நீ இந்தத் தடவை கண்டிப்பா ‘கீதா’வை மீட் பண்ணிப் பேசணும்" என்றாள் என் கடைசித் தங்கை.
ஒரு பதினாலு வயசுப் பெண்ணைப் பற்றி எழுத என்ன இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். கீதாவை இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். களையான முகம். பள்ளியில் படிப்புக்கும் திறமைக்கும் நிறைய பரிசுகளை வாங்கி குவித்து இருக்கிறாள். அவளது அப்பா அடிக்கடி ஃபாரின் போகக் கூடியவர் என்று சொல்லி இருக்கிறாள். இதெல்லாம் கீதாவின் ஒரு பக்கம்; கீதாவின் மறுபக்கம்?
அழுது அழுது முகம் வீங்கி மௌனமாக இருந்தாள் கீதா.
'கீதா அழாமே சொல்லு. எதுக்காக இந்த பொய்யை நீ சொல்லணும்?' 'ஆண்ட்டி எங்க அப்பா இப்போ இதே ஊர்லேதான், ஆனா வேறு வீட்டிலேயே இருக்கிறார்.”
"அப்ப எதுக்காக ஃபாரின் போய் இருக்கிறார்ன்னு பொய் சொல்றே?''
"நீங்க என் நெலைமையை நெனைச்சுப் பாருங்க. எல்லாரோட அப்பாவும் தங்கள் குழந்தைகளை ஸ்கூலில் 'ட்ராப்' பண்ணிட்டு போவாங்க. ஆனா எங்க வீட்டிலே எப்பவும் அப்பா அம்மா சண்டை. அதனால எங்க அப்பா எங்க வீட்டிலேயே இருக்கிறதில்லை".
"கீதா இந்தச் சண்டை கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் அம்மாவும் அப்பாவும் சரியாய்ப் போய்விடுவாங்க. அதுக்காக நீ இந்தப் பொய்யைச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே.”
கண் கலங்கி, மூக்கு நுனி துடிக்க சிவந்துபோனாள் கீதா.
'இல்லே ஆண்ட்டி, எங்க அப்பாவும், அம்மாவும்... எப்படிச் சொல்றதுன்னு புரியலை. 'டைவோர்ஸே' வாங்கிட்டாங்க. ஆனா என்னை மாதிரி பொண்ணுக்கு அதை வெளியில் சொல்லக் கூடக் கஷ்டமாக இருக்குது ஸ்கூலிலே ஏன் உங்க அப்பா வர்றதில்லைன்னு கேட்டா என்ன சொல்றது? அதுக்காகத்தான் ஆண்ட்டீ எப்பவும் ஏதாவது பொய் சொல்ல வேண்டி இருக்குது. பொய் சொல்றது தப்புத்தான். ஆனா அப்பா ஃபாரின் போயிட்டதா சொல்வேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எங்க கூட இல்லாத அப்பா ஃபாரின்தானே?”
பொட்டில் அறைந்தாற்போல பதில். கனத்த மௌனம்.
ஆண்ட்டீ. சிலருக்கு அப்பாவே இருக்க மாட்டாங்க. எங்க அப்பா உசிரோட இருக்காரு. ஆனா சட்ட ரீதியா எங்களுக்கு அப்பா இல்லை. எங்க அப்பாவும். அம்மாவும் ரொம்ப 'ஸெல்பிஷ் ஆண்ட்டீ. அவங்க சண்டைக்காக எங்களைப் பிரிக்கிறாங்க. என் அண்ணன் இருக்கிறான். நானும் படிக்கணும் எங்க அம்மா சம்பாதிக்கிறங்க. ஆனா எங்க அண்ணனை ஒரு புரொபஷனல் காலேஜில் சேர்த்து இன்னிக்கு இருக்கிற போட்டியிலே எங்க அம்மாவாலே நல்லாப் படிக்க வைக்க முடியுமா?
ஏன் இவங்க இரண்டு பேரும் வாழ்க்கையும் கெடுத்துக்கிட்டு வாழ்க்கையையும் கெடுக்கிறாங்க? அம்மா எங்களைக் காப்பாத்தறேன்னு சொல்றாங்க. அவங்க உணர்ச்சியை மதிக்கிறேன் விவாகரத்து வாங்கினதுக்கு அப்புறம் கூட... ஸ்கூலில் என் பேருக்கு முன்னலே இருக்கிற இன்ஷியல் யாருது? ஒவ்வொரு தடவையும் எழுதறபோது எனக்கு அழுகை வருது. அப்பா வேண்டாமாம். அப்பாவோட இன்ஷியல் மட்டும் வேணுமாம்!
கீதா கோர்வையாகச் சொல்ல முடியாமல் அழுது, கடைசியில் மனம் கனக்க அழுது முடித்தபொழுது...
மாறிவரும் சமூக மாற்றங்களைப் பற்றி பெரிதாக லெக்சர் பண்ணலாம். ஆனால் மனத்தில் பலத்த காயம்பட்டுள்ள இந்த பெண்ணுக்கு என்ன பதில்?