
சாந்தி ரகுநாதன்

உங்களைப் பற்றி சில வார்த்தைகள் ? 

    ராசிபுரம்தான் என் சொந்த ஊர். என் தந்தை துளசிராமன். தாய் லட்சுமி பாய். தந்தையின் தொழில் கைத்தறி ஜவுளிகளை விற்பனை செய்வதுதான். நான் அன்றைய எஸ் எஸ் எல் சி மட்டுமே முடித்தேன். பதினாறு வயதில் திருமணம். கணவர் ரகுநாதன் சேலம் இரும்பாலையில் பணி புரிந்தார். என் மாமனார் ராமன். மாமியார் சரஸ்வதி. இப்போது இவர்கள் கடவுளின் திருவடிகளை அடைந்து விட்டாலும் இவர்களின் ஆசிகள் என்றும் என்னை வழிநடத்திக்கொண்டு உள்ளதை அறிவேன்.

     எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால் நானும் ஏதெனும் தொழில் செய்து வருமானத்தை ஈட்டலாம் என்று எண்ணியபோது,  என் தந்தை 2000 ரூபாய்க்கு அவரின் நண்பரிடமிருந்து கடனாக துணிகளை வாங்கி என்னிடம் தந்தார். அவற்றை வீட்டிலேயே வைத்து சில்லறை விற்பனையில் இறங்கினேன். ஆர்வத்துடன் அதை செய்ததால் விற்பனை நன்றாகப் போயிற்று. அது மட்டும் போதுமா வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து பட்டுப்புடவைகளில் என் சொந்தக் கற்பனையில் வந்த டிசைன்களை வடிவமைத்துத் தந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ரதி சில்க் அண்ட் சாரீஸ் தோன்றியது எப்படி?

       நான் வடிவமைத்த டிசைன்களுக்கு வரவேற்பு இருந்ததைக் கண்டு, நாமே சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் என்ன என்று நினைத்ததின் துவக்கம்தான் இது தோன்றக்காரணம். ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல் விற்பனைகளில் படிப்படியாக உயர ஆரம்பித்தோம்.

     தொழிலின் வளர்ச்சி கண்ட என் கணவர் இரும்பாலை வேலையை விட்டுவிட்டு முழு நேரம் என்னுடன் இருந்து உதவினார். அவரின் மறைவுக்குப் பின் என் மகன், மருமகன்,  அக்காவின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் இந்தத் தொழிலில் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.  அது மட்டுமல்ல நிறுவனத்தை தாங்கும் ஊழியர்கள் தரும் உழைப்பையும் சொல்ல வேண்டும். எங்களது தயாரிப்புகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.  ரீடெய்ல் விற்பனைகளில் இருந்தாலும் ஹோல்சேலில் தான் அதிகம் எங்கள் நிறுவனம் கவனம் கொள்கிறது.

     தற்போது எங்கள் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள முன்னணி ஆடை விற்பனை மற்றும் மால்களிலும் குறிப்பாக விமான நிலையங்களில் உள்ள பெரிய கடைகளிலும் இருப்பதுதான் எங்கள் உழைப்பிற்கும் எங்கள் தயாரிப்புகளின் தரத்திற்கும் கிடைத்திருக்கும் சான்று.

எப்படி வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்தீர்கள் ?     

       ந்த ஒரு தொழிலுமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தால்தான் மக்களின் கவனத்தைப் பெறும். எனக்கு ஓவியங்களின் மீது உள்ள ஆர்வத்தினால் பட்டுத்துணிகளில்  நுணுக்கமான வேலைப்பாடுகளை தந்தேன். ஆனால் இன்னும் புதுமையாக என்றும் நிலைத்து நிற்கும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் பெண் குழந்தைகளுக்கு ரெடிமேட் பட்டுப்பாவாடைகளை தயாரித்து மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தினோம்.

       பொதுவாகவே பட்டுப்பாவாடை என்பது நமது பாரம்பர்யத்தின் அடையாளம் என்பதால் அனைவரும் விரும்புவார்கள். அதிலும் குழந்தைகள் அதை அணிந்து வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆனால் விலை அதிகம் என்பதாலும் பெண் குழந்தைகள் சட்டென்று வளர்ந்து விடுவதாலும் தவிர்ப்பதுண்டு. மேலும் வசதியுள்ளவர்களே வாங்கும் நிலையை உடைத்து அனைவரும் வாங்கும் விலையிலும் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப பிரித்து விட்டுக் கொள்ளும் வசதியுடன் அவர்களுக்கு உறுத்தாத வகையில் பருத்தித்துணியில் லைனிங் தந்து சந்தையில் அறிமுகப்படுத்தி இன்று வரை உலகிலேயே முதல் முறையாக என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டுள்ளது. மேலும் நம் வீடுகளில் அம்மாவின் சேலையை சுற்றிக்கொண்டு அழகு காட்டும் குழந்தைகளுக்கு நிஜமாகவே அணிவித்து அழகு பார்க்க ரெடிமேட் பட்டுச்சேலையும் உலகில் முதன் முதல் அறிமுகப்படுத்தியதும் நாங்கள்தான். இப்படி எங்களின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தரத்துடன் கூடிய தகுந்த விலையும்  அவர்கள் விரும்புவதை கண் முன் நிறைவேற்றி மனதிற்கு பிடித்தமான டிசைன்களைத் தருவதும்தான் எங்கள் நிறுவனத்தின்  வெற்றி.

