

சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த செந்தாமரை வாயிற்படியில் நின்றபடியே பெருமூச்சொன்றை இழுத்துவிட்டபடி சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள். வெளி உலகம் அப்படியேத்தான் இருந்தது. ஆனால், அவளுக்குத்தான் ஏழு வயது கூடியிருந்தது. முன்பக்கம் லேசாய் நரையும் விழுந்திருந்தது.
சுப்ரமணியைக் காணவில்லை. அவன் கண்டிப்பாக வந்திருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. காரணம், லண்டனில் இருந்து வந்திருக்கும் சின்ன முதலாளி அவனை மூன்று நாட்களுக்கு கூடவே இருக்கச் சொல்லிவிட்டார் என்றும் அவள் ரிலீஸானதும் அவனை எதிர்பார்க்காமல் தானாகவே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்றும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டுத்தான் போயிருந்தான் அவன்.
தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது. ஒரு டீ வாங்கிக் குடித்தாள். உள்ளே இருக்கும்போது அவள் செய்த வேலைகளுக்கு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார்கள். ஜாக்கெட்டுக்குள்ளிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு மேலே நடந்தாள். மொபைல் வைத்துக்கொள்ளும் பழக்கம் அறவே இல்லை. எல்லா செலவுகளும் பணமாகத்தான்.