பெண் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்கும்போதே...

பாரதியார்...
பாரதியார்...

-மரிய சாரா

‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அறநெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும்  இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்’

பெண்களை அடிமைகளாக நடத்திய காலத்தில் பெண் உரிமைக்கென தனது பேனா முனையைக்கொண்டு யுத்தம் செய்தவர் நம் முண்டாசு கவிஞர் பாரதியார். மேலே உள்ள பாடல் வரிகள் பாரதியாரின் பாடலில் வரும் புதுமைப்பெண் பாடலில் வரும் வரிகள்தான். பாரதியின் ஒவ்வொரு வரிகளும் ஏன் ஒவ்வொரு எழுத்துமே எழுச்சியூட்டுவதாக இருப்பதை நாம் பார்க்கமுடியும்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை - பொதுவாக பெண் என்றால் குனிந்த தலை நிமிராமல் நடக்கவேண்டும், ஆண்களைப் பார்த்தால் தலை தாழ்த்திக்கொள்ள வேண்டும், மெதுவாக நடக்க வேண்டும், பூப்போல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிவைத்து பழக்கி இருந்த காலத்திலேயே பாரதி சொல்கிறார் நிமிர்ந்த நன்னடை என்று.

பெண்களை யார்க்கும் பணித்து, குனிந்து நடக்காமல் நிமிர்ந்து நடக்கின்றவர்களாகவும், எதிரியே ஆயினும் அவனை நேராகப் பார்க்கும் அளவிற்குத் தைரியம் மிக்கவர்களாகவும் பார்க்கிறார் பாரதியார். தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் இலக்கை நோக்கிய நேரான பார்வை பெண்ணுக்கு இருக்கிறது என்கிறார்.

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அறநெறிகளும் - தவறு செய்பவர்களுக்குத்தான் அடுத்தவர்களைப் பார்த்தால் அச்சம் இருக்கும். ஆனால், அறமான பெண்களுக்கு இந்த உலகில் யாருக்கும் அஞ்சவேண்டிய நிலை இல்லை என்பதால், யாருக்கும் அஞ்சவே மாட்டார்கள் என்கிறார்.

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் - இயல்பாகவே திமிர் இருக்கவேண்டும் என்றால் அங்கு அறிவும் இருக்கும். ஆனால், இங்கு பாரதி சொல்லும் திமிர் அகந்தையைப் பற்றியது அல்ல. தன்னாலும் சாதிக்க முடியும்,  தனக்கும் அறிவார்ந்த விஷயங்கள் பற்றிய அறிவு இருக்கிறது என்னும் அந்த அறிவு சார்ந்த ஞானம் மிக்க பெருமையும் இருக்கிறது என்கிறார் பாரதியார்.

women...
women...Image credit - freepik.com

செம்மை மாதர் திறம்புவதில்லையாம் - இதுவரை சொன்ன எல்லாமும் இருப்பதால்தான் செழிப்பாக இருக்கும் பெண்கள் எதற்கும் அஞ்சுவதில்லையாம்.

இன்றையச் சூழலில் இந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் சில பெண்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது என்பது உண்மைதான். ஆனால், எல்லா பெண்களும் அப்படித்தான் என்று சொல்லும் நிலை இன்னும் வரவில்லையே? என்னதான் இப்போதுள்ள பெண்கள் அனைத்திலும் சாதிக்கின்றனர், முன்புபோல் இல்லை என்றெல்லாம் சொன்னாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. பெண்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அவர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்தே பெருகிக்கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
விடா முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்!
பாரதியார்...

பெண்கள் தனித்துவமாக இருப்பதும், தைரியமாக இருப்பதும், பாதுகாத்துக்கொள்வதும் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது. இதற்கு என்ன செய்யவேண்டும்? பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியும். அந்த வயதில் இருந்தே தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்க்கவேண்டியது பெற்றோராகிய நமது கடமை. அப்படி துணிவுடன் நம் பெண் பிள்ளைகள் வளர்ந்தால்தான் பாரதி கண்ட புதுமைப்பெண் கனவு முழுமையடையும், என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள்..?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com