என்ன என்ன ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன? அதன் சிறப்புகள்?

    சல் தங்கக்காசுகளை புடவையில் பதித்து வேலைப்பாடுகள் செய்த அக்சயாப் பட்டை பத்து வருடங்கள் முன் அறிமுகப்படுத்தினோம். தற்போது மணப்பெண்களின் விருப்பதிற்குத் தகுந்தவாறு பட்டுப் புடவைகளுக்கான பிளவுஸ்களை எம்பிராய்டரி, ஜர்தோஷி, ஆரி வேலைப்பாடுகளுடன் வடிவமைத்துத் தருகிறோம். ரெடிமேடு பிளவுஸ்களும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. தகுந்த விலையில்,  அவர்கள் விரும்புவதை கண் முன் நிறைவேற்றி மனதிற்கு பிடித்தமான டிசைன்களை வடிவமைத்துத் தருவதுதான் எங்கள் நிறுவனத்தின்  வெற்றி.

    மூன்றுமாதக் குழந்தை முதல் பதினெட்டு வயது டீன் ஏஜ் பெண்கள் வரை பட்டு கவுன், பட்டுப்பாவாடை சட்டைகள், பேபி சாரீஸ்  இவைகளுடன் இன்றைய இளம்பெண்களின் சாய்சான வேலைப்பாடுகள் நிறைந்த லெகங்கா எனப்படும் நீள் கவுன்களும் , பட்டு எம்போஸ் ஸ்டோன் முத்துப் போன்றவைகள் பதித்த டிசைனர் சாரீஸ், வித் அவுட் ஜரி, கட்வோர்க் சேலைகள், அதிக கனமில்லாத சாப்ட் சில்க் சேலைகள் என நம் இந்தியப் பாரம்பரியதிற்கு ஏற்ற அனைத்து பட்டுத் தயாரிப்புகளும் உள்ளன. திருமணம் மட்டுமில்லாமல் எல்லாவித சீசனுக்குத் தகுந்தவாறு எங்கும் இல்லாத டிசைன்களை உருவாக்குவதே எங்கள் ஸ்பெசல்.

      பெண்கள் இங்கு வந்தால் அவர்களின் பட்ஜெட்டில் விரும்பும் அளவில் ரெடிமேட் பிளவுஸ்களை உடனே தேர்வு செய்து அணிந்து மகிழலாம். குறிப்பாக தற்போது சிரமமின்றி அப்படியே அணியக்கூடிய ரெடிமேட் புடவைகள் பெண்களிடையே எங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத்தருகிறது.

     மணமகன்களையும்  விட்டு விடாமல் அவர்களின் பட்டு வேஷ்டியையும் மணப்பெண்ணின் உடைக்குத் தகுந்தவாறு மேட்சிங்காக வடிவமைத்துத் தருகிறோம். சிறுவர்களுக்கும் ரெடிமேட் பட்டு வேட்டி சட்டை பல வண்ணங்களில் உள்ளது. பரதநாட்டிய உடைகளையும் தைத்துத் தருகிறோம்.

உங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் பற்றி?

     வர்கள்தான் எங்கள் நிறுவனத்தின் தூண்கள் அல்லது முதுகெலும்பு என சொல்லலாம். தொழிலில் முதலாளி தொழிலாளி ஆண் பெண் என்ற  பாகுபாடெல்லாம் வரக்கூடாது. எங்களுக்காக நாங்கள் தரும் டிசைன்களை உருவாக்கித் தர ஆந்திரா கர்நாடகா சேலம் காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் 1000 நெசவாளர்களும் எங்கள் யூனிட்டுகளில் சுமார் 200க்கும் மேல் தையல் கலைநிபுணர்களும் 500 பேர் கொண்ட குழு நுண்ணிய கலை வேலைப்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

        என்னைப் பொறுத்தவரை திறமைதான் பேச வேண்டும். அது எங்கிருந்தாலும் யாரிடமிருந்தாலும் கொண்டாடுவேன். அதேபோல் ஆண் பெண் பாகுபாடெல்லாம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் எங்கள் நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறுபவர் பெண்களே. யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கினால்தான் எந்த நிறுவனமும் வளர்ச்சி பெறும். பணியாளர்களின் மலர்ச்சியே எங்கள் நிறுவனத்தின் மகிழ்ச்சி.

இன்றைய இளம் தொழில் முனைவோருக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

     முதலில் சொன்னதுதான். தொழிலுக்கு ஆண் பெண் பேதம் பார்க்காதீர்கள். திறமை எங்கிருந்தாலும் அதை வரவேற்று பயனடைவதுதான் புத்திசாலித்தனம் . நிச்சயம் நான் எனும் ஈகோ கூடாது. மொழியோ பணமோ எதுவும் தடையாகாது. இடையறாத முயற்சி, உழைப்பு, சரியான திட்டமிடல், காலத்திற்கேற்ற புதுமை அதாவது ட்ரெண்டிங் அப்டேட் இவைகளுடன் குடும்பத்தினரின் ஆதரவு. இவைகள் இருந்தாலே ஒரு தொழில் கண்டிப்பாக வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை .

         அழகாகவும் அதே சமயம் உறுதியுடனும் பேசுகிறார் சாந்தி. இவரின் நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்களே என்பது பெருமைக்குறிய விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com