நவராத்திரி நவமியன்று மட்டும் திறக்கும் கோயில்
துல்ஜாபூர் பவானியை பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். இவருடைய கோயில் ஒன்று நேப்பாள காத்மாண்டுவின் தர்பார்ஸ்கொயரில் உள்ளது. இந்த அம்மன் நேப்பாள மன்னர்களின் குலதெய்வம். தலெஜு பவானி என அழைக்கி்ன்றனர்.
தலெஜு என்றால் நேப்பாளத்தில் துர்கை. நேப்பாளத்தில் நவராத்திரியை தசன் என அழைக் கின்றனர். இந்த தலெஜு பவானி கோயில் வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டும் திறக்கப்படுகிறது. ஆமாம்.... நவராத்திரியின் 9 வது நாள் நவமியன்று மட்டும் திறக்கப்படுகிறது. ஏன் இப்படி? பின்னணி என்ன?
1564ம் ஆண்டு மகேந்திரமல்லா என்ற மன்னனால் கட்டப்பட்டது. இந்த பவானி, மன்னனுக்கு தேவி வடிவில் வந்து காட்சி தந்துள்ளாராம். அது மட்டுமல்ல, நவராத்திரியின் 9 நாட்களும் மன்னருடன் மட்டும் சொக்கட்டான் ஆட சம்மதித்தாராம். தான் வருவதை யாரிடமும் சொல்லக்கூடாது. யாரும் பார்க்கக்கூடாது எனவும் கூறியிருந்தார். ஆனால், ராணிக்கு சந்தேகம் வந்து பார்த்தபோது, துர்கா பவானி அவரைப் பார்த்துவிட்டாராம்! பலன்... அந்த நிமிடமே மறைந்து விட்டாராம்.
பிறகு, மல்லாவின் கனவில் வந்து இனி வருடத்திற்கு ஒருநாள் மட்டும்தான் தரிசனம் தருவேன். அதுவும் குமாரி உருவில். நேவார் இன மக்களிடையே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவரை ‘குமாரி’யாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் நான் அவள் உடலில் ஐக்கியமாகி, அன்று மட்டும் காட்சி தருவேன். மற்ற நாட்கள் அவள் உடலில் நான் இல்லையென்றாலும் வருடம் முழுவதும் பராமரிக்க வேண்டும். அந்தப் பெண் பெரியவளாகும் வரை மட்டும்தான், நான் அவள் உடலில் ஐக்கியமாவேன். அதன் பின் புதிய குமாரியை தேர்வு செய்ய வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பதாவது நாள் நவமியன்று மட்டும், கோயிலுக்கு வருபவர்களுக்கு என் தரிசனமும், குமாரி தரிசனமும் கிடைக்கும் எனக் கூறி மறைந்துவிட்டாள். இந்த நிகழ்வு இன்றுவரை நடக்கிறது. அன்று மட்டும் கோயில் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து தரிசிப்பார்கள்.
-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு
***********************************************
மும்பா தேவி கடஸ்தாபனா!
மும்பை மகாலெக்ஷ்மியை மட்டுமல்லாது, மும்பா தேவியையும் மும்பை வாழ் மக்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர். ‘பம்பாய்’ (Bombay) என்றழைக்கப்பட்ட நகரம், நவம்பர் 1995 முதல் “மும்பை” (Mumbai) என்றானது. மும்பாவிலிருந்து வந்த பெயர்தான் மும்பை எனக் கூறப்படுகிறது.
மும்பா – (ஒரு சிறு வரலாறு)
ஒரு சமயம் பார்வதி தேவிக்கு, மகா காளியாக உருவெடுக்க நல்ல மன வலிமை, ஒன்றிய கவனம் போன்றவைகள் தேவைப்பட்டன. இதை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியை, பூலோகத்தில் உள்ள கடற்கரைப் பகுதியொன்றில் “மும்பா” எனும் மீனவப் பெண்ணாக அவதரிக்கச் செய்தார். அங்கிருந்த கோலி இனத்தவர் (மீனவர்கள்) மற்றும் உப்பு சேகரம் செய்பவர்களிடமிருந்து (அக்ரிஸ் இனத்தவர்) பல்வேறு விஷயங்களை “மும்பா” கற்றறிந்தார். அத்துடன் அவர்களுடன் நன்கு பழகி மிகவும் உதவியாக இருந்தார். சில காலம் சென்றபின், சிவபெருமான், மீனவராக அவதரித்து மும்பாவை மணந்தார்.
