

சென்னை பாரத் கலாச்சாரில் நடைபெற்ற ‘நவரத்னா’ விழா, 80 வயதை எட்டிய பரதநாட்டிய, கூச்சிப்புடி கலைஞர் ரத்னா குமாருக்கு, தங்கை சீதா ரத்னாகர் அளித்த அன்புப் பரிசாக மலர்ந்தது. புகழ்பெற்ற கலைக் குடும்பத்தில் பிறந்த ரத்னாவின் எழுபத்தைந்து ஆண்டுகால நாட்டியப் பயணத்தை, புகைப்படங்கள், அரிய ஒலிப்பதிவுகள், காணொளிகள், குருபக்தி, நட்பு, அன்பு ஆகியவற்றுடன் கொண்டாடிய அரிய நிகழ்வாக இது அமைந்தது.
அன்பு, நட்பு, குருபக்தி மற்றும் கலைக்கு அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டாடிய அரிய விழாவாக அமைந்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராகக் கலந்து கொண்ட நாள் ஒவ்வொரு நிமிடத்தையும் அணுவணுவாக ரசித்தேன். அதை கல்கி ரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ரத்னா குமார் அவர்கள் புகழ்பெற்ற கலைக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாயார் விஞ்ஜமூரி அனசூயாதேவி, ஆந்திர நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்து, வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள் மற்றும் நூல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரிய பாடகியும் வாக்கேயக்காரரும் ஆவார். கர்நாடக இசை நோட்டேஷன்களுடன் ஏழு தொகுப்புகளை வெளியிட்டதோடு, தனது எண்பதாவது வயதிற்குப் பிறகும் மூன்று நூல்களை எழுதியவர். அவருடைய சுயசரிதையான ‘அசமான அனசூயா’ அவரது தொண்ணூற்றைந்து வயதில் வெளியிடப்பட்டது.
தந்தை அவசரலா சேஷகிரி ராவ், தொழிலால் பொறியாளராக இருந்தாலும், சிறந்த பாடகரும் கலைஞருமாவார். பி. என். ரெட்டி இயக்கிய ‘சுமங்கலி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு, அக்கால வழக்கப்படி பாடல்களையும் தாமே பாடியிருந்தார்.
இத்தகைய திறமைமிக்க பெற்றோரின் மூத்த மகளான ரத்னா குமார், ஐந்தாவது வயதில் பரதநாட்டியப் பயிற்சியைத் தொடங்கி, ஒன்பதாவது வயதில் குரு கே. ஜே. சரசா அவர்களின் முதல் மாணவியாக அரங்கேற்றம் கண்டார். பின்னர் வேதாந்தம் ஜகந்நாத சர்மா, வேம்பட்டி பெத்த சத்யம் மற்றும் குரு வேம்பட்டி சின்ன சத்யம் ஆகியோரிடம் கூச்சிப்புடி பயின்று, இரு நடன மரபுகளிலும் சிறந்து விளங்கினார்.
திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா சென்று, ஹூஸ்டனில் Anjali Center for Performing Arts-ஐ நிறுவி, நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியதோடு, இந்தியாவின் முன்னணி கலைஞர்களுக்கு அமெரிக்காவில் எண்ணற்ற கலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தார்.
‘ரத்னமாலா’ விழாவின் ஒவ்வொரு அம்சத்தையும் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திருந்தார் திருமதி சீதா ரத்னாகர். 'நவரத்னா' என்ற பொருத்தமான தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சமன்விதா சசிதரனின் இறைவணக்கத்துடன் இனிதே தொடங்கியது.
முதல் நிகழ்வாக 'சரச நடனமாலா' இடம்பெற்றது. குரு கே. ஜே. சரசா அவர்களின் ஒன்பது மாணவியர் இணைந்து, அவ்வையாரின் "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்ற விருத்தத்தை, திருமதி கிரிஜா ராமசாமி அவர்களின் இனிய குரலுக்கு நடனமாக வழங்கினர். இவர்களில் பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சக மாணவிக்காக மீண்டும் மேடையேறியது, ரத்னா குமாருக்கு மறக்க முடியாத பரிசாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து தலைசிறந்த நடன மணிகளும் குருமார்களுமான ஊர்மிளா சத்யநாராயணா, ஸ்ரீகலா பரத், காயத்ரி சந்திரசேகரன், ஷ்ரத்தா மற்றும் வர்ஷா ராஜ் ஆகியோர் இணைந்து நடேச கௌத்துவம் வழங்கினர். குரு கே. ஜே. சரசா அவர்களின் நட்டுவாங்கமும், திருமதி கனகதுர்காவின் பாடலும் ஒலித்த அரிய ஒலிப்பதிவு, அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த முக்கிய ஒலிப்பதிவை ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தியிருப்பவர் அன்றைய நாயகி ரத்னா குமார்.
