இந்திய நாட்டின் கிராமப்புறச் சித்திரங்கள்!

இந்திய நாட்டின் கிராமப்புறச் சித்திரங்கள்!

மது நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் சித்திரங்களும், கைவேலைப்பாடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை. வேறு எந்த நாட்டிலும் காணமுடியாத அளவில் நம் கிராமத்தவர்கள் - பெரும்பாலும் பெண்கள்  காலம்காலமாக வரைந்த ஓவியங்களின் நுணுக்கத் தையும், நேர்த்தியையும் வெளிநாட்டினர் கண்டு வியக்கின்றனர். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

 மதுபனி

பீஹாரின் மதுபனி என்ற மாவட்ட மக்கள் இயற்கை வண்ணத்தைக் கொண்டு தங்கள் வீட்டுச்சுவற்றிலும், மண் தரையிலும் விரல்களாலும் மரக்குச்சிகளினாலும் வரைந்த ஓவியங்கள் இவை. பெரிய கண்களைக் கொண்ட இதிகாச, புராண கதாபாத்திரங்கள் அல்லது மயில், துளசி மாடம் இவையே பிரதானமாக இருக்கும். சுற்றிலும் இடைவெளியில்லாமல் இலைகளாலும், பூக்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இதற்கு மைதிலி என்று ஒரு பெயரும் உண்டு. ஜனகர், சீதா கல்யாணத்தின் பொழுது  மக்களை தங்கள் வீடுகளை இச்சித்திரத்தினால் அலங்கரிக்கும்படி கேட்டுக்கொண்டார்  என்று ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இப்பொழுது இச்சித்திரங்கள் கான்வாஸிலும், துணிமணிகளிலும் செயற்கை வண்ணங்களில் தீட்டப்பட்டு உலக அளவில் வரவேற்கப்படுகின்றன.

வார்லி

ஹாராஷ்டிரா பழங்குடி மக்கள், குறிப்பாக வார்லி இனத்தவர் தங்கள் வீட்டுச் சுவர்களில் குச்சிகளைக் கொண்டு அரிசி மாவால் தீட்டிய இவ்வோவியங்கள் கிராம வாழ்வை சித்தரிப்பவை. இதன் சிறப்பே, மனிதர்களும் விலங்குகளும் வட்டங்கள், முக்கோணங்களால் குறிக்கப்படும் விதம். தற்பொழுது கான்வாசில் பல நிறங்களில் வரையப்பட்டு வரவேற்பறையின் அலங்காரப் படமாக மாட்டப்படுகிறது.

கலம் காரி

ந்த வகை ஓவியங்கள் ஆந்திராவில் பிரசித்தமானவை. கலம் என்றால் எழுதுகோல். பருத்தித் துணியில் மூங்கில் பேனாவால் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டு தாவரங்களிலிருந்து செய்யப்பட்ட அடர்த்தியான இயற்கை நிறங்களால் வண்ணம் தீட்டப்படும். கடுக்காய், எருமைப்பால் போன்றவற்றை உபயோகித்து துணியை தயார் படுத்துவதிலிருந்து பூக்கள், இலைகள், கொட்டைகளிலிருந்து வர்ணம் எடுப்பது முதல் மிகவும் பொறுமையும், நேரமும், ஈடுபாடும் தேவைப்படும்.  இப்பொழுது இந்த வகைச் சித்திரங்கள் எல்லா வகைத் துணிகளிலும் ப்ரிண்ட் செய்யப்படுகின்றன. கையால் வரைந்தவைகள் அதிக விலையானாலும், அதன் அழகே தனி.

பட்டசித்ரா

து ஒரிசா மாநிலத்தைச் சார்ந்தது. கிட்டத்தட்ட கலம் காரி போலவே துணியில் கோட்டு சித்திரமாக வரைந்து வண்ணம் தீட்டப்படுவது.  அனேகமாக  பகவான் விஷ்ணுவின் கதைகளை இந்தச் சித்திர வடிவில் காணலாம். அதிலும் பெரும்பான்மையாக பூரி ஜகந்நாதர் இடம் பெறுவார். படத்தின் நான்கு புறமும் ஃப்ரேம் போல் கோடு வரைந்து அதில் மிக நுணுக்கமான டிசைன் அச்சடித்தது போல் வண்ணம் தீட்டப்பட்டு வியக்க வைக்கும்.

மாண்டனா

மிகத் தொன்மையான சித்திர வடிவு இது. ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும் பழங்குடி மக்கள் தங்கள் வீட்டுப் பாதுகாப்புக்காகவும் கடவுளை வரவேற்கும் முகமாகவும் தங்கள் வீட்டுச் சுவற்றை சாணி போட்டு மெழுகி அதன் மேல் சுண்ணாம்பு மற்றும் காவியில் தோய்த்த பனை ஓலை முனை, பஞ்சு  கொண்டு வரையப்பட்டவை.  மாண்டன் என்றால் அலங்காரம் என்று பொருள். இவை நம்மூர் கோலங்கள் போன்றே இழைகளாலும், சதுர, முக்கோண கோடுகளாலும் போடப்படுகின்றன. தற்பொழுது துணியில் வரையப்பட்டு தொங்கவிடப்படும் கலைப்பொருளாக விற்கப்படுகிறது.

ராஜஸ்தானி

மிக அழகாக வரையப்படும் இதில் பல வகைகள் உண்டு . மினியேச்சர் பெயிண்ட்ங்கில் இயற்கை சூழலில் ராதா, கிருஷ்ணா, அரச தர்பார், வேட்டை என்று சித்தரிக்கப் பட்டிருக்கும். இன்னொரு வகையான பனிடணி ஓவியத்தில் பெரிய கண்களுடைய ராஜபுதன அழகிகள், நிறைய முத்து மாலைகள் காதணிகளுடன் சல்லாத் துணி போர்த்தி பார்ப்போர் மனம் கவருவர்.

கேரளா ம்யூரல்

கேரளா கோயில்களிலும் அரண்மனைகளிலும் பெரிய பெரிய சுவர் சித்திரங்களாக வரையப்பட்ட இந்த பாணி ஓவியங்கள் கடவுள் உருவங்கள், அவர்களது அவதாரங்கள் ஆகியவற்றையே மையமாகக் கொண்டவை. இதற்கான வண்ணங்கள் கனிமங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் தயாரிக்கப்பட்டு கோந்து சேர்த்து பயன்படுத்தப்பட்டன. கிரீடத்தைச் சுற்றி கதகளியை நினைவுபடுத்துவது போன்ற மெல்லிய நீள இலைகளைப்போன்ற அலங்காரங்கள் இதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த வகை ஓவியங்களும் கான்வாஸில் செயற்கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு வீட்டை அலங்கரிக்கும் கலைப்பொருளாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com