கர்நாடகாவைச் சேர்ந்த 96 வயது பீமவ்வா ஷில்லேக்யாதரா என்ற மூதாட்டி சமீபத்தில் பத்மஶ்ரீ விருது பெற்றுள்ளார். எதற்குத் தெரியுமா?
இவர் பலவருடங்களாக பொம்மலாட்ட கலையில் ஈடுபட்டு வருகிறார். எளிமையாக கையை கூப்பியபடி இவர் விருது வாங்கிய போது அனைவரும் எழுந்து நின்றனர். அவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் விருது வாங்கும்போது கைதட்டல் வானைப் பிளந்தது.
பீமவ்வா அவர்கள் சுமார் 80 வருடங்களாக இக்கலையில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய கலையில் புராணம், பாட்டு, கைவண்ணம் எல்லாம் கலந்துள்ளது. இக்கலைக்கு வரவேற்பு குறைவாக உள்ள நிலையில் விடாமல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் கற்பித்தும் வருகிறார்.
தகலு கொம்பேயத்தா
தகலு கொம்பேயத்தா என்றால் லெதர் பொம்மைகளை வைத்து நடத்தும் நாடகம் என்று அர்த்தம். இக்கலை, லெதர் பொம்மைகள் மூலம் புராண இதிகாசங்களை எடுத்துக் கூறுவதாகும். இக்கலை ஆந்திராவின் பொம்மலாட்டக் கலையான தோலு பொம்மலாட்ட கலையை ஒத்தும் இருக்கிறது.
96 வயதிலும் ஈடுபாட்டுடன் உள்ள இந்த பொம்மலாட்டக் கலைஞர், சாதிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார். இந்த வயதிலும் கலை நிகழ்ச்சிக்காக பயணம் செய்து வருகிறார். குறைவான வசதிகளே இருந்தாலும் மனநிறைவுடன் இக்கலையில் ஈடுபாட்டோடு உள்ளார்.
மங்கையர் குலத்துக்கே பெருமை சேர்க்கும் பீமவ்வா ஷில்லேக்யாதராவை வணங்கி வாழ்த்துவோம்!