

திருச்செந்தூரிலிருந்து புறப்படும்போது இருந்த உற்சாகம் இப்போது கண்காணாமல் போய்விட்டிருந்தது.
தாத்தாவின் வீட்டு முன்பு ஆட்டோ வந்து நின்றபோது, தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லோரும் ஆவலாய் வெளியே ஓடோடி வந்து அன்பாக வரவேற்றதோடு சரி.
அந்த நிமிடத்தில் பொங்கிய மகிழ்வை அனுபவித்ததோடு சரி.
அப்புறம் இல்லை.
எங்கோ துள்ளிக் குதித்தோடிப் போய்விட்டன உற்சாகம், மகிழ்வு, பூரிப்பு எல்லாமே!
இப்போது வெறுமையின் மத்தியில் சப்பணமிட்டுச் சோகமாய் அமர்ந்திருக்கிறான் வருண்.
சந்தோஷச் சிம்மாதனத்தில் கொலு ஏறப்போவது போல்தான் புறப்படும்போது இருந்தான்.
இங்கே, ஆழ்வார்குறிச்சியில் வந்து இறங்கியபிறகு முழுமையாய் மாற்றம்.
"வாய்யா வருண்" என்று, வாய் நிறைய வரவேற்றதோடு, தாத்தா ஒதுங்கிக் கொண்டுவிட்டார். முன்பென்றால் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டாடுவாரே!
"என் தங்கக் கட்டி வந்திருச்சே!" என்று பாட்டி வரவேற்றுக் கன்னத்தில் கிள்ளிவிட்டு, அம்மாவின் பின்னால் போய்விட்டாள்.
முன்பென்றால், இவன் வேண்டாம் வேண்டாம் என்றாலும் இழுத்து அணைத்து, 'இச் இச்' என்று முத்தம் கொடுத்து அன்புப் பெருக்கினால் திணறு அடிக்கிற பாட்டிதான்.
இப்போது ஏதோ ஒப்புக்கு வரவேற்பதுபோல் வரவேற்றுவிட்டு உள்ளே போய் விட்டாள்.
"ஹாய் வருண் பையா! ஹௌ ஆர் யு டா?" என்று வரவேற்ற சித்தப்பாவிடமும் பழைய அன்பு தென்படாததுபோல்தான் வருண் உணர்ந்தான்.