பிரதமர் மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் இந்திய அரசியல்வாதி. நிதித்துறையுடன் கார்ப்பொரேட் விவகாரங்கள் துறை அமைச்சராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். 2014 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட வாழ்க்கை, குடும்பம், கல்வி:

கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி, சாவித்ரி மற்றும் நாராயணன் தம்பதியினருக்கு மகளாக நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை அப்போதைய திருச்சி மாவட்டம் முசிறியைச் உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்தது. நிர்மலா சீதாராமன், தமிழ் பிராமண ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார்.

பள்ளிப்படிப்பை சென்னையிலும் திருச்சியிலும் முடித்த நிர்மலா சீதாராமன், திருச்சி, சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டு தில்லி சென்ற அவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பும், எம்.பிஃல் பட்டமும் பெற்றார்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த போது பரகால பிரபாகர் என்பவரை சந்தித்தார். இருவரது அரசியல் கொள்கைளும் வெவ்வேறாக இருந்த போதிலும், மனம் ஒன்றியதால் 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாங்க்மயி என்ற மகள் உள்ளார். பரகால பிரபாகர் காங்கிரஸ் சித்தாந்தத்தை பின்பற்றியும், நிர்மலா பா.ஜ.க. சித்தாந்தத்தையும் பின்பற்றி வந்தனர். அவரது கணவர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசகராக பணியாற்றியவர்.

அரசியல் எழுச்சி:

கடந்த 2006 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அதன்பின் 2010 ஆண்டு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக உயர்ந்தார். 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நிர்மலா, ஆந்திர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களைவக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி, நிர்மலா சீதாராமன், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த இரண்டாவது பெண்மணி இவர்தான். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது நிர்மலா சீதாராமன் நிதி மற்றும் கார்ப்பொரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக பதவியேற்றார்.

2019 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்று நாட்டையே உலுக்கிய நேரத்தில் நிர்மலா, கோவிட் தொற்று பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரண உதவியை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், அவரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான அனைத்து வழிகையும் பின்பற்றி வருகிறார்.

அரசியலுக்கு வருவதற்கு முன் நிர்மலா சீதாராமன் லண்டனில் பிபிசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காக பணியாற்றியுள்ளார். மகளிர் தேசிய ஆணையத்தின் உறுப்பினராகவும் செயலாற்றி இருக்கிறார்.

மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகத் திகழ்கிறார். அரசியலிலும் சரி, நிதி நிர்வாகத்திலும் சரி சிறப்பாக செயல்பட்டு பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவாக இருக்கிறார்.

சமீபகாலமாக அவர் தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை நிலைநிறுத்துவதிலும், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com