ஒவ்வொருவரும் தினமும் சராசரி எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே நாம் படித்தது நமக்கு நன்றாக நினைவிருக்கும். ஆனால், யாரும் அதை அவ்வளவு சிரத்தையுடன் கடைப் பிடிப்பதில்லை. தண்ணீர் அதிகமாகக் காசு செலவழித்து வாங்காத ஒன்று என்பதினால் அலட்சியம் காட்டுகிறோமோ? (இப்போ ஒரு கேன் தண்ணீர் 30 ரூபாய்) அந்த எட்டு தம்ளர் தண்ணீர் உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்ள எப்படி உதவுகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால் நிச்சயமாக அதைக் குடிப்பதில் அலட்சியம் காட்ட மாட்டோம். அதிலும் குறிப்பாக எடையைக் குறைக்க வேண்டும் என்று கவலைப் படுபவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஆகாரம் தண்ணீரே.
1. தண்ணீர் பசியைக் குறைக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைய உதவுகிறது.
தண்ணீரைப் போதுமான அளவு குடிக்காவிட்டால் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க முடியாது என்றும், அதே சமயத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவ்வாறு கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரகங்கள் சரியாக இயங்க போதுமான தண்ணீர் தேவை. அப்படி போதுமான தண்ணீர் கிடைக்காத நேரத்தில் சிறுநீரகங்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையைக் குடலிடம் கொடுத்து விடுகின்றன. குடலின் வேலை உடம்பில் சேர்ந்து இருக்கும் கொழுப்புப் பொருளை உடம்புக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதே. ஆனால், தனக்கு உள்ள வேலையுடன், சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலையும் தண்ணீர் குறைவின் காரணமாக வலுக்கட்டயமாக திணிக்கப் படுவதால், வேண்டா வெறுப்பாக ஏனோ தானோவென்று செய்கிறது. அதனால் குறைந்த அளவு கொழுப்பே சக்தியாக மாற்றப்படுகிறது. மற்ற கொழுப்புக்கள் அப்படியே உடலில் தங்கி இருக்க ஆரம்பிக்கின்றன.
2. உடலில் திரவத்தின் அளவு சமநிலையில் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
உடம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காத போது ‘திடீரென்று தண்ணீர்ப் பஞ்சம் வந்துவிட்டதோ, இனி தண்ணீரே கிடைக்காதோ’ என்று அது பயந்து, கிடைக்கும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் உடலிலே சேர்த்து வைத்துக் கொள்ளத் தொடங்குகிறது. இந்தத் தண்ணீர் செல்களுக்கு வெளியே உள்ள இடங்களில் ‘மறைத்து’ வைக்கப்படுகிறது. இப்படி மறைத்து வைக்கப்படும் தண்ணீரே கால் கைகளில் வீக்கமாக உருவெடுக்கிறது. கள்ளத் தண்ணீரே வீக்கத்திற்குக் காரணம்.
இப்படி தண்ணீர் வீக்கம் வராமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பதுதான். நம்முடைய உடம்பும் நம்முடைய குடும்பத்தைப் போல்தான். அதிக பணப் புழக்கத்தைத் தினமும் காண்பவர்கள் எதிர்காலத்துக்குச் சேமித்து வைப்பதைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. இல்லாதவர்கள் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் எதிர்காலத்திற்காக சேமித்துக் கொள்ள விரும்புவதில்லையா? அதைப்போலத்தான்.
உடலில் வீக்கம் வருவதற்கு இன்னொரு காரணம் உப்பு. இந்த உப்பையும் ஒரு குறிப்பிட்ட அளவு திரவ நிலையிலேயே உடம்பு ஏற்றுக்கொள்ளும். நீங்கள் அதிக அளவு உப்பு சாப்பிட்டால் அதனுடைய கான்ஸென்ட்ரேஷனைக் குறைக்க வேண்டிய உடம்பு அதிக தண்ணீரை உடம்பில் தக்க வைத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சிறுநீரகங்கள் தேவைக்கு அதிகமான உப்பை எடுத்துக் கொண்டுவிடும்.
3. அதிக எடையுள்ள மனிதன், மெலிந்தவரைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக எடை உள்ளவர்களின் உடலில் அதிகக் கொழுப்பு இருக்கிறது. அதிகக் கொழுப்பைக் கரைக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
4.தசைகளைச் சமனப்படுத்த தண்ணீர் உதவுகிறது. தண்ணீர் உடலில் திரவப் பொருள் வற்றிப்போவதைத் தடுப்பதால் தசைகள் சரியான நிலையில் இயங்க உதவுகிறது. உடலின் எடை குறையும்போது தோலில் சுருக்கங்கள் ஏற்படலாம். இதையும் தண்ணீர் தடுக்கிறது. சுருங்கிப் போகும் செல்களின் இடையில் தண்ணீர் புகுந்து சருமத்தின் மிருதுத் தன்மையைப் பாதுகாக்கிறது.
5. கழிவுப் பொருட்களை வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.
உடலின் எடை குறையும்போது அதிக அளவு கழிவுப் பொருள் வெளியேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு நீங்கள் குடிக்கும் தண்ணீர் பெரிதும் உதவுகிறது.
6. மலச்சிக்கலைத் தவிர்க்க தண்ணீர் அவசியம்.
உடலில் தண்ணீர் குறையும்போது, உள்ள தண்ணீர் மற்ற முக்கியமான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் ‘அந்த’ காரியம் தடைப்பட்டு விடுகிறது. தேவையான அளவு தண்ணீர் குடித்தால் அந்தக் காரியத்துக்கும் தண்ணீர் கிடைத்து கழிவு வெளியேற்றப்படுகிறது.
எட்டுத் தம்ளர் தண்ணீர் என்பது சராசரி மனிதனுக் குத்தான். அதிக எடை உள்ள மனிதன் ஒவ்வொரு பத்து கிலோ கூடுதல் எடைக்கும் ஒரு தம்ளர் தண்ணீர் கூடுதலாகக் குடிக்க வேண்டும். கால நிலை வெப்ப மாகவும் வறட்சியாகவும் இருந்தால் அதனை அனுசரித்து கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
கடைசியாக ஒன்று, தம்ளரில் தண்ணீர் என்பதை விட்டு சொம்பில் குடிக்க ஆரம்பியுங்கள். உங்களை அறியாமல் நீங்களே நிறைய தண்ணீர் குடிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.