திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்
Published on

பாகம் - 25 

ஓவியம்: பத்மவாசன்

முப்பாலாம் திருக்குறளின் அறத்துப்பாலில் 27 ஆம் அதிகாரம் தவம்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

தம்மைத்தாமே வருத்திக்கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ்பெற்றே உயர்வார்கள்.

ழத்து ஊமை ராணி மந்தாகினி தேவி தம்மைத்தாமே வருத்திக்கொண்டு காடுகளிலும் மலைகளிலும் கடலிலும் கடுங்குளிர் பனி மழை வெயில் என எதையும் பொருட் படுத்தாமல்  சுந்தரச்சோழருக்கும் அவரின் வாரிசு களுக்கும் எவ்விதத் தீமையும் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்வதே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். அதன் பின் அவர் பொன்னென ஒளிர்ந்ததுமான இரு காட்சிகளை நம் பொன்னியின் செல்வன் வழியே காண்போம். வாருங்கள்...

(சுந்தர சோழரைக் கொல்ல சதி நடப்பதையும், மேல் சாளரத்தின் வழியே கத்தியை வீச ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் திட்டம் தீட்டுவதை ஊகித்துக் கொண்ட மந்தாகினிதேவி தன்னுயிரையும் பொருட்படுத்தாது அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் திட்டத்தை அறிய முயற்சிப்பதும், அச்சதிகாரர்களின் சம்பாஷனைகளை யாரிடமும் கூற இயலாமல் தவிக்கும் தவிப்பும்...)

"வரப் போகும் நன்மை தீமைகளை முன்னாலேயே அறிந்துகொள்ளக் கூடிய இயற்கையான உணர்ச்சி அறிவும் மந்தாகினிக்கு இருந்தது. ஆதலின் ரவிதாஸன் ஏதோ தீய காரியத்துக்காகவே இங்கே வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். ஏற்கெனவே ஈழநாட்டில் அருள்மொழி வர்மனை ரவிதாஸன் கொல்ல முயன்றதையும் அவள் அறிந்திருந்தாள் அல்லவா! ஆதலின் கூட்டத்தோடு கூட்டமாகத் தஞ்சையின் வீதிகளில் சென்றபோது அவள் பார்வை ரவிதாஸனை விட்டு அகலவில்லை.

  குழப்பத்தின் உச்சமான நிலையில் சின்னப் பழுவேட்டரையர் குதிரை மேலேறி வந்த சமயத்தில் ஜனக்கூட்டம் சட சடவென்று கலைந்ததல்லவா? அச்சமயம் ரவிதாஸனும் இன்னொரு மனிதனும் ஒரு சந்துவழியில் அவசரமாகப் புகுந்து செல்வதை மந்தாகினி பார்த்தாள். உடனே அந்தத் திசையைக் குறிவைத்து அவளும் வேகமாகச் சென்று, அதே சந்து வழியில் பிரவேசித்தாள்.

 கடைசியில், அவர்களுடைய துரிதப் பிரயாணம் பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனைத் தோட்டத்தின் பின் மதில் ஓரத்தில் வந்து நின்றது. புயலினால் வேருடன் பறிக்கப்பட்ட மரம் ஒன்று அந்த மதில் மேலே விழுந்து முறிந்து கிடந்தது. ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் அந்த மரத்தின் மீது எளிதில் ஏறி மதிலைக் கடந்து அப்பால் தோட்டத்தில் குதித்தார்கள். அவர்கள் குதிப்பதைப் பார்த்த மந்தாகினி தேவியும் சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மரத்தின் மீது ஏறி அப்பாலிருந்த தோட்டத்தில் இறங்கினாள்.

          நாற்புறமும் நன்றாகப் பார்த்துவிட்டு ரவிதாஸன் திறந்திருந்த நிலவறைக் கதவைச் சுட்டிக் காட்டிச் சோமன் சாம்பவனை அதன் உள்ளே போகச் சொன்னான்.

 ”முதலில் இருட்டில் கண் தெரியாது. அதற்காகக் கதவின் அருகிலேயே நின்றுவிடாதே! உள்ளே கொஞ்சம் தூரமாகவே போய் நின்றுகொள்!" என்றான்

        சோமன் சாம்பவன் நிலவறைக்குள் புகுந்ததும் அவனை இருள் விழுங்கிவிட்டது போலிருந்தது

  பிறகு, ரவிதாஸன் நடைபாதை வழியாகத் திரும்பி நந்தினிதேவியின் வஸந்த மண்டபம் வரையில் சென்றான். அங்கிருந்து பழுவேட்டரையரின் அரண் மனையைப் பார்த்துக்கொண்டிருந்தான். தாதிப் பெண்ணைத் தவிர வேறு யாராவது வந்து விட்டால் அவனும் நிலவறைக்குள் அவசரமாகச் சென்று கதவைச் சாத்திக்கொள்வது அவசியமாயிருக்கலாம் அல்லவா?

