சகோதரிக்கு ஒரு சீர்!

பாட்டி சொன்ன கதை!
ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

ப்போதெல்லாம் நமது நாட்டில் கொள்ளைக்காரர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை ‘தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்’ என்று மக்கள் பயத்துடன் சொல்லிக்கொள்வது வழக்கம். துளியும் ஈவு இரக்கம் இல்லாதவர்களாக கருதப்படும் அந்தக் கொள்ளைக் காரர்களுக்குள்ளும் மென்மையானவர்கள் இருந்தார்கள் என்று அனைவரும் தெரிந்துகொள்ளும்படி ஓர் உண்மைச் சம்பவம் எங்கள் முன்னோர்கள் காலத்தில் நடைபெற்றது.

காவிரியை ஒட்டிய வளமான கிராமம் அது. அதில் மிகப் பெரிய செல்வந்தர் யஞ்க்ய நாராயண சர்மா. அவருக்கு மீனாட்சி என்ற அழகிய அன்பான மனைவி, குழந்தைகளும் இருந்தார்கள். பணம் கொழுத்த பலத்தால், எப்போதும் காவிரியின் அக்கரையில் உள்ள தாசி வீட்டில்தான் அவர் எந்நேரமும் பொழுதைக் கழித்தார்.

ருநாள் அந்தி சாயும் நேரம். ஊருக்குள் கொள்ளையர்கள் வரப்போவதாகச் செய்தி பரவியது. செல்வந்தர்கள் எல்லோரும் நடுநடுங்கித் தவித்தனர். ஆனால், நம் கதாநாயகியான மீனாட்சியம்மை மட்டும் துளியும் கலங்கவில்லை.

வாசலில் கோலமிட்டாள். வீடெங்கும் விளக்கேற்றி வைத்தாள். சமையற்காரர்களை அழைத்து இருபத்தைந்து பேருக்கு விருந்து தயார் செய்யச் சொன்னாள். வேலைக்காரர்களும், சமையற்காரர்களும் திகைத்தனர். “ஒரு பக்கம் அய்யாவும் இல்லை, மறுபுறம் கொள்ளையர்கள் வருவதாக ஊரே நடுங்கும் இந்த வேளையில் யார் விருந்தினராக வரப்போகிறார்கள்? எசமானியம்மாவுக்கு புத்தி கலங்கிவிட்டதா?” எனப் பேசிக்கொண்டனர்.

மீனாட்சியம்மாள் செய்ய வேண்டிய பதார்த்தங்களை விரைந்து செய்யும்படி பணிந்துவிட்டு, பூஜையறையில் நுழைந்தாள். நன்றாக இருட்டிவிட்ட நேரம். அந்த ஊருக்குள் தீவட்டிகளுடன் கொள்ளையர்கள் இருபது பேர் நுழைந்து, எதிர்ப்பட்ட வீடுகளைச் சூறையாடிவிட்டு, மீனாட்சி அம்மாளின் வீட்டை அடைந்து, அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்:
சூப்பரா சுவைக்கலாம் தக்காளி தோசை!
ஓவியம்; சேகர்

வாசலில் கோலம், மாவிலைத் தோரணம், விளக்கு வெளிச்சத்தில் மின்னும் அந்த வீட்டில், ஏதோ விருந்தாளிகளுக்கான ஏற்பாடு நடப்பதைப் பார்த்தனர். அதற்குள் மீனாட்சி அம்மாள் “வாருங்கள் வாருங்கள்” என்று அவர்களை எதிர்கொண்டாள். அவளது முகத்தில் தவழ்ந்த தெய்விகப் புன்னகையைக் கண்டு கொள்ளையர்கள் ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர்.

கால் அலம்ப தண்ணீர் கொடுத்தாள். எல்லோரும் உள்ளே நுழைந்தனர். கூடத்தில் வாழையிலைகளில் விதவிதமான உணவுகள், நாசியைத் தூண்டும் மணத்துடன், பார்க்கும்போதே நாவில் நீர் சுரக்கச் செய்தது.

“முதலில் எல்லோரும் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுங்கள். பிறகு பேசலாம்” என்ற மீனாட்சி அம்மாளின் அன்புக் கட்டளையை ஏற்று, கொள்ளையர்கள் வரிசையாக உட்கார்ந்துவிட்டனர்.

