நுண்ணிய நரம்புகள்

நுண்ணிய நரம்புகள்
Published on

மருத்துவத் தொடர் – 1 

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

தலைவலி எதனால் வருகிறது?

சென்னை காவேரி மருத்துவ மனையில் நரம்பியல் நிபுணராக செயலாற்றிவரும்(Consultant Neurology, Neurophysiology)  மருத்துவர், டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் உடல் உறுப்புக்களில் ஏற்படும் நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்னைகள் குறித்து மங்கையர் மலர் வாசகிகளுக்காக, தொடர்ந்து விளக்கம் தர இருக்கிறார். இந்தத் தொடரின் முதல் பகுதியாக (நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான) தலைவலி குறித்து பேசுகிறார்.

அவரைச் சந்தித்தபோது, “முதலில் தலைவலியிலிருந்து ஆரம்பிக்கலாமே” என்று புன்னகை தவழ பேச ஆரம்பித்தார்.

யாராவது கொஞ்சம் டல்லாக இருந்து, காரணம் கேட்டால் “லேசா தலைவலி”

என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். களைப்பாக இருந்தால்கூட தலைவலிக்குது. ஒரு கப் காஃபி குடித்தால் சரியாகிவிடும் என்போரும் உண்டு. வெயிலில் போனால்,
கூட கொஞ்ச நேரம் படித்தால், வேலை செய்தால் தலைவலிப்பதுபோல தோன்றுமே..

உண்மையில் தலைவலி என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?

தலையின் முன்பக்கமோ, பின்பக்கமோ எங்கே வேண்டுமானாலும் வலி வரலாம்.

சிலர் கழுத்துவரை கூட வலிக்கிறது என்பார்கள். மூளையைச் சுற்றி இருக்கும் திசுக்கள் மற்றும் அமைப்புக்களிலிருந்து தான் தலைவலி உணரப்படுகிறது. தலைவலி கடுமையானதாகவோ (Acute) தொடர்ந்து பல காலம் நீடிப்பதாகவோ (Chronic) இருக்கலாம்.

நார்மலாக இருக்கும் ஒருவருக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டால், ஏதாவது அபாயத்தின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவமனையை அணுகி ஸ்கேன் எடுக்க வேண்டும். மூளைக்குள்ளோ, மூளையின் வெளிப்புறத்திலோ ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்று  சோதிக்க வேண்டும்.

இந்த subarachnoid hemorrhage என்னும் ரத்தக் கசிவு, ஏதாவது ரத்தக் குழாயின் சுவரில் அசாதாரணமான வீக்கம் உண்டாகி, அது வெடிப்பதால் ஏற்படும் Aneurysm ஆகக்கூட இருக்கலாம்.

மூளையில் கட்டி வந்துள்ளதா, அல்லது Thrombosis எனப்படும் ரத்தக் குழாய் (Vein) அடைப்பு ஏற்பட்டு அதனால் தலைவலி வந்துள்ளதா என்று சோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும்.

நீடித்த தலைவலி 

சிலருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில், உதாரணமாக 15 நாட்களுக்கு ஒரு தடவை என்பது போல, பல காலமாக விட்டு விட்டு தலைவலி உண்டாகலாம்.இது க்ரானிக்.

இவர்களுக்கு மற்றவர்களை விடவும் தலைவலி வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

இந்த க்ரானிக் தலைவலியில் பல வகைகள் இருந்தாலும் நிறையப் பேரை பாதிப்பது முக்கியமான மூன்று வகைகள் தாம்.  இவை ப்ரைமரி ஹெடேக் (Primary Headache) என்று குறிப்பிடப்படுகின்றன. அதில் முதலாவது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி.

மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி தலையின் வலது பக்கம் அல்லது இடது புறத்தில்

வரும். ஒரே நபருக்கு ஒரு முறை வலது பக்கமும் மறு தடவை இடது பக்கமும் வரலாம்.

மைக்ரேன் தலைவலி வருவதற்கு முன் அவர்களுக்கு Migraine aura symptoms எனப்படும் சில அறிகுறிகள் வரும். பார்வையில் புள்ளி புள்ளியாக அல்லது கோணலான கோடுகள்போல் தெரிவது, அல்லது  கருப்பாக பார்வை மங்கலாவது போன்றவை நேரிடலாம். காதுகளில் உய் என்ற சத்தம் கேட்பதுபோல் இருக்கும். இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலருக்கு மைக்ரேன் வரக்கூடும்.  இது மெதுவாகத் தொடங்கி ஒற்றைத் தலைவலியாக மாறும்போது சிலருக்கு  ஃபோட்டோ ஃபோபியா (photophobia) ஏற்படும். அதாவது வெளிச்சத்தை கண்டால் தலைவலி அதிகரிக்கும். சத்தத்தைக் கேட்டாலும் (Phonophobia) அதிகரிக்கும். ஒரு இருட்டு அறையில் பேசாமல் போய் படுத்துவிடுவார்கள். வாந்தி வரும் போல இருக்கும். இவையெல்லாம் ஒற்றைத் தலைவலி பிரச்னைகள்.

