குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: நடிகை வரலட்சுமியின் Open Talk!

child sexual abuse solution
child sexual abuse solution
Updated on
mm
mm

மிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்தியத் திரையுலகில் தன் தனித்துவமான நடிப்புத் திறமையாலும், துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகளாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். மூத்த நடிகர் ஆர். சரத்குமாரின் மகளாகத் திரைத்துறையில் நுழைந்தாலும், 'வாரிசு நடிகர்' என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது சொந்த உழைப்பாலும் அசாத்தியத் திறமையாலும் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

சம்பவத்தின் பின்னணியும் வரலட்சுமியின் உருக்கமான வெளிப்பாடும்:

ஒரு பிரபல தொலைக்காட்சியின், நடனப்போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார் வரலட்சுமி. மேடையில் போட்டியாளர் ஒருவர் குழந்தை பருவத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்து ஒரு விழிப்புணர்வு நடனத்தை நிகழ்த்தினார். அந்த நடனப் பதிவைக் கண்டு அரங்கமே கண்ணீரில் மூழ்கிய வேளையில், நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்த வரலட்சுமி சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டு, தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “குழந்தை பருவத்தில் நானும் பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்களை (child sexual abuse solution) அனுபவித்திருக்கிறேன். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் எனக்குத் தெரிந்த, நெருக்கமான மற்றும் நான் மிகவும் நம்பிய சில நபர்களால் நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்,” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். ஒரு பிரபலமான நட்சத்திரக் குடும்பத்தைச் சேர்ந்த, மிகவும் தைரியமான பெண் என்று வெளியில் அறியப்படும் ஒரு நடிகையே தனது சிறுவயதில் இத்தகைய கொடுமைகளை அனுபவித்துள்ளார் என்பதைக் கேட்பதற்கே அதிர்ச்சியாக இருந்தது

பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வின் அவசியம்

தனது வேதனையை வெளிப்படுத்தியதோடு நின்றுவிடாமல், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கியமான விழிப்புணர்வு குறித்தும் வரலட்சுமி மிக அழுத்தமாகப் பேசினார். இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியை விடவும் மிக அவசியமாக 'பாலியல் கல்வி' மற்றும் 'பாதுகாப்பான-பாதுகாப்பற்ற தொடுதல்' பற்றிய விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒரு குழந்தை தனது வீட்டில் அல்லது வெளி இடங்களில் ஏதேனும் ஒரு அசாதாரணத் தொடுதலை உணர்ந்தால், அதை உடனடியாகத் தனது தாயிடமோ அல்லது தந்தையிடமோ அச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்குப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு மற்றும் புரிதல் வலுவாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்தவர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பதனால், குழந்தைகள் பயத்தின் காரணமாகவோ அல்லது அது தவறு என்று புரியாத காரணத்தினாலோ யாரிடமும் சொல்வதில்லை. எனவே, குழந்தைகளுக்கு இதைப் புரிய வைப்பது பெற்றோரின் முதல் கடமை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

'சேவ் சக்தி' அமைப்பு:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் அநீதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, நடிகை வரலட்சுமி சரத்குமார் 2017-ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று 'சேவ் சக்தி' (Save Sakthi) என்ற அமைப்பைத் தொடங்கினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விலங்குகள் நலன் மற்றும் ஏழை குழந்தைகளின் கல்விக்கும் இந்த அமைப்பு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
கைவிடப்பட்ட சுவர்கள் திறந்த வகுப்பறைகளாக மாறிய சாதனை! 'உலகளாவிய ஆசிரியர் பரிசை' வென்ற இந்திய ஆசிரியை!
child sexual abuse solution

சமூகம் எவ்வளவுதான் நவீனமடைந்தாலும், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் இன்னும் முற்றிலுமாகக் களையப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. பொதுவாக இதுபோன்ற கொடுமைகளைத் தங்களுக்குள் புதைத்துக் கொண்டு வாழும் சமூகச் சூழலில், ஒரு பொது மேடையில் தைரியமாக நின்று இதைப் பேசுவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். ‘நமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்வதற்கு நாம் வெட்கப்படக் கூடாது; தவறு செய்தவர்கள் தான் தலைகுனிய வேண்டும்’ என்ற எண்ணத்தை அவரது பேச்சு விதைத்துள்ளது.

குழந்தைகள் பயமின்றி வளரக்கூடிய, அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்கக்கூடிய ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே வரலட்சுமி சொல்லும் செய்தியாகும்.

logo
Kalki Online
kalkionline.com