
-ஆர். கீதா
அன்று ஞாயிற்றுக்கிழமை. நியூயார்க் நகரம், என்றும்போல, ஜகஜ்ஜோதியாக விளங்கியது அந்த இரவில், ஏறத்தாழ மணி பத்து இருக்கலாம். 'மயிலாடுதுறையில்' இந்தியர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இடையிடையே சில வெள்ளைக்காரர்களும் தமிழ்நாட்டுப் பலகாரமான இட்லி, உப்புமா, ஊத்தப்பம் இவற்றைச் சட்னி, சாம்பார் சுவையுடன் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
'மயிலாடுதுறை ரெஸ்டாரண்ட்' அந்தச் சுற்று வட்டத்தில் பிரபலமான தமிழ்நாட்டு உணவு விடுதி.
கல்லாவில் அமர்ந்த அபிராமி பிஸியாக இருந்தாள்.
உணவு பரிமாறுபவர்களில், ஓடியாடி வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் கேசவன் கல்லாவை நோக்கி விரைந்து வந்தான்.
"மேடம், ஒரு தமிழ் ஆளு... சாப்பிட்டுட்டு பணம் இல்லேங்கறாரு... மூச்சுமுட்ட குடிச்சிருக்கார். பர்சைத் தொலைச்சிட்டாராம். ஆனா பொய் சொல்றதாத் தெரியுது. நாற்பது டாலர் பில், மேடம்..." என்றார் கேசவன்.
''அப்படியா...? நான் வந்து பார்க்கறேன்..." என்றபடி அபிராமி கல்லாவிலிருந்து இறங்கி விடுதிக்குள் சென்றாள். கேசவன் காட்டிய இடத்தில்... அபிராமி திடுக்கிட்டாள்!
வேகமாகக் கல்லாவுக்குத் திரும்பி வந்தாள். ''கேசவா, விட்டுடு... அவர் போகட்டும்..." என்றாள்.
"என்ன மேடம், இதுமாதிரி ஆளுகளை சும்மா விடக்கூடாது..." என்றான் கேசவன், சினத்துடன்.
"பரவாயில்லே, விடு... போகட்டும்..." என்றபடி அந்த மனிதர் விடுதியைவிட்டு வெளியே சென்றதைக் கூர்ந்து கவனித்தாள். தள்ளாடியபடி சென்றுகொண்டிருந்தார் அவர்.
அபிராமியின் நெஞ்சத் திரையில், பழைய நாட்கள் நிழலாடின.