            ரவிதாஸன் அவ்விதம் வஸந்த மண்டபத்தில் நின்றுகொண்டு அரண்மனை வாசலையே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மந்தாகினி சிறிதும் சத்தமின்றி நடந்து வந்துதிறந்திருந்த நிலவறைக்குள் பிரவேசித்தாள். அடர்ந்த காடுகளில் நள்ளிரவில் எத்தனையோ நாள் இருந்து பழக்கப்பட்டவளுக்கு அந்த நிலவறையின் இருட்டு ஒரு பிரமாதமா என்ன? சில வினாடி நேரத்தில் கண் தெரிய ஆரம்பித்தது. ரவிதாஸனுடன் வந்தவன் சற்றுத் தூரத்தில் ஒரு தூணுடன் முட்டிக்கொண்டு தவித்ததைப் பார்த்தாள். இவள் அதற்கு நேர்மாறான திசையில் சென்றாள். அங்கே ஒரு படிக்கட்டு காணப்பட்டது. நிலவறைப் பாதை அங்கே கீழே இறங்கிச் சென்றது. படிகளின் வழியாக இறங்கிக் கீழே நின்றுகொண்டாள்.

       சோமன் சாம்பவனுக்கு ஏதோ சிறிது சத்தம் கேட்டிருக்க வேண்டும். "யார் அது? யார் அது?" என்று குரல் கொடுத்தான். அது திறந்திருந்த வாசல் வழியாகப் போய் ரவிதாஸனுடைய காதில் இலேசாக விழுந்தது.

 (மந்தாகினி தேவியை முதன்முதலில் பார்த்த அரண்மனை பெண்டிர் அவரை கொண்டாடி வரும் அழகிய தருணமும் அதைத்தொடர்ந்த தியாக வடிவமும்...)

      சுந்தர சோழரின் சிரிப்பு ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெண்மணிகள் அங்கு வந்தார்கள். முன்னால் மகாராணியும் அவளுக்குப் பின்னால் குந்தவை ஒரு பக்கமும் வானதி ஒரு பக்கமும் பிடித்து இழுத்துக் கொண்டு வர மந்தாகினியும், அவர்களுக்கும் பின்னால் பூங்குழலியும் ஒரு தாதிப் பெண்ணுமாக ஊர்வலம் போல வந்தார்கள். சுந்தர சோழரின் சிரிப்பு அவர்களுக்கும் சிறிது குதூகலத்தை உண்டு பண்ணியிருந்தது. மந்தாகினி அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்ப்பதும் மறு கணம் குனிந்து தரையைப் பார்ப்பதுமாயிருந்தாள். அவளுடைய அலங்காரம் இப்போது  பூரணம் அடைந்திருந்தது. குந்தவைப் பிராட்டி அலங்காரக் கலையில் இணையில்லாத தேர்ச்சி பெற்றவள் என்று அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்தாள். அதற்காகவே சிற்றரசர்கள் தங்கள் மகளிரை இளையபிராட்டியின் தோழியாயிருப்பதற்குப் பழையாறைக்கு அனுப்புவது வழக்கம். குந்தவை தன் முழுத்திறமையையும் ஊமைராணியை அலங்கரிப்பதில் பயன் படுத்தியிருந்தாள். அடி உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் உருத் தெரியாத உணர்ச்சியினால் மந்தாகினியின் தலைக்கூந்தலை நந்தினியைப்போல் ஆண்டாள் கட்டுடன் அலங்கரித்திருந்தாள். இந்த அலங்காரம் முடிந்ததும் பெண்கள் எல்லோருக்குமே அவள் தத்ரூபமாக நந்தினியைப் போலிருந்தது தெரிந்துவிட்டது. காட்டிலே அலைந்து திரிந்த தேக ஆரோக்கியமுள்ள மாதரசியாதலால் பிராயத்திலே இருந்த இருபத்தைந்து வருஷ வித்தியாசம் கூடத் தெரியவில்லை.

  மற்றப் பெண்மணிகள் மந்தாகினி தேவியைச் சிறிது பெருமையுடனேயே அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் பெருமைகொண்டிருந்தார்கள்.

குந்தவை தன்னுடைய அலங்காரத் திறமையை இவ்வளவு நன்றாகக் காட்ட முடிந்தது பற்றிப் பெருமை கொண்டிருந்தாள். பைத்தியக்காரப் பிச்சியாகத் தோன்றியவளை இணையில்லா அழகு வாய்ந்த இளம் பெண்ணாகத் தோன்றுபடியல்லவா அவள் செய்து விட்டாள்? பூங்குழலிக்கோ தன் அத்தைக்கு அரண் மனையில் இவ்வளவு இராஜோபசாரங்கள் நடப்பது பற்றிக் களிப்பு உண்டாகியிருந்தது. அவள் எதிர்பார்த்தற் கெல்லாம் மாறாக இங்கேயுள்ள அரண்மனைப் பெண்கள்  நடந்துகொண்டிருந்தார்கள் அல்லவா

          அதன் பிறகு சதிகாரர்களால் சுந்தர சோழர் மேல் எறியப்பட்ட வேலை தன்னுடலில் தாங்கி உயிர் நீத்தார் மந்தாகினிதேவி. இளவரசர் அருள்மொழிவர்மர் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சிங்காசனம் ஏறியபோது 'ஈழத்து ராணி' என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது 'சிங்கள நாச்சியார் கோயில்' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. 'சிங்காச்சியார் கோயில்' என்ற பெயருடன் ஒரு சிறிய சிதலமான கோவில் இருந்து வருவதை தஞ்சையில் இன்றும் காணலாம்.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப்போல் புகழ்பெற்று உயர்ந்து விட்டார் மந்தாகினி தேவி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com