புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?

Women in saree
Women in saree
Published on

எத்தனையோ ட்ரெண்டிங்கான பல உடைகள் இந்தியாவில் வலம் வந்தாலும், பாரம்பரிய உடையான புடவைக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் இன்றளவும் குறையவே இல்லை. பண்டிகை, வீட்டு விசேஷங்கள் என்றாலே புடவைகளை விரும்பி அணிவதுண்டு. அவ்வாறு, பிடித்து ரசித்து அணியும் புடவையால் புற்றுநோய் ஏற்படும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இது பற்றி ஆய்வு கூறும் கருத்துக்கள் என்ன? இதைத் தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கான விடையை இந்தப் பதிவில் காணலாம்.

பெண்கள் அணியும் புடவைகளால் அவர்களுக்கு சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மற்றும் பீகாரில் உள்ள மதுபானி மருத்துவக் கல்லூரிகளில் பெண்கள் புடவை அணிவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக இந்த இரண்டு மாநிலங்களில் வாழும் நீண்ட காலமாக புடவை அணியும் இரு பெண்களை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதில், உடலை ஒட்டி இறுக்கமாக புடவை அணியும்  பெண்களுக்கு புடவை புற்றுநோய், சேலை மெலனோசிஸ் அல்லது சேலை புற்றுநோய் நோய் ஏற்பட வாய்ப்புகள் இருந்ததையும், அதே சமயத்தில் புடவைக்கு பிடி கொடுக்கும் உள்பாவாடையை இறுக்கி அணியும் பெண்களுக்கு பெட்டிகோட் புற்றுநோய் அல்லது பாவாடை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர்.

புடவைகளையோ அல்லது உள்பாவாடைகளையோ இறுக்கிக் கட்டுவதால் சருமத்தில் ஏற்படும் உராய்வு, அதிகப்படியான அழுத்தம் மற்றும் அதிகப்படியான வியர்வை போன்றவை நாள்பட்ட சரும அழற்சி மற்றும் சருமத்தில் புண் ஏற்பட வழிவகுக்கலாம். சில நேரங்களில் இவை சருமப் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
புடவை அணிவதில் ஆர்வமா? இந்த 15 டிப்ஸ்களை கவனத்தில் வையுங்கள்!
Women in saree

சருமப் புற்றுநோயை எவ்வாறு  கண்டறிவது?

  • இடுப்புப் பகுதி அல்லது வயிற்றுப் பகுதியின் சருமத்தில் கருப்பாக இருத்தல் அதாவது ஹைப்பர்பிக்மென்டேஷன் ஏற்படுதல்.

  • இடுப்புப்பகுதியில் சருமம் தடித்து கட்டிகள் வருவது மற்றும் சிவப்பு, அரிப்புத் திட்டுகள் காணப்படுதல்.

எவ்வாறு தடுக்கலாம்?

  • மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் புடவைப் பட்டைகள் அணிவதைத் தவிர்க்கலாம். 

  • மென்மையான மற்றும் வியர்வையை உறிஞ்சக்கூடிய பாவாடைகள் போன்ற உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

  • முடிந்தவரையில் உடலுடன் பொருத்தக்கூடிய மென்மையான, லேசான புடவைகளை அணியலாம். அல்லது புடவையை  சிறிது தளர்வாக இருக்குமாறு அணிந்து கொள்ளலாம். புடவை அணியும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டால், அது குணமடையும் வரை தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • ஆடைகளையும் உடலையும் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • இடுப்புப் பகுதியில் சருமப் பிரச்சனைகளை உணர்ந்தால் புடவை அணியும் பெண்கள் மருத்துவரை பரிசோதித்து சிகிச்சை பெறுவது அவசியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com