நவதேவி ஆலயங்கள்!

நவதேவி ஆலயங்கள்!
Published on

ஜகன்மாதாவின் ஒன்பது அவதாரங்களையும் மிக மிக பக்தியோடு பூஜை செய்யும் பண்டிகை நவராத்திரி. புரட்டாசி மாதம் சுக்லபட்ச பிரதமையிலிருந்து நவமி வரை பரமேஸ்வரி ஒன்பது வடிவங்களில் வழிபடப்படுகிறாள். மகிஷாசுர சம்ஹாரத்திற்காக அம்மன் ஒவ்வொரு வடிவத்தில் யுத்தம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் சக்தியைப் பெறவேண்டும் அல்லவா! திரிபுரசுந்தரியான அம்மனை சப்தசதி, லலிதா திரிசதி, லலிதா சகஸ்ர நாமங்களைக்கொண்டு அர்ச்சனை செய்கிறோம். திரிபுரா ரகசியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள துர்கா மாதாவுக்கு நடக்கும் உற்சவமே இந்த தேவி நவராத்திரி பண்டிகை. நீயே சரஸ்வதி! நீயே மகாலட்சுமி! நீயே மகா காளி! நீயே சாகம்பரி! நீயே பார்வதி தேவி! என்று துதிக்கிறோம். மூன்று சக்திகளையும் ஒன்றாக்கி அதில் ஏற்படும் கருத்தொற்றுமையை சாதிக்கும் நிலையில் ஆதிசங்கராச்சாரியார் மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் மூலம் கீர்த்தனை செய்தார். வேத சம்பிரதாயத்தில் மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட சக்தியாக மகா காளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி வணங்கப்படுகிறாள். மகாகாளி வடிவம் எதிரிகளை அழிப்பதற்கும், மகாலட்சுமி ஐஸ்வரியம், சௌபாக்கியம், சம்பத்து பெருகுவதற்கும், சரஸ்வதி கல்விக்கும் ஞானத்திற்கும் அதிஷ்டான தேவதைகளாக பூஜிக்கப்படுகின்றனர். 

 நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக நடக்கும் பழைமையான புகழ்பெற்ற ஒன்பது தேவி ஆலயங்களைப் பார்ப்போம்:

வைஷ்ணவி தேவி:

பாரத தேசத்தில் உள்ள தேவி க்ஷேத்திரங்களில் வைஷ்ணவி தேவி ஆலயம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் காட்ரா என்ற இடத்தில் உள்ள உயர்ந்த இமயமலைத் தொடரில் திரிகூட பர்வதங்களின் வரிசையில் மாதா வைஷ்ணவி கொலுவீற்றுள்ளாள். இங்கு வைஷ்ணவி தேவி மூன்று  வடிவங்களில் தரிசனம் அளிக்கிறாள்.

நைனா தேவி:

அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற மற்றுமொரு ஆலயம் நைனா தேவி கோயில். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்தக் கோயிலை மஹீஷ்பீட் என்று அழைப்பார்கள். இங்குதான் மகிஷாசுரனை அம்மன் வதைத்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஜுவாலா தேவி:

ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் காங்க்ரா மாவட்டத்திலுள்ளது ஜுவாலா தேவி கோயில். இங்கு அம்மன் அக்னி வடிவத்தில் தரிசனம் அளிக்கிறாள். இது ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் ஒன்று. சதி தேவியின் நாக்கு விழுந்த இடமாக இது வழிபடப்படுகிறது.

காமாக்யா தேவி:

அஸ்ஸாமில் உள்ள புகழ்பெற்ற புண்ணியத்தலம் காமாக்யா தேவி கோயில். இங்கு சதி தேவியின் யோனி விழுந்த இடமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் இது முக்கியமானது.

தக்ஷினேஸ்வர் பவதாரிணி:

கொல்கத்தாவில் ஹூக்ளி நதிகரையில் உள்ள ஆலயம் தர்ஷனேஸ்வர். இந்த ஆலயத்தை 1855 ல் காளிமாதா பக்தையான ராணி ராஷ்மோணி நிர்மாணித்தார். காளிமாதா ரூபமான இந்த தேவி பவதாரணியாக இங்கு பூஜைகளை ஏற்கிறாள்.

கொல்கத்தா காளி:

கொல்கத்தாவில் உள்ள காளிகட் பிரதேசத்தில் காளி மாதா கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சதி தேவியின் வலது கால் கட்டைவிரல் இங்கு விழுந்ததாக பக்தர்கள் நம்பிக்கை. இங்குள்ள விக்ரஹம் சிறப்பானது. அம்மன் விக்ரகத்தில் நாக்கு முன்னால் நீட்டிக் கொண்டு தொங்குகிறது.

மதுரை மீனாட்சி:

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மதுரையில் வைகை நதிக் கரையில்   மீனாட்சியம்மன் ஆலயம் உள்ளது. அம்மனின் மிகவும் பவித்திரமான புண்ணிய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் வலது கையில் கிளியை பிடித்துள்ளாள்.

 கொச்சி லட்சுமிதேவி:

கேரளா கடற்கரையில் உள்ள கொச்சி நகர எல்லையில் லட்சுமி தேவி ஆலயம் உள்ளது. இங்கு அம்மன் பல வடிவங்களில் தரிசனம் அளிக்கிறாள். காலையில் மகா சரஸ்வதி, மத்தியானத்தில் மகாலட்சுமி, மாலையில் மகா காளியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பது சிறப்பு. மன நோயாளிகள் இங்கு அம்மனை தரிசித்து நலம் பெறுகிறார்கள்.

ஹொரநாடு அன்னபூர்ணா தேவி:

கர்நாடகாவில் உள்ள ஹொரநாடு என்ற இடத்தில் பத்திரா நதிக்கரையில் அன்னபூர்ணேஸ்வரி ஆலயம் உள்ளது. இது ஸ்ரீக்ஷேத்திர ஹொரநாடு ஆலயமாக புகழ்பெற்றுள்ளது, இங்குள்ள ஆளுயர அன்னபூரணி தேவி விக்ரகம் அகஸ்திய முனிவர் ஸ்தாபித்ததாக பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஒன்பது கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை மிக மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தலங்களுக்கு யாத்திரை சென்று நவராத்திரி உற்சவங்களில் பங்கு பெறுவதை பக்தர்கள் மகா பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com