டென்ஷன் தலைவலி:

அடுத்து டென்ஷன் தலைவலி. நாம் நினைப்பதுபோல மன அழுத்தத்தால் வரும் வலி அல்ல இது. உடல் அதிகம் வேலை செய்யும்போது, நரம்புகளின் டென்ஷனால் ஏற்படும் தலைவலி.  ஒரு இடத்தில் ஆரம்பித்து பரவலாக தலை முழுவதும், கழுத்து வரைக்கும் வலி பரவும். தலையில் இறுக பாண்ட் கட்டி இழுப்பது போன்ற வலி இது. இதிலும் வெளிச்சம் சத்தம் இவற்றால் வலி அதிகரிக்கும் உணர்வு சிலருக்கு ஏற்படலாம். மைக்ரேனின் அறிகுறிகள் இருந்தாலும் இது பொதுவாக ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் பரவலாக உண்டாவது.

க்ளஸ்டர் தலைவலி

மூன்றாவது க்ளஸ்டர் தலைவலி. (Cluster headache) கண்களைச் சுற்றி வீக்கம் சிவந்து போதல், கண்ணிலிருந்து நீர் வடிதல் என்று, வலி சற்று கடுமையாகவே இருக்கும்.  

முதல் இரண்டு வகைகளும் பெண்களுக்கு அதிகம் வரும்.  க்ளஸ்டர் தலைவலியால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் ஆண்களே.

எது தலைவலியைத் தூண்டுகிறது?

சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதிருந்தால் அது தலைவலியைத் தூண்டி விடலாம்.

வெயிலில் செல்வது, அதிகம் டென்ஷன் படுவது, தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் தலைவலி வரலாம். சிலருக்கு சில உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாமல் மைக்ரேனை தூண்டிவிடும்.. சாக்லேட், சீஸ், அதிக மசாலா சேர்த்த உணவு போன்றவை. ஆனால், இது அலர்ஜி என்ற ஒவ்வாமை  அல்ல. தலைவலிக்குத் தூண்டுகோலாக இருப்பவை.

 

இரண்டாம் நிலை வலி (Secondary Headache)

செகண்டரி ஹெடேக் என்ற பாதிப்பு, தொற்று (Infection) ரத்தக் கசிவு,ரத்தக் குழாய் அடைப்பு

இவற்றால் ஏற்படும். அப்போது உடனடி சிகிச்சை தர வேண்டும். சில பேருக்கு பல்வலி, சைனஸ் தொல்லை இருந்தாலும் இத்தகைய தலைவலி வரும்.

நியூரால்ஜியாஸ் அண்ட் ஃபேஷியல் பெய்ன்ஸ் (Neuralgias and Facial pains)

நியூரால்ஜியா என்பது நரம்புகளில் வரும் வலியைக் குறிப்பது.  பொதுவாக கொஞ்சம் வயதானவர்களுக்கு வரும் பாதிப்பு இது. (Trigeminal neuralgia)

முகத்தில் உள்ள நரம்புகள், அதிகம் செயல்படுவதாகவோ (Hyper Active), அல்லது அதிக சென்சிடிவ் ஆகவோ இருந்தால், அதாவது க்ரேனியல் நரம்பு (cranial nerve V) பாதிக்கப் படுவதால் முகத்தில் வலி இருந்துகொண்டே இருக்கும். வயதானவர்களுக்கு ரத்தக் குழாய் வீக்கத்தினால் நெற்றியில் வலி ஏற்பட்டு, Temporal arteritis என்ற பாதிப்புக்குள்ளாகலாம்.

திடீரென தலையில் முகத்தில் வலி வரும் போது மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை

எடுப்பது அவசியம்.

சிகிச்சைகள்

தலைவலி என்று வருவோரிடம் அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றி முதலில் கேட்கிறோம். தலைவலியே வராமல் ஒருவரால் இருக்கமுடியாது. ஆனால், மைக்ரேன் போல் வந்து அவதிப்படுபவர்களிடம் அவர்களது லைஃப் ஸ்டைல்

பற்றித் தெரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம்.

எது வலியைத் தூண்டுகிறது, எப்படி வலி வராமல் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வது

என்று அறிந்து சிகிச்சை தரலாம். எப்போதாவது வரும் வலிக்கு ஒரு மாத்திரை போட்டுக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தொடர்ந்து தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பு முறையிலான ப்ரிவென்டிவ் சிகிச்சை தருகிறோம்.

பீட்டா பிளாக்கர்ஸ் (Beta-Blockers) மற்றும் ந்யூரோபதிக் வலி நிவாரணிகள் சிகிச்சை தருகிறோம். மூன்று அல்லது ஆறு மாதம், ஒரு வருடம்  கோர்ஸாக இது தரப்படும்.

தலைவலி வருகிறதோ இல்லையோ, இந்த மருந்துகளை கோர்ஸ் முடியும் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சாதாரண வலி நிவாரணி அல்ல.இது நரம்புகளை அமைதிப் படுத்த உதவும் சிகிச்சை. சிகிக்சை முடிந்தபிறகு எப்போதாவது வலி வந்தால் வழக்கமான மாத்திரை போட்டுக் கொள்ளலாம். க்ரானிக் தலைவலிக்கு எமெர்ஜன்சி நிலை வரும்போது ஸ்கேன் எடுத்துப் பார்த்து காரணத்தைக் கண்டறிகிறோம்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com