உப்பு சொஜ்ஜியும் இனிப்பு பஜ்ஜியும்!

உப்பு சொஜ்ஜியும் இனிப்பு பஜ்ஜியும்!

படம்; பிரபுராம்

மாலை மணி ஐந்து. பள்ளி விட்டு வந்த குமாரு அம்மா கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெளியில்  சென்றபோது அம்மாவின் அதிகார குரல்.

“ஏ குமாரு  எங்கடா கிளம்பிட்டே?”

”விளையாடத்தாம்மா.”

“ஏண்டா பக்கத்து வீட்டு பழனி ஸ்கூல் விட்டு வந்ததுமே படிக்க  உட்கார்ந்துட்டான். அவன் குரல் என்னமா கணீர்னு  கேட்குது. அவன் அம்மா என்னன்னா ‘என் பையனை டாக்டருக்குச் சேர்க்கப்போறோம். அதான் கடுமையா உழச்சு படிச்சிகிட்டே இருக்கான்னு பெருமையா சொல்றாங்க. நீ என்னடான்னா எப்ப ஸ்கூல் விடும். எப்ப விளையாட போகலாம்னுட்டே பொறுப்பு இல்லாம இருக்கே. போய் ஒழுங்கா பாடத்தை படிடா. ஏதோ ஒரு ஆங்கில போயம் மனப்பாடம் ஆகலேன்னு சொன்னியே. அதை உருப்போடு. இன்னும் அரை மணியிலே சமையலறை வேலை முடிச்சிட்டு வந்து கேட்பேன். மவனே ஒழுங்கா சொல்லாட்டி இனிமே வாய் பேசாதுடா. இலுப்பக்கரண்டியால சூடுதான் பேசும். போடா போய் படி. ம்.ம்…” அவள் படபடத்தாள்.

“அம்மா இன்னிக்கு நம்ம தெருவுக்கும் அடுத்த தெரு பசங்களுக்கும் கிரிக்கெட் போட்டி. நான்தான் விக்கெட் கீப்பர். தயவு செஞ்சு விடுங்கம்மா.” குமாரு கெஞ்சினான். ஆனால், தாய் விடுவதாக இல்லை. மாறாக வாசக் கதவை தாளிட்டு பூட்டி சாவியை தன் இடுப்பில் சொறுகிக் கொண்டாள்.

ச்…சே... எட்டாவது படிக்கும் குமாரு மனம் நொந்தபடி ஆங்கில புத்தகத்தை எடுத்து போயத்தை பார்க்க லானான்.

அப்போது  அவன் தந்தையின் தொலைபேசி அழைப்பு வரவே, உடன் தாய் ஓடிச்சென்று தொலைபேசியை எடுத்துப் பேசினாள்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் தன் அலுவலக புது மேலதிகாரியையும் அவர் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வர இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு இனிப்பாக கேசரியும் காரத்துக்கு ஏதாவது பஜ்ஜியும் செய்து தயாராக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தி அவசரம் அவசரமாகப் பேசினார்.

தலையாட்டிய குமாரின் தாய் உடன் அடுக்களை சென்றாள். பக்கத்து வீட்டு பழனியின் வெங்கல குரல் கேட்டு சலிப்படைந்தவள் வேகவேகமாக  கேசரியை செய்து முடித்து பஜ்ஜியையும் போட்டு தயார் செய்து குமாரிடம் வந்தாள்.

“ஏய் கொண்டா ஆங்கில புத்தகத்தை. இப்ப மவனே அந்த ஆங்கில போயத்தை மட்டும் நீ ஒழுங்கா  சொல்லாட்டி  இருக்குடா உனக்கு கச்சேரி” என்றவள் அவன் புத்தகத்தை வடுக்கென்று பிடிங்கினாள்.

“அய்யோ அம்மா அந்த ரகுபய கோட்டை விட்டுட்டான். அவனுக்கு விக்கெட்கீப்பிங்கே வராது. அய்யோ நாங்க கேவலமா தோற்கப்போறோமே.”  குமாரு சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர்.

“ஏய் குமாரு என்னடா நான்  ஒண்ணு கேட்டா நீ ஒண்ணு சொல்லி அழறே.  உன் கவனம் எங்கடா இருக்கு?” அவள் ஓங்கி அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள்.  “ஏண்டா நீ இப்படி இருக்கே. அவள் கோபத்தில் கத்தி அவன் ஆங்கில புத்தகத்தை வீசி எறியவும் வாயில் கதவு தட்டும் சத்தம்.

ஓ... தன் கணவரும் அவர் மேலதிகாரியும் வந்து விட்டனர் என்பதைப் புரிந்துகொண்டவள் குமாரை ஒரு அறைக்குப் போகச்சொல்லி கதவை தாளிட்டவள், கதவைத் திறந்து தன் கணவரையும் அவர் மேலதிகாரி மற்றும் அவர் மனைவியை வரவேற்றாள். சிறிது நேர அறிமுகச் சந்திப்புக்குப் பின் டிபனை எடுத்து வரும்படி கணவர் அறிவுறுத்தவே அவள் டிபன் எடுத்து வந்தாள்.