தொடர்ந்து, கவிதா ராமு ஐஏஎஸ், டாக்டர் ஸ்வர்ணமால்யா கணேஷ் மற்றும் லாவண்யா சங்கர் ஆகியோர் ஊத்துக்காடு வேங்கடகவி இயற்றிய ‘'மரகதமணி' என்ற பிரபல பாடலுக்கு நடனமாடினர். ரத்னா குமார் மற்றும் சீதா ரத்னாகர் பல மேடைகளில் இணைந்து ஆடிய இந்தப் படைப்பு, பழைய இனிய நினைவுகளை மீட்டெடுத்தது. இதிலும் குரு கே. ஜே. சரசா அவர்களின் ஜதிகள் ஒலித்தன.
'சரச நடனமாலா' நிறைவில், ரத்னா குமார் அவர்கள் மேடையேறி அனைத்து கலைஞர்களுக்கும் அன்புப் பரிசுகள் வழங்கி தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
பின்னர் இடம்பெற்ற 'ரத்னமாலா', ரத்னா குமாரின் வாழ்க்கைப் பயணத்தை புகைப்படங்கள், அரிய ஒலிப்பதிவுகள் மற்றும் காணொளிகளின் துணையுடன் அழகாகச் சொல்லிய நிகழ்வாக அமைந்தது.
இதனை டாக்டர் அனிதா ரத்னம் தமக்கே உரிய பாணியில் மனதைத் தொடும் வகையில் வழங்கினார். கிருத்திகா சுரஜித் அவர்கள் ரத்னா குமார் பெற்ற விருதுகள் மற்றும் பட்டங்களைத் தொகுத்து வழங்க, சீதா ரத்னாகர் பல சுவையான சம்பவங்களை, நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்தார்.
தன் வாழ்க்கைப் பயணம் கண்முன் விரிந்ததைக் கண்டு ரத்னா குமார் நெகிழ்ச்சியடைந்தார்.
சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த ரத்னா பாப்பாவின் அரிய காட்சிகள், கிருஷ்ணர் வேடமேற்று நடித்த திரைக்காட்சிகள், பரதநாட்டியம் மற்றும் கூச்சிப்புடி அரங்கேற்றப் படங்கள், பழைய நிகழ்ச்சி பதிவுகள் ஆகியவை பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன.
நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர் அனிதா ரத்னம், கிருத்திகா சுரஜித் மற்றும் சீதா ரத்னாகர் ஆகியோருக்கு ரத்னா குமார் அவர்கள் அன்புப் பரிசுகள் வழங்கி தனது நன்றியைத் தெரிவித்தார்.
தொடர்ந்து நாட்டிய உலகின் முன்னணிக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக மேடையேறி, ரத்னா குமாரின் கலைப்பணியையும் மனிதநேயத்தையும் பாராட்டி வாழ்த்துரைகளை வழங்கும் ‘நவரத்னமாலா’. டாக்டர் பத்மா சுப்ரமணியம், திருமதி சாந்தா தனஞ்ஜெயன், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், டாக்டர் அனிதா ரத்னம், திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன், டாக்டர் வசந்த லக்ஷ்மி நரசிம்மாச்சாரி, கூச்சிப்புடி கலைஞர் எம் வி என் மூர்த்தி, நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ரத்னா குமாருடன் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தனஞ்செயன் அவர்களின் வாழ்த்துரை ஒளிப்பதிவாக மேடையில் வழங்கப்பட்டது. அலர்மேல்வள்ளி அவர்கள் தமது வாழ்த்துரையை எழுதி அனுப்ப அதை சீதா ரத்னாகர் மேடையில் வாசித்தார்.
நிறைவாக ரத்னா குமார் அவர்கள் மேடை ஏறி வழங்கிய உணர்வுபூர்வமான பேச்சு, நன்றி ததும்பிய அவரது மனதை ரசிகர்களுக்கும் உணர்த்தியது. சென்னையில் இந்நிகழ்வு நிறைவேற காரணமாக இருந்த ஒய் ஜி மகேந்திரா அவர்கள் தனது துணைவியார் சுதா மகேந்திரா அவர்களுடன் மேடையேறி, கலகலப்பான தனது உரையின் மூலம் கனத்த இதயங்களை இலகுவாக்கினார்.
இந்நிகழ்வின் மூலம் இந்திய பாரம்பரியக் கலை உலகிற்குத் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த மூத்த கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றியும், சகோதரத்துவத்தின் அரிய பிணைப்பு மேடையில் எவ்வாறு ஒரு கலை வடிவமாக மலர்கிறது என்பதையும் நீங்கள் உணர்ந்து மகிழலாம்.