மும்பாவை, கோலி மற்றும் அக்ரிஸ் இனத்தவர்கள் ஆயி; அம்பே; மாதா (அம்மா) என்றழைப்பது வழக்கம். ‘மும்பா’ அங்கிருந்து விடைபெறும் நேரம், பிரிய மனமின்றி அவர்கள் வேண்ட, கிராம தேவதையாக ‘மும்பா’ மாறி அங்கே தங்கிவிட, தேவிக்கு கோயில் அமைக்கப்பட்டது. (8 கரங்களுடன் மும்பா, “மும்பார்கர்” எனும் அசுரனைக் கொன்றதன் காரணம் இப்பெயர் என மற்றுமொரு கதை கூறப்படுகிறது.)
கோயிலும், மும்பா தேவியும்
போரிபந்தர் என்ற இடத்திலிருந்த அம்பாதேவி கோயில் நாளடைவில் சிதிலமடைய, மீண்டும் புதிய வடிவில், மும்பையின் பரபரப்பான இடமாகிய புலேஷ்வர்இல் கட்டப்பட்டது. மும்பாதேவியென அழைக்கப்பட்டது.
பூமாதேவியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள மும்பாதேவிக்கு வாய் கிடையாது. ஆரஞ்சு வண்ண முகம்; தலையில் வெள்ளிக்கிரீடம்; மூக்கில் நல்ல பளீரென்ற மூக்குத்தி, கழுத்தில் தங்க ஆபரணம் அணிந்து காட்சியளிக்கும் தேவி சக்தி வாய்ந்தவள். தேவியின் இடப்புறம் கல்லால் அமைந்த அன்னபூரணி; எதிரில் தேவியின் வாகனமாகிய புலி உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் விநாயகர், ஆஞ்சநேயர், பாலாஜி ஆகிய தெய்வங்களும் இங்கே உள்ளனர்.
கடஸ்தாபனா:
“கலச ஸ்தாபனம்” என்பதுதான் “கடஸ்தாபனா” எனக் கூறப்படுகிறது. நவராத்திரி முதல் நாள் காலையில் நடைபெறும் இக் “கடஸ்தாபனா” நிகழ்வு காண கூட்டம் அலை மோதும்.
களிமண் கலயத்தில் அரிசி, மஞ்சள், காசு ஆகியவைகளைப் போட்டு, மேலே மாவிலைக் கொத்து வைத்து, அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து ஆரம்ப பூஜை நடைபெறும்.
வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கும் பழைமையான சக்தி வாய்ந்த காவல் தேவதை மும்பா தேவியை தரிசிக்க நவராத்திரி மற்றும் தீபாவளி சமயம் மக்கள் திரண்டு வருவார்கள்.
கோயில் நேரம் மற்றும் அருகாமையிலுள்ள ரயில்வே நிலையங்கள்:
காலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை கோயில் திறந்திருக்கும். இடையே ஆரத்தி, நிவேதனம் போன்றவைகள் செய்யப்படும். திங்கட்கிழமை கோயில் மூடி இருக்கும்.
அருகிலுள்ள ரயில்வே நிலையங்கள் சர்னி ரோடு, மஸ்ஜித், சிவாஜி சத்ரபதி ரயில்வே நிலையம். இங்கிருந்து டாக்ஸி பிடித்துச் செல்லலாம். தேவி கோயிலுக்கு சுமார் 2 கி.மீ.பயணம்தான். B.E.S.T. பஸ்களும் செல்கின்றன.
“தச வதனாயை ச வித்ம ஹே ஜ்வாலா
மாலாயை ச தீமஹிI
தன்ன: சக்தி: ப்ரசோத யாத்II”
பலர் மேற்கூறிய ஸ்லோகத்தைக் கூறி, தேவியை வழிபடுவதுண்டு.
-ஆர். மீனலதா, மும்பை