மிரளவைக்கிறதா மெனோபாஸ்? பாதிப்புகள் என்னென்ன?

மருத்துவம்!
மிரளவைக்கிறதா மெனோபாஸ்? பாதிப்புகள் என்னென்ன?

டுத்தர வயதுப் பெண்கள் காரணமே இன்றி திடீர் திடீரென கோபப்படுவது, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, சட்டென அழுவது போன்ற மனநிலை மாற்றத்திற்கு அடிக்கடி ஆளாவது சகஜம். இதற்குக் காரணம் அவர்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்றல் அல்லது பெரிமெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்றலுக்கான முந்தைய காலகட்டத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளே பெண்களின் மனநிலை மாறுபாட்டிற்குக் காரணம்.  

உடல்ரீதியான பாதிப்புகள் என்னென்ன?

மாதவிடாய் நிற்பதற்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னரே பெரி மெனோபாஸ் பருவம் ஆரம்பித்து விடுகிறது. இந்த காலகட்டத்திலேயே பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கக் கூடும். மூட்டு, தசைகளில் வலி ஏற்படும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும். முழுதாக மாதவிலக்கு நின்ற பிறகு சிறு காயங்களுக்கே எளிதாக எலும்பு முறிவு ஏற்படும். சிலருக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் இப்பருவத்திலேயே தொடங்கி விடுவதும் உண்டு.

இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும். அதிகமாக  வியர்க்கும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும். உமிழ்நீர் சுரப்பது குறையும். பற்களும் எளிதில் விழுந்துவிடும். நெஞ்சு படபடப்பு ஏற்படும். சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். ஜவ்வுத் தன்மை குறைந்து தொய்வு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

மனரீதியான பாதிப்புகள் என்னென்ன?

னச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும். பொதுவாக ஒரு பெண்ணின் நடுத்தர வயதில் மகனுக்கு திருமணம் ஆகியிருக்கும். அல்லது திருமணமான மகள் பிள்ளைப் பிறகு நிலையில் இருக்கலாம். உடல் சார்ந்த பிரச்சினைகளுடன், ஏற்கனவே இருக்கும் வீட்டுப் பொறுப்புகளோடு கூடுதலாக மாமியார் என்கிற ஸ்தானம்; புது மருமகளோடு புரிதல் இன்மை, வாக்குவாதம், போன்றவைகளால் மனதளவில் சோர்ந்து போகிறாள். மகள் பிரசவத்தின் போது பெரும் பொறுப்பும் சேர்ந்து விடுகிறது. சிசு, மற்றும் தாயைக் கவனித்தல், சமையல், வீட்டு வேலைகள், வந்து செல்லும் உறவினர்களை கவனித்தல் என உடலளவில் சோர்ந்து போகிறாள். இத்துடன் மெனோபாஸ் தரும் உடல் ரீதியான தொல்லைகளுடன் மனரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன.

இத்தகைய காலகட்டத்தில், அவள் மீது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் உண்மையான அன்பும் அரவணைப்பும், பரிவும் செலுத்தினால்  இறுதி மாதவிடாய் பருவத்தை ஒரு பெண்ணால்  இனிமையாக கழிக்கவும், கடக்கவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com