குட்டிக்கதை - சுட்ட அப்பளமும், தயிர்ப் பச்சடியும்!

ஓவியம்; ஆழி
ஓவியம்; ஆழி

த்தியானச் சமையலை முடித்துவிட்டுக் கணவரின் வருகையைத் 'திக் திக்' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

காரணம் -

அன்று சதியைப்போல் காய்கறிக்காரி தெருவில் வரவில்லை. அவளே போய் வாங்கி வரலாம் என்றாலோ அவளுக்கு ஊர் புதிது! திருமணமாகித் தனிக் குடித்தனம் வைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதே தவிர அவளுக்கு எந்தக் கடை எந்தப் பக்கம் இருக்கிறது என்றுகூடத் தெரியாது!

அதனால்-

அன்றையச் சமையலை வெறும் வற்றல் குழம்பும், சுட்ட அப்பளமுமாக ஈடேற்றி வைத்துவிட்டாள் அவள்! அந்தச் சமையல் அவள் கணவருக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதுதான் அவளுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. வற்றல் குழம்பு அவருக்குப் பிடிக்காததாக இருந்துவிட்டால்... அவர் வழங்கப் போகும் வசவுச் சொற்களை வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் இன்றைக்கு!

“டக்...டக்...!”

அதோ! அவரும் வந்துவிட்டாரே! பாவம்! நல்ல பசியோ என்னவோ, வந்ததும் வராததுமாகச் சட்டையைக் கழற்றிக்கொண்டே கேட்டார்.

"இன்னிக்கு என்ன சமைத்திருக்கே லலிதா?"

தயங்கித் தயங்கிப் பதில் வந்தது அவளிடமிருந்து.

"வந்து.... இன்று காய்கறிக்காரி வரவில்லை! அதனால் வெறும் மணத்தக்காளி வற்றல் குழம்பு."

அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவருடைய முகம் திடீர் என்று எப்படி மலருகிறது? ‘ஒரு வேளை பருப்பு சாம்பார் சாப்பாடு அவருக்கே அலுத்துவிட்டது போலிருக்கிறது. தேவலையே!’

"பலே! அப்புறம் தொட்டுக்க என்ன செய்தே?” என்று கேட்டார்.

ஆவலோடு அவர் அடுத்துக் கேட்டதும் உற்சாகமும் சுறுசுறுப்பும் வந்துவிட்டது அவளுக்கு!

"சுட்ட அப்பளமும், தயிர்ப் பச்சடியும்தான்!”

அவருடைய முகம் மகிழ்ச்சியாலும் ஆச்சரியத்தாலும் எப்படிப் பூரிக்கிறது! தெரியாத்தனமாகச் செய்துவிட்டாலும் இந்தச் சமையல் அவருக்கு மிகவும் பிடித்தமானது போலிருக்கிறதே! இது இத்தனை நாட்கள் அவளுக்குத் தெரியாது போய்விட்டதே!

இதையும் படியுங்கள்:
உயிருக்கே உலை வைக்கும் டீஹைட்ரேஷன்: உஷார்!
ஓவியம்; ஆழி

"பேஷ்! பேஷ்! நினைத்துக்கொண்டே வந்தேன்! அதே சமையலைச் செய்து இருக்கிறாயே! உனக்கு ஜோசியம் தெரியுமா லலிதா?" என்று அவர் உற்சாகமாகப் புகழ்ந்ததும் அவளுக்குத் தலைகாலே புரியவில்லை.

'சரி! சாப்பிட நேரமாகிறது. வாங்க!' அழைத்தாள் சகதர்மணி.

"இல்லே, லலிதா! வர வழியிலே ஒரு சிநேகிதன் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த சந்தோஷத்திலே ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப்போய் விருந்தே வைத்துவிட்டான்! தட்ட முடியல்லே! சாப்பிட்டுவிட்டேன்! இங்கே நீ வேறே எனக்குப் பிடித்தமானதாக எதையாவது செஞ்சி வெச்சிட்டு, ‘வேஸ்ட்டா' போயிடக் கூடாதே, எதையாவது 'சிம்பிளா' செய்திருக்கணுமேன்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! அதேபோல் செய்திருக்கே! நீ போய்ச் சாப்பிடு லலிதா! உனக்குப் பசிக்கும்!" என்றார் கணவர்.

- ரமணி ரங்கநாதன்

நன்றி : கல்கி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com