

ஓவியம்: பிள்ளை
தாத்தா ராமநாதனும், பேரன் அர்ஜுனும் காரில் ஏறிக்கொண்டனர். காரை ஓட்டிய தனது மகன் ஸ்ரீதருடன் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார் ராமநாதன். தாத்தாவும், அப்பாவும் பேசிக்கொள்வதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்து வயது அர்ஜுனுக்கு, தாத்தவை எங்கோ தனியாக ஒரு இடத்தில் கொண்டுவிடச் செல்கிறோம் என்று லேசாகப் புரிந்தது.
“தாத்தா! அப்பாவுக்கும், உங்களை மாதிரி வயசான காலத்துல உடம்பு சரியில்லாம போனா, இப்படித்தான் கொண்டு விடணுமா? இது அம்மாவுக்குத் தெரியுமா?” என அர்ஜுன் கேட்கையில், ஸ்ரீதருக்கு மனதை என்னவோ செய்தது. ராமநாதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
இதன் பின்னணி என்ன? தனியார் அலுவலகமொன்றின் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ராமநாதன், தன் மனைவியின் இறப்பிற்குப் பின் மகன் ஸ்ரீதருடன் வசித்து வந்தார். தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்த குஜராத்திப் பெண் தேவியை, ஸ்ரீதர் விரும்ப, சந்தோஷமாக இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் ராமநாதன். பேரன் அர்ஜுனும் பிறந்தான்.
அனைத்து வேலைகளையும் செய்வது, பேரனைக் கவனித்துக்கொள்வதென, சுறுசுறுப்பாக ராமநாதன் செயல்பட, ஸ்ரீதரும், தேவியும் ஆஃபீஸ் செல்வதும், ஜாலியாக ஊர் சுற்றுவதுமாக இருந்தனர். தேவியும் அன்பாக இருந்தாள்.
போறாத வேளை! ஒருநாள் கிச்சனின் சிந்தியிருந்த தண்ணீரைக் கவனிக்காமல், ராமநாதன் காலை அதன் மேல் வைக்க, கீழே விழுந்து செம அடி. மயங்கிவிட்டார். அன்று ஸ்ரீதர் வீட்டிலிருந்ததால், உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தான். மருத்துவரும் செக் செய்துவிட்டு, “ராமநாதனுக்கு டயபடீஸ் மற்றும் T.B. இருப்பதாகத் தெரிவித்து, கால்விரல்களை எடுக்க வேண்டும்” என்றார். ஸ்ரீதருக்கு ஒரே ஷாக். தன்னைப் பற்றிக் கவனிக்காமலேயே, இவ்வளவு வருடங்கள் இருந்திருக்கிறார். ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார். நல்ல ரெஸ்ட் அவருக்குத் தேவையென்று மருத்துவர் கூறியிருந்ததால், ஸ்ரீதரும், தேவியும் அவரை நன்கு பார்த்துக்கொண்டனர். தேவிக்கு வீட்டு வேலையும் சேர்ந்துகொண்டதால், வெளியில் சுற்றுவதில்லை. முகம் சுளிக்காமல், சலித்துக்கொள்ளாமல் உதவினாள்.
ராமநாதனுக்குத்தான், மனசு சரியில்லாமல் போக, கூட்டுக்குள் ஒடுங்கிய பறவையைப் போல உணர்ந்தார். ஸ்ரீதரும் அதிகம் பேசுவதில்லை. பேரன் அர்ஜுன் மட்டும் அவ்வப்போது தாத்தாவிடம் கதை கேட்பான்; ஸ்கூல் பற்றிக் கூறுவான்.
“தாத்தாவை டிஸ்டர்ப் செய்யாதே!” என தேவியும், ஸ்ரீதரும் அவனிடம் சொல்வார்கள்.
இவர்கள் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கிய தேவியின் அம்மா, எல்லாவற்றையும் கவனித்தாள். திரும்பச் செல்கையில், பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு, ராமநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள். இதைக் கவனித்த ராமநாதன், அன்றைய இரவு ஸ்ரீதரைக் கூப்பிட்டு, தன்னை ஏதாவதொரு சீனியர் சிட்டிசன் ஹோமில் சேர்க்கக் கூறுகையில், ஸ்ரீதர் மறுத்தான்.
அவர் மீண்டும் – மீண்டும் வற்புறுத்திய காரணம், தேவியிடம் கூறாமல், ஹோம் ஒன்றில் பேச வைத்து, அங்கே கூட்டிச் செல்கையில்தான், அர்ஜுன் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
ஸ்ரீதரின் மனசு கலங்க, பதில் கூற முடியவில்லை.
“அர்ஜுன்! கொஞ்சம் பேசாமல் இரு” என்ற ராமநாதன்,
“ஸ்ரீதர்! போற வழியில் இருக்கிற துர்கை அம்மன் கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுச் செல்லலாம். உன் அம்மாவுக்கு மிகவும் பிடித்த அம்மன்!” எனக் கூற,
ஸ்ரீதர் கோயிலை நோக்கிக் காரைச் செலுத்தினான். கோயில் வாசலில் காரை நிறுத்திவிட்டு மூவரும் உள்ளே செல்கையில்,
தேவி அங்கே நின்றுகொண்டிருக்க, இவர்களுக்கு ஒரே ஷாக்.
“தேவி! நீ இங்க... எப்படி?”
“அப்பாவுக்கு உடம்பு சரியாக வேண்டுமென துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்குப் போட வந்தேன். இந்த துர்கை அம்மனுக்கு 11 செவ்வாய்க்கிழமைகள் எலுமிச்சை விளக்குப் போட்டால் உங்களுக்குச் சரியாகும் என்று என் அம்மாதான் சொன்னார்கள்” என்றாள் தேவி.
ராமநாதனும், ஸ்ரீதரும் திருதிருவென முழிக்கையில், அர்ஜுன் “வாங்க தாத்தா வீட்டுக்குப் போகலாம்” என்றான் உற்சாகமாக.
அப்புறமென்ன...!
மூவராக வந்த காரில், நால்வராக வீடு திரும்பினர்.