சிறுகதை - அழாதேடா கண்ணா!

ஓவியம்: சேகர்
ஓவியம்: சேகர்

பிஸ் விட்டு வந்ததிலிருந்தே சேகர் கவனித்து வருகிறான். குழந்தை விட்டு விட்டு அழுது கொண்டே இருக்கிறான்.

‘தம்பியை ஏன் அழ வச்சிட்டே இருக்கே, மாலுமா’  என்று சோபாவில் உட்கார்ந்து டீவி பார்த்தபடியே கேட்டான் சேகர்.

‘ உம்.  எனக்கு ஆசை பாருங்க.. உங்க புள்ளையை அழவைக்கனும்னு... ‘ என்று சொல்லியபடியே படுக்கையறைக்கு போய் தொட்டிலை ஆட்டிவிட்டு திரும்பவும் போய் அடுப்படி வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் மாலதி.

‘மாலுமா, அப்படியே கொஞ்சம் டீ போட்டு கொண்டுவாயேன்... லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு... ரொம்ப நேரமா கிச்சன்ல அப்படி என்னதான் பண்ணிட்டிருக்கே...  ‘ என்றான்.

‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்களேன்... இன்னும் கொஞ்சம் பாத்திரங்கள்தான் கெடக்கு, கழுவி போட்டுட்டுட்டா அப்புறம் அக்கடான்னு வந்து உங்களோட உட்கார்ந்து நானும் டீவி பார்ப்பேன்ல... ’ என்றாள் அங்கிருந்தபடியே.

செல்போன் சிணுங்கும் சப்தம் கேட்டது.  சப்தம் எங்கிருந்து வருகிறது என்று கவனித்தான். பெட்ரூமில் இருந்துதான் வருகிறது என்று தெரிந்தவுடன், ‘மாலுமா, போன் அடிக்குது பார், உன் போன் தான் அடிக்குது...  பெட் ரூம்ல வெச்சிருக்கே போல, போய் அட்டென்ட் பண்ணு... ’ என்றான்.

திரும்பவும் பெட் ரூம் போய் போனை எடுத்து போனை அட்டென்ட் பண்ணி பேசிக்கொண்டே கிச்சனுக்குள் மறுபடியும் போனாள்.

மீண்டும் குழந்தை அழத்தொடங்கினான்.

‘அடடா... ஏன்டி திரும்ப அழறான்.... பால் கொடுத்தியா இல்லையா... ’ என்று சப்தம் போட்டான்.

‘ ஹூம்.  ‘ அப்பா.. அப்பா.. எனக்கு அம்மா இன்னும் பால் தரலே’ன்னு உங்ககிட்ட கூப்பிட்டு சொன்னானா... எனக்குத் தெரியும்ங்க எப்போ பால் தரணும்னு...  ‘ என்று சலித்துக் கொண்டபடியே, கையில் செல்போனுடன் திரும்பவும் பெட் ரூமுக்குள் போனாள்.

‘ அழாதேடா கண்ணா... உன்னை யார் அடிச்சது... அப்பாவா... அவருக்கு இதே வேலையாப் போச்சு... அவரை நான் கண்டிச்சு வைக்கறேன்...நீ அழாம சமர்த்தா தூங்கு... ‘ என்றுவிட்டு செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டே திரும்பி கிச்சனுக்குள் போனாள்.

கொஞ்ச நேரம் கழித்து டீ போட்டு இரண்டு கப்களில் எடுத்துக் கொண்டு வந்தாள். டீ கப்களை டீபாயில் வைத்து விட்டு ‘ பிஸ்கட் வேணுமா உங்களுக்கு... ’ என்று கேட்டாள்.

‘ இதென்ன கேள்வி... கொண்டு வந்து வையேன்.... ‘  என்றான் டீ. வி.யை விட்டு பார்வையை திருப்பாமலேயே.

கிச்சன் பக்கம் போய் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு ‘ ஏங்க என் கண்ணாடியை பாத்தீங்களா... நான் சீரியல் பார்க்கணும்... ரிமோட்டையும் கொடுங்க... ‘ என்று கேட்டாள்.

