
-ஹேமலதா சுகுமாரன்
"அம்மா, இந்த வார ராசி பலன்ல உன் ராசிக்கு ஒரு பெரிய வரவும், ஒரு பெரிய செலவும் உண்டுன்னு போட்டிருக்கு."
''பெரீய்ய வரவதான் கூட்டிண்டு வர அப்பா ஸ்டேஷன் போயிருக்காரே?" என்று சிரித்தவாறே நான் சொல்லவும், "போம்மா, தங்கம்மா பாட்டி குண்டுன்னுதானே கிண்டலடிக்கறே. சரி, பெரிய செலவு என்னவோ?” என்றவளிடம்,
''உன் பாட்டி இந்த முறை வைக்கப்போற செலவுதான்" என்றேன்.
"போன முறை பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததற்கு, பாவம் பாட்டி என்ன பண்ணுவா?" என்றாள்.
என் மகளுக்கு என் மாமியாரிடம் பிரியம் அதிகம்.
"இதப் பாரு, இந்த வயசுலயும் ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கணும்னு ஒரு கிண்ணம் ஆலிவ் ஆயில பாத்ரூம்ல உருவி உருவி தேய்ச்சுக்கறச்ச, கைதவறி கொட்டி, வழுக்கி விழுந்ததோட இல்லாம, 'தம்' பிடிச்சு உன் பாட்டிய தூக்கி,ஆட்டோல ஏற்றி, ஆர்த்தோ, எக்ஸ்ரேன்னு அலையோ அலைன்னு அலைஞ்ச என் மேலனா பழியப் போட்டார். "டாக்டர், பாத்ரூம்ல ஒரே பாசி. ப்ளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சு நாளாச்சு போலயிருக்கு. வழுக்கி விட்டுடுச்சு"ன்னா சொன்னார்" என்றேன்.
என் மைத்துனர் பெங்களூரில் இருக்கிறார். சென்னையின் சீதோஷ்ணத்தை என் மாமியார், கோடை, செம கோடை, கடும் கோடை என்று மூன்று சீசன் என்று கிண்டலடிப்பார். வெயில் காலத்தைத் தவிர்த்துவிடுவார்.