ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

‘இஸ்கான்’ அமைப்பைச் சேர்ந்த பிரபல உபன்யாசகர் ‘வ்ரஜ வினோத் ஷ்யாம் தாஸ்’ என்பவர் நிகழ்த்திய ‘ஸ்ரீமத் பாகவதம்’ சொற்பொழிவை யூ-ட்யூபில் கேட்க நேர்ந்தது. அதில் அவர்,  ‘Spirit of completion’  பற்றிப் பேசியது என் கருத்தைக் கவர்ந்தது.

1968ல் மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் மராத்தானும் ஒன்று. அதில் தான்ஸேனியா நாட்டைச் சேர்ந்த ஜான் ஸ்டீஃபன் அக்வாரி என்ற ஓட்டப் பந்தய வீரரும் கலந்துகொண்டார். ஓட்டத்தின் நடுவே, அக்வாரி தவறி விழுந்ததில் அவரது கால்மூட்டு பெயர்ந்து விட்டதோடு, தோள் பட்டையிலும் பலத்த அடி!

72 பேர் கலந்துகொண்ட அந்த மராத்தான் போட்டியிலிருந்து ஏற்கெனவே
18 பேர் “முடியலடா சாமி!” என்று விலகிவிட, அக்வாரியும் “வலி தாங்க முடியல...”ன்னு மருத்துவமனைக்குப் போகப் போறார்னுதான் எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, நடந்ததே வேற!

அன்றைய போட்டிகள் முடிஞ்சு, முதல் மூன்று பேருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்ட தறுவாயில் “இன்னுமொரு பந்தய வீரர் கடைசியாக ஓடி வந்துகொண்டிருக்கிறார்” என்று அறிவிக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். தட்டுத் தடுமாறி, தள்ளாடி, மிகவும் சோர்ந்துபோய் வந்து சேர்ந்தார் அக்வாரி.

“நீண்ட நேரமாகி, விழாவே முடிந்துவிட்டதே... உங்க ஓட்டத்தை இடையிலே நிறுத்தி இருக்கலாமே? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு, களைச்சு ஓடி வந்தீங்க?”ன்னு போட்டி நடத்துநர் கேட்டபோது, அக்வாரி சொன்ன வார்த்தைகள்...

“5000 மைல்களைத் தாண்டியுள்ள நாட்டிலிருந்து, என் மக்கள் என்னை நம்பி இங்கு அனுப்பியுள்ளது, ரேஸை சும்மா ஆரம்பிக்க அல்ல; வெற்றிகரமாக முடிக்க! அவர்களுடைய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உடைக்க எனக்குத் தகுதியில்லை. அதை நிறைவேற்றவே கடைசி வரை ஓடினேன்!” என்றபோது, முழு மைதானமும் கரகோஷமிட்டு ஆரவாரித்தது. இதை ‘Sports manship’ என்றும் சொல்லலாம்.

உபன்யாசகர் சொன்னதுபோல ‘ஸ்பிரிட் ஆஃப் கம்ப்ளீஷன்’ என்றும் சொல்லலாம்.

நீங்கள் சில கிருத்துவ மரண அறிவிப்புகளில் இந்த வாசகத்தைக் காண முடியும்.

“நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன்... விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற பைபிள் வாசகம் இருக்கும்!
எஸ்! ... வாழ்க்கை ஒரு பந்தய ஓட்டம்தான். போராட்டக் களம்தான். நல்லதோ, கெட்டதோ கடைசிவரை வாழ்ந்து பார்த்துவிடுவதுதான் விவேகமானது. முழுமையானது!

ஆனால், இங்கே தினசரி நாளிதழைப் பிரித்தாலே தற்கொலை செய்திகள் மனம் நோகச் செய்கின்றன... இதோ ஒரு புள்ளி விவரம்...

உலக அளவில் ஆண்கள்...

இந்திய அளவில் பெண்கள்...

தமிழக அளவில் மாணவர்கள், குறிப்பாக யுவதிகள்.

இறைவன் தந்த இன்னுயிரை, இயற்கை கொண்டு போகும்முன்பு, தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி!

செப்டெம்பர் 10. உலகத் தற்கொலை தடுப்பு நாள். அந்தப் பெண் எதற்காக, குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. பாடலாசிரியர் கபிலனின் மகள் ‘தூரிகை’ என்ற இளம்பெண் தூக்கில் தொங்கிவிட்டாள். படித்தப் பெண், சுதந்திர முடிவுகளை எடுக்கத் தெரிந்தவள், சுய சம்பாத்யம் உள்ளவள், ‘Being a woman’ என்ற மின்-இதழை நடத்தியவள்... தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு கட்டுரை எழுதியவள்... அப்படிப்பட்ட பெண், எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தாள் என்பது தூரிகைக்குத்தான் தெரியும்! தூரிகையின் மரணத்துக்குப்பின் சில புகைப்படங்கள் வெளியாயின... அவருக்கு வருத்தமான நிமிடம் என எதுவுமே இல்லை என்பதுபோல விதவிதமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

l ‘தற்கொலை’ என்பது தன்னுயிரை மட்டுமல்ல... அவளை நேசித்த அனைவரது கனவுகளையும் கொல்வதற்கு சமம் என்று தூரிகை போன்ற பெண்களிடம் யார் சொல்வது?

l நம்முடைய வாழ்க்கைப் பந்தயத்தில் கடவுள் கை கட்டிப் பார்ப்பவரோ, உற்சாகப்படுத்துபவரோ மட்டுமல்ல; அவரும் நம்மோடு கூட ஓடுபவர். அந்த இறை நம்பிக்கையோடு, நமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், பொறுமையும் நம்பிக்கையும் கொண்டு, கடைசிவரை ஓடித் தீர்ப்பதுதான் ‘Spirit of completion’.

கடைசியாக ஒரு வார்த்தை...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களே...

தற்கொலை செய்துகொண்டு, பெற்றோரை, குழந்தைகளைக் கலங்கடித்து விட்டுப் போகும் அளவுக்கு வீம்பும் தைரியமும் இருந்தால்... வாழ்ந்தே சாதித்து விடலாமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com