‘ கண்ணாடியைப் பத்தி என்கிட்டே கேட்டா எப்படி, எங்கே வைச்சேன்னு உனக்குத்தானே தெரியும், போய் தேடிப் பாரேன்... ‘ என்றான் மறுபடியும், டீவியை பார்த்துக் கொண்டே.

‘ ஓ, முகம் அலம்பிட்டு வந்தேனில்லை, அப்போ பாத்ரூமிலே வெச்சேன்னு நினைக்கிறேன்...‘ என்று சொல்லியபடியே பெட் ரூமின் அட்டாச்சுடு பாத்ரூம் நோக்கி போனாள்.

கண்ணாடியை போட்டுக் கொண்டு பிஸ்கட்டுடன் திரும்பினாள். திரும்பவும் குழந்தை அழ ஆரம்பித்தான்.

‘ அடடா, என்ன இன்னிக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு அழறான், ஏதாவது எறும்பு ஏதும் கடிச்சிட்டிருக்கானு பார், அவனை ஊஞ்சல்லேர்ந்து தூக்கி பெட்ல போட்டுட்டு, ஊஞ்சலை ஒரு தடவை சுத்தம் பண்ணி போடு... ‘ என்றான், டீயை உரிஞ்சியபடியே.

‘ நான்தான் பிஸ்கட் கொண்டு வர்றேனு சொன்னேனே, அதுக்குள்ளே ஏன் டீயை குடிக்கிறீங்க... ’ என்றாள் வந்துகொண்டே...

‘ நீ கொண்டு வர்றதுக்குள்ளே டீயே ஆறிப் போய்டும், அதான் குடிக்க ஆரம்பிச்சிட்டேன்... ‘ என்றான்.

பிஸ்கட் பாக்கட்டை டிரேயில் கொட்டியபடியே,  ‘ ஏங்க.... டீவில பாத்தேன், இன்னிக்கு பவுனுக்கு நூறு ரூபா குறைஞ்சிருக்காம்...  நானும் ரெண்டு மாசமா கேட்டிட்டே இருக்கேன், இந்த வளையலை மாத்தணும், மாத்தணும்னு... எப்போ மாத்தி தருவீங்க... நாளைக்கு புதன் கிழமை, போலாமா? பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதும்பாங்க... ’ என்றாள் மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி.

இதையும் படியுங்கள்:
டெங்கு கொசு யாரை அதிகமாகக் கடிக்கும் தெரியுமா?
ஓவியம்: சேகர்

‘அடடா ஆரம்பிச்சிட்டியா... வாங்கிக்கலாம், வாங்கிக்கலாம். இப்போ என்ன அவசரம்... ?’ என்றவன் அவளைப் பார்த்து, ‘ போன்ல ரொம்ப நேரமா பேசிட்டே இருந்தியே... யார் அது... ‘ என்றான்.

‘ போன்ல அம்மாதான் பேசினாங்க. செல்விக்கு ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு சொல்லியிருந்தாங்கள்ல, அந்த ஜாதகம் பொருந்தி வருதாம். மாப்பிள்ளை வீட்டுகாரங்க பெண்ணை பாக்க எப்போ வரலாம்னு கேட்கறாங்களாம். வீட்டுக்கு மூத்த மருமகன் இல்லையா நீங்க. நீங்க கூட இருக்கணும்னு பிரியப் படறாங்க... ’ என்றாள். கூடவே சொன்னாள், ‘ போகும்போது இந்த பழைய வளையலையா போட்டுட்டு போகறது. பாருங்க எத்தனை நசுங்கல், நெளிவு... நாளைக்கே கடைக்கு போயிட்டு வந்திடலாங்க... ’ என்றாள் கெஞ்சலாய்.

‘ சரி அவங்களுக்கு எப்போ வசதியோ அப்போ வைக்கச் சொல்லு, ஒரு நாள் லீவுதானே... நான் எப்ப வேணாலும் ரெடி... ’ என்றான்.  கூடவே ‘ சரி போய் கொஞ்சம் கீஸரை போட்டுவிடு, சேவிங் பண்ணனும், குளிக்கணும்... ’ என்றான்.

