Second Hand Car வாங்குவதால் பணம் சேமிக்க முடியுமா?

Second Hand Car வாங்குவதால் பணம் சேமிக்க முடியுமா?

பயோகப்படுத்தப்பட்ட மகிழ்வுந்தை (second hand car) வாங்குவதன் மூலம், பணத்தைப் பின்வரும் விதங்களில் சேமிக்கலாம்.

மகிழ்வுந்தின் ஆரம்ப கால அதிக பணமதிப்பு இழப்பினை (depreciation) தவிர்க்கிறீர்கள்; புது மகிழ்வுந்து முதல் 3 வருடங்களில் கிட்டத்தட்ட 50% பணமதிப்பு இழப்பினைச் சந்திக்கிறது. முதல் சில வருடங்களில், வருடா வருடம் கிட்டத்தட்ட 15% முதல் 20% வரை பணமதிப்பு இழப்பினைச் சந்திக்கிறது. பழைய மகிழ்வுந்து வாங்குவதன் மூலம், இத்தகைய பணமதிப்பு இழப்பினை நீங்கள் தவிர்க்கிறீர்கள். ஏற்கனவே ஒருவர், தனது பணத்தை முதலீடு செய்து, மகிழ்வுந்தின் பண மதிப்பு இழப்பினை, உங்களுக்குப் பதிலாக தாங்கிக் கொள்கிறார்.

உபயோகப்படுத்தப்பட்ட மகிழுந்துக்கு காப்பீட்டுத் தவணைத் தொகை குறைவு. புதிதான மகிழுந்துகளுக்கு காப்பீட்டு தவணைத் தொகை அதிகம். ஏனென்றால், அவற்றின் காப்பீட்டுத் தொகை அதிகம். காலம் செல்லச் செல்ல அதன் காப்பீட்டு தவணை குறைகிறது. காப்பீட்டுத் தவணையில் பணத்தை சேமிக்கிறீர்கள்.

புதிதான மகிழுந்துகள் விலை அதிகமாக இருக்கும்போது, அதனை வாங்க நீங்கள் கடன் வாங்க வேண்டி இருக்கலாம். உபயோகப்படுத்தப்பட்ட மகிழுந்து விலை குறைவாக இருப்பதனால், அதற்கு உங்களால் பணம் சேர்த்து வாங்குவது எளிதாக இருக்கும். கடனைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் வட்டிக்கு பணத்தை செலவழிப்பதில்லை. அந்தப் பணத்தைச் சேமிக்கிறீர்கள்.

புதிய மகிழுந்தில் ஏதேனும் சிறு கீறல்கள், சிறு பள்ளங்கள் (dent) ஏற்பட்டால், அது பற்றி அதிகக் கவலைப்பட்டு நிறைய செலவழிக்க நேரிடும். உபயோகப்படுத்தப்பட்ட மகிழுந்தில் அந்த அளவிற்கு கவலை நம் மனதில் தோன்றாது.  தோற்றத்தைப் பற்றி அதிகமாகக் கவலை இருக்காது. எனவே. உங்களுடைய பணத்திட்டமிடல் (budget) உதாரணத்திற்கு ரூபாய் 5 லட்சம் என்றால், அந்தப் பணத்திற்கு புதிய மகிழுந்திற்கு பதிலாக பழைய மகிழுந்து வாங்குவதன் மூலம், இன்னும் அதிக மதிப்பு வாய்ந்த, அதிகத் திறன்வாய்ந்த, அதிக இருக்கைகள் கொண்ட, அதிக வசதிகள், அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகிழுந்தினை உங்களால் வாங்க முடியும்.

புதிய மகிழுந்தை நீங்கள் பொதுவாக மகிழ்வுந்து விற்பனை அங்காடியில் (dealership) தான் பராமரிப்பீர்கள். அங்கு பராமரிப்பதற்கான கட்டணம் அதிகம். பழைய மகிழுந்து ஆக இருந்தால் நீங்கள் உங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள, மகிழுந்து தொழில்நுட்ப வல்லுனரிடம் (mechanic) குறைந்த செலவில் பராமரித்துக் கொள்ளலாம். மகிழுந்து பராமரிப்பிற்கு ஆகும் பணத்தைச் சேமிக்கிறீர்கள்.

பயன்படுத்தப்பட்ட மகிழுந்தினைப் பயன்படுத்தி, பின்னர் விற்று, இன்னொரு மகிழுந்து வாங்கும் சமயத்தில், ஏற்கனவே, குறைந்த விலையில் வாங்கிய படியால், விற்கும்போது, அதன் விற்கும் விலையில், குறைந்த அளவே, பணத்தின் மதிப்பு இழப்பு இருக்கும். எனவே, விற்கும்போது, குறைந்த நஷ்டத்தில் விற்பதால், அதிக பணத்தை சேமிக்கிறீர்கள்.

புதிய மகிழுந்து வாங்க வேண்டுமென்று முடிவெடுத்தால், நீங்கள் குறைந்தபட்சம் 8 முதல் 10 வருடம் உங்கள் வாகனத்தை கண்டிப்பாக வைத்திருப்பீர்கள் என்றால், புதிய மகிழுந்தை வாங்கலாம். அப்போது, பண மதிப்பு இழப்பினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக, நீங்கள் மகிழுந்தினைப் பயன்படுத்தி இருப்பீர்கள். இல்லையேல், பழைய மகிழுந்தை வாங்குவது சாலச் சிறந்தது. பழைய மகிழ்வுந்து வாங்கும் போது நல்ல நிலையில் உள்ளதா என்பதை மகிழுந்து தொழில்நுட்ப வல்லுனரிடம் பரிசோதித்து விட்டு வாங்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com