சங்கரக்கா செயினும் வளையலும்!

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்
Published on

து ஓர் அழகிய சிறு கிராமம். ஐம்பது வீடுகள். ஊரை ஒட்டி ஒரு சிற்றோடை. அதன் கரையில் ஒரு அம்மன் கோயில். கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய வேப்ப மரம். அருகில் ஒரு பாழடைந்த கிணறு. கிணற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் அடர்ந்த காடு.

ஐம்பது வீடுகளில் இருபது வீட்டிலுள்ளோர் மட்டுமே நிலபுலன், நகை நட்டெல்லாம் வைத்துக்கொண்டு வசதியா வாழ்பவர்கள். மற்றவரெல்லாம் கூலி வேலை செய்துகொண்டும் கடனாளியாகவும் காலத்தை ஓட்டுபவர்கள்.

அந்த ஊர் மக்களுக்குள் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வசதியில்லாத வீட்டுப் பெண்கள் ஏதாவது கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்குப் போகும்போது நகை வைத்திருக்கும் பெண்களிடம் இரவல் வாங்கிப் போட்டுக்கொண்டு போய்விட்டுத் திரும்பி வந்து உரியவரிடம் திருப்பிக்கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒருநாள் சங்கரேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டுக்கு காளியம்மா என்ற இளம்பெண் வந்தாள்.

"யக்கா, நாளைக்குக் காலையில புறப்பட்டு பக்கத்து ஊர்ல ஒரு காது குத்து விழாவுக்குப் போறோம். உன்னோட ஒரு செயினயும் ரெண்டு வளையலும் தாக்கா. அதிகாலை அஞ்சு மணிக்கு மாட்டு வண்டில புறப்படுறோம். அதான் இப்ப வந்தேன்" என்றாள்.

அப்போது இரவு நேரம். "அடியே, வெளக்கு வச்சப்புறம் நா நகையெல்லாம் இரவல் குடுக்கமாட்டேன். நீ அதிகாலை நாலு மணிக்கு வந்து வாங்கிட்டுப் போ" என்று திட்டவட்டமா மறுத்துக் கூறிவிட்டாள் சங்கரேஸ்வரி.

அதிகாலை மணி நான்கு.

‘டொக்... டொக்’

சங்கரக்கா லேசா கதவைத் திறந்து கையை மட்டும் வெளியே நீட்டி நகைகளை அங்கு நின்ற உருவத்திடம் கொடுத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.

மணி நாலே கால். ‘டொக்... டொக்’ மீண்டும் சங்கரக்கா வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

"ஏண்டி, உனக்காக முழிச்சிருந்து இப்பத்தானே நகையைக் கொடுத்தேன். கொஞ்சம் கண் அசரலாம்னு படுத்தா மறுபடியும் வந்து நிக்கிற... என்ன?"

"என்னக்கா… என்ன சொல்ற… நா இப்பத்தான் வாறேன்."

"ஐயையோ…  அப்போ நகையை வாங்கிட்டுப் போனது நீ இல்லையா?"

"இல்லக்கா. நாம ராத்திரி பேசினத பேய் கேட்டிருக்கும். அதுதான் வந்து வாங்கிட்டுப் போயிருக்கு. இரு வாறேன்" என்று சொல்லிட்டு அரக்கப் பறக்க கோயில் இருந்த பக்கம் ஓடினாள்.

இதையும் படியுங்கள்:
சாதிப்பதற்கு வேண்டிய 7 திறமைகள்!
ஓவியம்: பிரபுராம்

அங்கு அவள் கண்ட காட்சி... திகிலடையச் செய்தது.

அங்கிருந்த வேப்ப மரத்தின்கீழ் பத்துக்கும் மேற்பட்ட பேய்கள் வட்டமா சுற்றி நின்றுகொண்டு பாஸிங் த பால் (Passing the ball) விளையாட்டு விளையாடுவதுபோல் ஒரு பேய் செயினையும் வளையல்களையும் தன் கழுத்திலும் கைகளிலும் போட்டு அழகு பார்த்துவிட்டு, பின் அவற்றைக் கழட்டி பக்கத்தில் நின்ற பேயிடம் "சங்கரக்கா செயினும் வளையும் கொஞ்ச நேரம் எனக்கு.. கொஞ்ச நேரம் உனக்கு.." என்று ராகத்தோடு  பாடிக்கொண்டே கொடுத்தது.

இந்த விளையாட்டைப் பார்த்த காளியம்மா மூளையில் ஐடியா ஒன்று தோன்றியது. எப்படியாவது நகைகளை மீட்க வேண்டுமே. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தலையை புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டாள். பின் பேய்க் கூட்டத்தோடு கலந்து நின்றாள். அவள் முறை வந்ததும் கையில் நகைகளை வாங்கினாள். பின்னாடி திரும்பிப் பார்த்து, "ஐயையோ.. ஒரு ஆள் அருவாளோடு வர்றானே" என கூச்சலிட்டாள். கேட்ட மற்ற பேய்கள் அனைத்தும் பாழடைந்த கிணற்றுக்குள்ளும் காட்டுப் பக்கமும் ஓடி மறைந்தன.

வெற்றிப் புன்னகையுடன் சங்கரக்கா வீட்டை நோக்கி நடந்தாள் காளியம்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com