
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் சங்கராந்தி நாளன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில் உற்சவ மூர்த்தியான காமகோடி அம்மன் தை மாதம் காணும் பொங்கல் நாளில் சகல அலங்காரங் களுடன் மண்டபத்தில் கொலுவிருப்பாள். அன்று மட்டும் தேங்காய் நிவேதனம் செய்வதுண்டு. மற்ற நாட்களில் இந்த ஆலயத்தில் தேங்காய் உடைப்பது கிடையாது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு வரதராஜப் பெருமாள் கோயிலில், காணும் பொங்கல் அன்று நிமிஷாசல மலையைச் சுற்றி பெருமாள் வலம் வருகிறார். இந்த மலையில் ரோம ரிஷி என்ற முனிவர் இன்னும் வாழ்ந்து வருவதாக ஐதீகம் உள்ளது. அவருக்கு காட்சி கொடுப்பதற்காகவே இந்தப் பெருமாள் காணும் பொங்கலன்று மலையை வலம் வருகிறாராம்.
நவதிருப்பதிகளில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டத்தில் பொங்கல் தினத்தன்று கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்தபின் ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள். இது 108 திவ்விய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களையும் கள்ளபிரான் வடிவில் தரிசிப்பதற்கான ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தைப்பொங்கல் அன்று 5008 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள்.
முப்பெருமாள் காட்சி விசேஷம்!
காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜ பெருமாள் பொங்கல் அன்று இரவு 10 மணிக்கு பரிவேட்டைக்குக் கிளம்பி அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘ஸ்ரீபுரம்’ நரசிம்ம கோயிலுக்குச் செல்வார். இங்கு வரும்வரை பெருமாளுடன் கூடவே பாசுரம் பாடிக்கொண்டே வருவர் ஆழ்வார்கள். வனபோஜனம் விழா சிறப்பாக நடக்கும். அது முடிந்ததும் பெருமாள் 140 படிகளைக் கடந்து குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாளை வணங்குவார். அதிகாலை 4 மணிக்கு கிளம்பி வரதராஜ பெருமாளும் நரசிம்ம பெருமாளும் திருமுக்கூடல் என்னுமிடத்தில் உள்ள சீனிவாசப் பெருமாளை வணங்கச் செல்வர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது மிகவும் விசேஷமானது.