எப்போது, எங்கே, என்ன சாப்பிட்டார்களோ? அதனால் சுடச்சுட பரிமாறப்பட்ட உணவுகளை அள்ளி, அள்ளி அவர்கள் சாப்பிட்ட விதம் பார்த்து, மீனாட்சி அம்மையின் தாயுள்ளம் பனித்தது. தானே உபசரித்துப் பரிமாறினாள். கடைசியாக சுடுசாதம் போட்டுவிட்டு, “அண்ணன்களே! ராத்திரியில் தயிர் சாதம் உடலுக்குக் கெடுதல் செய்யும். அதனால் இந்தப் பாலை ஊற்றிச் சாப்பிடுங்கள்” என்று பெரிய வெள்ளிச் சொம்பில் சர்க்கரை, ஏலப்பொடி கலந்த பசும்பாலை எல்லோருக்கும் பரிமாறினாள்.

எல்லோரும் சாப்பிட்டுக் கைகளை கழுவிக்கொண்டதும், மீனாட்சியம்மாள் தன் மூக்குத்தியிலிருந்து, வீட்டில் உள்ள எல்லா நகைகளையும், கொத்துச்சாவியையும், ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்பு வைத்து கொள்ளைக்காரத் தலைவன் முன் வைத்து வணங்கினாள்.

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

“அண்ணா, என் தாலியைத் தவிர எல்லாம் வைத்து விட்டேன். தயவுசெய்து இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு எனக்கும், என் குழந்தைகளுக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் விட்டு விடுங்கள்” என்று கண்ணீருடன் மண்டியிட்டாள்.

கொள்ளைக்காரத் தலைவன் பதறினான். “அம்மா, எழுந்திரு. முதலில் இவற்றையெல்லாம் அணிந்துகொள். நானும் பிறந்ததிலிருந்து திருடனாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் இதுநாள் வரை உன்னைப்போல் அன்பாக, ஆசையாக யாரும் என்னை நடத்தவில்லை. எல்லோரும் என் பின்னே ஏசுவது எனக்குத் தெரியும்.  நீ மட்டும்தான் உண்மையான சகோதரர்களைப்போல் எங்களை நடத்தி, பால் சோறும் போட்டாய். எங்களுக்குக் கடவுள் கொடுத்த தங்கை நீ. இனி இந்த ஊரில் நாங்கள் எப்போதும் திருட மாட்டோம். நான் உயிருடன் இருக்கும் வரை உனக்குத் தவறாமல் பொங்கல் சீர் கொடுப்பேன். போய் வருகிறேன் தங்கச்சி” என்று தன் தோழர்களுடன் விடைபெற்றான்.

இதையும் படியுங்கள்:
விண்ணுலக ஆப்பிளின் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?
ஓவியம்; சேகர்

அவன் சொன்னதுபோல், வருடா வருடம் பொங்கலுக்கு முன் இரவு வீட்டு வாயிலில், கட்டுக் கரும்பு, மஞ்சள் கொத்துக்கள், வாழைத்தார், வெற்றிலைப் பாக்கு இருக்குமாம்.

ஊரே வியக்கும் இந்த அதிசயம், சுமார் பதினைந்து வருடங்கள் தொடர்ந்ததாம். ஒரு பொங்கலுக்கு சீர் வரவில்லை. மாறாக அந்தக் கொள்ளைத் தலைவன் இறந்த செய்திதான் வந்தது. ஒருநாள்  தன் கையால் சோறு சாப்பிட்டு, வருடந்தோறும் சீர்  கொடுத்த அந்தச்                 சகோதரனுக்காக மீனாட்சியம்மாள் கண்ணீர் சிந்தினாளாம்.

இந்தச் சம்பவத்தை எங்கள் தாயார், பொங்கல் சமயத்தில் கட்டாயம் கூறுவது வழக்கம். பெரிய மனிதர்கள் யார், திருடர்கள் யார் என்று கண்டுகொள்ள முடியாத, இந்தக் காலகட்டத்தில் ஒருவேளை செஞ்சோற்றுக்கடனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த கொள்ளைக்காரனின் நேர்மை நெகிழ வைக்கிறது.

- ராஜ்யலக்ஷ்மி, ஹைதராபாத். 

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஜனவரி  2011இதழில் வெளியானது இக்கதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com