‘ மத்ததை எல்லாம் சொல்லிட்டு நகை வாங்கறதை பத்தி மட்டும் பேசவேயில்லை... ‘ என்று முணுமுணுத்தபடியே நகர்ந்தாள். அட்டாச்சுடு பாத்ரூமில் கீஸரை போட்டுவிட்டு திரும்பினாள்.

குழந்தை மறுபடியும் அழ ஆரம்பித்தான்.

‘என்ன இவன் திரும்ப திரும்ப விட்டுவிட்டு அழறான்.‘  என்றபடியே எழுந்து உள்ளே போனான் சேகர்.

‘உங்க பிள்ளை அழ அழ உங்களுக்கு தாங்கலையோ. பாலை குடுன்றீங்க, தொட்டில சுத்தம் பண்ணி போடுன்றீங்க... நான் ஒருத்தி ரெண்டு மாசமா அழுதிட்டிருக்கேன் வளையல் மாத்தணும் வளையல் மாத்தணும்னு, பவுன் விலை வேற இப்போதான் கொஞ்சம் இறங்கியிருக்கு. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு பெரியவங்க சொல்லிவைக்கலையா... ஒரு தடவையாவது, ‘ சரி வா போலாம் ’னு சொல்றீங்களா?  உங்க குழந்தை அழுதா மட்டும் பொங்குது அக்கறை... நான் அழறது உரைக்கலை... ’ என்று கொஞ்சம் சப்தத்துடன் கடிந்து கொண்டாள்.

‘ தம்பி அழறதுக்கும் நீ கேட்கறதுக்கும் என்னடி சம்பந்தம்... இவன் குழந்தைடி... ‘ என்றான் தூக்கிக் கொஞ்சியபடியே.

‘ அழாதேடா கண்ணா.. உன்னை யார் அடிச்சது... அம்மாவா.. அவளை நான் கண்டிச்சு வைக்கறேன்... நீ அழாம சமர்த்த தூங்கு... ‘ என்று தோளில் போட்டு கொஞ்சம் தட்டி கொடுத்து விட்டு மீண்டும் கொண்டுபோய் மெத்தையில்  போட்டான்.

கிச்சனிலிருந்தபடியே ‘ கண்ணா அப்படியே அப்பாக்கிடா சொல்லிடு, நாளைக்கு கடைக்கு போறோம், அம்மாவோட வளையலை மாத்தறோம்னு, இல்லே இப்படியே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேதான்பா இருப்பேன்னு சொல்லு... ‘ என்று மகனிடம் சொல்லுவது போல கணவனுக்கு தூது விட்டாள்.

‘ சரி போகலாம்னு சொல்லுடா கண்ணா... போகலைனா விட்டுடவா போறா உங்க அம்மா... ’ என்று இவனும் பதில் சொன்னான்.

‘ நிஜமாவாங்க... ‘ என்று கேட்டபடியே எழுந்து போய் அவனைக் கட்டிக் கொண்டாள்.

‘நிஜம்தான் சொல்றேன். நாளைக்கு போலாம். கணக்குல ஒரு அம்பது அறுபதினாயிரம் கிட்டே இருக்கும். அது உனக்கு பொறுக்கலை... சந்தோசம்தானே... ’ என்று விட்டு, ‘சரி நான் குளிக்கப் போறேன்... ‘ என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.

இப்போதுதான் அவளுக்கு நிஜமாகவே சந்தோஷம் பொங்கியது.

‘ கண்ணா, உங்க அப்பாவை சம்மதிக்க வைக்க என்னென்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு பார்.  ‘ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.

இனி அவன் அழ மாட்டான்.

நிஜம்தான்.

சேகர்தான் சம்மதித்து விட்டானே. இனியும் எதற்கு அவள் இந்த பக்கம் வரும்போதும் அந்த பக்கம் போகும்போதும் கண்ணனை கிள்ளி விடப் போகிறாள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com