“ஆகா. புது மாதிரியா இருக்கே. இது மாதிரி நாம சாப்பிட்டதுல்லீங்க இல்லியா... மேலதிகாரியின் மனைவி அவள் கணவரிடம் பஜ்ஜியின் சுவையைச் சொல்லி சிரித்த படியே சிறிது சாப்பிட்டு விட்டு மீதியை வைத்துவிட்டாள்.

குமாரின் தாய் ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் அப்படி கூறிய மேலதிகாரியின் மனைவி ஏன் முழுவதும் சாப்பிடாமல் வைத்துவிட்டாள் என்ற சந்தேகமும் கொண்டு தன் கணவரைப் பார்த்தாள்.

“சரி நீ உடனே இனிப்பை கொண்டு வை” என்றார். “ஓ. சாரிங்க. அதைத்தானே முதலில் கொண்டு வந்திருக்கனும். மறந்துட்டேன்”  என்றவள் ஓடிச்சென்று கேசரியை எடுத்து வந்தாள். பெருமையுடன் அதைப் பரிமாறவும் அதை ஒரு வாய் போட்டுக்கொண்ட மேல் அதிகாரிக்கு  அப்படியே குமட்டிக்கொண்டு வந்தது. குமாரின் தந்தைக்கு அது அவமானமாகப் படவே மிகவும் பணிவுடன் காரணம் கேட்க, மேல் அதிகாரி காரணம் கூறாமல் மழுப்பியபடி ஏதோ ஒப்புக்குப் பேசிவிட்டு பின் தன் மனைவியுடன் அங்கிருந்து விடைபெற்று சென்று விட்டார்.

“அடியே அப்படி நீ என்னதான் செய்திருக்கிறாய் பார்ப்போம்” என்றவர் அதை சாப்பிட்டபோதுதான் விவரம் அறிந்தார்.  பஜ்ஜி முழுக்க முழுக்க இனிப்பாகவும் கேசரி முழுக்க முழுக்க உப்பாகவும் இருந்தது. “ஓ. மைகாட். நீ சர்க்கரையும் உப்பையும்  மாற்றி போட்டிருக்கியே! ச்சே. எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? என் மனைவி கேசரியும் பஜ்ஜியும் அவ்வளவு நல்லா செய்வான்னு சொல்லி அழச்சிட்டு வந்தேன். புது  மேலதிகாரியின் மனைவியும் உன் கிட்ட கத்துக்கிடறேன்னு வேற என்கிட்ட சொன்னாங்க. நீ என்னடான்னா காரியத்தையே கெடுத்துட்டியே. அதுக்கு  என்ன காரணம்? இது ஏன் நிகழ்ந்தது?” என்று அவர் பலவாறாக அவளைத் துறுவி துறுவி விசாரிக்கவும் கடைசியில் உண்மை புரிந்துகொண்டார்.

“பக்கத்து வீட்டு பழனி. அவன் டாக்டராகப் போறான். தன் மகன் குமார் படிக்காம விளையாடிட்டே இருக்கானேன்னு உனக்கு ஆதங்கம். பழனி மீது பொறாமை.  அதனால நீ உன் நிலை இழந்து உப்புக்கும் சர்க்கரையும் சர்க்கரைக்கு உப்பையும் போட்டு என்னையும் அவமானப்படுத்தி விட்டாய். அது சரி எங்கே நம் குமாரு?” என்றபோது அவன் அழுதுகொண்டே வந்தான்.  “ஏண்டா அழறே?” என்று அவர் காரணம் கேட்டபோது விவரத்தைக் கூறினான் குமார்.

அவ்வளவுதான் அவர் தன் மனைவியிடம் கடுப்பானார். “உன் கவனச்சிதைவுக்குக் காரணம் புரிந்தது அல்லவா. விளையாட வேண்டிய சமயத்தில் விளையாடனும். படிக்க வேண்டிய சமயத்தில் படிக்கச் செய்யனும். புலியைப் பார்த்து பூனைக்கு சூடு போடுவது எவ்வளவு முட்டாள்தனம். உன்  செயலும் அதையேதான் ஒத்திருக்கிறது. இனியாவது அப்படி செய்யாதே. உன் கவனச்சிதைவே உன் நிலை எவ்வளவு தவறானது என்று உணர்த்தியிருக்கும்” என்று தன் மனைவியைக் கண்டித்தவர் உடன் குமாரை விளையாடச் செல்லுமாறு கூற, அவன் ஆர்வத்துடன் விளையாட்டுத் திடலுக்கு ஓடினான்.

நீதி: சிறார்களே கல்வி  எந்த அளவு முக்கியமானதோ அதேபோல் விளையாட்டும் அவசியமே. அதனால் படிக்கும் சமயத்தில் படிக்க வேண்டும். விளையாடும் சமயத்தில் அதில் முழு கவனம் செலுத்தி ஆட வேண்டும். இதுதான் ஒரு மாணவப்பருவத்தின் முழு வெற்றிக்கு அடித்தளம் குழந்தைகளே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com