

-கண்ணம்மாள் பகவதி
பஸ்ஸுக்குள் ஏகப்பட்ட இரைச்சல். ரோட்டுக் குழிகளில் தேங்கிக்கிடக்கும் மழை நீரை ஃபவுண்டனாக வாரியிறைத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது பஸ். பெய்யும் மழை வேறு பஸ்ஸுக்குள் ஒழுகி பயணிகளை அங்குமிங்குமாக உச்சுக்கொட்டி ஒதுங்க வைத்துக்கொண்டிருக்கிறது.
"நாலு ஸான்ஸ்க்ரிட்."
காலேஜ் பெண்ணொருத்தி கண்டக்டரிடம் சொல்லி சில்லறையை நீட்ட, முன்னால் நிற்கிற மஞ்சள் கோடு போட்ட சட்டைக்காரன், "எனக்கு ரெண்டு சமஸ்கிருதம்" என்கிறான் முகத்தில் தன் குறும்பைச் சிறிதும் வெளிப்படுத்தாமல். நக்கல் கண்டக்டருக்குப் புரியாதா, நிமிர்ந்து மஞ்சள் கோட்டுச் சட்டையைப் பார்க்கிறார்.
"தாய்மொழியில் சொன்னேன் ஸார்!" என்கிறான் முகம் மாறாமலே. கண்டக்டர் லேசான புன்முறுவலோடு 'திருவான்மியூர் ஒண்ணு கொடுப்பா' என்கிற பெரியம்மாவிடம் கைநீட்டிப் போகிறார்.
மழை ஒழுகல் வலுக்கிறது. இதெல்லாம் மனசில் படாமல் தனக்குள் ஆழ்ந்து பஸ்ஸின் கடைசி ஸீட்டில் உட்கார்ந்திருக்கிறாள் வத்சலா. காலையில் அவள் மாமா, வீட்டுக்கு வந்திருந்தபோது சொன்னது மனசை வருத்திக்கொண்டேயிருக்கிறது. அடுத்த தெருவில் இருக்கும் அவர் கொஞ்சம் தூரத்து உறவு. அவர், அவள் ஊருக்கு அவள் அம்மா வீட்டுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்.
"கடையில ஓட்டம் இல்ல. போட்டியா நாடார் கடை மட்டும் இருந்தது. இப்போ தெருக் கடைசியில ஒரு கடையும் நாலு வீடு தள்ளி ஒரு நாய்க்கமார் கடையும் புதுசா முளைச்சிருக்கு. பின்ன, ஜனங்க புதுக்கடைங்கவும் அங்கதானே போவாங்க! என்ன செய்யன்னு ஒங்க அம்மா காலையில இட்லியும், பூரியும் சாயந்திரம் ஆம வடை, உளுந்த வடை, சுசியமும் வீட்லயே போட்டு யாவாரம் ஆரம்பிச்சிருக்கா. அது கொஞ்சம் பரவால்லாம ஓடுதாம்" என்று சொல்லிவிட்டுப் போனார்.